PUBLISHED ON : அக் 11, 2015

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது—
தேவர், எம்.ஜி.ஆரை அணுக இயலாத சூழல். 'ஒரு படத்தோடு ஊற்றி மூடி விடவா சினிமா கம்பெனி ஆரம்பித்தோம்...' என நினைத்தவர், 'அய்யா... எம்.ஜி.ஆர்., என் தோஸ்து; நாங்க ஜூபிடர்ல ஒண்ணுக்குள்ளே ஒண்ணா வாழ்ந்தவங்க. எனக்கு அவர் தான் சகலமும். இப்ப அடுத்த படம் எப்படி கேக்குறதுன்னு யோசனையா இருக்கு...' என, வாகினி ஸ்டுடியோ சக்ரபாணியிடம் சஞ்சலப்பட்டார் தேவர்.
'நீங்க ஏன் வருத்தப்படறீங்க சின்னப்பா... நாங்க உங்களுக்கு தொடர்ந்து மூணு, நாலு படங்களுக்கு பைனான்ஸ் செய்யறோம்; நெகடிவ் ரைட்ஸ் வாகினிக்கு எழுதித் தந்துடுங்க. ஆனா, ஒரே ஒரு கண்டிஷன்... எம்.ஜி.ஆரை போடக்கூடாது...' என்றார் வாகினி ஸ்டுடியோ சக்ரபாணி. செய்வதறியாமல் திகைத்தார் தேவர்.
''ஏண்ணே டல்லா இருக்கீங்க... வெலிங்டன்ல சந்திரலேகா மறுபடியும் போட்டிருக்கான். போய்ப் பாக்கலாம் வாங்க...' என்று, 'ரிலாக்ஸ்' செய்ய தேவரை அழைத்துச் சென்றார் எடிட்டர் பாலு.
சந்திரலேகா படத்தில் நடித்த ரஞ்சன் ஞாபகத்துக்கு வந்தார். 'அவரை நடிக்க அழைத்தால் என்ன?' என்று நினைத்தார் தேவர்.
லால்குடி வெங்கட ரமண சர்மா; இவரை, செல்லமாக ரமணி என்றும் ரஞ்சன் என்றும் அழைப்பர். 1941ல், அமைதி வடிவான புத்தராக, அசோக் குமாரி படத்தில் நடிக்க ஆரம்பித்தார். ஜெமினியின், மங்கம்மா சபதம் படம் மகுடம் தரிக்கச் செய்தது.
சினிமாவில், எம்.ஜி.ஆரைச் சீண்டிய முதல் எதிரி ரஞ்சன். சாலிவாஹணன் படத்தில், கதாநாயகன் ரஞ்சன்; அப்போதே அவர் பிரபல நடிகர்.
எம்.ஜி.ஆருக்கும், அவருக்கும், சாலிவாஹணன் படத்தில் கத்திச் சண்டை காட்சி இருந்தது. ராமச்சந்திரனை அவர் நிஜமாகவே தாக்கினார். பதிலுக்கு, ராமச்சந்திரனும் தாக்கினார். தன்னை விட பிரமாதமாக வாள் பிடித்த ராமச்சந்திரனை, இயக்குனர், பி.என்.ராவிடம் போட்டுக் கொடுத்தார் ரஞ்சன்.
'ராமச்சந்திரன் வேண்டுமென்றே என்னைத் தாக்குகிறார்...' என்றார். இதனால், ராமச்சந்திரனை கண்டித்தார் இயக்குனர். தேவரிடம், 'சின்னப்பா... தொழில் திறமையைக் கூட காட்ட முடியாது போல் இருக்கிறதே...' என்று புலம்பினார் எம்.ஜி.ஆர்.,
'திறமைக்கு எப்போதுமே மதிப்பு உண்டு; உங்கள் ஆற்றல், ஒருநாள் இந்த உலகம் முழுதும் தெரியப் போகிறது; வருத்தப்படாதீர்கள்...' என, நம்பிக்கை கொடுத்தார் சின்னப்பா.
அந்நாட்களில், 'ரஞ்சன், எம்.ஜி.ஆர்., இருவரில் கத்தி வீசுவதில் யார் சூப்பர்...' என்று சினிமா பத்திரிகைகளில் தவறாமல் கேள்வி வரும்.
கடந்த 1953ல், 'பேசும் படம்' மாத இதழில், இலங்கை வவுனியாவைச் சேர்ந்த வாசகர் கனக செல்வராஜா, 'ரஞ்சன், திலீப்குமார் மற்றும்
எம்.ஜி.ஆர்., இவர்களில் வாள் சண்டை, நடிப்பு மற்றும் அழகில் சிறந்தவர் யார்...' என, தன் சந்தேகத்தை கேட்டிருந்தார்.
அதற்கு, 'அழகில் ராமச்சந்திரன், நடிப்பில் திலீப் குமார், வாள் வீச்சில் ரஞ்சன்...' என்று, 'பேசும்படம்' இதழ் பதில் கூறியிருந்தது.
தேவரின் புதுப்படத்தில் கதாநாயகன் ரஞ்சன்; என்ற செய்தி எம்.ஜி.ஆரின் புருவங்களை உயர்த்தியது.
தேவரிடம், சகக் கலைஞர்கள், 'அண்ணே... எம்.ஜி.ஆருக்கு எதிரா வேணும்ன்னே ரஞ்சனை தமிழ்நாட்டுல தூக்கி விடறீங்க...' என்றனர்.
'எம்.ஜி.ஆருக்கு யார்கிட்ட தான் சண்டை, சச்சரவு இல்ல... அவருக்கு மாற்றாக இங்க வேறே யாரு இருக்கா... என் ரசனைக்கு ஏதோ செஞ்சிட்டுப் போறேன். என்னை நிம்மதியா படம் எடுக்க விடுங்க...' என்று தன் முடிவில் உறுதியாக நின்றார் தேவர். ஆனாலும், உள்ளுக்குள் பயம் தோய்ந்திருந்தது.
மும்பையில் உடல் நலம் சரியில்லாமல் இருந்தார் ரஞ்சன். தேவரின் அழைப்பு, அவருக்கு வசந்த வாய்ப்பாகத் தோன்றியது. அதுவும்,
எம்.ஜி.ஆர்., தேவர் மன விரிசல்களுக்குக்கிடையே மலர்ந்த பொன்னான சந்தர்ப்பம். தன்னை முளையிலேயே கிள்ளி எறிந்த விரோதியை தோற்கடிக்க மற்றொரு வாய்ப்பு. 'சின்னப்பா... நான், சூட்டிங் வர கொஞ்ச நாளாகும் பரவாயில்லயா... குதிரை ஏறணும்ன்னா உடம்பை கொஞ்சம் தேத்தணும். என்ன சொல்றே...' என்றார் ரஞ்சன்.
'அண்ணே... நான் அதுக்குள்ளே, கதையை தயார் செய்து வைக்கிறேன். தமிழ் மட்டுமில்ல, இந்தி, தெலுங்கு எல்லாத்துலயும், 'டப்' செய்துடலாம். நீங்க ஆல் இண்டியா ஸ்டாராச்சே...' என்று அவருக்கு ஒப்புதல் கூறினார்.
சென்னை திரும்புகிற வழியில், ரயிலிலேயே கதையை தயார் செய்தனர் தேவரும், எடிட்டர் பாலு ராவும்!
முதன் முதலாக ஊட்டியில் அவுட்டோர் ஷூட்டிங்; அதை ஞாபகப்படுத்தும் விதமாக, நீலமலைத் திருடன் என்று டைட்டிலும் வைக்கப்பட்டது.
தென் இந்தியாவில் பானுமதியை விட, அஞ்சலிதேவியை நிறைய பேர் ரசித்தனர். அதனால், கதாநாயகியாக அஞ்சலியை தேர்ந்தெடுத்தார் தேவர். நாகிரெட்டி இருக்கும்போது பணப் பிரச்னை கிடையாது. ஏராளமான சண்டைக் காட்சிகள்; அஞ்சலிக்கும், ஈ.வி.சரோஜாவுக்கும் கூட, அரை நிஜார் போட்டு, கைகளில் கத்தியைக் கொடுத்தார். அஞ்சலியின், 'இமேஜை' அடியோடு மாற்றினார்.
மிருகக்காட்சி சாலை, சர்க்கஸ் கூடாரம் இரண்டையும் திறந்து வைத்ததைப் போல, படம் முழுவதும் ஏராளமான வன விலங்குகளின் நடமாட்டம். ஸ்டார் அந்தஸ்தில் வெள்ளைக் குதிரையும், நாயும்!
'படம் ஓடுமா?'
'திருடனாச்சே... ஜனங்க வந்தா ஓடுவான்...' என்று ஆனந்தவிகடன் இதழில், 'பன்ச்' விமர்சனம் செய்தனர். தேவரின் இரண்டாவது தயாரிப்பும், நூறு நாள் கொண்டாடியது.
தேவர் பிலிம்ஸ் நிமிர்ந்தது; புதுமுகங்கள் வாய்ப்பு கேட்டு நின்றனர். பிரபலங்கள், 'வணக்கம் அண்ணே...' என்று பவ்யமாக கும்பிட்டனர்; ஜெயித்து விட்டார் தேவர்.
தேவர் பிலிம்சின் மூன்றாவது படம், செங்கோட்டை சிங்கம். கன்னடம் பேசும் உதயகுமார், சரோஜதேவி இருவரையும் துணிந்து தமிழில் ஜோடி சேர்த்தார். படம் சுமாராகவே ஓடியது. அடுத்த படத்திற்கு, ஜெமினி கணேசனிடம் கால்ஷீட் கேட்டார். இது, குடும்பச் சித்திரம்; அதிலும், சரோஜாதேவி கதாநாயகி.
வசனம் எழுத புதிதாக ஒருவருக்கு வாய்ப்பளித்தார். ஏ.எல்.நாராயணனிடம் உதவியாளராகப் பணி ஆற்றியவர்; அப்பா தஞ்சையில் தமிழ் ஆசிரியர். சொந்த ஊர் திருவாரூர். ஆரூர் தாஸ் என்ற பெயரில், ஸ்ரீ ராம பக்த ஹனுமான் போன்ற, 'டப்'பிங் படங்களுக்கு, வசனம் எழுதியவர்.
ஆரூர்தாசின் பணிவு தேவருக்கு பிடித்துப் போனது. வசனம் எப்படி இருக்கும் என்று அறிய விரும்பினார். எழுதிய வரையில் வாசித்துக் காட்டச் சொன்னார். அவருக்கு திருப்தியானது.
தேவரிடம் வேலை செய்வது எத்தனை கஷ்டமானது என்பதற்கு, திருமுகமே நல்ல எடுத்துக்காட்டு. செங்கோட்டை சிங்கம் படத்தை இயக்க முடியாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார் திருமுகம். நீலமலைத் திருடனில் தேவர் அவரைப் படுத்தியபாடு தாளாமல், 'அந்த ஹிட்லர் கிட்ட எவன் வேல பாப்பான்...' என்று விலகி விட்டார்.
அதனால், பிரபல ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான வி.என்.ரெட்டியே, இப்படத்தை இயக்கினார். ஆரூர்தாசுக்கு, தேவரிடம் வேலை பார்க்க பயம் இருந்தாலும், எப்படியும் அவரைக் கவர்ந்துவிட வேண்டும் என்று, வசனத்தில் நிறைய, 'பன்ச்'கள் வைத்தார்...
'வெற்றி... வெற்றி... நாலாவது ஆட்டத்திலும் எனக்கு தான் வெற்றி...' என்று முதல் காட்சியில், எஸ்.பி.சுப்பையாவை கூற வைத்தார்...
'தயாரிப்பாளரா இது உங்களுக்கு நாலாவது படம்; அதைத் தான் நாலாவது ஆட்டத்திலேயும் வெற்றின்னு எழுதி இருக்கேன்...' என்று தேவரிடம் கூறிவிட்டார் ஆரூர்தாஸ், உருகி விட்டார் தேவர்.
எழுத்தாளர்கள் மற்றும் கவிஞர்களின் வார்த்தைகள் பலிக்கும் என்பது, தமிழ் சினிமாவில் காளிதாஸ் காலத்து நம்பிக்கை. தேவரும் அதற்கு விதி விலக்கல்ல. ஆரூர்தாஸ் எழுதியபடி நாலாவது தயாரிப்பும் வெற்றி அடையும் என்று உறுதியாக நம்பினார். தன் ஒவ்வொரு படத்திலும், கதாநாயகன், வெற்றி வெற்றி என்று கத்தியபடியே ஓடி வருவதை ஒரு அம்சமாகவே வைக்க ஆரம்பித்தார்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்