
'லைக்'கிற்காக, 'லைப்'பை இழக்கலாமா?
திருமணமான பெண் ஒருவர், முகநூல் வாயிலாக, எனக்கு பழக்கமானார். அவர் முகநூலில் இருப்பது, அவரது கணவருக்கு தெரியாது. அவருக்கு தெரியாமல் தான், அதை பயன்படுத்துவதாக என்னிடம் சொன்னார். அவர் போடும் பதிவுகளுக்கு, குறைந்தது, 1,000 - 2,000 'லைக்'குகள் குவியும். இத்தனைக்கும், அவர் சாதாரண புகைப்படங்கள் மற்றும் நடிகர் - நடிகைகளைத் தான், தன் பதிவுகளில் போடுவார்.
வெகுளியான அந்த கிராமத்து தோழியிடம், 'நீங்கள் போடும் சாதாரண பதிவுக்கே இவ்வளவு, 'லைக்' மற்றும் கமென்ட்கள் வருகிறதே... உங்க படத்தை, 'அப்லோட்' செய்தால், எவ்வளவு, 'லைக்' வரும்...' என அவரது மற்றொரு முகநூல் நண்பரிடமிருந்து, 'கமென்ட்' வர, இவருக்கும் ஆசை ஏற்பட்டது.
விளைவு, தன் புகைப்படத்தை, 'பப்ளிக்' பதிவுகளில், 'அப்லோட்' செய்தார். அவர் கணவருக்கு, இந்த விஷயம் தெரிந்து, சந்தேகம் கொண்டார். அவரது முகநூல் கணக்கை பார்த்து, 'உனக்கு இவ்வளவு நண்பர்களா.... எனக்கு தெரியாமல் இன்னும் எத்தனை பேரிடம் பேசி இருக்கிறாய்...' என்று கேட்டு, அவரை பிரிந்தார். 'சில நாட்கள் போனால் சரி ஆகி விடும்...' என்று நினைத்ததற்கு மாறாக, இப்போது, விவாகரத்து கோரி, நீதிமன்றம் சென்று விட்டார் அவரது கணவர்.
'லைக்' ஆசை, அவரது வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கி விட்டது. தோழிகளே... நமக்கு கிடைத்த சுதந்திரத்தை, சரியான வழியில் பயன்படுத்துவோம்!
— க.நாகராணி, உடுமலை.
திருநங்கையாக மாறிய மகன்!
பல ஆண்டுகளுக்கு பின், வெளியூரில் வசிக்கும் என் தோழியை பார்ப்பதற்காக சமீபத்தில் அவள் வீட்டிற்கு சென்றிருந்தேன். நானும், அவளும் மனம் விட்டு, பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டிருந்த போது, சமையல் அறையில் இருந்து, இளம் பெண் ஒருவர், என்னை வரவேற்று, காபி கொடுத்து உபசரித்தாள்.
என் தோழிக்கு ஒரே மகன் தான். அதனால், குழப்பமடைந்து, 'அப்பெண் உன் மருமகளா...' என்று கேட்டதற்கு, 'என் மகன் தான், திருநங்கையாக மாறிட்டான். ஊர் வாய்க்கு அஞ்சி, பெற்ற மகனை வீட்டை விட்டு துரத்த முடியுமா... அவனது உணர்வுகளுக்கு மதிப்பளித்து, அவனை மகளாக ஏத்துக் கிட்டேன். இப்போ, வீட்டில் இருந்தபடியே வேலை செய்து சம்பாதிக்கிறான்...' என்றாள்.
பிறந்த வீட்டின் புறக்கணிப்பு தான், திருநங்கைகளை தவிப்புக்குள்ளாக்கி, அவர்களின் வாழ்க்கையை கேள்விக் குறியாக்குகிறது. அப்படி செய்யாமல், மகனை, மகளாக ஏற்றுக் கொண்ட என் தோழியின் செயலை, பாராட்டினேன்!
-— ஆர்.கலாவதி, சென்னை.
குழந்தை பிறப்பை தள்ளிப் போடாதீர்!
ஐ.டி., கம்பெனியில் பணிபுரியும் எனக்கு, சமீபத்தில் திருமணம் ஆனது. குடும்ப பொருளாதாரம் கருதி, சில மாதங்களுக்கு பின், குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நானும், என் கணவரும் திட்டமிட்டோம்.
இந்நிலையில் கர்ப்பமானேன். இதனால், 'கருவை, கலைத்து விட நினைக்கிறேன்...' என உடன் பணிபுரியும் தோழியிடம் சொன்ன போது, அவள் கண்களில் நீர் அரும்பியது. என்னவென்று கேட்டபோது, 'நான் கர்ப்பமான போது, என் கணவருக்கு, வெளிநாட்டில் வேலை கிடைச்சது. என்னையும் உடன் அழைத்துச் செல்ல, நினைத்தார். ஆனால், கர்ப்பமாக இருப்பதால், பாஸ்போர்ட் மற்றும் அந்நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்வதில் சிக்கல் ஏற்படும் என நினைத்து, கருவை கலைக்க சொல்ல, நானும் அப்படியே செய்தேன்.
'வெளிநாடு சென்று, ஒரு ஆண்டுக்கு பின், மீண்டும் தமிழகமே வந்துட்டோம். இதோ மூணு வருஷமாச்சு; இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்கல. இத நினைச்சு தினமும் அழுறேன்.
'சின்ன சின்ன பிரச்னைகளுக்காக, குழந்தை வேணாம்ன்னு முடிவு எடுத்துடாதீங்க. குழந்தைபேறு என்பது, கடவுளின் அனுக்கிரகம்; அதை, ஒருமுறை தவறவிட்டதால் தான், இப்ப தினமும் வேதனை கண்ணீர் வடிக்கிறேன்...' என்றதும், எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது.
இப்போது, எங்கள் முடிவை மாற்றிக் கொண்டோம்!
— எஸ்.சரண்யா, சென்னை.

