
தை மாதம், முதல் தேதியில், தன் வடக்கு நோக்கிய பயணத்தை துவங்குகிறான், சூரியன். ரத சப்தமியன்று, அது, தன் பாதையில் நிலை நிறுத்திக் கொள்கிறது.
தை அமாவாசை அடுத்த ஏழாம் நாளே, ரத சப்தமி. இந்த நாளில், ஏழு எருக்கு இலைகளை உடலில் வைத்து, நீராட வேண்டும். இப்படி குளிப்பதற்கு ஆன்மிகம் மற்றும் அறிவியல் ரீதியாக சில ரகசியங்கள் உள்ளன.
பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் குருவான பீஷ்மர், பாரதப்போரில் அர்ஜுனனால் தாக்கப்பட்டு, உயிர் பிரியும் நிலையில் இருந்தார்.
யாராலும் வெல்ல இயலாத தன்னை, தன் மாணவன் வென்று விட்டானே என்ற சந்தேகம் அவருக்கு மட்டுமல்ல, போர்க்களத்திலுள்ள அத்தனை பேர் மனதிலும் இருந்தது.
பீஷ்மருக்கு, ஒரு விசேஷ சக்தியுண்டு. அவர் நினைக்கும் நாளில் தான் மரணமடைவார் என, வரம் பெற்றிருந்தார். ரத சப்தமி, மிக உயரிய நாள் என்பதால், அந்நாள் வரட்டுமே என, காத்திருந்தார்.
அப்போது வேதவியாசர் வந்தார். அவரிடம், பீஷ்மர் தன் நிலைக்கான காரணத்தைக் கேட்டார்.
'பீஷ்மா... பாண்டவர்களின் துணைவியான திரவுபதி, துரியோதனனின் அவையில் துயில் உறியப்பட்ட போது, உயர்ந்த பதவியில் இருந்த நீ, அதைத் தடுக்காதது பெரிய பாவம். தவறு செய்பவனை விட, அதை தடுக்காமல் இருப்பவன் தான் பெரிய பாவி.
'அந்த அநியாயம் நடந்த போது, உன் கண்கள், குருடாக இருந்தன; கால்கள் எழவில்லை; கைகள், வாளை எடுக்கவில்லை; தலை இருந்தும், மூளை வேலை செய்யவில்லை. இவற்றுக்கு நீயே சுய தண்டனை கொடுக்க வேண்டும். அதாவது, அக்னியில் எரிக்க வேண்டும். அப்படியானால் தான் பாவம் தீரும்...' என்றார்.
'வியாசரே... நான் செய்த கொடுமையை உணர்கிறேன். எனக்கு, அக்னி தண்டனை போதாது. சூரியனின் வெப்பத்தை பிழிந்து தாருங்கள். என்னை நானே எரித்துக் கொள்கிறேன்...' என்றார், பீஷ்மர்.
உடனே, பீஷ்மரின் உடலில், எருக்க இலைகளை அடுக்கினார், வியாசர்.
'பீஷ்மரே... சூரியனின் வெப்பத்தை முழுமையாக கிரகிக்கும் ஒரே இலை, எருக்கு. அது, உடலில் அடுக்கப்பட்டால், சூரியனின் வெப்பம் முழுவதும் இறங்கியதாக அர்த்தம். இது, உன்னை பாவத்திலிருந்து விலக்கும்...' என்றார்.
அதன்படி, பீஷ்மரின் பாவமும் நீங்கி, உயிர் பிரிந்தது. அப்போது, சப்தமி முடிந்து, அஷ்டமி திதி ஆரம்பமாகி இருந்தது. இதனால், பீஷ்மர் முக்தி பெற்ற நாளை, பீஷ்மாஷ்டமி என்பர்.
இதனால் தான், ஏழு எருக்க இலைகளில், ஆண்கள், அட்சதையும்; பெண்கள், அட்சதையுடன் மஞ்சள் பொடி சேர்த்து, தலையில் வைத்து நீராடுவர். இதுவே, ரத சப்தமியன்று, எருக்கு இலை வைத்து குளிப்பதன் ரகசியம்.
இந்த நாளில் - பிப்., 19, ஒன்றுக்கு மூன்றாக வெப்பத்தை உமிழும், சூரிய பகவான் சன்னிதியைக் காண, கும்பகோணம் நாகேஸ்வரர் கோவிலுக்கு வாருங்கள்.
கோவில் சுற்றுப் பிரகாரத்திலுள்ள சன்னிதியில், மூன்று சூரியன்கள் காட்சி தருகின்றனர். இவர்களைத் தரிசித்தால், தவறை உணர்ந்தவர்களின் பாவங்கள், கரிந்து போகும்.
தி. செல்லப்பா