sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சகலகலாவல்லி பானுமதி (1)

/

சகலகலாவல்லி பானுமதி (1)

சகலகலாவல்லி பானுமதி (1)

சகலகலாவல்லி பானுமதி (1)


PUBLISHED ON : டிச 20, 2020

Google News

PUBLISHED ON : டிச 20, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தென்னிந்திய திரைப்பட நடிகையரில் தனித்துவமானவர், பானுமதி. பல சாதனைகளுக்கு சொந்தக்காரர்.

கர்நாடக இசை பாடகி, நவரச நடிகை, திரைக்கதாசிரியர், இசையமைப்பாளர், சிறுகதை எழுத்தாளர், திரைப்பட இயக்குனர், பாடலாசிரியர், பட தயாரிப்பாளர், பரணி ஸ்டுடியோ அதிபர்...

கைரேகை நிபுணர், ஜோதிடர், அன்பான குடும்பத் தலைவி மற்றும் கண்டிப்பான எஜமானி.

இப்படி பன்முக ஆளுமை கொண்ட பெண்மணி தான், பி.பானுமதி ராமகிருஷ்ணா. தனக்கென தனி பாணி கொண்டவர்.

அன்றைய ஆறு, 'சூப்பர் ஸ்டார்'களான, தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பா, என்.டி.ராமாராவ், நாகேஸ்வரராவ், எம்.ஜி.ஆர்., மற்றும் சிவாஜிகணேசன் போன்றவர்களின், 'ஹீரோயின்' பானுமதி.

தம் அழகான, அலட்சிய பாணி நடிப்பாலும், சுந்தரத் தெலுங்கு கலந்த குரலாலும், 1950 முதல், 1960 வரை, தமிழ், தெலுங்கு ரசிகர்களின் கனவுக் கன்னி ஸ்தானத்தில் வைத்து பார்க்கப்பட்டவர்.

தனக்கு பிடித்ததை சிறப்பாக செய்வது, மனித இயல்பு. தனக்கு பிடிக்காத சினிமா தொழிலையும், 'சின்சியர்' ஆக செய்தவர், சகலகலாவல்லி பானுமதி.

அவர் விரும்பியதெல்லாம், கர்நாடக சங்கீத குயில் போல, மேடைதோறும் பாடி பறப்பது தான். அவரது அப்பாவின் ஆசையும் அதுவாகத்தான் இருந்தது. ஆனால், அவரை தேடி வந்ததெல்லாம், சினிமா வாய்ப்புகள் தான்.

யாராக இருந்தாலும், நேருக்கு நேர் பேச வேண்டும். முதுகுக்கு பின் பேசுவது அவருக்கு பிடிக்காது. எதுவும் தனக்கு பிடித்திருந்தால் தான் செய்வார்; பிடிக்கவில்லை என்றால், பிடிக்கலே தான். இவருக்கு அருகில் சென்று பேச, பெரிய நடிகர்களே தயங்குவர். அந்த அளவுக்கு, தைரியமான பெண்.

திரையுலகில், எம்.ஜி.ஆர்., பெயரைச் சொல்லி, யாரும் கூப்பிட மாட்டார்கள்; 'சின்னவர்' என்றே அழைப்பர். ஆனால், பானுமதி அப்படியெல்லாம் இல்லை; 'மிஸ்டர் ராமச்சந்திரன்' என்று தான் அழைப்பார்.

சிவாஜி மற்றும் என்.டி.ராமாராவையும் பெயர் சொல்லி அழைத்து தான், பேசுவார்.

நாகேஸ்வரராவ், வசனகர்த்தா ஆரூர்தாஸ், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவரும், 'மேடம்' என்பர்; சிவாஜி, 'பானும்மா' என்றும், எம்.ஜி.ஆர்., 'அம்மா' என்று, சீனியர் என்ற மரியாதையுடன் அழைப்பர்.

பெரும்பாலும், காலை நேர படப்பிடிப்புக்கு சிறிது தாமதமாக தான் வருவார், பானுமதி. நாடோடி மன்னன் படப்பிடிப்பு சமயத்தில், 'அம்மா, நாளைக்கு கொஞ்சம் சீக்கிரம் வந்து விடுங்கள்...' என்று, எம்.ஜி.ஆர்., கேட்டுக் கொண்டதால், அவருக்கு முன்னரே, வாஹினி ஸ்டுடியோவுக்கு வந்து விட்டார்.

படப்பிடிப்பு துவங்கவில்லை. காரணம், படத்தின் இயக்குனர் மற்றும் 'ஹீரோ' எம்.ஜி.ஆர்., வரவில்லை. வசன பேப்பரும் கைக்கு வரவில்லை.

'எவ்வளவு நேரம் காத்திருப்பது, நான் வந்த தகவல் சொல்லி விட்டீர்களா...' என்று, தயாரிப்பு நிர்வாகியை கேட்டதும், 'சொல்லி விட்டேன்...' என்றார்.

எம்.ஜி.ஆரின் கார் உள்ளே நுழைகிறது. காரை விட்டு இறங்கி, படப்பிடிப்பு தளத்திற்குள் வந்தார்.

உட்கார்ந்திருந்த பானுமதி, 'என்ன மிஸ்டர் ராமச்சந்திரன், என்னை சீக்கிரம் வரச்சொல்லிட்டு, நீங்க, 'லேட்'டா வர்றீங்க... என்னோட வசன பேப்பர் கேட்டா, இல்லேங்குறார் உதவி இயக்குனர் வெங்கடாசலம்...' என்று, சற்று காட்டமாக கேட்டார்.

எம்.ஜி.ஆரிடம், யாரும் இப்படி கேள்வி கேட்க பயப்படுவர். ஆனால், பானுமதி எந்த பயமுமின்றி கேட்டதும், 'யம்மா... எல்லா கதாசிரியர்களும், படப்பிடிப்பு தளத்திற்கு, வசன பேப்பர் கொடுத்து அனுப்புவாங்க...

'என் கதாசிரியர், படப்பிடிப்பு தளத்திற்கு வந்து தான் எழுதுவார். இப்போ கொஞ்ச நேரத்தில் கொடுத்து விடுவார்...' என்று சமாளித்தபடி, ஒப்பனை அறைக்கு சென்று விட்டார், எம்.ஜி.ஆர்.,

அன்றைக்கு நடந்தது வேறு. அந்த படத்திற்காக, கண்ணதாசன் எழுதி கொடுத்திருந்த சில வசனங்கள், எம்.ஜி.ஆருக்கு திருப்தியாக இல்லை. அதை மாற்றி எழுத வேண்டும். எனவே, காரில் வரும்போதே, உதவியாளர் ரவீந்திரனிடம், என்ன எழுத வேண்டும், எப்படி எழுத வேண்டும் என்று சொல்லி அனுப்பி வைத்திருந்தார்.

பானுமதி அப்படி பேச, வேறெந்த காரணமோ, எம்.ஜி.ஆர்., மீது கோபமோ அல்ல. சீக்கிரம் வரச்சொல்லி, தம்மை காக்க வைத்து விட்டாரே என்ற வருத்தம் தான். ஆனால், இதே பானுமதி, எம்.ஜி.ஆருக்காக, சேலத்தில் மூன்று நாள் காத்திருந்தார்; அவருக்காக, தயாரிப்பாளரிடம் பரிந்து பேசினார். ஏன்?

பத்மஸ்ரீ விருது பெற்ற, சிவாஜி, பானுமதி

இருவருக்கும், திரைப்பட வர்த்தக சபையின் சார்பாக, 1966ல், சிறப்பு விருந்து அளிக்கப்பட்டது. 'தம்மை கவுரவித்தவர்களுக்கு, சிவாஜியும், பானுமதியும் சேர்ந்து நன்றி தெரிவிப்பர்...' என்று, 'மைக்'கில் அறிவிக்கப்பட்டது.

இருவரும், 'மைக்' முன் வந்தனர்.

சிவாஜி : 'சகோதர சகோதரிகளே...'

பானுமதி : 'சோதரி, சோதருவாரா...'

சிவாஜி : 'உங்கள் அனைவருக்கும்...'

பானுமதி : 'மீரு அந்தருகி...'

சிவாஜி   : 'என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்...'

பானுமதி : 'நாயொக்க வந்தனமுலு சமர்பிஞ்சுகுண்டான...'

சிவாஜி, தமிழிலும்; பானுமதி, தெலுங்கிலும் நன்றி சொல்ல, கூட்டத்தினர் கை தட்டி மகிழ்ந்தனர்.

— தொடரும்

சபீதா ஜோசப்







      Dinamalar
      Follow us