
முயன்றால் முடியாததல்ல...
எங்கள் ஊரில், மிக்சி பழுது நீக்கும் கடைக்கு சென்றபோது, அங்கே ஒரு பெண் வேலை செய்து கொண்டிருந்தார். விசாரித்ததில், அந்த கடை உரிமையாளரின் மகள் என, தெரிய வந்தது.
'கொரோனா' ஊரடங்கின் போது, ஆறு மாதமாக, அப்பாவுடன் தினமும் கடைக்கு வந்து வேலை கற்றுக் கொண்டதாகவும், அவர் வெளியூர் செல்லும்போது, கடையை பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்.
'மின் சம்பந்தப்பட்ட சிக்கலான வேலை ஆச்சே... உன்னைப் போன்ற பெண்களுக்கு இந்த வேலை சரிபடுமா...' என்று கேட்டேன்.
'ஆரம்பத்தில் சிறிது கஷ்டமாக இருந்தது. இப்போது பழகி விட்டது...' என்றார்.
'உன்னுடன் படித்த தோழியருக்கு, இது தெரியுமா...' என்றேன்.
'பல தோழியர், என்னை பாராட்டினர். அவர்களில் சிலர், என்னைப் போன்று மின் சாதனங்கள் பழுது பார்ப்பது, இரு சக்கர வாகனங்கள், 'சர்வீஸ்' செய்வது போன்ற வேலைகளை, அவர்களது அப்பா, அண்ணன்களிடம் கற்றுக் கொண்டனர்.
'மேலும், நன்கு தெரிந்த, நம்பிக்கையான வாடிக்கையாளர்களின் வீட்டிற்கே சென்று, பழுதை சரி செய்து, வருமானம் ஈட்டுகின்றனர்...' என்றார்.
பெண்களால் எதுவும் முடியும் என்று நிரூபித்ததோடு மட்டுமல்லாமல், மற்ற பெண்களுக்கு நம்பிக்கையூட்டும் நல்ல வழிகாட்டியாக இருந்த அப்பெண்ணை, மனதார பாராட்டினேன்.
- தி. உத்தண்டராமன், விருதுநகர்.
யாருக்கு கை தட்டல்?
பணியிலிருந்து ஓய்வு பெற்றவன், நான். இப்போது என் வயது: 70. பணி ஓய்வுக்கு பின், பல நிறுவனங்களில் பகுதி நேர பணி செய்து வருகிறேன்.
தொழிற்சாலையின் நிறுவனர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கேற்ப, அங்குள்ள தொழிலாளர்களுக்கு, மன வள பயிற்சி அளிக்க சென்றிருந்தேன்.
'உங்களுக்கு பிடித்த நடிகர்கள் நடித்த திரைப்படங்களை பார்க்கச் சென்றால், திரையில் அந்த நடிகர் வந்ததும், என்ன செய்வீர்கள்...' என்று, அவர்களிடம் கேட்டேன்.
அனைவரும், 'கை தட்டுவோம்...' என்ற, ஒரே பதிலை கூறினர்.
உடனே நான், 'அடுத்தவர்களை பார்த்து கை தட்டுகிறீர்களே... உங்களுக்கு யாராவது கை தட்டும்படி இதுவரை ஏதாவது செய்திருக்கிறீர்களா...' என்றேன்.
அனைவரும் பதில் கூற முடியாமல் விழித்தனர்.
'இந்த கம்பெனி முன்னேற்றத்துக்கு, உற்பத்தி பெருக, பிரச்னை தீர, தரம் உயர, இதுவரை நீங்கள் என்ன செய்தீர்கள்... அதுவும் இல்லாமல், சம்பாதித்து தருவது மட்டுமே போதும் என்று நினைக்கிறீர்களா...
'குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர் யாராவது உங்களை பாராட்டும்படி ஏதாவது சாதித்துள்ளீர்களா; சம்பந்தமே இல்லாத சினிமா நடிகர்களுக்கு கை தட்டும் உங்களுக்கு, கை தட்டல் வேண்டாமா?
'அதனால், இன்றிலிருந்து, கம்பெனி முன்னேற்றத்திற்கான யோசனை, வழிமுறை இருந்தால், அதை செயல்படுத்த, நிர்வாகத்தின் அனுமதியுடன் முயற்சி செய்யுங்களேன். அப்படி செய்தால், சம்பளம் மற்றும் பதவி உயர்வு எல்லாம் கிடைக்கும்.
'உங்களது யோசனைப்படி, கம்பெனியில் ஒரு நல்லது நடந்தால், அதை பாராட்ட நிர்வாகம் முன் வரும். செய்வீர்களா?' என்றேன்.
அத்தொழிற்சாலையில் ஒரு மாதம் பணிபுரிய அனுமதித்த நிர்வாகம், எனக்கு, மேலும், இரண்டு ஆண்டு பணி நீட்டிப்பு வழங்கியது.
இது எதற்காக என்றால், நான் வகுப்பு நடத்தி முடித்த, 15வது நாளிலேயே மாற்றம் தெரிய ஆரம்பித்துள்ளதை, அத்தொழிற்சாலை நிறுவனர் சொன்னார்.
எனவே, அடுத்தவர்களை கை தட்டி பாராட்டுவதை விட்டு, நமக்கு கை தட்டல் கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு, வாழ்க்கையில் முன்னேறுங்கள்!
- கே.ஆர். சங்கர்ராம், சென்னை.
'வாட்ஸ் ஆப்'பில் நீதிபோதனை!
எங்கள் அலுவலகத்தில் பணி ஓய்வுபெறும் காலம் நெருங்கிய நண்பர் ஒருவர், சக பணியாளர்களின் கைபேசி எண்களை வாங்கினார்.
'போரடிக்கும்போது பேசவா...' என கேட்டதற்கு, அவர் சொன்ன பதில், 'பலே' போட வைத்தது.
'இக்காலத்தில், பள்ளிக்கூடங்களில் நீதிபோதனை வகுப்புகளே கிடையாது. குழந்தைகளுக்கு, சுவையான நீதி கதைகளை சொல்லித் தர பெற்றோருக்கும் நேரம் இல்லை.
'எனவே, நான் ஓய்வுபெற்ற பின், 'வாட்ஸ் ஆப்' மூலமாக இவர்களுக்கு தினம் ஒரு நீதி கதைகளை அனுப்பி வைத்தால், தினசரி இரவு உறங்கும் முன், தன் பேரப் பிள்ளைகளுக்கு அக்கதையை சொல்லி மகிழலாம். சமூகத்திற்கும் பிரயோஜனமாக இருக்குமல்லவா...' என்றார்.
அவரது சமூக பொறுப்பை, மனதார பாராட்டினேன்.
- என்.கே. பாலசுப்ரமணியன், சென்னை.