PUBLISHED ON : ஜன 31, 2016

மும்பையை சேர்ந்த ஓட்டல் அதிபர் ஒருவர், அசிஸ்டென்ட் கமிஷனர் ஒருவர், சாலை கான்ட்ராக்டர் ஒருவர், நான் மற்றும் லென்ஸ் மாமா என, அந்த ஓட்டலில் குழுமி இருந்தோம்.
'பன்னாட்டு நிறுவனங்கள், ஓட்டல் இண்டஸ்ட்ரியில் இறங்கியபின், உங்கள் தொழில் எப்படி இருக்கு?' எனக் கேட்டேன், மும்பையிலிருந்து வந்திருந்த ஓட்டல் அதிபரிடம்!
'அதை ஏம்ப்பா கேட்கறே... ரொம்ப, 'டல்' அடிக்குது. இதுல, அரசு அதிகாரிகள் தொல்ல வேறு...' என்று அவர் கூறும் போதே, 'கர்நாடகாவை சேர்ந்தவங்க நீங்க; உங்க முந்தைய தலைமுறையினர் எப்போ, எப்படி மும்பை சென்றனர்... ஓட்டல்கள் ஆரம்பிக்க எது தூண்டுதலாக இருந்தது?' எனக் கேட்டேன்.
'தென் கனரா மாவட்டத்திலிருந்து, (கர்நாடக மாநிலம்) 1940களில் கோபால ராவ் என்ற பிராமணக் குடும்பத்தினர், மும்பை சென்று, 'வெல்கம் ஓட்டல்ஸ்' என்ற பெயரில், ஓட்டல்கள் ஆரம்பித்தனர். அவர்கள் தான், 'தாலி மீல்ஸ்' என சொல்லப்படும் எட்டு விதமான பதார்த்தங்களை அறிமுகப்படுத்தினர். 1958களில், அதன் விலை, 50 காசு. இப்போது, இதுவே, 200 ரூபாய்!
'உடுப்பியைச் சேர்ந்த காமத் இனத்தவர் தான், 60 ஆண்டுகளுக்கு முன், மும்பையில், 'உடுப்பி' ஓட்டல்களை ஆரம்பித்தனர். 1970வது வரை பாப்புலராக இருந்த, 'ஈரானிய ரெஸ்டரன்டுகள்' மறைய ஆரம்பித்திருந்ததால், உடுப்பி ஓட்டல்கள் வேகமாக, 'பிக் -அப்' ஆக ஆரம்பித்தன.
'இப்போது, வெளிநாட்டு ரெஸ்டரன்டுகளின் வரவு, கையேந்தி பவன்கள் அதிகரிப்பு, உடுப்பி பகுதியில், கல்வி அறிவு அதிகமாகி விட்டதால், வேலைக்கு ஆள் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள சிரமம், ஓட்டல் அதிபர்களின் வாரிசுகள் மெத்தப் படித்து விட்டதால், குடும்பத் தொழிலான ஓட்டல் தொழிலுக்கு வர தயக்கம், அரசு தரும் தொல்லைகள் என, ஓட்டல் தொழில் நசிந்து வருகிறது.
'இன்னும் ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் உடுப்பி ஓட்டல்கள், மும்பையில் இருந்து மறைந்து விடும் அபாயம் உள்ளது...' என முடித்தார்.
அடுத்து, சாலை கான்ட்ராக்டரிடம் பேச்சு கொடுத்தேன். அதிகாரிகளையும், அரசியல்வாதிகளையும், 'கவனித்த' பின், டெண்டர் தொகையில், 85 சதவீதம் தான், சாலை போடுவதில் செலவு செய்ய முடிகிறது என்றும், இந்த, 85 சதவீதத்தில், தம் லாபத்தையும் பார்த்துக் கொள்ள வேண்டியுள்ளது என்றும் கூறினார்.
அடுத்து, ஏ.சி., ஒருவர், 'இப்போ புதுசா வரும் போலீஸ்காரங்க, சினிமா படத்தைப் பார்த்துட்டு, அதிலே வர்ற போலீஸ்காரன் மாதிரி நடந்துக்கிடணும்ன்னு நெனைக்கிறாங்க...' என்று சொல்லி, அது தொடர்பாக ஒரு சம்பவத்தையும் சொன்னார்...
'இந்த நகரத்துல செல்வாக்கான ஒரு பேமிலி... அரசியல் குடும்பம் இல்லே... பெரிய பிசினஸ் செய்றவங்க. அந்த குடும்பத்த சேர்ந்தவங்களோட, 'கெஸ்ட்' சிலர், வெளியூரில் இருந்து வந்து இருக்காங்க... அவர்களை, டின்னருக்கு அழைத்துச் சென்று இருக்கின்றனர்.
'நகரில் மிகவும் பேமசான ரோட் சைட் ரெஸ்டாரன்ட் ஒன்றில், டின்னர் அளித்து இருக்கின்றனர். அசைவ உணவுகள், எண்ணெய் தோசை, பரோட்டா, சுக்கா போன்றவை அங்கே ரொம்ப ஸ்பெஷல்!
'இரவு, 11:00 மணிக்கு, டின்னர் முடித்து கிளம்பும் நேரம், போலீஸ் ரோந்து ஜீப் ஒன்று வந்திருக்கிறது... கைகழுவி கிளம்பிக் கொண்டிருந்தவரிடம், போலீஸ் தோரணையைக் காட்டி, தகாத வார்த்தைகளால் பேசியுள்ளார் பயிற்சி சப்- இன்ஸ்பெக்டர் ஒருவர்.
'இவர்கள் மிக கண்ணியமாக, 'கிளம்பி விட்டோம் சார்... பில் செட்டில் செய்துட்டு இருக்காங்க...' எனக் கூறியதையும் கேளாமல், வானத்திற்கும், பூமிக்குமாகக் குதித்திருக்கிறார்.
'விருந்தளித்தவர் தம் மொபைல் போனை எடுத்து, எவருக்கோ பேசவும், 'என்ன... கமிஷனர் கிட்டே பேசுறியா... டி.ஜி.பி.,கிட்ட வேணும்ன்னாலும் பேசு... என்னை ஒண்ணும் செய்ய முடியாது. பெரிய காரில் வந்தால் பயந்துடுவோமா?' என்று கத்தி, பணக்காரர்கள் என்றால் தனக்கு அலர்ஜி என்று தன்னிடமும், தன் குடும்பத்தாரிடமும் வசதி இல்லையே என்ற தன், 'காம்ப்ளக்சை' யும் வெளிக்காட்டி உள்ளார்.
'இவ்வளவுக்கும் அந்தப் பகுதியின் ஏ.சி., அன்று மாலையில் தான், 'பயிற்சி எஸ்.ஐ.,களை இரவு நேர ரோந்துக்கு அனுப்பாதீர்கள். இன்னும் அவர்கள் பக்குவப்பட வில்லை...' என்று கூறிச் சென்றுள்ளார்; அதையும் மீறி, இவர் ரோந்து வந்துள்ளார்.
'பயிற்சி எஸ்.ஐ.,யுடன் வந்த பக்குவப்பட்ட போலீசார், எஸ்.ஐ.,யின் வேகத்தை தணிக்க முயன்றுள்ளனர். ஆனால், உ.பா., சாப்பிட்டிருந்த எஸ்.ஐ., கேட்கவில்லையாம்!
'விருந்தினர் முன் அவமானப்பட்ட தொழில் அதிபர், பேச வேண்டியவர்களிடம் இரவோடு இரவாகப் பேசி இருக்கிறார். அடுத்த நாள் காலை, இரண்டு, மூன்று திருமணங்களில் கலந்து கொள்ள வேண்டி இருந்ததால், புறப்பட்டு சென்று விட்டார் தொழில் அதிபர்.
'காலையில் ஸ்டேஷன் சென்றுள்ளார் பயிற்சி எஸ்.ஐ., வாசலில் நின்றிருந்த, 'பாரா' 'ஐயா உங்களை ஸ்டேஷனுக்குள் விட வேண்டாம்ன்னு உத்தரவு போட்டு இருக்காங்க... (ஒரு உயர் அதிகாரியின் பெயரைச் சொல்லி) அவரைப் போய் பார்க்கச் சொன்னாரு...' எனக் கூறி இருக்கிறார்.
'இதனிடையே போலீஸ் உயர் அதிகாரிகள் சிலர், தொழிலதிபரை சந்திக்க அவரது அலுவலகத்துக்கு சென்றுள்ளனர். அவர் தான் திருமணங்களில் கலந்து கொள்ள சென்று விட்டாரே... மூன்று மணி நேரம் காத்து இருந்திருக்கின்றனர்.
'இதனிடையே விஷயம் அறிந்த பயிற்சி எஸ்.ஐ., தாம் திருமணம் செய்ய உள்ள பெண் வீட்டார், உள்ளூரில் செல்வாக்கான பத்திரிகை தலைமை நிருபருக்கு தூரத்து சொந்தம் என்பதை அறிந்து, அவரிடம், 'இப்போது நடவடிக்கை ஏதும் எடுத்து விட்டால், என் கேரியர் பாதிக்கப்படும். மீண்டும், ஒரு வருடம், பயிற்சியிலேயே போட்டு விடுவர். ஏதோ தப்பு நடந்து போச்சு... தொழிலதிபரிடம் பேசுங்கள்...' என, தன், 'உட் - பீ' மூலம், 'பிரஷர்' கொடுத்துள்ளார்.
'ஒரு வழியாக போலீஸ் உயர் அதிகாரிகளும், பயிற்சி எஸ்.ஐ.,யும், தொழிலதிபரை சந்தித்தனர். பயிற்சி எஸ்.ஐ., 'சாரி...' கேட்க, 'தம்பி... கிரிமினலுக்கும், மற்றவர்களுக்கும் வித்தியாசம் தெரிந்து கொள். உங்க உயர் அதிகாரி, சற்றுமுன் என்னிடம் கூறியது போல, சினிமா போலீஸ், சினிமாவுல தான் இருக்க முடியும்...' என்று கூறி, மன்னித்து அனுப்பியுள்ளார்...' எனக் கூறி முடித்தார் ஏ.சி.,
'சரி தான் போ... இனி, அந்த எஸ்.ஐ., 'நமக்கேன் வம்பு'ன்னு ஒருத்தரையும் பிடிக்கப் போறதில்லே...' எனக் கூறி, கோப்பையில் இருந்த, 'அங்கிள் ஜானி' பிளாக் லேபிளை இன்னொரு மடக்கு ஊற்றி, 'டேய் தம்பி... அந்த ரஷ்யன் சேலடை கொண்டா...' என்றார் லென்ஸ் மாமா; என் அறையை நோக்கி நடந்தேன் நான்!
