sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சகலகலாவல்லி பானுமதி (2)

/

சகலகலாவல்லி பானுமதி (2)

சகலகலாவல்லி பானுமதி (2)

சகலகலாவல்லி பானுமதி (2)


PUBLISHED ON : டிச 27, 2020

Google News

PUBLISHED ON : டிச 27, 2020


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

எம்.ஜி.ஆருக்காக மூன்று நாள், பானுமதி எதற்காக காத்திருந்தார்; ஏன் பரிந்து பேசினார்; அப்படியென்ன முக்கியமான விஷயம் என்கிறீர்களா... அன்றைக்கு, அது முக்கியமான பிரச்னை தான்.

அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தின், 'கிளைமாக்ஸ்' காட்சிகள் படமாக்க வேண்டி இருந்ததால், முதல் நாள் மாலையே, மாமியாருடன், சேலம், 'மாடர்ன் தியேட்டர்ஸ்' வந்து விட்டார், பானுமதி.

'ஹீரோயின்' வந்து விட்டார்; 'ஹீரோ' எம்.ஜி.ஆர்., வரவில்லை.

அன்று இரவுக்குள் வந்து விடுவார்; முதல் நாள் மாலையே, படப்பிடிப்பு துவங்கி விடலாம் என்று, படக்குழுவினர் நினைத்தனர். ஆனால், எம்.ஜி.ஆர்., வரவில்லை.

சென்னையில், எம்.ஜி.ஆர்., வேறு ஒரு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருப்பதாக, பானுமதியிடம் தெரிவித்தார், தயாரிப்பு நிர்வாகி.

'சரி... நான், ஒருநாள் இருந்து, நடித்துக் கொடுத்து போகிறேன்...' என்று சொல்லி, 'அலிபாபா' பட, 'ரஷ்' போட்டு பார்த்து, பொழுது போக்கினார், பானுமதி.

இரண்டாம் நாள் மதியம் வரை, எம்.ஜி.ஆர்., வந்து சேராததால், படப்பிடிப்பு தடைபட்டது.

'என்னை சும்மா உட்கார வைக்கவா... என்று, பானுமதி கோபித்துக் கொண்டால் என்ன செய்வது...' என்ற பதற்றத்துடன் வந்து தகவல் சொன்னார், தயாரிப்பு நிர்வாகி.

'அவருக்கு, அங்கு என்ன நெருக்கடியோ... இரவுக்குள் வந்து விடலாம். கொஞ்சம் பொறுத்து பார்ப்போம்...' என்றார், பானுமதி.

'அம்மா... நீங்க பொறுத்திருந்து நடித்துக் கொடுப்பீங்க... உங்க பெருந்தன்மையை பாராட்டுறோம்.

எம்.ஜி.ஆர்., இன்னும் வரவில்லை என்பதை முதலாளியிடம் எத்தனை நாளைக்கு மறைக்க முடியும்... இந்த விஷயம் முதலாளிக்கு தெரிந்தால், எங்களை தொலைச்சிடுவார்.

'அவர், ரொம்ப கோபக்காரர்; 'டிசிபிளின்' முக்கியம். எல்லாம் குறித்த காலத்தில் நடக்க வேண்டும். யாராக இருந்தாலும், சரியான நேரத்திற்குள் படப்பிடிப்பிற்கு வந்து விடணும். வரமுடியலைன்னா, 'நீ நடிக்க தேவையில்லே, வெளியே போ...' என்று, திருப்பி அனுப்பி விடுவார். அது, யாராக இருந்தாலும்...

'சதி சுலோசனா என்ற படத்திற்கு, ஒரு பிரபலமான, 'ஹீரோ'வை ஒப்பந்தம் செய்து, தொகையும் கொடுத்து, படப்பிடிப்பு துவங்கும் நேரம், தேதி சொல்லியும், நேரம் கடந்து வந்தார். உடனே, 'ஹீரோ'வை படத்திலிருந்தே துாக்கி விட்டு, முதலாளியே, 'ஹீரோ'வாக நடிக்க ஆரம்பிச்சுட்டார்...

'இன்னொரு பிரபல நடிகர், இரண்டு நாள், படப்பிடிப்பிற்கு வராமல், 'டிமிக்கி' கொடுத்தார். முதலாளிக்கு பயங்கர கோபம். மூன்றாம் நாள் வந்த அந்த, 'ஹீரோ'(சின்னப்பா)வை, மரத்தில் கட்டி வைத்து அடித்தார்...

'எங்க முதலாளி, நடிகருக்காக படம் எடுப்பவரோ, பைனான்ஸ் வாங்கி படம் எடுப்பவரோ இல்லை. சொந்த பணத்தில் படம் எடுப்பவர்...' என்று, தயாரிப்பு நிர்வாகி கூறினார்.

அதைக் கேட்டுக் கொண்டிருந்த பானுமதிக்கு, பகீரென்றிருந்தது. இரவுக்குள், எம்.ஜி.ஆர்., வந்துவிட வேண்டுமே என்று நினைத்துக் கொண்டார்.

மறுநாள் காலை -

'சாரி மேடம்... உங்களை இரண்டு நாள் காக்க வைத்து விட்டேன். இனியும், எம்.ஜி.ஆருக்காக காத்திருப்பதில் பயனில்லை. அவரை துாக்கி விட்டு, வேறு, 'ஹீரோ'வை வைத்து படம் துவங்கலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் நடித்து தரவேண்டும்...' என்று, 'மாடர்ன் தியேட்டர்ஸ்' அதிபர் சுந்தரம் சொன்னதை கேட்டதும், திடுக்கிட்டார், பானுமதி.

அவரை சமாதானப்படுத்தும் விதமாக, 'சார்... அவசரப்படாதீங்க; அப்படிப் பேசாதீங்க; அவர் வந்து விடுவார். நான், மற்ற தயாரிப்பாளர்களிடம் பேசி, இன்னும் இரண்டு நாள் இருந்து நடித்துக் கொடுக்கிறேன்...' என்றார்.

அமைதியாக கேட்டு, சிறிது நேரம் யோசித்த பட அதிபர், படக் குழுவை பார்த்து, 'எம்.ஜி.ஆர்., இரவுக்குள் வந்தாக வேண்டும். நாளை, படப்பிடிப்பு நடக்கணும். இல்லேன்னா, உங்க எல்லாரையும், 'டிஸ்மிஸ்' பண்ணிடுவேன்...' என்று, எச்சரித்து சென்றார்.

அன்று இரவுக்குள், எப்படியோ எம்.ஜி.ஆரை கடத்திக் கொண்டு வந்தது போல, அழைத்து வந்து விட்டனர்.

மூன்றாம் நாள் காலை, பானுமதி இருக்கும், 'மேக் - அப்' அறைக்கு வந்த, எம்.ஜி.ஆர்., 'அம்மா... என்னை மன்னிச்சுடுங்க... உங்களுக்கு ரொம்ப சிரமம் கொடுத்துட்டேன்...' என்றார்.

அதே நேரம் அங்கு வந்தார், பட அதிபர், சுந்தரம்.

என்ன நடக்குமோ என்று படக் குழுவுக்கும், பானுமதிக்கும் ஒரே படபடப்பு.

'மிஸ்டர் ராமச்சந்திரன், உங்களால் மேடம் மூன்று நாள் காத்துகிட்டிருந்தாங்க தெரியுமா... இனி, இப்படி செய்யாதீர். இதுதான், பர்ஸ்ட் அன்ட் லாஸ்ட்...' என்றார்.

எம்.ஜி.ஆர்., மீண்டும் பானுமதியிடம், 'ரொம்ப சாரிம்மா...' என்றார்.

பானுமதி, எம்.ஜி.ஆருக்காக பரிந்து பேசியதற்கு பின்னால் ஒரு காரணம் இருந்தது. முதல் முறையாக இவர்கள் சேர்ந்து நடித்த, மலைக்கள்ளன் படம், மாபெரும் வெற்றி பெற்றது; நட்சத்திர நாயகி அந்தஸ்துக்கு உயர்த்தியது. தமிழகத்தின் பட்டிதொட்டி எங்கும் பேசப்பட்டார். பட வாய்ப்புகள் குவிந்தன.

ராசியான ஜோடி, 'சக்சஸ் காம்பினேஷன்' என்று பேசப்பட்டது. அந்த காலகட்டத்தில், அலிபாபாவும் 40 திருடர்களும் படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது.

அதுபோன்று, அலிபாபா படம் வெளியாகி, திரும்பிய பக்கமெல்லாம் வெற்றி வாகை சூடியது. பல இடங்களில் வெள்ளி விழா கண்டது. பானுமதி வீட்டு வாசலில் தயாரிப்பாளர்கள் வரிசை கட்டி நின்றனர். 20 படங்களை நடிக்க ஒப்புக்கொண்டார், பானுமதி.

எதையும் எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்; நிறைய கேள்வி கேட்பார். ஒரு பிரபல வசனகர்த்தாவையே கேள்வி மேல் கேள்வி கேட்டார், பானுமதி.

பானுமதிக்குள் ஒரு ஓவியர் இருந்தார். ஓய்வுநேர பொழுதுபோக்காக ஓவியம் வரைவார்.

படப்பிடிப்பின் இடைவெளியில் ஏதேனும் வித்தியாசமான முகங்களை, காட்சிகளை பார்த்தால், வரைய ஆரம்பித்து விடுவார். ஒருமுறை, ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணனை படமாக வரைந்து கொடுத்து, அவரின் மகிழ்ச்சியையும், பாராட்டையும் பெற்றார்.



— தொடரும்

சபீதா ஜோசப்






      Dinamalar
      Follow us