PUBLISHED ON : மார் 14, 2021

கடவுள் கை விடுவதில்லை!
ஒரு காட்சியில் நடிக்க பிடிக்கவில்லை என்றால், படப்பிடிப்பின் சூழல் எரிச்சலை ஏற்படுத்துவது போல் இருந்தால், பேச வேண்டிய வசனங்கள் சரியில்லை என்றால், வழக்கம்போல, 'தலைவலி' என, சொல்லி சென்று விடுவார், பானுமதி.
மறுநாள் வந்து, அமைதியாக புரிந்து, நடித்து கொடுத்து விடுவார்.
இனிமையான பாடகி, திறமையான, ராசியான நடிகை என்று பேரும், புகழும் வளர வளர, தமிழ், தெலுங்கு ரசிகர்களின் கனவுக்கன்னியாக சிகரங்களை நோக்கி, சிறகு விரித்து பறந்தார்.
இத்தருணத்தில், பின்னால் காலை பிடித்திழுப்பது போல், பானுமதி குறித்த விமர்சனங்கள் மற்றும் வதந்திகள் வரிசை கட்டி நின்றன.
'பானுமதி, ஆணவம் பிடித்தவர். யாராக இருந்தாலும் துாக்கியெறிந்து பேசுவார். அவரை வைத்து படம் எடுப்பது கஷ்டம்...' என, தன்னை பிடிக்காத சிலர், திரையுலகில் ஒரு வீண் அபவாதத்தை பரப்பத் துவங்கியதாக, ஒரு பேட்டியில், தன் மன குமுறலை கொட்டியிருந்தார்.
திரைக்கதை, வசனத்தில் திருத்தம் சொல்வார்; பாடலில் எந்த மாதிரி வார்த்தைகள் வந்தால் நன்றாக இருக்கும் என்பார்; இசையில் திருத்தம் செய்வார்.
இதை, சிலர் ஏற்றனர்; பலர் முணுமுணுத்தனர்.
'எங்க இயக்கத்தில், கதையில் அவர் எதுக்கு குறுக்கீடு செய்யணும்... வந்தோமா, நடிச்சோமான்னு இருக்க வேண்டியது தானே...' என்றனர்.
இப்படி சில பிரச்னைகளால், அவர் நடித்துக் கொண்டிருந்த, மிஸ்சியம்மா படத்திலிருந்து, அவரை துாக்கி விட்டனர். தன் அம்மா வீடு போல நினைத்திருந்த, 'வாஹினி' நிறுவன படத்திலிருந்து தன்னை நீக்கியது, பானுமதிக்கு பெரும் வருத்தத்தை கொடுத்தது. மிகுந்த மன வேதனை அடைந்தார்.
நடிக்காமல் ஒதுங்கியிருந்த தன்னை, மறுபடியும், ஸ்வர்க்கசீமா படம் மூலம் அழைத்து வந்தது அவர்கள்தானே!
ஒரு வாசல் மூடினால், இறைவன் இன்னொரு வாசல் திறப்பானே...
அப்போது, மாடர்ன் தியேட்டர்ஸ், அலிபாபாவும் 40 திருடர்களும் என்று, தமிழில், முதல் கலர் படத்தின் நாயகி வாய்ப்பு வந்தது.
'எம்.ஜி.ஆரும், பானுமதியும் இயற்கையாக பெற்றிருக்கும் உடலின் அழகிய நிறத்துக்காக தான், என் முதல் கலர் படத்தில் அவர்களை நடிக்க வைத்தேன்...' என்று, மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் கூறினார். இந்த கருத்தை ஆதரித்து, பிரபல கதை வசனகர்த்தா, ஆரூர்தாஸ் கூறுகையில்...
'உண்மை தான். எம்.ஜி.ஆர்., எலுமிச்சம் பழ நிறம் என்றால், பானுமதி, இளம் மஞ்சள் நிற மேனி கொண்டவர். அதன் காரணமாக தான், அந்த நாட்களில் அவர்களது ஜோடி பொருத்தம் அவ்வளவு அழகாக அமைந்தது...' என்றார்.
தேவர் பிலிம்சில், தாய்க்கு பின் தாரம்; கிருஷ்ணா பிக்சர்சின், மதுரை வீரன்.
ஒரு மிஸ்சியம்மா தவறி போனதற்கு, புதிதாக, எம்.ஜி.ஆருடன் மூன்று படங்கள், சிவாஜியுடன் புது படங்கள் என்று, பானுமதியின் புகழ் இன்னும் உயர பறக்கத் துவங்கியது.
தான் நம்பும் இறைவன், தன்னை கை விடவில்லை என்பதை உணர்ந்தவராக, தனக்குள் புது நம்பிக்கையை நிரப்பி, கூடுதல் உற்சாகத்துடன் படங்களில் கவனம் செலுத்தினார், பானுமதி.
திறமைசாலிகளை சரியாக கையாளத் தெரிந்தவர், ஜெமினி அதிபர், எஸ்.எஸ்.வாசன். திறமைக்கேற்ப மதிப்பும், வெகுமதியும் கொடுப்பவர். அவர் அப்போது, மங்கம்மா சபதம் படம் எடுத்தார். அதில், புது கதாநாயகன் - கதாநாயகியை நடிக்க வைக்க நினைத்தார்.
பம்பாயிலிருந்து, ரஞ்சன், வைஜெயந்தி மாலாவின் அம்மாவான வசுந்தரா தேவியை அழைத்து வந்து, தமிழில், மங்கம்மா சபதம் என்ற படத்தை எடுத்தார். அதே படத்தை தெலுங்கு மற்றும் ஹிந்தியில் எடுக்கும்போது, பானுமதியை கதாநாயகியாக நடிக்க வைத்து, வெற்றி கண்டார்.
அடுத்து, வாசன் எடுத்த, அபூர்வ சகோதரர்கள் படத்தை, தமிழிலும், தெலுங்கிலும், எம்.கே.ராதாவையும், ஹிந்தி பதிப்புக்கு, ரஞ்சனையும், 'ஹீரோ' ஆக்கினார். மூன்று மொழியிலும் கதை நாயகியாக, பானுமதியை நடிக்க வைத்து, வெற்றியை அறுவடை செய்தார்.
பானுமதியின் அழகிய உடல் மொழியும், அளவான நடிப்பும், மூன்று மொழிகளிலும் பேசப்பட்டது.
அதில், ஒரு கதம்ப பாடலை, ஆறு மொழிகளில் பாடி அசத்தினார், பானுமதி. பல மொழி பேசும் சிப்பாய்களிடையே பாடி நடித்த அந்த பாடல் காட்சி, நகைச்சுவை ததும்ப படமாக்கப்பட்டது; வரவேற்பை பெற்றது.
ஈடுபாட்டுடன் பானுமதி நடிப்பதை பார்த்து, 'அசதி என்பது, இவள் அகராதியில் கிடையாது; நடித்து முடிக்காமல், 'செட்டை' விட்டு நகரவே மாட்டாள். இப்படி ஒரு, 'ஆர்டிஸ்ட்டை' நான் பார்த்ததில்லை...' என்று, ஒரு பேட்டியில் மனம் திறந்திருந்தார், ஜெமினி அதிபர்.
'இது, மறக்க முடியாத பாராட்டு...' என, மகிழ்ந்தார், பானுமதி.
சினிமாவின் அனைத்து துறையிலும் பானுமதி தலையிட காரணம் என்ன?
* பாடுவது, எழுதுவது, புத்தகம் படிப்பது மற்றும் பல மொழி படங்களை பார்ப்பது, பானுமதிக்கு மிகவும் பிடிக்கும்; பிடிக்காதது, காபி
* பல நாட்டு நாணயங்களை சேகரிக்க பிடிக்கும்
* தியானத்தில் வெகுநேரம் வரை மனதை ஒருமுகப்படுத்தி உட்கார்ந்திருப்பார்.
— தொடரும்
சபீதா ஜோசப்

