
பா - கே
சமீபத்திய, 'புரெவி' புயல், விழுப்புரம், கடலுார், சிதம்பரம் மாவட்டங்களை சூறையாடிய காட்சிகளை, 'டிவி'யில் பார்த்துக் கொண்டிருந்தேன்.
'கோவிலே மூழ்கிட்டதேபா... சிதம்பரம் நடராஜர் கோவில், நீர் மேலாண்மையில் மட்டும் சிறப்பு வாய்ந்ததல்ல. அங்குள்ள கனகசபையும் வரலாற்று சிறப்புமிக்கது. இது சம்பந்தமாக, நண்பர் கூறிய தகவல் ஒன்று உள்ளது...' என்றார், நடுத்தெரு நாராயணன்.
'அது என்ன, விளக்கமா சொல்லுங்க நாராயணன் சார்...' என்றேன்.
தொடர்ந்தார், நாராயணன்...
'சில ஆண்டுகளுக்கு முன், வரலாற்றிலும், கோவில் சிற்பங்களிலும் ஆர்வமும், ஈடுபாடும் உள்ள நண்பருடன் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சென்றிருந்தேன்.
'கனகசபையின் கூரையில் வேயப்பட்டுள்ள தங்க ஓடுகளை பார்த்தோம்.
'சோழனும், பாண்டியனும் போட்டி போட்டு, இந்த கோவிலை அலங்கரித்திருக்கின்றனர் பார்த்தீர்களா... தமிழ் மன்னர்கள் அன்று, இங்கே கொண்டு வைத்த தங்கம், இவ்வளவு நுாற்றாண்டுகளுக்கு பிறகும் எப்படி தகதகக்கிறது பாருங்கள் என்றேன்.
'நீங்கள் சொன்னது சரி தான். ஆனால், மன்னர்கள் கொடுத்த பொன் அல்ல. இப்போது நீங்கள் இங்கே பார்ப்பது. ஸ்ரீரங்கம், மதுரை கோவில்கள், 13 - 14ம் நுாற்றாண்டுகளில், முகலாய படையெடுப்புகளால் சிதைக்கப்பட்டு, மீண்டும் புனரமைக்கப்பட்டது.
'டில்லியை ஆண்ட, அலாவுதின் கில்ஜியின் படைத்தலைவனான மாலிக்காபூர், சிதம்பரம் மீது படையெடுத்த போது, அங்கிருந்த பொன்னம்பலத்தை அடியுடன் பேர்த்தெடுத்து கொண்டு, கோவிலுக்கு எரியூட்டினான். ஊருக்கும் தீயிட்டான்.
'உடமைகளை சூறையாடினான். ஆண்களையும், பெண்களையும், குழந்தைகளையும் கொன்று குவித்து, வெறியாட்டம் ஆடினான். சிதம்பரத்தில், 250 யானைகளை கைப்பற்றினான். கொள்ளையடித்த பொன்னையும், மணிகளையும் யானைகளின் மேல் ஏற்றி சென்றான்.
'அலாவுதீன் கில்ஜியின் அரசவைப் புலவராகவும், பன்மொழி வல்லுனராகவும் இருந்த அமீர் குஸ்ரு எழுதியுள்ள, 'வெற்றிப பொக்கிஷங்கள்' என்ற நுாலில், மாலிக்காபூரின் படையெடுப்பு குறித்த விபரங்கள் தேதியிட்டு தரப்பட்டுள்ளன.
'இதன்படி, மாலிக்காபூரின் தமிழக படையெடுப்பு நிகழ்ந்த காலம், 1311, மார்ச் 10 முதல், ஏப்., 25 வரை, 45 நாட்கள். இப்போது, நாம் காணும் கனகசபை முழுவதும் சோழரும், பாண்டியரும் அலங்கரித்ததல்ல. விஜயநகர அரசர்களால் எழுப்பப்பட்டது.
'கடந்த, 17ம் நுாற்றாண்டில், அவுரங்கசீப்பின் காலத்தில், சிதம்பரம் கோவில் மீண்டும் தாக்குதல்களுக்கு உள்ளானது. 38 ஆண்டுகள் கோவில் பூஜையின்றி இருந்தது. இக்காலகட்டத்தில் நடராஜரின் திருவுருவம், வெவ்வேறு இடங்களில் வைத்து பாதுகாக்கப்பட்டு வந்தது என்பதற்கு, பல ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
'ஆக, நடராஜர் வெளியே இருந்த காலம், 37 ஆண்டுகள், 10 மாதம், 20 நாட்கள். அதற்கு பின்னரும், மேலும் 10 ஆண்டுகள், 1686 முதல் 1696 வரை, மீண்டும் நடராஜர், தில்லையிலிருந்து வெளியேறி, திருவாரூரில் இருந்தார் என்ற செய்தி, சிதம்பரம் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.
'இனி அடுத்த முறை சிதம்பரத்திற்கு சென்றால், கனகசபையின் பொற்கலசங்களைப் பார்க்கும் போது, இந்த வரலாறும், உங்கள் நினைவில் எழட்டும்.
'தல புராணக் கதைகளோடு சேர்த்து, அந்தந்த தலத்தின் புனிதத்தையும், பண்பாட்டையும் காப்பதற்காக, நம் முன்னோர் தொடர்ந்து போராடிய தியாக வரலாறுகளையும் அறிந்து கொள்வோம். அவற்றை நம் அடுத்த தலைமுறைக்கும் தெரியப்படுத்துவோம்...' என்று, நண்பர் சொன்னதாக கூறி முடித்தார், நாராயணன்.
அவர் கூறிய தகவல்களை கேட்டு வியந்தேன்.
ப
'அந்துமணி... நீ என்ன எப்பப் பார்த்தாலும், உ.பா., பற்றியும், ஒன்றுக்கும் உதவாத விஷயங்களை பற்றியுமே எழுதி வருகிறாய். புத்தாண்டு பிறக்கப் போகிறது... மற்றவர்களுக்கு பயன் தரும் உருப்படியான விஷயத்தை பற்றி எழுதுவதுதானே...' என்று, 'இ - மெயில்' அனுப்பி இருந்தார், வாசகர் ஒருவர்.
இதோ, அவரது வேண்டுகோளை ஏற்று, இந்த பகுதியை கொடுத்துள்ளேன்...
* வறுமையில் வாடிய வியாபாரியின் மகன், டாக்டர் சாமுவேல் ஜான்சன். உலகின் முதல் அகராதியை தொகுத்தவர் என்ற பெருமைக்குரியவர்
* செருப்பு தைக்கும் ஏழை தொழிலாளியின் மகன், ஜோசப் ஸ்டாலின். சோவியத் தலைவரானார்
* பண்ணை தொழிலாளியின் மகன், ஹென்றி போர்டு. உலகம் போற்றும், 'போர்டு' கார் கம்பெனியை உருவாக்கியவர்
* ஏழை நெசவாளியின் மகன், தாமஸ் ஆல்வா எடிசன். விஞ்ஞானியாக வளர்ந்து, அளப்பரிய கண்டுபிடிப்புகளை செய்தவர்
* மீன் பிடிப்பவரின் மகன், கரிபால்டி. பெரும் புரட்சி செய்து, நாட்டை ஆண்டார்
* மெழுகுவர்த்தி வியாபாரியின் மகன், பெஞ்சமின் பிராங்க்ளின். உலகம் போற்றும் விஞ்ஞானியாக உருவெடுத்தவர்
* குதிரை லாட மேற்பார்வையாளரின் மகன், வில்லியம் ஷேக்ஸ்பியர். அமர காவியங்கள் படைத்த இணையற்ற நாடக ஆசிரியராக திகழ்ந்தவர்
* சாதாரண குமாஸ்தாவின் மகன், ஜான் டி ராக்பெல்லர். மாபெரும் பொருளாதார சாம்ராஜ்யத்தை நிறுவியவர்
* ஏழ்மையான ஆரம்பப் பள்ளி ஆசிரியரின் மகன், பால கங்காதர திலகர். சுதந்திர போராட்ட தியாகி
* ஏழை விவசாயியின் மகன், சர்தார் வல்லபாய் படேல். மத்திய அமைச்சரானார். 'இரும்பு மனிதர்' என்ற அடைமொழியால் அழைக்கப்பட்டார்
* ஜி.டி.பிர்லா, தன், 16வது வயதில் தரகராக பணிபுரிந்தவர். பின்னாளில் பெரும் செல்வந்தராக திகழ்ந்தார்
* பெர்னாட்ஷா, தன், 15வது வயதில், மாதம், 300 ரூபாய்க்கு வேலை பார்த்தார். பின்னாளில், அறிஞராக, எழுத்தாளராக ஜொலித்தார்.
ஆக, வாழ்க்கை நம் கையில் என்று நினைத்து, இலக்கை நோக்கி புத்திசாலித்தனமாக உழைத்தால், இந்த உலகம் உங்கள் கையில்!
அப்பாடா... தப்பித்தேன். உருப்படியான தகவலாக இது இருக்கும்தானே!