
ஒரு பாடகி நடிகையானார்!
கொடுக்கிற தெய்வம் கூரையை பிய்த்து கொட்டுமே... அப்படி, வரிசையாக நாலு படங்களின் வாய்ப்பு, பானுமதி வீட்டு கதவை தட்டியது. 13 வயதில் பானுமதி நடித்த முதல் படம், வரவிக்ரேயம் பெற்ற மகத்தான வெற்றியை, தெலுங்கு உலகம் எங்கும் பேச வைத்தது.
'இரண்டாவது கதாநாயகியாக நடித்த பெண்ணின் குரலும், நடிப்பும் அபாரம்...' என்ற பாராட்டுதலோடு, 'ராசியான பெண்' என்ற வார்த்தையும், சேர்ந்து கொண்டன.
அந்த வெற்றியின் பலனை அப்படியே விட்டு விடாமல், அறுவடை செய்ய நினைத்தார், பானுமதியை அறிமுகப்படுத்திய, புல்லையா.
மாலதி மாதவம், தர்ம பத்தினி, பக்தி மாலா மற்றும் கிருஷ்ண பிரேமா என்று, நான்கு படங்களில் ஒப்பந்தம் செய்ய வந்தனர்.
தேடி வந்தவர்களை மரியாதையாக வரவேற்று, 'என் மகள், உங்க படத்தில் நடிக்கணும்ன்னா ஒரு நிபந்தனை. 'ஹீரோ'வாக நடிப்பவர், பானுமதியைத் தொடக் கூடாது; தோளில் சாயக் கூடாது; உரசி நிற்பது, உரசிக்கிட்டு உட்கார்றது எல்லாம் கூடாது. இதுக்கு சம்மதம்னா மேற்கொண்டு பேசலாம்...' என்றார், வெங்கட சுப்பையா.
'உங்க நிபந்தனைகளுக்கு நாங்க கட்டுப்படுறோம். அப்படி எதுவும் வராமல் பார்த்துக் கொள்கிறோம்...' என்று உறுதிமொழி கொடுத்தனர், இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள். நான்கு படங்களில் ஒப்பந்தம் போடப்பட்டது.
மாலதி மாதவம் படப்பிடிப்பு, கோல்கட்டாவில் நடந்தது. அந்தப் படத்திற்காக கத்திச் சண்டை, குதிரையேற்றம் போன்ற வீர விளையாட்டுக்கான பயிற்சி அளிக்கப்பட்டது, பானுமதிக்கு.
படத்தில், காதல் காட்சிகள் ரொம்ப செயற்கைத்தனமாக இருந்தன. துாரத்திலிருந்தே காதலித்தனர். 'ஹீரோ' ரொம்ப சங்கோஜி; அவர் நடிப்பில் காதலை காணவில்லை. படம் சுமார்.
ஜெமினிகணேசனை கதாநாயகனாக நடிக்க வைத்த இயக்குனர், புல்லையா, பானுமதியின் மூன்றாவது படமான, தர்ம பத்தினி படத்தை இயக்கினார். படத்தில், 'அனுராகமு லேகா ஆனந்தமு பிராபதின் சுணா; நிலு... நிலுமா... நீல வர்ணா' என்ற, இரு பாடல்களும், பானுமதியை ஒரு பாடகியாய் கவனிக்க வைத்தன.
பக்தி மாலா படத்தில், மீராபாய் வேடத்தில் தோன்றி பாடிய பாடல்கள், பானுமதிக்கு நல்ல பெயர் பெற்று தந்தன. இதன் படப்பிடிப்பு சென்னையில் நடந்தது. மேற்படி படங்களில், 'ஹீரோ'வாக நடித்தவர்கள், பானுமதியைத் தொடாமல் நடித்தனர்.
தமிழகத்தைச் சேர்ந்த செல்வந்தர், ராமையா, தெலுங்கில் சில படங்களைத் தயாரித்தார். அவற்றில் முக்கியமானது, கிருஷ்ண பிரேமா. இந்த படத்தை, பானுமதியாலும், அவரது அப்பாவாலும் மறக்க முடியாது. அவர்களின் வாழ்வை திருப்பிப் போட்ட படம்.
சங்கீதம் நிரம்பியிருந்த பானுமதியின் இதயத்தில், பிரேமை காதல் நுழைய காரணமான படம்.
கண்ணை இமை போல பாதுகாத்த பெண்ணை, பொத்தி பொத்தி வளர்த்த பெண்ணை, ஒரு சாதாரண சினிமா உதவி இயக்குனர், காதல் வயப்படுத்தி விடுவார் என்பது, கிருஷ்ண பிரேமா படத்தில் நடிக்க துவங்கும் வரை பானுமதிக்கோ, அவர் அப்பாவுக்கோ தெரியாது.
காதல் எப்போது வரும், எப்படி வரும், யார் மீது வரும், யாருக்கு தெரியும்... கணநேர மின்னலைப் போல, பளீச்சென்று மனசுக்குள் ஒளிச்சேர்க்கை போல், 'மேஜிக்' செய்து விடும்.
கிருஷ்ண பிரேமா படத்தில் நடிப்பதற்காக, அப்பாவுடன் இரண்டாவது முறை சென்னைக்கு வந்தார், பானுமதி.
ராயப்பேட்டையில் உள்ள ஸ்ரீபுரம் காலனியில், ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அவர்களைத் தங்க வைத்தது, அந்தப் பட நிறுவனம். அங்கிருந்து, 'வாஹினி ஸ்டூடியோ'வுக்கு சென்று, நடித்து வந்தார்.
கிருஷ்ண பிரேமா படப்பிடிப்புத் துவங்கி, இரண்டு மாதங்கள் கடந்த நிலையில், பானுமதிக்கு காதல் வந்துடுச்சு... ஆம்... கிருஷ்ண பிரேமா படத்தின் உதவி இயக்குனர், ராமகிருஷ்ணா மீது, பானுமதிக்கு பிரேமை.
'பொருந்தாத இடத்தில் அமையும் பாட்டு, சில சமயங்களில் புதிர் போல, நமக்கே அமைந்து விடுவதும் உண்டு.
'வித்திர விவாகம் என்ற தெலுங்கு படத்தில், நான் ஒரு பாட்டு பாடியிருக்கிறேன். 'சாந்தமு லேகா சவுக்கியமு லேகா' என்ற இந்தப் பாட்டு கதைக்கு ஒட்டாமல், தனியே நின்றது.
'இருந்தாலும், ரசிகர்களிடையே பிரபலமாகி, படத்தில் தேவையில்லாத கட்டத்தில் இது வருகிறது என்பதையும் மறக்கச் செய்து, ரசிக்க வைத்து விட்டது. சினிமாவில் இது மாதிரி அமையும் சந்தர்ப்பங்கள் அபூர்வம்...' என, திரைக் கதாசிரியராக, 'பொம்மை' இதழுக்கு, பானுமதி அளித்த பேட்டி இது.
தெலுங்கு, தமிழ், கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என்று, ஐந்து மொழிகள் நன்றாக பேசத் தெரிந்தவர், பானுமதி.
லலித்கலா அகாடமியின் உறுப்பினராக ஐந்தாண்டு, ஆந்திர அரசின் சாகித்திய அகாடமியின் உறுப்பினராக, 10 ஆண்டு பங்காற்றியவர், பி.பானுமதி ராமகிருஷ்ணா.
— தொடரும்
சபீதா ஜோசப்