
ப.பரமேஸ்வரன், வீரபாண்டி: காலம் இருக்கிற இருப்பில், நம் வீட்டுப் பெண்களுக்கு தங்க நகைகளை அணிவித்து, திருமணம் போன்ற நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்ல பயமாயிருக்கிறது. நகைகள் போடாமல் சென்றாலோ திருமணத்தில் மதிப்பு கொடுப்பதில்லை. வீட்டிலே வைத்திருந்தாலும் திருட்டு பயமாக இருக்கிறது. இதற்கு என்னதான் செய்வது? ஒரு வழி சொல்லுங்களேன்...
ஊர்க்காரன் சொல்லுக்கு ஏன் கவலைப்படணும்? தாலிக் கொடி தவிர, ஒரே ஒரு செயின், நாலு வளையல் தவிர மற்ற நகைகளை விற்று, வீடு, மனை போன்றவற்றில் முதலீடு செய்யுங்கள் அல்லது வங்கியில் டிபாசிட்டாக போட்டு வையுங்கள்; கவலை தீரும்!
சி.ஜார்ஜ், சூளைமேடு: முன்னேறிய நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலையில்லா திண்டாட்டமே கிடையாதா?
ஏன் இல்லாமல்! இங்கிலாந்தில், 10 லட்சம் பேர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில், வேலை வேண்டி பதிவு செய்துள்ளதாக சமீபத்தில் படித்தேன். அமெரிக்காவிலும் இதே கதி உண்டு. அரபு நாடுகளிலும், உள்ளூர் ஆசாமிகள், 'ரிசர்வேஷன்' ஒதுக்கீடு முறை கொண்டு வந்துள்ளனர்; அவர்கள் முட்டாள், மூடர், படிப்பறிவு இல்லாதவர்களாக இருந்தாலும் குறிப்பிட்ட சதவீத வேலைவாய்ப்பு உள்ளூர் மக்களுக்கு கண்டிப்பாக ஒதுக்கப்பட வேண்டும் என்று அரபு நாடுகள் சிலவற்றில் சட்டமாக்கப்பட்டுள்ளது.
டி.முகம்மது, ராமநாதபுரம்: தவறு செய்யும் போது பெற்றோர் கண்டித்தால், 'என்னை ஏன் பெத்தீங்க?' என்று கேள்வி கேட்கும் இக்கால குழந்தைகள் பற்றி...
'தும்பை விட்டு வாலைப் பிடிக்கும்...' செயல். இதுபோன்ற சொல் கேட்கும் அளவுக்கு விட்டது பெற்றோர் தவறு. முளைச்சு துளிர் விட ஆரம்பிக்கும் போதிலிருந்தே கவனமாக பராமரிக்க ஆரம்பித்தால், இக்கதி நேராது!
என்.ராகவேந்திரன், கவுண்டம்பாளையம்: அரசியல்வாதிகளின் செருப்பு வெள்ளையாக இருப்பது ஏன்?
உள்ளமும், நடவடிக்கைகளும் தான் கறுப்பாக உள்ளன; செருப்பாவது, வெள்ளையாக இருந்துவிட்டுப் போகட்டுமே!
எஸ்.மயில்சாமி, பல்லடம்: டில்லியில் வாழும் தமிழர்கள், ஜாதி, மத பேதமின்றி ஒன்றுபட்டு வாழ்கின்றனர். தமிழகத்தில் அந்த மனப்பான்மை இல்லையே...
கல்வி, பல கலாசாரங்களின் அறிமுகம், 'தான்' என்ற அகம்பாவத்தை நீக்கி விடுகிறது. தமிழகத்தையே எடுத்துக் கொள்ளுங்கள்... சென்னையில் வாழும் பிற மாவட்ட தமிழர்கள், ரொம்ப, 'ரிபைன்'ஆகி விடுகின்றனர். டில்லியைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?
கே.என்.பிரதீப், குஞ்சரம்: அடுத்தவர் மனைவி நம்மிடம் வலிய வந்து குழைந்து பேசுவதை, தவிர்க்க முடியாமல் தவிக்கும் ஆணினத்துக்கு உம் யோசனை என்ன?
ஒன்றுமே தெரியாத பாப்பா... என்ன தவிப்பு வேண்டியிருக்கு! உண்மையிலேயே தவிர்க்க விரும்பியிருந்தால், அந்த ஏரியா பக்கமே நடமாட மாட்டீர்களே...
என்.சந்தானம், திருவையாறு: காஷ்மீருக்காக நாம் இதுவரை எத்தனையோ கோடி ரூபாய் செலவழித்திருக்கிறோம். ஆனால், சுற்றுலா வருமானம் தவிர, வேறெந்த பலனும் காஷ்மீரிடமிருந்து நமக்கு இல்லை. இதனால், பாகிஸ்தானுடன் பகை தான் மிச்சம். பேசாமல், பிணி ஒழிந்தது என்று நினைத்து, காஷ்மீரை கை கழுவி, வேறு சிக்கல்களை நீக்குவதில் கவனம் செலுத்தலாமே?
சீனப் போரில் நாம், சீனாவிடம் இழந்த பகுதி குறித்து, பாராளுமன்றத்தில் அந்நாள் பிரதமர் நேரு கூறும் போது, 'அது, புல், பூண்டு கூட முளைக்காத பனிப் பிரதேசம்... போனால் போகட்டும்...' என்றார். உடனே, ஒரு உறுப்பினர் எழுந்து, 'உங்கள் தலையில் கூட இனி முடி முளைக்காது; தலையை வெட்டி விடலாமா?' என நறுக்கென கேட்டார்.
இன்று பிரச்னை ஒழிந்தது என, தற்காலிக தீர்வுக்காக, காஷ்மீரை கழற்றி விட்டால், நாளை பஞ்சாப்பை கழற்றி விட வேண்டும்! கிழக்கில் உள்ள, 'செவன் ஸ்டார்'சில் ஒன்று, இரண்டை கழற்றி விட வேண்டி வரும். இங்கு சவக் குழிக்குள் கிடக்கும். 'திராவிட நாடு' உயிர் பெற்று எழும்... அப்புறம், சோழநாடு, சேர நாடு, பாண்டிய நாடு... கடைசியில் சோமாலியா நிலைமை ஏற்பட்டு விடும்!