
சாவித்திரி என்றால், 'சொல்லில் வல்லவள்' என்று பொருள். சொற்களைப் பொறுக்கி எடுத்து பேசும் எல்லாருமே, சாவித்திரிகள் தான்.
இறந்த கணவனின் உயிரை மீட்க, எமனுடன் சொற்போர் நடத்தி வெற்றி பெற்றவள், சாவித்திரி. இவளது கணவன் சத்தியவான், விதி வசத்தால் இறந்து போக, அவனது உயிரை மீட்டாள். மாசியின் முடிவும், பங்குனியும் துவக்கமும் இணையும் நேரத்தில், சத்தியவான் உயிர் பெற்றார்.
இவ்வாறு இணையும் நாளில், கார்காலத்தில் (முதல் பருவம்) விளைந்த நெல்லைக் குத்தி எடுத்த அரிசியை மாவாக்கி, இனிப்பு சேர்த்து அடை சுடுவர். இது, காரடை எனப்படும். இந்த அடையை அம்பாளுக்கு படைத்து வழிபடுவதே, காரடையான் நோன்பு. இந்த நோன்பை நோற்றே, சாவித்திரி தன் கணவனின் உயிரை மீட்டாள்.
பிரிந்த உயிரை மீட்ட, சாவித்திரிக்கு, ஒடிசா தலைநகர் புவனேஸ்வர், லிங்கராஜா கோவிலில், சன்னிதி உள்ளது. 127 அடி உயர கோபுரத்துடன், வடமாநில கட்டடக்கலை அமைப்பில் கோவில் உள்ளது.
கிழக்கு, தெற்கு, வடக்கு பகுதிகளில் நுழைவு வாயில்கள் உள்ளன. இதில், சிங்கத்தின் வாய் பிளந்தது போன்ற துவாரம் கொண்ட கிழக்கு வாசல் வழியே செல்வதை, பக்தர்கள் பாக்கியமாகக் கருதுகின்றனர்.
மரணம் என்பது, சிங்கத்தின் வாய்க்குள் நுழைவது போன்றது; போனால், வர முடியாது. சாவித்திரி மரணத்தை வென்றவள் என்பதால், அவளது சன்னிதி அமைந்த கோவிலுக்குள், சிங்கத்தின் வாயில் நுழைந்து தப்பி வருவதாகவும், மரணத்தை வென்றதாகவும் பக்தர்கள் கருதுகின்றனர்.
இங்கே இன்னொரு விசேஷமாக, வாசலிலுள்ள நந்தி ஸ்தம்பத்தில் (துாண்), நந்தியும், கருடனும் அருகருகே இருப்பது சிறப்பு.
கருவறையில், வட்ட வடிவ ஆவுடையாராக (பீடம்) லிங்கராஜா காட்சி தருகிறார். ஆவுடையாரின் நடுவிலுள்ள சாளக்கிராமம் (கண்டகி நதியில் கிடைக்கும் ஒரு வகை கல்) பெருமாளின் அம்சமாக உள்ளது. ஒரே நேரத்தில் சிவ, விஷ்ணு தரிசனம் பக்தர்களுக்கு கிடைக்கிறது. வில்வம், துளசி பிரசாதமாக தரப்படுகிறது.
வட்ட வடிவ ஆவுடையார் பெண்ணைக் குறிக்கும். எனவே, கருவறையில் இருக்கும் தெய்வமே சாவித்திரியாக இருக்கலாம் என்ற நம்பிக்கை உள்ளது. 15 அடி உயர மகா விநாயகர், சாவித்திரி, எமதர்மன், பார்வதி, கார்த்திகேயன் (முருகன்), சத்யநாராயணர், விஸ்வகர்மா, புவனேஸ்வரி சன்னிதிகள் உள்ளன.
ஆனி மாத அமாவாசையன்று (ஜேஷ்ட அமாவாசை), பெண்கள் விரதமிருந்து லிங்கராஜா, சாவித்திரியை வழிபடுகின்றனர். பின், 1 கி.மீ., துாரத்திலுள்ள பரமேஸ்வரர் கோவிலிலுள்ள ஆல மரத்தில், மஞ்சள் கயிறு கட்டி, தாங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்க வேண்டுகின்றனர்.
சென்னையிலிருந்து புவனேஸ்வர், 1,238 கி.மீ., ரயில், விமான வசதி உள்ளது.
தி. செல்லப்பா

