
வாசலில், ஆட்டோ நிற்கும் சத்தம் கேட்டு, வெளியே வந்த கோமதி, சவுந்திரா மாமியை பார்த்தவுடன், ஒரு கணம் அதிர்ந்து, பின், சமாளித்துக் கொண்டாள்.
''வாங்க... வாங்க மாமி,'' வலிந்து, புன்னகையை வரவழைத்தபடி வரவேற்றாள்.
சவுந்திரா மாமி, அவளைப் பார்த்த பார்வையில், குற்றம் சாட்டும் பாவனை இருந்தது.
''எங்க, உன் புருஷன்?''
மாமி கேட்கும் போதே, பேச்சு குரல் கேட்டு, உள்ளறையில் இருந்து வந்த சதாசிவம், மாமியை பார்த்து, குசலம் விசாரித்தார்.
''நான் நல்லா இருக்கேன். வந்தனாவுக்கு கல்யாணம் வச்சு இருக்கேன்னு, முன்னாடியே சொல்லி இருக்கலாம் இல்லே. ஒரு மாசம் முன்னாடியே வந்து, ஒத்தாசையா இருந்து இருப்பேன். நேத்து, போஸ்ட்டில் வந்த பத்திரிகையை பார்த்து தான், கல்யாண விஷயமே தெரிஞ்சுது.''
''அதில்லை மாமி, வயசான காலத்தில், உங்களுக்கு ஏன் சிரமம்ன்னு...''
''எனக்கு என்ன சிரமம். உங்களுக்கு எல்லாம் உதவு வதில் தான், எனக்கு சந்தோஷம். சரி விடு. கல்யாணத்துக்கு, இன்னும், பத்து நாள் தான் இருக்கு. நீங்க கவலை இல்லாம, கல்யாண வேலையை பாருங்க. நான், சமையல் முதல் வீட்டு வேலை எல்லாம் பார்த்துக்குறேன்,'' என்று, தன் உடமைகளை, ஒரு அறையில் வைத்த மாமி, சமையலறை நோக்கி போனார்.
கோமதி, சதாசிவத்தை முறைக்க, நைசாக அந்த இடத்தை விட்டு, அகன்றார் சதாசிவம்.
சதாசிவத்திடம், முன்பே சொல்லியிருந்தாள் கோமதி. 'சவுந்திரா மாமிக்கு கல்யாணம் பற்றி தெரிவிக்கக் கூடாது...' என்று. அதையும் மீறி, மனம் கேட்காமல், மாமிக்கு பத்திரிகை அனுப்பி விட்டார் சதாசிவம்.
சவுந்திரா மாமி, எப்படி சொந்தம் என்று சதாசிவத்துக்கு தெரியாது. ஆனால், தன்னுடைய சிறு வயதிலிருந்தே, மாமியை, நன்கு அறிவார். மாமி பிறந்தது, ஒரு வசதியான குடும்பத்தில். மாமியின் அப்பா செய்து வந்த தொழிலில் நஷ்டம் வர, குடும்பம், வறுமையின் பிடியில் தள்ளப்பட்டது. பதினாறு வயதில், மாமி, குடும்ப பாரத்தை சுமக்க துவங்கினார். பெற்றவர்களும், ஒருவர் பின் ஒருவராய் போய் சேர, எடுத்துப் போட்டு செய்வதற்கு, யாரும் இல்லாததால், மாமி, தன்னுடைய திருமணம் பற்றி நினைத்துக் கூட பார்க்கவில்லை.
தெரிந்தவர் வீடுகளுக்கு, பட்சணம் செய்து கொடுத்து, தன் வயிற்றுப் பாட்டை கவனித்துக் கொண்டார். துாரத்து சொந்தத்தை கூட விட்டு வைக்காமல், எல்லாரிடமும் உரிமையுடன் அன்பு பாராட்டும் மாமி, எல்லார் வீட்டு விசேஷத்திலும், கலந்து கொண்டு எல்லா வேலைகளையும், இழுத்துப் போட்டு செய்வார்.
திருமண பந்திகளில், 'பந்தி கவனிக்கிறேன்...' என்று மாமி அடிக்கும் கூத்தை நினைத்தே, அவரை, திருமணத்திற்கு அழைக்க கூடாது என்று சொல்லி இருந்தாள் கோமதி.
சென்ற வருடம் நடந்த உறவினர் கல்யாணத்தில், ஏகப்பட்ட உணவு வகைகள் செய்து, வரும் சொந்தக்காரர்களை திணற அடிக்க வேண்டும் என்று, 'மெனு' போட்டு இருந்தார் அந்த கல்யாண பெண்ணின் தந்தை. ஆனால், சவுந்திரா மாமி, பந்தியில் நின்று கொண்டு, முதலில், இனிப்பு வைத்து, வந்த விருந்தினர்கள் உண்ட பின், ஒரு இட்லி வைத்து சாம்பார் ஊற்ற சொன்னார். அதை, அவர்கள் சாப்பிட்டு முடித்த பின், பொங்கல் வந்தது. அதன்பின், ஒரு பூரி இப்படியாக, ஒவ்வொரு பதார்த்தமும் உண்டு முடித்த பின், அடுத்தது பரிமாறப்பட்டது. சிலர், அடுத்து ஏதாவது வருமா என்று உட்கார்ந்து பார்த்து, எழுந்து போன கூத்தும் நடந்தது.
வீட்டில், மாமி சமையல் பொறுப்பை எடுத்துக் கொண்டு, பொருட்களை வீணாக்காமல், திட்டமாக சமைத்துப் போட்டார். ஒரு கரண்டி பொரியல் கூட வேண்டும் என்றால், இருக்காது. எரிச் சலாக வந்தது கோமதிக்கு. இரவு, சதாசிவத்திடம் பொரிந்து தள்ளினாள்.
''இது, கல்யாண வீடு. திடீர்ன்னு சொந்தக்காரங்க வந்துட்டா, சாப்பிட வைக்காம அனுப்ப முடியுமா? என்னையும் சமைக்க விட மாட்டேன்ங்கறாங்க. இப்படி, சிக்கனமாக இருந்து கோட்டையா கட்ட போறோம்... கூட கொஞ்சம் சேர்த்து சமைச்சு வைக்கலாம் இல்லை. மீந்தா துாக்கி போட்டா போச்சு.''
''இங்க பாரு கோமதி, கல்யாணம் நெருக்கத்தில் இருக்கு. உன்னால எல்லா வேலையும் செய்ய முடியாது. ஏதோ, மாமி செய்றாங்க விடேன்.''
''என்ன தான், அவங்களால் பயன் இருந்தாலும், உங்க பெரியப்பா பேரன் கல்யாணத்தில், பந்தி கவனிக்கிறேன்னு சொல்லிட்டு, இவங்க செய்தது, உங்களுக்கு நினைவு இருக்கு இல்ல... வந்தனா கல்யாணத்தில், அப்படி ஏதாவது பண்ணி மாப்பிள்ளை வீட்டுக்காரங்க கோவிச்சுக்கிட்டு போய்ட போறாங்க.''
''நீ ஏன் தேவையில்லாம கவலைப்படறே... இப்போ எல்லாம், ஒரு நாள் கல்யாணம் தானே. நாம தான், எல்லாத்தையும், 'இவென்ட் மேனேஜ்மென்ட்'கிட்ட விட்டாச்சே. வரவேற்பில் நிற்கிறது துவங்கி, தாம்பூல பை தர்ற வரைக்கும், அவங்க பார்த்துக்க போறாங்க. மாமிக்கு அங்க ஒண்ணும் வேலை இல்லை.''
''இருந்தாலும் எனக்கு கொஞ்சம் பயமாத் தான் இருக்கு.''
''நீ கவலைப்படாம நிம்மதியா துாங்கு.''
மறுநாள் காலையில், கோமதி எழுந்து வரும் போதே, வந்தனா குளித்து முடித்து, கோமதியிடம் காபியை நீட்டினாள். முதன் முதலாக காபி போட்டுக் கொண்டு வந்து, கொடுத்த மகளை பாராட்டாமல், கேள்விக்குறியுடன் பார்த்தாள்.
''மாமி தான், ஒரு வாரத்தில் கல்யாணம் ஆக போகுது. சமையல் சொல்லி தரேன்னு சொன்னாங்க. நீ, இதுவரை என்னை கிச்சன் பக்கமே விடலை. மாமியார் வீட்டில் போய், துவரம் பருப்புக்கும், கடலை பருப்புக்கும் வித்தியாசம் தெரியாம முழிக்க போறேன்னு நினைச்சேன். மாமி தெய்வமா வந்து நிக்கறாங்க. இன்னைக்கு, நம்ம வீட்டில் என் சமையல் தான்.''
சில நாட்களில், திருமணம் ஆக போகும் மகளை, அடுப்படியில் விடுவதா என்று, கோமதியின் தாயுள்ளம் தவித்தது.
''நீ சமைக்க வேணாம். நான் சமைக்கிறேன்,'' என்று சொன்ன கோமதியை, தடுத்தாள் வந்தனா.
''அம்மா, என் மாமியார் அவங்க அக்காவை கூப்டுகிட்டு, என்னை பார்க்க வராங்களாம். நிச்சயதார்த்தம் நடந்த போது, அவங்க, அமெரிக்காவில் இருந்ததால வரலையாம். அவர் நேத்து நைட் போன் செய்தப்ப சொன்னார். வரதுக்கு முன்னாடி, உனக்கு போன் செய்வாங்க. நீ, கண்டிப்பா சாப்பிட்டு போக சொல்லு. அவங்களுக்கு, என்னென்ன பிடிக்கும்ன்னு கூட இவர் சொல்லி இருக்கார். அதனாலே, நானே மாமி சொல்ல சொல்ல சமைக்க போறேன்,''என்றார்.
திருமணத்திற்கு முன்பே, மாமியாரிடம் நல்ல பெயர் எடுக்க துடிக்கும் மகளை, பரிதாபமாக பார்த்தாள் கோமதி.
'மாமியிடம், சமையல் கத்துக்கிட்டு, பத்தியும் பத்தாமலும் சமைச்சு, அவமானப்படாம இருக்கணுமே இந்தப் பொண்ணு...'என்று நினைத்தாள்.
''ஏதோ பண்ணிக்கோ,'' என்று கூறி அங்கிருந்து போனாள் கோமதி.
மாமியின் உதவியுடன் முருங்கைக்காய் சாம்பார், எண்ணெய் கத்திரிக்காய் குழம்பு, எலுமிச்சை ரசம், கொத்தவரங்காய் பருப்பு உசிலி, சுரைக்காய் பால் கூட்டு, பால் பாயசம் என்று, அசத்தலாய் சமைத்து முடித்தாள் வந்தனா.
வருபவர்களுக்கு எப்படி பரிமாற வேண்டும்; இலையில் எதை, எங்கு வைக்க வேண்டும் என்று, மாமி சொல்லி கொடுத்திருந்தபடியே, அவள் எல்லாம் செய்தாள். மாமி சொன்ன அளவுப்படி செய்ததால், எதுவுமே மிஞ்சி, வீணாகவில்லை.
பால் பாயசத்தை சுவைத்துக் கொண்டே, சம்பந்தியம்மாள், வந்தனாவை மெச்சும் பார்வை பார்த்தாள். ''எதையும் வீணாக்குவது, எங்கள் வீட்டில் யாருக்கும் பிடிக்காது. வரும் மருமகள் எப்படி இருப்பாளோ என்று, யோசனையில் இருந்தோம். நல்ல வேளை நீயும், எங்களை போலவே இருக்கே.''
முதன் முதலாக, சவுந்திரா மாமியை, மரியாதை கலந்த நன்றியோடு பார்த்தாள் கோமதி.
திருமணத்தன்று, பந்தி கவனிக்க மாமி செல்வதை பார்த்தவுடன், கோமதிக்கு திக்கென்றது.
ஆனால், போன வேகத்திலேயே திரும்பி வந்த மாமி, ''ஏதோ கான்ட்ராக்ட் விட்டுட்டியாம். நாங்க பார்த்துப்போம். நீங்க போங்க அப்படிங்கறான். வீணாக்காம பரிமாற சொன்னா, எல்லா பதார்த்த வகையும் வச்சுடுவோம். சாப்பிட்டாலும் சாப்பிடாம போனாலும், இலை கணக்கு அப்படிங்கறான். தேவையில்லாம ஏன் சாப்பாட்டை வீணாக்கணும்... என்ன அநியாயம் இது!'' என்று புலம்பினாள்.
''மாமி டென்ஷன் ஆகாதீங்க. இங்க, சிட்டியில் கான்ட்ராக்ட் விடறது சகஜம். நமக்கு வேலை மிச்சம் பாருங்க.''
மாமியின் முகத்தில், ஏதோ ஏமாற்றம் தெரிவது போல இருந்தது.
''மாமி எங்கே காணோம் கோமதி, அவங்க சாப்பிட்டாச்சா, பார்த்தியா நீ?'' திருமணம் முடிந்த பின், சதாசிவம் கேட்ட போது தான், மாமி எங்கே என்று, தேட துவங்கினாள் கோமதி.
மாமி, 'கார் பார்க்கிங்'கில் நிற்பதாய் உறவினர் ஒருவர் சொல்ல, அங்கே போன கோமதி, அவள், யாரோ ஒரு டிரைவர் உடையுடன் இருந்தவனிடம், பேசிக் கொண்டிருப்பதை பார்த்தாள்.
''மன்னிச்சுக்கோ தம்பி. உனக்கு தேவையில்லாத அலைச்சலா போயிட்டுது. இந்தா, இந்த பணத்தை வைத்து, ஏதாவது நல்ல ஓட்டலில், பிள்ளைகளுக்கு சாப்பாடு வாங்கி கொடுத்துடு. உங்க நிர்வாகிகிட்ட, நான் போனில் விவரம் சொல்றேன்.''
வேகமாய் வேனைக் கிளப்பி கொண்டு அவன் செல்ல, அதில், 'நிறைவு அனாதைகள் இல்லம்' என்று எழுதி இருந்ததை படித்த கோமதி, குழப்பத்தின் உச்சிக்கு போனாள். கோமதியை பார்த்து, அவசரமாய் கண்களை துடைத்துக் கொண்டாள் மாமி.
கோமதியின் பார்வையை புரிந்து கொண்ட மாமி, ''எந்த ஊருக்கு, விசேஷத்திற்கு போனாலும், அந்தந்த ஊரில் இருக்கிற அனாதை இல்லங்களுக்கு போன் செய்து, கல்யாண விருந்து முடியுற நேரத்தை, தோராயமாக சொல்லி, ஆட்களை அனுப்ப சொல்லிடுவேன். கல்யாண வீட்டுக்காரங்ககிட்ட அனுமதி வாங்கி, மீந்து போன உணவை, வீணாக்காமல், உடனடியாக அந்த இல்லங்களுக்கு அனுப்பிடுவேன். புதுமண தம்பதியருக்கு வாழ்த்துக்கு வாழ்த்தும், புண்ணியமும் சேரும். ஆனா, இங்க, நீங்க எல்லாத்தையும், இலை கணக்கில் போடறதால, நான், வந்தனாவுக்கு கொடுக்க வச்சு இருந்த ஆயிரமும், என் கை செலவுக்கு இருந்ததையும் சேர்த்து, கொடுத்து அனுப்பிட்டேன். எங்கயாவது சாப்பாடு வாங்கி கொடுத்துடுவாங்க. வந்தனாக்கு என்னால கல்யாண பரிசா பணம் கொடுக்க முடியலைனாலும், பிஞ்சு உள்ளங்களோட வாழ்த்தை பரிசா கொடுக்க முடிஞ்சதை நினைச்சு சந்தோஷப்படுறேன்,'' என்றாள் மாமி.
கோமதிக்கு, மாமி ஏன் ஒவ்வொரு விசேஷத்திலும் பந்தியில் நின்று, தேவையான உணவை அளவாக பரிமாற சொல்கிறாள் என்பது புரிய, அவளையும் அறியாமல் கண்கள் கலங்கியது.
''என் அப்பா, நன்றாக வாழ்ந்த காலத்தில், உணவை துச்சமாக மதித்தார். இரவு, நேரம் கழித்து வெளியே சாப்பிட்டு வருவார். அவருக்காக எடுத்து வைத்த சாப்பாட்டை, அம்மா குப்பையில் கொட்டுவார். பல நேரங்களில், அம்மா செய்த உணவு நன்றாக இல்லை என்று, தட்டை துாக்கி வீசி எறிவார். எல்லாவற்றுக்கும், வாழ்க்கையில் எதிரொலி உண்டு என்பது போல, என் அப்பா கடைசி காலத்தில், ஒரு வேளை உணவிற்கு கூட, கஷ்டப்பட்டு தான் இறந்து போனார். உணவை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதை, என் அப்பா மூலம், நன்கு உணர்ந்து கொண்டேன். அன்னம் மகத்தானது. அதை வீணாக்காமல், தேவை யானவர்களுக்கு கொடுத்தால், நமக்கு மனசும், அவர்களுக்கு வயிறும் நிறையும்.''
மாமி, அளவாக செய்யும் சமையல், கோமதிக்கு நினைவுக்கு வந்தது. மாமி, எங்கோ உயர்ந்து, கோபுரத்தில் நிற்பது போல் தோன்றியது.
நித்யா பாலாஜி

