தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/சாவித்திரி (24)

சாவித்திரி (24)

சாவித்திரி (24)


PUBLISHED ON : செப் 11, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 11, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

கடந்த, 1981, ஜூன் மூன்றாவது வார இறுதியில், வழக்கம் போல அம்மாவை பார்க்க வந்திருந்தான், சதீஷ். அவனைக் கண்டவுடன் சாவித்திரியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

எங்கோ ஒரு இடத்தில் சாவித்திரியின் உள்ளுணர்வுகள் விழித்துள்ளன என்பதை, மருத்துவ குழுவினருக்கு அவரது கண்ணீர் உறுதிப்படுத்தியது. சில நேரம், தன்னைச் சுற்றி நடப்பவைகளை அவரால் உணர முடிந்தது.

'சாவித்திரியை வீட்டில் வைத்து மருத்துவம் செய்வது தான் நல்லது. கோமாவில் இருக்கும் சாவித்திரிக்கு, பழைய சம்பவம் ஏதாவது நினவிற்கு வந்தால், மீண்டும் அவர் நினைவு பெற்று எழலாம்...' என, நம்பினர், மருத்துவர்கள்.

ஜெமினிக்கும் அது சரியென தோன்றியது. அன்பால் தன்னை நித்தமும் சீண்டிய காதல் இளவரசி, இப்படி கட்டுண்டு கிடப்பதை, அவரால் தாங்க முடியவில்லை.

லேடி வெலிங்டன் மருத்துவமனை மற்றும் அண்ணா நகர் வீடு என, மாறி மாறி தங்க வைக்கப்பட்டு, சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார், சாவித்திரி.

ஒரே நிலையில், பல மாதங்கள் படுக்கையில் இருந்ததால், அவர் முதுகுப் பகுதியில், படுக்கைப் புண் ஏற்பட்டது. அதை, செவிலி தினமும் தூய்மைப்படுத்தி, மருந்திடும் போது, வலியால் முனங்கியது இல்லை சாவித்திரி. அதனால், அவர் மொத்தமாக நினைவை இழந்ததாக, மருத்துவத் துறை கணித்தது. 'இனி, சாவித்திரியை பழைய நிலைக்குக் கொண்டு வருவது இயலாத காரியம்...' என, கையை விரித்து விட்டனர், மருத்துவர்கள்.

'கடைசி முயற்சியாக, 'எலெக்ட்ரிக் ஷாக்' கொடுத்து, பரிசோதித்துப் பார்க்கலாம்...' என முடிவெடுத்தனர், மருத்துவர்கள்.

மீண்டும் லேடி வெலிங்டன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, எலெக்ட்ரிக் ஷாக் கொடுக்கப்பட்டது; துடித்துப் போனார், சாவித்திரி.

எல்லா முயற்சிகளையும் எடுத்தும், சாவித்திரியை பழைய நிலைக்குக் கொண்டு வர முடியவில்லை. நாட்கள் தான் ஓடியது; மருத்துவம், தன் தோல்வியை ஒப்புக் கொண்டது. சாவித்திரியின் உடல் மெலிந்து துரும்பாக, சதை இன்றி எலும்புக் கூடாக மாறியது; சர்க்கரை நோயின் பாதிப்பு அதிகமானதால், கலை பேசிய அவரது விழி, ஒளியை இழக்க ஆரம்பித்தது; சிறுநீரகங்கள், தான் ஓடிக்களைத்து விட்டதாக அறிவித்தது.

சாவித்திரியின் கல்லீரல், இனி தன்னால் தன் வேலையைச் செய்ய முடியாது எனக் கூறிவிட்டது.

ஆனால், இதயம் மட்டும் போராடித் துடித்துக் கொண்டிருந்தது; அதில், ஜெமினி வாழ்ந்து கொண்டிருந்தார்.

டிச., 25, 1981; கிறிஸ்துமஸ் தினம்; எப்போதும் அதை வெகு விமரிசையாகக் கொண்டாடும் லேடி வெலிங்டன் மருத்துவமனை நிர்வாகம், இந்த ஆண்டு சாவித்திரிக்காக, ஜெபக் கூட்டமாக நடத்தியது.

டிச., 26, தமிழக நாளிதழ்களில், '19 மாதங்களாக கோமா நிலையில் உயிருக்குப் போராடிய சாவித்திரி கவலைக்கிடம்...' என்ற செய்தி வந்தது.

அன்று மாலை, 4:00 மணியளவில், லேடி வெலிங்டன் மருத்துவமனையில், சாவித்திரியை ஒவ்வொருவராகச் சென்று பார்த்து விட்டு திரும்பினர்.

எங்கும் போகாமல், சாவித்திரியின் அருகில் அழுதபடி அமர்ந்திருந்தார், ஜெமினி.

'அம்மா...' என்று அழைத்தபடி, சாவித்திரியை தொட்டுப் பார்த்தான் சதீஷ்; எந்தவிதச் சலனமும் சாவித்திரியிடம் தென்படவில்லை.

அம்மாவைப் பார்த்து சாமுண்டீஸ்வரி அழுதபோது, சாவித்திரியிடம் ஒரு பெருமூச்சு!

சாவித்திரி என்ற கலைப் பொக்கிஷம், இந்த மண்ணுக்கு விடை எழுதிய கடைசி மூச்சு அது தான்!

'அம்மாடி...' என்று ஜெமினி கதற, சுற்றி நின்றவர்கள், புரிந்து கொண்டனர். சாவித்திரி என்ற பட்டம், நூலை விட்டு, விண்ணை நோக்கி பறக்கத் துவங்கி விட்டது என்று!

திரையுலகக் கலைஞர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் இயக்குனர்கள் என, பலர் செய்தி கேட்டு, வரத் துவங்கினர்.

தன் மனைவி சாவித்திரியை நுங்கம்பாக்கத்தில் உள்ள தன் வீட்டுக்கு கொண்டு போக ஏற்பாடு செய்தார், ஜெமினி. 'எந்த வீட்டுக்கு அடைக்கலம் கேட்டு இரவு ஓடி வந்தாளோ, அந்த வீட்டிலிருந்து, அங்கீகாரத்தோடு அவளின் கடைசி பயணம் அமைய வேண்டும்...' என்பதில் உறுதியாக இருந்தார்.

ஜெமினியின் மனைவி பாப்ஜியும் மற்றொரு மனைவியான புஷ்பவல்லியும் துக்கம் தாங்காமல் அழுது கொண்டு இருந்தனர்.

தன் கணவர் ஜெமினி எடுத்த முடிவு சரி தான் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக, சாவித்திரிக்கு செய்ய வேண்டிய இறுதிச் சடங்குகளை, தன் வீட்டில் செய்ய, எல்லா ஏற்பாடுகளையும் செய்யத் துவங்கினார், பாப்ஜி.

ஜெமினியின் வீட்டில், சாவித்திரியின் உடல், இறுதி சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்தது.

சிவாஜி கணேன், நாகேசுவரராவ், எம்.ஜி.ஆர்., என்.டி.ஆர்., ராஜ்குமார், சிரஞ்சீவி, ஜக்கையா, சிவகுமார், மேஜர் சுந்தரராஜன், வி.கே.ராமசாமி, கே.பாலாஜி, ராஜசுலோச்சனா, மனோரமா, சுகுமாரி மற்றும் குட்டி பத்மினி என, திரையுலகப் பிரபலங்கள் அனைவரும், சாவித்திரிக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

டிசம்பர், 27, 1981 ஜெமினி வீட்டில் இருந்து, சாவித்திரியின் கடைசிப் பயணம் துவங்கியது.

— முற்றும்

ஞா. செ. இன்பா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us