PUBLISHED ON : மார் 06, 2016

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
தமிழ் திரையுலகில், எண்ணற்ற புதிய தயாரிப்பாளர்களை உருவாக்கிய ஒரே நடிகர் ஜெய்சங்கர் மட்டுமே! தேவருக்கு கதை கூறியவர்களை எல்லாம், பட அதிபர்களாக நிமிரச் செய்த பெருமை அவருக்கு உண்டு. சிவாஜி கணேசனை போன்ற சிறந்த நடிகர் கிடையாது; ஆனால், கணேசனுக்கு இணையாக, ஆண்டுக்கு, 10 படம் அவரால் கதாநாயகனாக நடிக்க முடிந்தது என்றால், அதற்கு காரணம், அவரது உழைப்பு, எளிமை, விட்டு கொடுத்த பண்பு, வேகம் மற்றும் தொழில் பக்தி!
எம்.ஜி.ஆருக்குப் பின், தேவரின் ராசியான கதாநாயகன் ஜெய்சங்கர். அவர்களது கூட்டணியில், மாணவன் பட ஷூட்டிங் நடைபெற்ற நேரம். அதன் பாடல் காட்சியை சாத்தனூர் அணைக்கட்டில் படமாக்கினர்.
விசிலடிச்சான் குஞ்சுகளா குஞ்சுகளா
வெம்பி போன பிஞ்சுகளா... என்ற பாடலுக்கு நடன ஒத்திகை நடந்தது. ஆடிக் கொண்டிருந்த இளைஞனுக்கு அப்போது தான் அரும்பு மீசை எட்டி பார்த்தது. அகன்ற கண்களும், ஒல்லியான தோற்றமும், சிவந்த நிறமும், தேவரை கவர, பையனின் ஆட்டத்தை வெகுவாக ரசித்தார்.
'தங்கப்பன் மாஸ்டர் வரல; அவர், 'அசிஸ்டென்ட்' வந்திருக்கார். அவர் தான் மற்றவர்களுக்கு பயிற்சி கொடுக்கிறார்...' என்றார் உதவி இயக்குனர் மாரிமுத்து.
பாடலுக்கு ஆட வேண்டியவர் ஜெய்சங்கர் இல்லை; யாராவது ஒரு இளைஞன் முன்னின்று ஆடினால் போதும். அதனால், 'இந்த பையன் நல்லா ஆடறானே... இவனையே ஆட விடுங்க...' என்றார் தேவர்.
தேவர் பிலிம்ஸ் அலுவலகத்தில் ஒத்திகையை முடித்து, புறப்பட்ட அந்த இளைஞரை, 'தம்பி... இங்கே வா... நீ நல்லா ஆடுற. முதல்ல உடம்பை நல்லா கவனி. உனக்கு கதாநாயகன், 'லுக்' இருக்கு. சொல்ல முடியாது... என் படத்துலயே கூட நீ அறிமுகமானாலும் ஆச்சரியப்படறதுக்கில்ல...' என்றார் தேவர்.
அந்த இளைஞன் தான், கமல்ஹாசன்!
அவருடன் இன்னொரு புதுமுகத்தையும், ஜோடி சேர்த்தார் தேவர். அவர், குட்டி பத்மினி!
குழந்தை நட்சத்திரங்களான இவர்கள், வளர்ந்த பின், பெற்ற முதல் வாய்ப்பு, தேவர் பிலிம்சில்!
'ஜெய்சங்கர் எத்தனையோ தயாரிப்பாளரை கொண்டு வராரு; நம்மளாலே, ஒரு கதாநாயகரை உண்டாக்க முடியுதா...' என்று அங்கலாய்ப்பார் தேவர். ஏனோ அவருக்கு கமலை பிடித்து விட்டது.
'ஏம்பா திருமுகம்... நீ என்ன சொல்ற... அந்தப் பையனுக்கு, கொஞ்சம் போஷாக்கு கொடுத்தா, ஊட்டமாயிடுவான்; ஜோரா இருப்பான். அவனுக்கு சினிமா புதுசு கிடையாது. நம்ம படத்துல, கமலை கதாநாயகனாக போடலாமே... லவ் சப்ஜெக்ட் ட்ரை பண்ணலாம். பாபி என்ற இந்தி படம் ஓடுதே...' என்றார் தேவர்.
'அண்ணன் என்ன இப்படி பேசறாரு... தொடர்ந்து வெற்றி கொடுத்துட்டு வரோம்; இந்திக்கும் போயிட்டோம். எம்.ஜி.ஆரே விரும்பி வந்து, ஹாத்தி மேரா சாத்தி படத்தை தமிழ்ல எடுங்க. நானே நடிச்சு தறேங்குறாரு. இப்ப போய், 'ரிஸ்க்' எடுக்கணும்ங்றாரே...' என்றார் திருமுகம்.
தேவர் பிலிம்சில், கமல் நடிக்க வாய்ப்பு இன்றி போனது. ஆனாலும், கமலுடன் நட்பு பாராட்டினார் தேவர். அவ்வப்போது, 'கமலு... என்னடா ஒரேயடியா இளைச்சுட்டே... முதல்ல உடம்ப பாரு; அப்புறம் வாய்ப்பு தேடு...' என்று அறிவுரை கூறுவார்.
கமல் தன் முயற்சிகளை கைவிடவே இல்லை. தினமும், எல்டாம்ஸ் ரோட்டிலிருந்து, தேவர் பிலிம்ஸ் - வாணி மகால் சந்திப்பு வரை ஓடினார்; அவர் ஓட்டத்தை யாரும் தடுத்து நிறுத்தவில்லை. ஆனால், அவரது வாட்டத்தை போக்கினார், கே.பாலசந்தர். கமலின் நடிப்பு, அரங்கேற்றம், அவரை தொடர் கதையாக்கியது.
'நான் எவ்வளவோ முயற்சி செய்தேன்; இவனுங்க விட்டாத் தானே... எப்படியோ கஷ்டப்பட்டு, முன்னுக்கு வந்துட்டே! இனிமே, உன் கால்ஷீட்டுக்காக காத்து கிடக்கணும். பழசையெல்லாம் மனசுல வெச்சு பழி வாங்கிடாதே முருகா...' என்பார் தேவர். அவரது இயலாமை கமலுக்கு புரிந்தது. பெற்றோர் மற்றும் குருவுக்கு பின், தேவரின் பாதம் தொட்டு உளமாற வணங்குவார் கமல்.
'நான் ஒரு கதை சொல்றேன் கேக்குறியா கமலு...' தேவர் கூறும் வரையில், பொறுமையாக கேட்டு ரசித்தார் கமல். கதையைவிட, அதை அவர் சொல்லும் பாடி லேங்வேஜ் இருக்கே... சிவாஜி கெட்டார் போங்கள்!
நாயகனாக புகழ்பெற்று, ஆண்டுதோறும் பிலிம்பேர் விருதுகள் வாங்க ஆரம்பித்த பின்னரும், திருமணம் செய்ய யோசித்தார் கமல். 'எம் படத்துலே நீ நடிக்கலேன்னாலும் பரவாயில்ல; காசு எவ்வளவு வேணும்ன்னாலும் வாங்கிக்க. வீடு கட்டு; திருமணம் செய்துக்க; அப்புறம் சாவகாசமா நடிச்சு கொடு முருகா...' என்றார் தேவர்.
'கல்யாணம் செய்துட்டா மார்க்கெட் சரிஞ்சுடும்ன்னு சொல்றா. அதனால, தள்ளி போட்டுண்டே வரேன். வீடு வேணும்ன்னா கட்டிக்கறேன்...' என்றார் கமல்.
தேவர் விடாமல், 'கமலு... நான் இருக்கேன். நீ ஏன் கவலைப்படறே... ஆண்டுக்கு எத்தனை படம் நடிப்பே... நான் தயாரிக்கிறேன். இந்தா முன்பணம்; முதல்ல, ஐந்து படம் ஒத்துக்க. கையில புடி; உடனே கல்யாணத்த முடிச்சுட்டு, ஹனிமூன் போயிட்டு வா; திரும்பி வந்து நடி...' என்றார்.
தொகை ஏதும் நிரப்பப்படாத வெற்று காசோலையை நீட்டி, 'எவ்வளவு தேவையோ நீயே எழுதிக்க முருகா...' என்றார் தேவர்.
மே, 1978ல், கமலின் (முதல்) திருமணம் கோலாகலமாக மும்பையில் நடைபெற்றது. அன்று மாலையே, எம்.ஜி.ஆரின் கையால் பிலிம்பேர் பரிசையும் பெற்றார்.
அவுட்டோர் லொகேஷன் பார்க்க, மதுரை நோக்கி விரைந்தது கார். மதுரையை கார் நெருங்கும் போது ரயில்வே கேட்டை மூடி விட்டனர். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வரிசையாக லாரிகள் நின்றிருந்தன. 'மாப்ள... நான் கொஞ்சம் காத்தாட உலவிட்டு வர்றேன். நீங்களும் வர்றீங்களா...' என்று கேட்டார் தேவர்.
காரில் இருந்து தியாகராஜன் இறங்கியதும், சிறுநீர் கழிப்பதற்காக, ஆளுக்கொரு பக்கமாக ஒதுங்கினர்.
மீண்டும், காருக்குள் ஏறி உட்காரும் போது, சிறிது தொலைவில் கூட்டத்திற்குள், 'மே... மே... மே...' என்ற சத்தம் கேட்டது. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் சுற்றிலும் நின்று வேடிக்கை பார்க்க, சிறுவன் ஒருவன் ஆட்டை வைத்து வித்தை காட்டிக் கொண்டிருந்தான். அருகில் சென்று பார்த்தார் தியாகராஜன். தேவரும், முக்காடு போட்டு உள்ளே நுழைந்தார்; அவர் அனுபவத்துக்கு, அங்கே கண்டது புதுசாகவே தோன்றியது.
கடவுளின் படைப்புகளிலேயே மந்தமானது ஆடு என்பர். அந்த ஆட்டையே ஒருவன் குரங்கை போல, 'ஆடுறா ராமா... ஆடுறா ராமா...' என்று பழக்கி இருக்கிறான். இந்த ஆட்டை, சென்னைக்கு கொண்டு போய், படத்தில் நடிக்க வைத்தால் என்ன!
ஆட்டுடன், கார் சென்னைக்கு புறப்பட்ட போது, புதிய கதையும், தேவரின் மனதுக்குள் வடிவம் பெற்றது. சினிமாவுக்கு ஏற்றவாறு ஆட்டுக்கு பயிற்சி அளிக்கப்பட்டன.
ராமு என்ற அந்த ஆட்டுக்கு, மதுரையை விட, சென்னை பிடித்து விட்டது. சுற்றிலும், 'சென்ட்' வாசனை வீசும் சினிமா சிநேகிதர்கள். ராமுக்கு புழுக்கை நாற்றம் வீசாமல் பார்த்துக் கொண்டனர். பயிற்சியாளர் நசீர் வழிகாட்டுதலில், விரைவாகவே, ராமு, தேவரின் கால்களுக்கிடையே நாயாக சுருண்டது.
'மாரா... இந்தக் கதையில ஆடு மேய்க்கிற இடையனா ஆம்பள வந்தா ஜனங்க ரசிக்க மாட்டாங்க; நாட்டுக்கட்டையா ஒருத்திய விடுவோம். அவளுக்கு, ஆடு தான் எல்லாமும்! அவ அநாதைன்னு ஆரம்பிப்போம். போக போக காதல், கலாட்டா, குடும்ப தகராறுன்னு கொண்டு போயிருவோம்...' என, 'ஒன் லைன்' கதை கூறினார் தேவர். சிவகுமாரின் தேதிகள் ஏற்கனவே, தயாராக இருந்தன. புதிதாக ஒரு நாயகியை, ஆட்டோடு ஆட விட, முடிவு செய்தார் தேவர்.
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்

