sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!

/

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!

கனடா நாட்டு விருந்தினர்களால் கலகலப்பான விராச்சிலை!


PUBLISHED ON : செப் 06, 2015

Google News

PUBLISHED ON : செப் 06, 2015


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செட்டிநாட்டு நகரத்தார் சமூகம், உலகின் எந்த மூலையில் வசித்தாலும், பிறந்த ஊரையும், வளர்ந்த இடத்தையும், சொந்த, பந்தங்களையும், நட்பையும் பெரிதாக மதிப்பர். இச்சமூகத்தை சேர்ந்தவரும், மலேசியா தொழில் அதிபருமான, லெ.வெ.லெட்சுமணன் மலர்விழி தம்பதியின் மூத்த மகன் வெங்கடாசலத்திற்கு திருமணம் நிச்சயமானது.

கனடா நாட்டில் உள்ள ஒரு பெட்ரோலிய நிறுவனத்தின் அதிகாரியாக உள்ள மணமகன் வெங்கடாசலம், தன் தந்தையிடம், 'என்னுடன் பணிபுரியும், 40 பேர், என் திருமணத்தை காண விரும்புகின்றனர்; அவர்களை நம் ஊருக்கு அழைத்து வரலாமா?' என்று வேண்டுகோள் வைத்தார்.

'தாராளமாக அழைத்து வா... நம் ஊர் பெருமையையும், நம் விருந்தோம்பலின் தன்மையையும் அவர்களும் தெரிந்து கொள்ளட்டும்...' என்று பெற்றோர் பச்சைக்கொடி காட்ட, கனடாவில் இருந்து, ஜேஜே என்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை அடுத்துள்ள விராச்சிலை கிராமத்திற்கு வந்துவிட்டனர் வெளிநாட்டு விருந்தினர்.

கூடவே, 'இந்தியாவைப் பற்றி நிறைய படித்துள்ளோம். அதனால், நாங்களும் எங்க பிள்ளைகளுடன் வருகிறோம்...' என்று, இரண்டு கனடா தாய்மார்களும், 'மச்சான்... நாம எல்லாம் மலேசியாவில ஒண்ணா படிச்சவங்க; எங்கள கல்யாணத்திற்கு கூப்பிட மறந்துடாத...' என்று, மாப்பிள்ளையின் பள்ளி தோழர்கள் ஆறு பேரும் விண்ணப்பம் போட, ஆக மொத்தம், 48 வெளிநாட்டு விருந்தினர்களுடன் விராச்சிலை கிராமம் களை கட்டியது.

மணமகனின் தந்தை லெட்சுமணனின் கல்லுாரி தோழர் தினமலர் ஆதிமூலம்; இவர், 'வெளிநாட்டு விருந்தினரை சென்னையிலிருந்து அழைத்து வருவது முதல், திரும்ப சென்னையில் வழியனுப்பி வைப்பது வரை, கவனித்துக் கொள்வது என் வேலை. அதனால், மற்ற வேலைகளை நீங்க பாருங்க...' என்று சொல்லி, மணமகனின் தந்தைக்கு பெரிய பாரத்தை குறைத்து விட்டார்.

சென்னையில் இருந்து ஒரு,'ஏசி' பஸ் மற்றும் ஒரு, 'ஏசி' டெம்போ டிராவலர் வண்டி என, இரு வண்டிகளுடன் இவர்களது பயணம் ஆரம்பித்தது.

மாப்பிள்ளையின் பனையப்பட்டி வீடு, செட்டிநாட்டு கலாசாரத்திற்கு எடுத்துக்காட்டான பிரமாண்டமான வீடு. ஒரே நேரத்தில், 200 பேருக்கும் அதிகமானோர் தங்கக்கூடிய வசதி உண்டு. அதில், வெளிநாட்டு விருந்தினர்கள் தங்க வைக்கப்பட்டனர்

இவர்களுக்கு செட்டிநாட்டின் வெள்ளை அப்பம், கந்தரப்பம், பால்பணியாரம், மனோகரம், பெரிய முறுக்கு, கவுனிஅரிசி, கொழுக்கட்டை, அப்பம் மற்றும் குழி பணியாரம் உள்ளிட்ட பல்வேறு பலகாரங்களும் மற்றும் தக்காளி தோசை, கம்பு தோசை, இட்லி, தவலை வடை, பல வகை துவையல், சட்னி, சாம்பார் வெங்காயகோஸ், காளான் பிரியாணி என்று விதவிதமான சைவ பலகாரங்களை, செவ்வூர் பாண்டியன் தலைமையிலான வீரையா சமையல் குழுவினர் கொடுத்து அசத்தினர்.

முதல் நாள், ஸ்பூன் போர்க் இல்லாமல் சாப்பிட சிரமப்பட்டவர்கள், இரண்டாவது நாளே, அப்பளத்தை, பாயசத்தில் நொறுக்கி போட்டு ஐந்து விரலாலும் அள்ளி சாப்பிட பழகிக் கொண்டனர். எதற்கும் இருக்கட்டுமே என்று, வெஜ் சாண்ட்விச் கொடுத்த போது, 'நோ சாண்ட்விச்... கெட் தோசா சாம்பார்...' என்று கேட்டு வாங்கி சாப்பிட்டனர்.

கல்யாணத்தின் போது கட்டுவதற்காக, இவர்களுக்காக வேட்டி, சேலை வழங்கினர் மணமகன் வீட்டினர். இவற்றை அணிவதற்கு பயிற்சியும் அளித்தனர். வெளிநாட்டு விருந்தினர்கள், வேட்டி, சட்டை மற்றும் சேலை அணிந்து வந்திறங்கியதை பார்த்த கண்டவராயன்பட்டி மக்கள் அசந்து போயினர்.

மாப்பிள்ளை குதிரையில் வருவதைப் பார்த்து குஷியாகிப் போன வெளிநாட்டு விருந்தினர்களும், அதே குதிரையில் பயணம் செய்து சந்தோஷப்பட்டனர். திருமணம் முடிந்து, தங்கள் சொந்த ஊரான விராச்சிலைக்கு மணமக்கள் வந்த போது, கோலாட்டம் ஆடி வரவேற்பு கொடுத்தனர் கனடா விருந்தினர்.

இப்படி, இவர்களது ஒவ்வொரு நடவடிக்கையையும் பார்த்து பிரமித்துப்போன கிராம மக்கள், 'நாம மறந்து போன கொண்டாட்டத்தை எல்லாம், இவர்கள் கொண்டாடி மகிழ்கின்றனரே...' என்று சந்தோஷமாக சொல்லி, வெளிநாட்டவரை வாழ்த்தினர்.

எல்.முருகராஜ்






      Dinamalar
      Follow us