PUBLISHED ON : ஜன 31, 2016

தமிழ் சினிமா தயாரிப்பில், பல உயரங்களைச் சந்தித்த, சாண்டோ சின்னப்பா தேவரின் நூற்றாண்டு விழா, ஜூன் 28, 2015 முதல் துவங்கியுள்ளது. அச்சாதனையாளரின் வரலாற்று தொடர் இது —
வெள்ளிக்கிழமை விரதம் படத்தை பார்த்த எம்.ஜி.ஆர்., 'உன் நடிப்பு அபாரம்...' என்று ஜெயசித்ராவை பாராட்டினார். அதன் விளைவு, நவரத்தினம் படத்தில், ஒன்பது கதாநாயகிகளில் ஒருவராக ஜெயசித்ராவும், எம்.ஜி.ஆருடன் நடிக்க ஒப்பந்தமானார்.
'எப்போது பெரிய கதாநாயகனாவோம்...' என, ஏங்கி தவித்த சிவகுமாருக்கு, முதல், 'கமர்ஷியல்' கதாநாயகன் வாய்ப்பு, வெள்ளிக்கிழமை விரதம் படத்தில் கிடைத்தது. 'அந்த அமுல் பேபியா நடிக்கிறாரு?' என்று தேவரைத் தடுத்தவர்களே அதிகம். அதற்கு முன், தேவரின், தெய்வம் படத்தில், கிளைமாக்ஸ் சீனில் வந்து போயிருந்தார் சிவகுமார்.
சிவகுமார் ஜெயசித்ரா ஜோடிக்கு, தனி வரவேற்பு இருந்த காலம் அது. நம்பிக்கையோடு நடிக்கப் போனார் சிவகுமார். வாகினியில் பூஜை முடிந்ததும், 'க்ளைமாக்ஸ்' காட்சியை எடுத்தார், தேவரது மாப்பிள்ளை தியாகராஜன்.
'ஆக்ரோஷமாக டயலாக் பேசினால் போதும்; நீங்க, சண்டையெல்லாம் போட வேண்டாம்...' என்று, சிவகுமாருக்கு காட்சி விளக்கப்பட்டது. ஆரூர்தாசின் வசனத்தை, எழுத்து குறையாமல் அழகாக பேசி நடித்தார் சிவக்குமார்; தேவருக்கு, மகிழ்ச்சி.
வெலிங்டன் தியேட்டரில், முதல் நாளே படம் பார்க்க சென்றார் சிவகுமார். 'ரசிகர்கள், தன்னை தலையில் தூக்கி வைத்து கொண்டாடுவர்; மேனேஜர் வந்து மீட்பார்...' என்று ஆனந்த கற்பனையில் லயித்தார். ஆனால், படம் முடிந்து வெளியே வந்த ரசிகர்கள், சிவகுமாரிடம், 'பாம்பு தான் சார் டாப்... காசு அதுக்குதான்...' என்றனர்.
'அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது' என்பதில், தேவருக்கு அசாத்திய நம்பிக்கை உண்டு!
ஒவ்வொரு முறையும் படத்துக்கான பூஜை தேதியை முடிவு செய்ததும், அதை மூவருக்கு தெரியப்படுத்துவார். முதலாமவர், முருகக் கடவுள்; அடுத்து, வாகினி அதிபர் நாகி ரெட்டி, மூன்றாமவர், அவரது ஆஸ்தான கதாநாயகன் எம்.ஜி.ஆர்.,
அமாவாசையில் தான், படத்துக்கு பூஜை போடுவார். அத்துடன், பூஜைக்கு முன், சில புனித பயணங்களையும் மேற்கொள்வார். பழநி சென்று தண்டாயுதபாணி கடவுளுக்கு அபிஷேகம் செய்து, அவரது திருப்பாதங்களில், புதிய படத்தின் கதை பைலை வைத்து, 'சாமி... இந்தப் படமும் ஜனங்களுக்குப் புடிச்சு, நல்லா ஓடணும்; அதன் மூலம் உன்னுடைய திருப்பணிகளையும் செய்யணும்...' என, உள்ளம் உருக வேண்டுவார்.
அடுத்து, மருதமலை முருகன் பாதத்தில் பட வசனத்தை வைத்து, பிரார்த்தனை செய்வார். பட பூஜை அன்று வடபழனி முருகன் கோவிலில் வழிபாடு நடத்துவார். ஆரூர்தாஸ் வசனம் எழுதிய படமென்றால், அவரையும் கோவிலுக்கு அழைத்துச் செல்வார். அப்போது, தன் கைவிரல் மோதிரம் மட்டுமல்லாமல், கதாசிரியரின் மோதிரத்தையும் கழற்றி, அர்ச்சகரிடம் கொடுப்பார்.
பின், பழநி ஆண்டவரின் தோள்களின் சந்தனக் குழம்பில் குளித்து முடித்து திரும்பி வரும் மோதிரங்களை அணிந்து கொள்வர். கற்பூர தீபம் ஒளிரும் போது, வழக்கம்போல் கதை, வசனம், கந்தன் காலடியில் இருக்கும்.
அதன் பின்பே அந்த பைல் வாகினி ஸ்டுடியோவின் ஆறாவது மாடியில் இருக்கும், இயக்குனர் திருமுகத்தின் கைகளுக்கு செல்லும்.
பட பூஜையின் போது, தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திலிருந்து கொண்டு வரப்பட்ட மருதாசல மூர்த்தியின் பெரிய படம் அலங்கரிக்கப்பட்டு இருக்கும்.
மடித்துக் கட்டிய வேட்டி, நெற்றியில் பட்டைத் திருநீறு, வாய் மணக்கும் தாம்பூலச்சாறு, வெற்றிலைச் சீவல் நிறைந்த உதடுகளுடன், பூஜைக்கு வருவோரை, 'வாங்க முருகா... வாங்க முருகா...' என்று வரவேற்றாலும், அவரது கண்கள், வாசலையே பார்க்கும், எம்.ஜி.ஆர்., வருகிறாரா என்று!
எம்.ஜி.ஆர்., வந்த பின்னரே, அவரது சுவாசம் சீர்பெறும். படத்தின் கதாநாயகி புதியவர் என்றால், அறிமுகப் படலமும் இருக்கும்.
அதன்பின், இரு பெரிய மாலைகளை எம்.ஜி.,ஆருக்கும், நாகிரெட்டிக்கும் அணிவிப்பார். நாகிரெட்டி, கேமராவை, 'ஸ்விட்ச்' ஆன் செய்வார். 'ஷாட் ரெடி... சீன் பைவ். டேக் ஒன்...' உதவியாளர் கிளாப் அடித்ததும், எம்.ஜி.ஆர்., 'வெற்றி... வெற்றி...' என்று அம்மாவையோ அல்லது காதலியையோ நோக்கி வேகமாக ஓடி வருவார். காதலி என்றால், 'வெற்றி... எங்கப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டாரு...' என்று வசனம் பேசுவார்.
தேவர் தயாரித்து, எம்.ஜி.ஆர்., நடித்த அத்தனை படங்களின் ஆரம்பமும், இப்படியே நடந்தது; யாருக்கும் சலிக்கவே இல்லை.
வசனக் காட்சிகள் முடிந்த கையோடு, டூயட் சீன் படமாகும்.
பூஜை நாளன்றே சங்கர் கணேஷ், கே.ஆர்.விஜயா போன்ற ஆஸ்தான கலைஞர்களுக்கு, தன் கையாலேயே முன்பணம் தந்தால் மட்டுமே, தேவருக்கு மனசு நிம்மதி அடையும்.
வாகினி ஸ்டுடியோவில், வேட்டைக்காரன் பட ஷூட்டிங்; பதற்றமும், பரபரப்புமாக காணப்பட்டார் தேவர். காரணம், எம்.ஜி..ஆரைக் காண வில்லை. கதாநாயகி சாவித்திரிக்கு, 'தான் படப்பிடிப்பில் இருக்கிறோமா, போர்க்களத்தில் சிக்கிக் கொண்டோமா..' என்ற சந்தேகமே வந்து விட்டது.
தேவர் பிலிம்சில் சாவித்திரிக்கு இதுதான் முதல் படம். ஜெமினி கணேசன் சிபாரிசு செய்ததால், ஏற்கனவே ஒப்புக் கொண்டிருந்த தெலுங்கு பட கால்ஷீட்டை ரத்து செய்து, இப்படத்தில் ஒப்பந்தமாகியிருந்தார் சாவித்திரி. அப்போது, அவர் லட்சம் ரூபாய் சம்பளக்காரர். தேவர், 75 ஆயிரம் பேசி, சாவித்திரியை இரு படங்களுக்கு ஒப்பந்தம் செய்தார்; ஒரே தவணையில் ஒன்றரை லட்சம் ரூபாய்!
தன் அறையை விட்டு வெளியே வந்த சாவித்திரி, அங்கே நின்றிருந்த ஆரூர்தாசிடம், மெல்லிய குரலில், 'எப்படி சமாளிக்கிறீங்க... சுத்தி விலங்குகளை வெச்சிக்கிட்டு இப்படி காட்டுக்கத்தல் கத்தறாரே... சத்தம், போட்டாத்தான் வேலை நடக்கும்ன்னு நினைக்கிறாரா?' என்று கேட்டார்.
பதில் பேசவில்லை ஆரூர்தாஸ். அதற்குள் புரொடக் ஷன் பையன் அடிவாங்கும் கதறல் கேட்டது.
'யார் வீட்டுக் காசுலடா எல்லார்க்கும் டீ கொடுக்குறே... எவன் அப்பன் வீட்டுச் சொத்து...' என்று புரொடக் ஷன் பையனை அடிக்க, அவன் அழுதபடியே, 'அண்ணே... நான் ஒரு தப்பும் செய்யல...' என்றான்.
அப்போது அங்கே வந்தார், எம்.ஜி.ஆர்., அவரை கவனியாதது போன்று, மீண்டும் சிறுவனின் முதுகை பதம் பார்த்தார் தேவர். உடனே, எம்.ஜி.ஆர்., 'அண்ணே... அவனை விடுங்க. தப்பு எம்மேல தான். சிலோன்ல இருந்து என் ரசிகர்கள் தோட்டத்துக்கே வந்துட்டாங்க. அவங்கள கவனிச்சு, சாப்பிடச் சொல்லிட்டு வரேன்; அதான் லேட் ஆயிடுச்சு...' என்று, பவ்யமாகக் கூறினார்.
'அட முருகா... நீங்க எப்ப வேணும்ன்னாலும் வாங்க... இந்த புரொடக் ஷன் பையன் தொல்லை தாங்கல. நாலு பேருக்கு டீ கொடுத்திட்டு, 40 பேருக்கு கணக்கு காட்டுறான்...' என்று சமாளித்தார் தேவர்.
செட்டில் எம்.ஜி.ஆர்., இருந்தால், கொஞ்சம் அடக்கியே வாசிப்பார் தேவர். எம்.ஜி.ஆர்., தாமதமாக வந்தால், அசோகனுக்கு திட்டு விழும். அது, தனக்கு வாசிக்கப்படும் குற்றப்பத்திரிகை என்பதை எம்.ஜி.ஆரும் புரிந்து கொள்வார்; ஆனாலும், கோபிக்க மாட்டார். தேவருக்கும்,
எம்.ஜி.ஆருக்கும் இடையே தம்பதியின் ஊடல் போல், செல்ல கோபதாபங்கள் வந்து போகும். ஆனால், இருவருமே, மற்றவர்கள் எதிரில் விட்டுக் கொடுக்காமல், கண்ணியமாக பேசிக் கொள்வர்.
காலை, 9:00 மணிக்கு கால்ஷீட் என்றால், 8:30 மணிக்கே, லைட்டிங் கால்ஷீட் ஒன்று, தேவர் பட ஷூட்டிங்கில் உண்டு. அதாவது, ஒளிப்பதிவாளர் வர்மா, நடிகர் நடிகையர் நடிக்க வரும் முன், படப்பிடிப்புக்கு ஏற்றவாறு, தன் கேமரா ஆங்கிள்களை திட்டமிடுவார். எக்காரணத்தை கொண்டும், 9:00 மணிக்கு, முதல் ஷாட் எடுப்பது, தள்ளிப் போகவே கூடாது. தேவர் அங்கே இல்லையென்றால், அவர் அலுவலகத்திற்கே தகவல் போய்ச் சேர வேண்டும். 'முதல் ஷாட் ஓகே' என்று!
— தொடரும்.
நன்றி: சிக்ஸ்த்சென்ஸ் பப்ளிகேஷன்ஸ்,
சென்னை.
பா. தீனதயாளன்
