தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சகலகலாவல்லி பானுமதி (20)

சகலகலாவல்லி பானுமதி (20)

சகலகலாவல்லி பானுமதி (20)


PUBLISHED ON : மே 02, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நினைவில் நின்ற நவரச நாயகி!

நவரச நாயகி பானுமதி, புகழின் உச்சியில் இருந்தபோது, அவர் பிறந்த ஆந்திர பிரதேச, ஓங்கோல் மக்களவை தொகுதிக்கு போட்டியிடுமாறு, 1968ல், ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், அவருக்கு கடிதம் எழுதினார்.

'அரசியல் வேண்டாம்...' என்று, கணவர் சொன்னதால், அன்புடன் மறுத்து விட்டார், பானுமதி.

நவரச நடிகை பானுமதியின், வி.ஐ.பி., ரசிகர்களில் மிக உயர்ந்த ரசிகர், ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன். பானுமதிக்கு, பத்மஸ்ரீ விருது வழங்கி சிறப்பித்ததோடு, பானுமதி ராமகிருஷ்ணா தம்பதியரை, ஜனாதிபதி மாளிகைக்கு வரவழைத்து, விருந்தும் கொடுத்தார்.

பானுமதியின் படங்களை பார்த்து ரசிப்பதாகவும், கதைகளை படித்து, பாடல்களை கேட்டு மகிழ்வதாகவும் ஜனாதிபதி சொன்னதை கேட்டவுடன், 'ஆஸ்கர்' விருது பெற்றது போல, பூரித்து போனார், பானுமதி.

ஜனாதிபதிக்கு நன்றி சொல்லும் விதமாக, டாக்டர் ராதாகிருஷ்ணனுக்கு, தைல ஓவியம் மற்றும் நீர் வண்ண ஓவியம் வரைந்து அனுப்பி வைத்தார், பானுமதி.

அதன்பின், ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவார். அவரும் பதில் எழுதுவார்.

பானுமதிக்கு சிறு வயதிலிருந்தே கதை கேட்பது, கதை எழுதுவது ரொம்ப பிடிக்கும். மகள் எழுதுவதையும், பாட்டு பாடுவதையும் பெரிதும் ரசித்து மகிழ்ந்தார், அப்பா.

அவர் நடிகையான பின்பும் எழுதிய கதைகள், பானுமதி கதலு - கதைகள், அத்தகாரு கதலு - மாமியாரின் கதைகள் என்ற பெயரில், தெலுங்கு பத்திரிகைகளில் வெளி வந்தன. தமிழில், 'ஆனந்தவிகடன்' இதழில் வந்தன, புத்தகமாகவும் வந்துள்ளன.

விஜயலட்சுமி பண்டிட் தலைமையில், அகில இந்திய பெண் எழுத்தாளர்கள் மாநாடு நடந்தபோது, சிறப்பு அழைப்பு, பானுமதிக்கு வந்தது.

நடிகை என்பதற்காக அல்ல, எழுத்தாளர் என்ற வகையில் அழைத்து கவுரவித்தனர்.

'இது, எனக்கு கிடைத்த மிகப்பெரிய மரியாதை...' என்று சொல்லி மகிழ்ந்தார், பானுமதி.

கல்லுாரி சென்று படிக்கவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அவரது ஆங்கில உச்சரிப்பு, வெகு நேர்த்தியாக இருந்தது. சட்டம் படிக்க ஆசைப்பட்டார். பிரபல நடிகையாக, 'பிசி'யான பின், இயலாமல் போனது.

தம் மகனின் டியூஷன் டீச்சரிடம், மெட்ரிக் தேர்வுக்கு படித்து, 1966ல், ஆந்திர பல்கலைக்கழத்தில் இளம் மாணவியர் மத்தியில் அமர்ந்து,

இந்த பேரிளம் மாணவி தேர்வு எழுதி, தேறினார்.

அடுத்த ஆண்டு, பி.யூ.சி., தேர்வு எழுதி, வெற்றி பெற்றார். அவர், பொது தேர்வு எழுதிய அந்த பல்கலைக் கழகம், பின்னர், அவருக்கு, கவுரவ டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்தது.

ஒருமுறை, தமிழகத்தில் சுற்றுலா சென்றார், பானுமதி. இதில் பெரும்பாலும், திருத்தல தரிசனம் தான் அதிகம்.

ராமநாதபுரம், சிதம்பரம் நடராஜர் கோவில், தஞ்சை பெரிய கோவில், வேளாங்கண்ணி மாதா, நாகூர் தர்கா, திருவையாறில் முக்கியமான, ஸ்ரீதியாகராஜ சுவாமி சன்னிதியில் அமர்ந்து, தியாகராஜ கீர்த்தனைகளை உள்ளம் உருக நெடு நேரம் பாடிக் கொண்டிருந்தார்.

இசை மீதான பானுமதியின் பிரேமையை, அர்ப்பணிப்பை அறிந்த அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர்., இசைக் கல்லுாரியின் முதல்வராக, நியமித்தார். தன் இல்லத்திற்கு வரவழைத்து, பொன்னாடை போர்த்தி சிறப்பித்தார்.

எம்.ஜி.ஆர்., வழங்கிய பணியை மூன்றாண்டுகள் சிறப்பாக செய்தார், பானுமதி.

கடந்த, 2005ம் ஆண்டின் இறுதியில், டிசம்பர் 24, சனிக்கிழமை மாலை முதல், அந்த சங்கீதக் குயில் பாடுவதை நிறுத்திக் கொண்டது. அந்த நட்சத்திர நாயகி, ரசிகர்களின் நினைவுகளில் நவரச நாயகியாக பதிவேற்றம் செய்யப்பட்டு வாழ்கிறார்.

பானுமதி பல பேட்டிகளில் கூறியது:

வசனத்தை பாவத்துடன் பேசி, காட்சியின் தன்மையை உணர்ந்து நடிப்பது தான், ஒரு நடிகையின் வேலைபாட்டு எந்த இடத்தில் தேவை, தேவை இல்லை என்று முடிவு செய்வது கதாசிரியர் அல்ல; திரைக்கதை ஆசிரியர் தான் காலத்திற்கேற்ப இசையின் பாணியும் மாறிக்கொண்டே வருகிறது. இதை புரிந்து, இசை அமைக்க வேண்டும்.

மக்கள் எத்தகைய இசையை அதிகம் விரும்புகின்றனர் என்பதை சீர்துாக்கி பார்த்து, அதே சமயம் கதைக்கும், சம்பவத்துக்கும் பொருந்தும் வகையில் அமைக்க வேண்டும்.

நிறைவு

சபீதா ஜோசப்


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us