PUBLISHED ON : பிப் 14, 2021

திருமகள் தேடி வந்தாள்!
தன் அந்தஸ்துக்கு ஏற்றபடி, ஜமீன்தார் குடும்பப் பையன் படத்தை காட்டி, 'இவன், பி.ஏ., படிச்சிருக்கான்; லட்சணமாயிருக்கான்; என் நண்பனின் மகன். நீ கட்டிக்கப் போற பையன்...' என்று, பானுமதியிடம் புகைப்படத்தை நீட்டினார், அப்பா வெங்கட சுப்பையா.
'நான், அவரை தவிர வேறு யாருக்கும் கழுத்து நீட்ட மாட்டேன்...' என்று, முதல் முறையாக அப்பாவை எதிர்த்து பேசினார், பானுமதி.
மகளின் பிடிவாத குணம், அப்பாவுக்கு தெரியும். ஆனாலும், அந்தஸ்து முக்கியம் என்பதிலிருந்து அவர், இறங்கி வரவில்லை.
'சினிமாக்காரனுக்கு என் பெண்ணைத் தர மாட்டேன்...' என்றார், கோபமாக.
அதே சமயம், ராமகிருஷ்ணா, அவரது நண்பர்கள், இது குறித்து, தயாரிப்பாளர் ராமையாவிடம் கலந்து பேசினர்.
'படப்பிடிப்புக்கு வரும் பானுமதியை, 'லஞ்ச் பிரேக்'கில், அப்படியே அழைத்து வந்துவிட வேண்டியது...' என்று முடிவானது.
அதே போல், மதியம் ஆட்டோவில் அழைத்து வரப்பட்டார், பானுமதி. இந்த காதல் ஜோடியை, கல்யாணம் என்கிற பந்தத்தில் சேர்த்து வைத்ததை கூறுகிறார், தயாரிப்பாளர் ராமையா:
'என், கிருஷ்ண பிரேமா படத்தில், பானுமதியைக் கதாநாயகி ஆக்கினேன். அந்த படத்தில் உதவி இயக்குனராக இருந்த, ராமகிருஷ்ணா மீது பானுமதிக்கு காதல் வந்து விட்டது. இருவரும் விரும்பினர். பானுமதி வீட்டில் கடும் எதிர்ப்பு கிளம்பி, பிரச்னை பெரிதாக வெடித்தது. ஆனாலும், தன் காதலில் உறுதியாக இருந்தார், பானுமதி.
'இதைத் தெரிந்து கொண்ட நானும், என் மனைவியும், அந்த காதல் ஜோடியை சேர்த்து வைக்க முடிவு செய்தோம். ராமகிருஷ்ணாவின் வளர்ப்பு அம்மா கமலாம்மா, நண்பர்கள் ஒன்று கூடி, என் வீட்டில் வைத்து, பானுமதி - ராமகிருஷ்ணா இருவருக்கும், தெலுங்கு முறைப்படி கல்யாணம் செய்து வைத்தோம்.
'அந்த சம்பவத்திலிருந்து, என்னையும், என் மனைவியையும், தன் பெற்றோர் போல அன்பு காட்ட ஆரம்பித்தார், பானுமதி...' என்று கூறியுள்ளார்.
ஜோதிடர் சொன்னது போல, 18 வயதில், பானுமதி திருமணம், அவர் விரும்பியபடி நடந்தது.
இந்த காதல் திருமணத்தால், நிறைய தியாகம் செய்ய வேண்டியிருந்தது, பானுமதி. ஜமீன்தார் மகளுக்குரிய வசதிகளை, ஐந்து படங்களில் நடித்து பெற்ற புகழை, சின்ன வயதிலிருந்து நேசித்த இசையை, அரண்மனை போன்ற வீட்டை விட்டு, 15 ரூபாய் வாடகைக்கு, மயிலாப்பூரில் தனிக்குடித்தனம் மேற்கொண்டார்.
ஏழை குடும்ப பெண் போல, கண்ணாடி வளையல், கருகமணி மாலை, கழுத்தில் மஞ்சள் தாலிச் சரடு.
கணவன், தினமும் காலையில் சினிமா கம்பெனி வேலைக்கு சென்று, மாலையில் வீடு திரும்பும் வரை, தனியாக காத்திருக்க பழகிக் கொள்ள ஆரம்பித்தார்.
மாலை வேளையில் கணவருடன், கோவில், கடற்கரை, மவுன்ட் ரோட்டில் இருந்த முக்கிய தியேட்டர்களில் படம் பார்க்க, பஸ், ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக் ஷாவில் சென்றனர்.
ஸ்டார் தியேட்டரில், ஹிந்தி; காசினோவில், ஆங்கிலப் படம்; சித்ரா தியேட்டரில், தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என்று, நல்ல படங்களை தேடிச் சென்று, மாலை, இரவு காட்சிகளை பார்த்து வந்தனர்.
அப்போதெல்லாம் பானுமதி நடித்திருந்த படங்கள் எதுவும் தமிழில் வரவில்லை. எனவே, அவர் சினிமா நடிகையாக தெரியவில்லை. அழகான, லட்சணமான, குடும்பப் பெண்ணாக தெரிந்தார்.
அப்போது, தெலுங்கில் ஒரு படம் எடுக்க திட்டமிட்டார், பி.என்.ரெட்டி.
கதாநாயகி வேடத்தில் பானுமதி நடித்தால், அந்த கதாபாத்திரம் பெரிதாக பேசப்படும், படமும் வெற்றிபெறும் என்று அவரின், 'கால்ஷீட்' கேட்டு, ஆளை அனுப்பினார். வந்தவரிடம் தன்னிலை விளக்கம் சொல்லி, நடிக்க மறுத்து விட்டார், பானுமதி.
ராமகிருஷ்ணாவை அழைத்து பேசினார், பி.என்.ரெட்டி.
'இனிமேல் அவர் நடிக்க மாட்டார்...'
'இந்த ஒரு படம் நடிக்கட்டும். அவருக்காக கேரக்டரை உருவாக்கி இருக்கிறேன்...'
'முடியாது...' என்று சொல்லி விட்டார்.
வீட்டில் அவரது அம்மாவும், தங்கையும், 'பானு, நல்லா நடிக்கிறா, நல்லா பாடுறா... நடிக்க வைக்கலாமே... ஏன் நிறுத்திட்ட, அடுப்படியில் போட்டு சமையல்காரி ஆக்கிடாதே... அவள் திறமைக்கு மதிப்பு கொடு...' என்ற, அவர்களின் சொல்லை தட்ட முடியவில்லை.
'உன் மனைவி புகழ் பெறுவதை, உன்னால் தாங்க முடியலை...' என்று, ரெட்டி சொன்ன சுடு சொல், நினைவுக்கு வந்தது.
'சரி... இந்த ஒரு படத்தில் மட்டும் நடிக்கட்டும்...' என்று, ராமகிருஷ்ணா தன் முடிவை சொல்ல, அனைவர் முகத்தில் சந்தோஷம் பிரகாசித்தது.
பானுமதி மறுபடியும் நடித்த அந்த படம், தான் விதித்த தடைகளை உடைத்து போடும் என்று, அப்போது ராமகிருஷ்ணாவுக்கு தெரியாது.
பானுமதிக்கு புத்தகம் படிப்பது, எழுதுவது ரொம்ப பிடித்த விஷயம். நிறைய சிறுகதைகள் எழுதியிருக்கிறார். இவரின், 'அத்தாரு கதலு' என்ற சிறுகதை தொகுப்புக்கு, சிறந்த சிறுகதைகளுக்கான சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரது கதைகளில் நகைச்சுவை கூடுதலாக மிளிரும்.
— தொடரும்
சபீதா ஜோசப்