
யாதும் ஊரே!
உடல் நலக் குறைவால், அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தேன். நான் தங்கியிருந்த, 'வார்டின்' எதிர் வரிசையில், நோயாளி ஒருவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டிருந்தார். பார்வையாளர் நேரத்தில், நோயாளிகளை பார்க்க, பழம், பட்சணங்களுடன் நிறைய பேர் வருவர். ஆனால், அவரை பார்க்க ஒருத்தரும் வருவதில்லை. அதனால், அது போன்ற சமயத்தில், அவர் மெல்ல எழுந்து, வெளியில் போய் விடுவார் அல்லது கண்களை மூடி படுத்திருப்பார். அவரைப் பார்த்தால், வாழ்க்கையே வெறுத்து விட்டவர் போல் இருப்பார். நான், அவரை கவனித்தது போல், அவருக்கு அடுத்த, 'பெட்' நோயாளியை பார்க்க வந்த ஒருவரும் கவனித்துள்ளார்.
ஒருநாள், அவரிடமும் பேச்சு கொடுத்து, 'எந்த ஊர்?' என்று விசாரித்திருக்கிறார். நோயாளி பதில் கூறியதும், வந்தவர், 'ஓ... நீங்க நம்ம ஊர்க்காரர்...' என்று சொல்லி, மறுநாள் வரும் போது, அவருக்கும் பழங்கள் மற்றும் பட்சணங்கள் வாங்கிக் வந்து கொடுத்து, இரண்டு வார்த்தை ஆறுதலாக பேசுவதை வழக்கமாக்கிக் கொண்டார். அதுவரை, கவலை தோய்ந்த முகத்தோடு இருந்தவரிடம், 'பார்வையாளர் நேரம்' வரும் போது, ஒரு உற்சாகம் தொற்றி கொண்டது போல் தெரிந்தது.
மேலும், ஒரு வாரம் சென்றபின், நான், 'டிஸ்சார்ஜ்' ஆகி போகும் போது, அந்த பார்வையாளரை சந்தித்து, 'அந்த நோயாளி உங்க ஊர்க்காரரா?' என்று கேட்டேன்.
'இல்ல சார்... அவருக்கு தைரியத்த வரவழைக்கிறதுக்காக தான், நான் அப்படி சொன்னேன். அதனால் என்ன... நாம் மேலே போய் சேர்கிற வரைக்கும் எல்லாருமே ஒரே ஊர்க்காரர் தானே...' என்று சொல்லி சென்றார். 'இப்படியும் சிலர் இருக்கின்றனரே...' என்று எண்ணும் போது மகிழ்ச்சியாய் இருந்தது.
— ஆர்.கிருஷ்ணமூர்த்தி, புதுச்சேரி.
ஆறுபதிலும் உற்சாகம் குறையாமல்...
அரசு பணியிலிருந்து ஓய்வு பெற்ற நண்பரை, சமீபத்தில் சந்தித்த போது, பேச்சினிடையே, 'வேலை பார்க்கும் போது ரொம்ப பிசியா இருந்துட்டு, இப்ப பொழுதுபோறது ரொம்ப கஷ்டமா இருக்குமே...' என்றேன்.
சத்தம் போட்டு சிரித்த நண்பர், 'வேலை பார்க்கும் போது, 24 மணி நேரமும் என் கட்டுப்பாட்டில் இல்லைங்கிறது தான் உண்மை. ஆனா, இப்போ சுதந்திரமா செயல்பட முடியுது. ஓய்வுன்னா, வேலை எதுவும் செய்யாம, சும்மா இருப்பது இல்ல. ஒரு வேலையிலிருந்து இன்னொரு வேலையில் ஈடுபடுத்திக் கொள்வதுதான். இந்த மனோபாவத்தில் வளர்ந்ததால் தான், 60 வயதை தாண்டிய பின்பும், இன்னும் உற்சாகம் குறையாம இருக்கேன். இப்போ, 'ஆர்கானிக்' காய்கறிகளை, ஏற்றுமதி செய்யும் தொழிலில், மும்முரமாய் இறங்கியிருக்கிறேன்...' என்றார்.
சோர்வோ, தயக்கமோ இல்லாமல், உற்சாகமாக பேசிய நண்பரின் தன்னம்பிக்கையில் ஆனந்தம் மட்டுமல்ல, அரிய பாடமும் கிடைத்தது!
— பி.ஜி.பி., இசக்கி, பொட்டல்புதூர்.
'கிசு கிசு' சிகாமணிகள் கவனத்திற்கு!
எங்கள் அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு பெண், மிக அழகாக இருப்பாள். அவள், வேலைக்கு சேர்ந்து, 10 ஆண்டுகள் ஆகின்றன. நவநாகரிக உடை அணிந்து அலுவலகத்துக்கு வருபவள்; திடீர் திடீரென விடுப்பு எடுத்துச் செல்வாள். எங்கே செல்கிறாள் என, யாரிடமும் சொல்ல மாட்டாள். இதனால், அனைவருமே அவளைப் பற்றி, பலவிதமாக, 'கிசு கிசு' பேசுவோம்.
ஒரு நாள் அவளிடம் பேசியபோது, ஒரு உண்மையைச் சொன்னாள்... உயிரை பறிக்கும் நோய் அவளை பீடித்திருக்கிறது!
'என் உடல், மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளது. உடல் உறுப்புகளில் பெரும்பாலானவை, மருந்து, மாத்திரைகளால் செயல்படுகின்றன. இதையெல்லாம் மத்தவங்ககிட்டே சொல்லி, எதுக்கு அவங்கள துக்கப்படுத்தணும்...' என்றாள். காற்று வற்றிய பூரி போல் ஆனது என் முகம்.
'மனதில் இவ்வளவு சோகத்தை வைத்து, எப்படி உன்னால் இத்தனை கவர்ச்சியா உடை அணிய முடியுது...' எனக் கேட்டேன். 'நான் கவர்ச்சியாகவா உடை அணிகிறேன்... ஜீன்ஸ் போடும் போது ஷர்ட்டின் மேல் பட்டன் போடாமலோ, 'டைட்'டாவோ போடுறதில்லயே... இடுப்புக்கு கீழே, நீளமாக தான் போடுகிறேன். புடவையக் கூட, தொப்புள் தெரிவது போல் கட்டறதில்ல.
'என்னைப் பொறுத்தவரை, இருக்கும் வரை, நல்லா உடை உடுத்தணும். என் உடல் நிலையை காரணமாக வைத்து, ஏனோதானோ என்று, 'டிரஸ்' செய்ய விரும்பவில்லை. சுய பச்சாதாபம் ஏற்படாமல் இருக்கவும், என்னை நானே உற்சாகபடுத்திக் கொள்ளவும் விதவிதமாக ஆடை, அலங்காரம் செய்து கொள்கிறேன்...' என்றாள்.
அன்று முதல், அவளை மட்டுமல்ல, யாரைப் பற்றியும், 'கிசு கிசு' பேசுவதை நிறுத்தினோம்.
வெளித்தோற்றத்தை வைத்து, உண்மை தெரியாமல், அடுத்தவர் பற்றி வம்பளக்கும், 'கிசு கிசு' சிகாமணிகள் இனி, மாறலாமே!
— பி.பானுமதி, சென்னை.
மனதை நெகிழ வைத்த மாற்றுத் திறனாளி!
சமீபத்தில், ரயிலில் பயணித்தபோது, கண் தெரியாத மாற்றுத் திறனாளி ஒருவர் பிளாஸ்டிக் பொருட்களை விற்பதற்காக, நான் இருந்த பெட்டியில் ஏறினார். சிறிது நேரம் பொருட்களை கூவி விற்றவர், பின், உரத்த குரலில், 'பெரியோர்களே, தாய்மார்களே... இந்த ரயில், இனி தாம்பரம், மாம்பலம் மற்றும் எழும்பூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிற்கும்; இன்று, போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும் தினம் என்பதால், மேற்குறித்த ரயில் நிலையங்களில் போலியோ சொட்டு மருந்து, குழந்தைகளுக்கு வழங்க முகாம் அமைத்துள்ளனர். குழந்தைகளுடன் இறங்கும் தாய்மார்கள் போலியோ சொட்டு மருந்து எடுத்துக் கொள்ளலாம்...' என்று அறிவித்தார்.
மாற்றுத் திறனாளியாக இருந்தும், அவரின் இந்த சமுதாயப் பணி, ரயிலில் பயணம் செய்த எல்லோரது மனதையும், நெகிழ வைத்தது.
இச்சம்பவத்தை பார்த்ததிலிருந்து, 'நாமும் இம்மாதிரி ஏதாவது ஒரு வகையில், சமுதாயத்துக்கு உதவ வேண்டும்...' என்ற முடிவை எனக்குள் ஏற்படுத்தியது.
— வி.பரமசிவம், சென்னை.
ஏ.டி.எம்.,மில் பணம் எடுக்கிறீர்களா?
வங்கி ஏ.டி.எம்.,மில் பணம் எடுத்த உடனே கிடைக்கும் பிரின்ட் - அவுட் விவரங்கள், சில நாட்களில் சத்தமாக அழிந்து விடுவதாலும், பாஸ் - புக்கை அதிகம் பயன்படுத்தாத காரணத்தாலும், சமயத்தில் வங்கி வரவு - செலவு மற்றும் இருப்பு விவரம், நமக்கு தெரியாமல் போய், தடுமாறும் நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க நான் கையாளும் ஐடியா இது...
நான்கைந்து முறை ஏ.டி.எம் பயன்படுத்தியபின், ஒரு ஸ்டேட்மென்ட் எடுத்து, அதை என் மொபைலில் புகைப்படம் எடுத்து வைத்துக் கொள்வேன். அதனால், பணம் கட்டியதையும், எடுத்த விவரங்களையும் தெளிவாக அறிந்து கொள்ள முடிவதுடன், அடுத்த முறை பணம் எடுக்கும்போது பேலன்சை, செக் செய்ய வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை. மற்றவர்களுக்கு இதை பின்பற்றலாமே!
- ரா. ரவிச்சந்திரன், சென்னை.