PUBLISHED ON : செப் 11, 2016

தூக்கத்தில் கண் விழித்தாள், லக் ஷனா; இருள் விடை பெற்று செல்ல, அதிகாலை வெளிச்சம், அறைக்குள் பரவியிருந்தது.
அருகில், அக்கா நல்ல தூக்கத்திலிருக்க, அம்மா மற்றும் அப்பாவின் படுக்கை காலியாக இருந்தது.
கடிகாரத்தைப் பார்த்தாள், மணி, 6:00; 'வழக்கமாக அம்மா தான் எப்போதும் விடியற்காலையில் எழுந்திருப்பாள்... நாங்க எல்லாம் எழுந்த பிறகு தானே அப்பா எழுந்துப்பார். இன்னைக்கு என்ன அதிசயமாக அப்பாவும் எழுந்துட்டார்...' என நினைத்தவளாய், அருகில் தூங்கிய தன் சகோதரியை, ''அக்கா... எழுந்திரு மணியாச்சு...'' என்று எழுப்பினாள்.
''போடி... இன்னும் கொஞ்ச நேரம் தூங்கறேன்...'' என்று அவள் தூக்கத்தில் சிணுங்க, நான்காவது படிக்கும் லக் ஷனா, வீட்டுப்பாடம் இன்னும் முடிக்காமல் இருப்பது ஞாபகம் வர, படுக்கையை விட்டு எழுந்தாள்.
ஹாலில், நோட்டும், பேனாவுமாக டைனிங் டேபிளில் அப்பா உட்கார்ந்திருக்க, கிச்சனில், சமையல் வேலை பார்த்தவாறு பேசிக் கொண்டிருந்தாள் அம்மா. ''குட் மார்னிங் லக் ஷனா...'' என்றார், அப்பா.
''குட்மார்னிங் டாடி... என்ன இன்னைக்கு சீக்கிரம் எழுந்துட்டீங்க...''
''ஒண்ணாம் தேதி வரப்போகுது இல்ல... அதுதான், நானும், உங்கம்மாவும், 'பட்ஜெட்' போடுறோம்,'' என்றார்.
''அப்படின்னா என்ன டாடி?''
''நாங்க ரெண்டு பேரும் சம்பாதிக்கிறோம் இல்ல... எங்களுக்கு வர்ற வருமானத்தில, இந்த மாசம், என்னென்ன செலவுகள் இருக்குன்னு எழுதி, அதுபடி செய்வோம். இது, நம்ம குடும்பத்திற்கான வரவு - செலவு கணக்கு.''
பெரிய மனுஷி போன்று அப்பாவின் அருகில், சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தாள், லக் ஷனா.
''பசங்க ஸ்கூல் பீஸ் எழுதிட்டீங்களா?'' என்றாள், அம்மா.
''எழுதியாச்சு; மளிகை சாமான்கள் எவ்வளவு?''
''இது பண்டிகை மாசம்... கூட, 1,000 சேர்த்து, 6,000 ரூபாயா எழுதுங்க.''
''சரி... அப்புறம் எங்கப்பா, அம்மாவுக்கு தர வேண்டிய, 5,000 ரூபாயையும் எழுதிட்டேன்,'' என்றார்.
''யாருக்குப்பா?''
''உங்க தாத்தா, பாட்டிக்கு...''
''இது நம்ப குடும்பச் செலவுன்னு சொன்னீங்க... ஊர்ல இருக்கும் தாத்தா, பாட்டிக்கும் தரணுமா?''
சிரித்தபடி மகளை பார்த்து, ''நல்ல கேள்வி கேட்டே... அவங்க என்னை பெத்து, வளர்த்து, ஆளாக்கி, படிக்க வச்சதால தானே இப்ப, அப்பா இவ்வளவு சம்பாதிச்சு, நல்லா இருக்கேன்... வயசான காலத்தில், அவங்க செலவுக்கு நாம ஏதாவது தரணும் இல்லயா... அதனால் தான், மாசா மாசம் பணம் அனுப்புறேன்,'' என, மகளுக்கு விளக்கினார்.
கையில் காபியுடன் வந்த அம்மாவை பார்த்து, ''அப்ப நீயும் மாசாமாசம் உன்னோட அப்பா, அம்மாவுக்கு பணம் தர்றியாம்மா?'' என்று கேட்டாள், லக் ஷனா.
''இல்ல லக் ஷனா... ஆண்பிள்ளைங்க தான் பெத்தவங்களுக்கு செய்யணும்.''
''ஏன்... நீயும் அவங்களுக்கு மக தானே... அப்பாவ மாதிரி, அவங்களும் உன்னை படிக்க வச்சு, ஆளாக்கியிருக்காங்க. அதனால் தானே நீயும், அப்பா மாதிரி சம்பாதிக்கிறே...
''தாத்தா ரிடையர்ட் ஆயிட்டாரு; வயசான காலத்தில், அவங்களுக்கு, நீயும், ஏதாவது பணம் அனுப்பணும் இல்லயா...''
பொட்டில் அடித்தாற் போல், பத்து வயது சிறுமி கேட்க, என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்தாள்.
அம்மாவின் அருகில் வந்தவள், ''பாவம்மா தாத்தா... ஊருக்கு வாங்கன்னு போனில் கூப்பிட்டப்ப, 'பாட்டிக்கு உடம்பு சரியில்ல... நிறைய செலவாயிருச்சு; அடுத்த மாசம் பென்ஷன் வாங்கினதும் வரேன்'னு சொன்னாரு. உனக்கும், அப்பாவுக்கும் வயசாகும் போது, நானும், அக்காவும் உங்களுக்கு கட்டாயம் செய்வோம்.
''ஏன் தெரியுமா... நம்ப வீட்டில நாங்க ரெண்டு பேரும் பொம்பளப் பிள்ளைங்க தானே...'' என்றவள், ''சரிம்மா, நான் போய், 'ப்ரஷ்' செய்துட்டு வரேன்,'' என்று கூறி பாத்ரூம் நோக்கிச் செல்ல, டைனிங் டேபிளில் உட்கார்ந்திருந்த லக் ஷனாவின் அப்பா, ''இந்த மாசத்திலிருந்து உன் அப்பா, அம்மாவுக்கு பணம் அனுப்புவோம்; ஆம்பளப் பிள்ளைங்க தான் பெத்தவங்களுக்கு செய்ய கடமைப்பட்டவங்க கிடையாது; பெண்களும், பெத்தவங்களுக்கு செய்ய கடமைப்பட்டவங்க தான். இதை, நம்ம பொண்ணு நமக்கு புரிய வச்சுட்டா. நான் முழு மனசோடு இதுக்கு சம்மதிக்கிறேன்,'' என்று சொல்ல, வயதான தன் அப்பாவின் தளர்ந்த முகம் ஞாபகத்தில் வர, அவள் கண்களில் கண்ணீர் துளிகள்.
புன்னகையுடன் வரும் மகளைத் தழுவினாள், அம்மா.
- ஆர்.பிரவிண் குமார்
