
எதையும் முழுமையாக தெரிந்து, செயல்படுங்கள்!
வெளிநாட்டில் வேலை செய்யும், நண்பரின் மகன், என்னிடம், வயதான என் பெற்றோரும், தங்கையும், தனியாக பங்களாவில் வசிப்பதால், பயமாக உள்ளது. அங்கு, சி.சி.டி.வி., கேமரா பொருத்த உதவுமாறு கூறினான்.
அதன்படியே, நானும், ஒரு பையனை அனுப்பி, கேமராவை பொருத்தச் சொன்னேன். சில நாட்களுக்கு பின், நண்பனின் பெற்றோர், 'ஒரு குறிப்பிட்ட எண்ணிலிருந்து அடிக்கடி போன் வருகிறது. என் வீட்டிற்கு யார் யாரெல்லாம் வருகின்றனர் என்பதை, நேரில் பார்த்த மாதிரி கூறுகிறான்...' என்று, வருத்தப்பட்டனர்.
அந்த நம்பரை வாங்கி, யார் என்று கண்டுபிடித்ததில், கேமரா பொருத்திய நபரின் மொபைல் எண் இருந்தது.
அவனுடைய மொபைல் எண் அதில் பதிவாகியிருப்பது தெரிந்து, 'பாஸ்வேர்ட்' நம்பரை மாற்றியதும், தொல்லைகள் இல்லை.
'நல்லவேளை, விளையாட்டு விபரீதமாவதற்கு முன் தப்பித்தோம்...' என்றார், நண்பர்.
ஆகவே, புதுமையை செயல்படுத்தும் முன், அதன் மூலம் ஏதாவது கெடுதல் வருமா என்று முழுமையாக தெரிந்து செயல்பட்டால், மன உளைச்சலிலிருந்து விடுபடலாம்.
— இர. அண்ணாமலை, சென்னை.
எந்த வேலையும் கேவலம் இல்லை!
பிரபலமான, இனிப்பகத்துடன் கூடிய ஹோட்டல் ஒன்றில், காசாளராக பணிபுரிந்தாள், தோழி. எம்.ஏ., படித்திருந்தாலும், தலைக்கனமின்றி, எல்லாரிடமும் அன்பாக பழகுவாள்.
வாடிக்கையாளர்களுடன் சகஜமாக பழகுவதால், கடையின் சூப்பரவைசரிடம், தோழியை பற்றி தவறாக சொல்லி, சர்வர் வேலைக்கு அனுப்பி விட்டான், இன்னொரு காசாளர்.
குடும்ப சூழல் காரணமாக, கிடைத்த மாற்றுப் பணிக்கு சென்றாள், தோழி.
ஒரு முறை, கர்நாடகாவிலிருந்து, சுற்றுலா வேனில் வந்தவர்கள், ஹோட்டலில் சாப்பிட்டனர்.
அவர்களிடம் ஆங்கிலத்தில் பேசி, அசத்தியதுடன், திருச்சியில் காண வேண்டிய இடங்கள், தரிசிக்க வேண்டிய கோவில் மற்றும் செல்லும் வழிகளையும் தெளிவாக கூறினாள், தோழி.
ஆங்கிலம் பேசிய அழகு, பரிமாறிய பாங்கு அனைவரையும் கவரவே, சாப்பிட்டு முடித்து, ஆளாளுக்கு, 50, 100 ரூபாய் என்று, அவளிடம் கொடுத்து, மகிழ்ச்சியுடன் விடை பெற்றனர்.
அந்த ஒரு, சுற்றுலா வேன் மூலம், அன்று அவளுக்கு, 1,000 ரூபாய்க்கு மேல், 'டிப்ஸ்' கிடைத்தது.
இதை கேள்விப்பட்ட இனிப்புக் கடை நிர்வாகி, தோழிக்கு, மேற்பார்வையாளராக பதவி உயர்வு தந்தார்.
அவளை மட்டம் தட்ட எண்ணியவர்களின் முகத்தில் கரியை பூசி, வெற்றி களிப்புடன் உலா வருகிறாள், தோழி.
எந்த வேலையும் கேவலம் இல்லை. நம் தனித்தன்மையால் வேலையை கவுரவித்தால், நிச்சயம் அது, உங்களை உயர்த்தும்.
- எம்.ஏ. நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.
புது வாகனம் வாங்கப் போகிறீர்களா?
சமீபத்தில், என் உறவினர், புதிதாக இரு சக்கர வாகனத்தை, மதுரையில் உள்ள, 'ஷோரூமில்' வாங்கியிருந்தார். அவருக்கு வாழ்த்துகளை தெரிவித்து, அதன் விலை பற்றி விசாரித்தேன்.
'சாலை வரி உட்பட, 58 ஆயிரத்து 500 ரூபாய்- ஆகி விட்டது...' என கூறி, 'இன்வாய்ஸ்' ரசீதை காட்டினார்.
அதில், வண்டியின் அடக்க விலை, வரி உட்பட, 41 ஆயிரம் ரூபாய்- என, இருந்தது. மீதம், 17 ஆயிரத்து 500க்கு கணக்கு கேட்டேன்.
'இன்சூரன்ஸ், 8,700, சாலை வரி, 6,800- ரூபாய். மீதம், வண்டியின், 'எக்ஸ்ட்ரா பிட்டிங்'குக்காக...' என்றார்.
உடனடியாக, ஆர்.டி.ஓ., அலுவலகம் தொடர்பு கொண்டு, புதிய வாகன பதிவு பற்றி விசாரித்தேன்.
அவர்கள் சொன்ன விபரம் அதிர்ச்சியாக இருந்தது.
அதாவது, நாமே சாலை வரி மற்றும் பதிவு தொகையை, 'ஆன்லைனில்' செலுத்த முடியும். வாகனத்தின், 'இன்வாய்ஸ்' தொகையில் வெறும், 8 சதவீதம் மற்றும் பதிவு தொகை வெறும், 300 ரூபாய் மட்டும் தான் என்பதை அறிந்தோம்.
அடுத்தபடியாக இன்சூரன்ஸ் பற்றி நண்பர்களிடம் விசாரித்தோம்.
'ஷோரூமில்' இருக்கும் விற்பனை பிரதிநிதிகள், அவர்களிடம், 'டை - அப்'பில் இருக்கும் இன்சூரன்ஸ் கம்பெனியை வலுக்கட்டாயமாக பரிந்துரைத்து, அதிக பணத்தை பெறுவதையும் அறிந்தோம்.
இதையடுத்து, 'ஷோரூம்' விற்பனை மேலாளரிடம் மேற்படி அதிக தொகை வசூலித்த விபரத்தை தெரிவித்து, அதை திரும்ப தர கூறினோம்.
அவரும், விதிமுறை எல்லாம் சொல்லி பார்த்தார். 'இதுகுறித்து, சம்பந்தப்பட்ட துறைக்கு புகார் செய்வேன்...' என்றதும், வருத்தம் தெரிவித்ததுடன், அதிகப்படியாக பெற்ற, 6,800 ரூபாயை- திரும்ப கொடுத்தார்.
புது வாகனம் வாங்குவோரே இனி, உஷாராக இருங்கள்.
- சி.பி.செந்தில் குமார், சென்னிமலை.

