தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!

இது உங்கள் இடம்!


PUBLISHED ON : மே 02, 2021

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : மே 02, 2021


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ரியாலிட்டி ஷோ' எனும் விபரீதம்!

முன்னணி தனியார் 'டிவி' சேனல்கள், நேயர்களை கவரவும், தக்கவைத்துக் கொள்ளவும், போட்டி போட்டு, பல நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குகின்றன.

நெடுந்தொடர் என்ற பெயரில், அழுகை மற்றும் எதிர்மறையான எண்ணங்களை விதைக்கும் விஷயங்களையே காட்டிக் கொண்டிருக்கின்றன.

தற்போது, வர்த்தக ரீதியான போட்டியை சமாளிக்க, தங்கள் சேனலின், 'டி.ஆர்.பி., ரேட்டிங்'கை ஏற்றிக் கொள்வதற்காகவும், 'ரியாலிட்டி ஷோ' என்ற பெயரில், தவறான நிகழ்ச்சிகளை ஒளிபரப்புகின்றன.

சிறுவர் முதல் பெரியவர் வரை விரும்பி பார்க்கும், 'ரியாலிட்டி ஷோ'க்களில், இரட்டை அர்த்தம் கொண்ட வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன. நாகரிகம் என்ற பெயரில், மேற்கத்திய பழக்கவழக்கங்களை கொண்டு வந்து, கலாசாரத்தை சீரழிக்கும் வகையில் நிகழ்ச்சிகளை திணிக்கின்றன.

குறிப்பாக, பிரபல சேனல் ஒன்றில், ஞாயிறு தோறும் மதியம், 'ரியாலிட்டி ஷோ' ஒளிபரப்பாகிறது. இதில், திருமணமாகாத ஆண்கள், திருமணமாகாத பெண் திரை பிரபலங்களை, ஒவ்வொரு வாரமும், 'இம்ப்ரஸ்' செய்வது போன்று, நிகழ்ச்சி தொகுக்கப்படுகிறது.

இந்நிகழ்ச்சியில், ஒரு பெண்ணுக்கு, ரோஜா கொடுத்து காதலை வெளிப்படுத்துவது முதல், முதலிரவு வரை அனைத்து விஷயங்களையும் அலசிவிட்டன. இதன் மூலம், சமுதாயத்திற்கு என்ன சொல்ல வருகின்றனர் என்பதே புரியவில்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளை ஒளிப்பரப்புவதற்கு முன், எத்தனை விளம்பரதாரர்கள் கிடைப்பர் என்பதற்கு பதிலாக, இல்லத்தில், குடும்பத்துடன் பார்க்கத் தகுந்ததா என, சேனல் தயாரிப்பாளர் சிந்திப்பது நல்லது.

சின்னத்திரை நெடுந்தொடர்கள் மற்றும் இதுபோன்ற, 'ரியாலிட்டி ஷோ'க்களை தொடர்ந்து பார்ப்பதன் மூலம், நம் எண்ணத்தில் நாமே நஞ்சை ஏற்றிக் கொண்டிருக்கிறோம்.

சமூதாய நலனை சீர்கெடுக்கும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை, 'டிவி' சேனல்கள் தவிர்க்கலாமே!

தமிழ்கவி சுவாசன், மதுரை.

கையிருப்பில் மிச்சம் வையுங்கள்!

உறவினர் ஒருவர், ஐந்து வயது மகள், மூன்று வயது மகன் என, இரண்டு குழந்தைகளையும், மனைவியின் பராமரிப்பில் விட்டு, வெளிநாட்டு வேலைக்கு சென்றார்.

மூன்று ஆண்டுகள் அங்கு பணிபுரிந்தவர், அவரது ஊதியத்தை மனைவிக்கு அனுப்பி, அதைக் கொண்டும், நகைகளை விற்றும், கூடுதலாக கடன் பெற்றும், வசதியான பெரிய வீடு கட்டினார்.

ஊருக்கு வந்தவர், எதிர்பாராவிதமாக விபத்தில் இறந்து போனார்.

தற்போது, மகள் - மகனோடு, கையிருப்பு ஏதுமில்லாமல், கடன் நெருக்கடியில், வீட்டுடன் வீட்டு மனையையும் விற்று, கடனை அடைக்க வேண்டிய சூழலுக்கு ஆளானார், மனைவி.

அதன்பின், குழந்தைகளுடன் வாடகை வீட்டில் தங்கியிருந்து, கூலி வேலைக்கு போகிறார்.

வாசகர்களே... வீடு, திருமணம், கல்வி, மருத்துவம் என, எந்த செலவுக்கும், கையிருப்பில் சிறிதளவை சேமிப்பில் வைத்து, மற்றதை செலவிடுங்கள். கையிருப்பு மொத்தத்தையும் கரைத்து, கடனும் பெற்று, பின், கஷ்டப்படாதீர்கள்.

- சி. அருள்மொழி, கோவை.

'கொரோனா' பயம் வேண்டாம்!

வைரஸ் குறித்த செய்திகளிலிருந்து உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள்.

* இறப்பு எண்ணிக்கையை பார்க்க வேண்டாம். சமீபத்திய, 'ஸ்கோரை' அறிய, இது கிரிக்கெட் போட்டி அல்ல. அதைத் தவிர்க்கவும்

* இணையத்தில் கூடுதல் தகவல்களை தேடாதீர்கள். இது, உங்கள் மனநிலையை பலவீனப்படுத்தும்

* அபாயகரமான செய்திகளை அனுப்புவதை தவிர்க்கவும். சிலருக்கு, உங்களைப் போன்ற மன வலிமை இருக்காது

* முடிந்தால், வீட்டிலேயே இனிமையான இசையை கேளுங்கள். குழந்தைகளை மகிழ்விக்க, கதைகள் மற்றும் எதிர்கால திட்டங்களை சொல்லுங்கள். விளையாட்டுகளை பாருங்கள்

* கைகளை கழுவுவதன் மூலம் வீட்டில் ஒழுக்கத்தை பேணுங்கள்

* உங்கள் நேர்மறையான மனநிலை, நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்க உதவும். எதிர்மறை எண்ணங்கள், உங்கள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை சோர்வடைய செய்து, பலவீனப்படுத்தும்

* மிக முக்கியமாக, 'இதுவும் கடந்து போகும். நாங்கள் பாதுகாப்பாக இருப்போம்' என்று உறுதியாக நம்புங்கள்.

சவுமியா சுப்ரமணியன், சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us