
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
முதன் முதலாக, சாவித்திரி, ஜெமினியை சந்தித்தது, மனம் போல் மாங்கல்யம் படப்பிடிப்பில் தான்!
வெள்ளை நிறச் சட்டை, அதற்கு இணையாய் போட்டிருந்த கால்சட்டையில், எடுப்பாய் இருந்த அந்த இளைஞர், சாவித்திரியை நோக்கி வந்தார்.
அவரைப் பார்ப்பதை தவிர்க்க முனைந்த சாவித்திரியால், கண்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அவர் அருகில் வந்ததும், அவர் மனதுள் இனம் புரியாத பரவசம்!
'இவர் தான் இந்தப் படத்தின் கதாநாயகன்...' என்று, இயக்குனர் பி.புல்லையா, அந்த இளைஞனை அறிமுகப்படுத்த, அந்த இளைஞரோ, சாவித்திரியைப் பார்த்து, 'ஹலோ...' சொல்லி, நகர்ந்து சென்றார்.
சாவித்திரிக்கு, அவருடன் பேச வேண்டும் என்ற துடிப்பு. ஆனால், வெறும் ஒற்றை வரியில் பேசிச் சென்றவரிடம், 'நாம் வலிந்து பேசுவதா...' என நினைத்து, தன் ஆர்வத்திற்கு தடை விதித்துக் கொண்டார். முதல் சந்திப்பிலேயே, சாவித்திரிக்கு பரவசத்தை ஊட்டிய அந்த இளைஞர் தான், ஜெமினி கணேசன்!
ஜெமினி கணேசனின் உண்மையான பெயர், ராமசாமி கணேசன். தஞ்சை புதுக்கோட்டையை சேர்ந்த, நடுத்தர பிராமண வகுப்பை சேர்ந்தவர். தமிழ் திரைத்துறையில் ஆரம்ப கால நடிகர்கள், நாடக பின்னணியில் இருந்து வந்தவர்கள். ஆனால், எவ்வித நாடக அனுபவமும் இன்றி, திரையுலகிற்கு வந்தவர் ஜெமினி கணேசன்.
எஸ்.எஸ்.வாசனின், ஜெமினி ஸ்டுடியோவில், நிர்வாக மேலதிகாரியாகப் பணியாற்றிய காரணத்தால், தன் பெயரோடு, ஜெமினியை சேர்த்துக் கொண்டார். பின்னாளில் ஜெமினி என்ற அடைமொழிப் பெயரே, அவரின் நிஜப்பெயர் போல் ஆனது.
ஜெமினி புரொடக் ஷன் தயாரித்த, மிஸ் மாலினி என்ற படத்தின் மூலம், முதன்முதலாக திரைக்கு அறிமுகமானார் ஜெமினி கணேசன். தனக்கென்று தனி பாணியை வகுத்து, காதல் மன்னனாய் உலா வந்தவர், அக்கால கல்லூரி பெண்களின் கனவு நாயகனாகவும் திகழ்ந்தார்.
தமிழில், பாதாள பைரவி படத்தின் மூலம் அறிமுகம் ஆனவர் சாவித்திரி. இதற்கு முன், தெலுங்கில், சம்சாரம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
பாதாள பைரவி படத்தை தொடர்ந்து, தமிழில், தேவதாஸ் மற்றும் பரோபகாரம் ஆகிய படங்களில் நடித்தார் சாவித்திரி. தேவதாஸ் மற்றும் பாதாள பைரவி இரண்டும் பெரிய வெற்றியை பெற, தேவதாசின் பார்வதி, தமிழகம் மறக்க முடியாத கதாபாத்திரம் ஆனது.
நெல்லூரைச் சேர்ந்த பி.புல்லையா, 1937ல், சாரங்கதாரா என்ற படத்தின் மூலம் இயக்குனராக, திரையுலகில் அடி எடுத்து வைத்தார். இவர், தன் படத்தில் நடித்த கதாநாயகி சாந்தகுமாரியை, மணந்து கொண்டார்.
பார்வதி கதாபாத்திரத்தில், சாவித்திரியின் நடிப்பை கண்ட இயக்குனர் புல்லையா, நாராயணன் அன் - கோ கம்பெனி சார்பில், தான் இயக்க இருந்த, மனம் போல் மாங்கல்யம் படத்தில், சாவித்திரியை ஒப்பந்தம் செய்தார்.
இப்படத்தில் ஜெமினி, சாவித்திரி மற்றும் சுரபி பாலசரஸ்வதி நடித்திருந்தனர்.
முதல் நாளில் ஜெமினியை பார்த்ததில் இருந்து, சாவித்திரியின் மனதில் அவரின் நினைவு தான். 15 வயதை தாண்டிய சாவித்திரிக்கு, மனதில் காதல் பட்டாம்பூச்சி, இறக்கை விரித்து, பறக்க ஆரம்பித்தது.
தெலுங்கு பெண்ணான சாவித்திரிக்கு, தமிழ் கடினமாக இருந்தது. ஒரு சில சொற்களை தவிர, தமிழில் வேறு எதுவும் பேச தெரியாமல், படத்தில் நடிக்க திணறினார். சாவித்திரியின் நிலை கண்டு அவருக்கு உதவ வந்தார் ஜெமினி. கலகலப்பான குணத்துடன், மனதில் பட்டதை, 'பளிச்' என்று பேசும் ஜெமினியின் பேச்சு, சாவித்திரிக்கு அவர் மேல் காதலை ஏற்படுத்தியது.
சிறு வயதிலேயே தந்தையை இழந்த சாவித்திரி, தன் தந்தையின் அரவணைப்பையோ, ஆறுதலையோ பெற்றதில்லை. இந்நிலையில், ஜெமினியின் அரவணைப்பு, அவருக்கு பெரும் ஆறுதலைத் தந்தது.
படப்பிடிப்பு சமயங்களில், ஜெமினியை சீண்டி, அவர் கோபப்படுவதை பார்த்து ஆனந்தப்படுவதும், தன்னை விட்டு அவர் வேறு யாரிடமாவது பேசினால், பொறாமை கொள்வதும் என, அவர் மனம் ஜெமினியுடன் இரண்டற கலக்கத் துவங்கியது.
சாவித்திரியின் மனநிலை, ஜெமினிக்கு தெரியாமல் இல்லை. அவரும் அந்த நிலைமைக்கு மாறி, நாட்கள் பலவாகி இருந்தன.
சாவித்திரியை காதலிக்க துவங்கிய ஜெமினியின் மனதில், எங்கோ ஒரு மூலையில், இரண்டு பாச முட்கள் குத்தி கொண்டே இருந்தன.
ஏற்கனவே, இரு பெண்களை திருமணம் செய்தவர் ஜெமினி. இந்து திருமண சட்டத்தின்படி, முதல் மனைவியை மண முறிவு செய்யாமல், இன்னொரு மணம் புரிய முடியாது. ஆனால், ஜெமினி எப்படி, மூன்று பெண்களை, பகிரங்கமாக மணம் முடித்தார் என்பது தான், இன்று வரை விளங்காத மர்மம்.
சென்னை கிறித்தவ கல்லூரியில் படிப்பை முடித்த பின், தன், 19வது வயதில், ஜூன், 30, 1940ல் அலமேலு என்ற பாப்ஜியை திருமணம் செய்தார் ஜெமினி.
அதன்பின், தன் முதல் படமான, மிஸ் மாலினி படத்தில், தன்னுடன் நடித்த புஷ்பவல்லியை மணந்தார். இதில் சிறப்பு என்னவென்றால், புஷ்பவல்லியும், ஜெமினியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர் என்பதே!
சாவித்திரியை காதலிக்கும் அதே சமயத்தில் தான், புஷ்பவல்லியுடனும், ஜெமினியின் காதல் தொடர்ந்தது.
ஜெமினியை காதலிக்க ஆரம்பித்தபோது, அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்பது சாவித்திரிக்கு தெரியும்; ஆனால், புஷ்பவல்லியுடன் நடந்த காதல் திருமணம், அவருக்கு தெரியாத ஒன்று!
மனம் போல் மாங்கல்யம் படம் வளர்ந்த வேகத்தை விட, ஜெமினி - சாவித்திரியின் காதல் வளர்ந்த வேகம் அதிகம்!
பதினைந்து வயதை தாண்டிய சாவித்திரிக்கு, ஜெமினியின் அரவணைப்பு, சொர்க்கமாக தெரிந்தது. தான் தலை சாய்ந்து தூங்கும் அந்தத் தோள்கள், தனக்கு மட்டுமே சொந்தம் என நினைத்தார். கடைகளில் அவர் ஏதாவது பொருள் வாங்க போனால், முதலில், ஜெமினிக்கு பிடித்தமானதை தான் தேடுவார்.
இவர்களின் காதல் பார்வைகள், படக் குழுவினர் அனைவருக்கும் தெரிய ஆரம்பித்தது.
ஒருநாள், படப்பிடிப்புக்கு, ஜெமினி வர சற்று காலதாமதம் ஆகிவிட்டது; 'ஜெமினி வரும் வரை ஏன் நேரத்தை கடத்த வேண்டும், சாவித்திரி நடிக்க வேண்டிய காட்சிகளை எடுக்கலாம்...' என்றார் இயக்குனர் புல்லையா. ஆனால், அதற்கு ஒத்து கொள்ளவில்லை சாவித்திரி. ஜெமினியை பார்க்காமல், தன்னால் நடிக்க முடியாது என்பது, அவருக்கு மட்டும் தானே தெரியும்!
காலதாமதமாக வந்த ஜெமினியை கண்டவுடன், சாவித்திரியின் கண்களில், தாரை தாரையாக கண்ணீர்! காதல் எவ்வளவு வலிமையானது என்பதை, அப்போது தான் தெரிந்து கொண்டனர் படக்குழுவினர்.
குச்சுப்புடி நடனம் ஆடுவதில் திறமையானவர் சாவித்திரி. அந்த நடனத்தின் வாயிலாக தான், திரைப்பட வாய்ப்பை பெற்றார்.
சிறுவயதிலேயே திரையுலகில் காலடி எடுத்து வைத்த சாவித்திரி, தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான போது, அவரின் வயது, 15!
யார் கண்ணீர் விட்டு அழுதாலும், சாவித்திரியால் தாங்க முடியாது. கஷ்டம் என்று வந்தவர்களுக்கு, இல்லை என்று அவர் கை விரித்ததில்லை.
சம்சாரம் என்ற தெலுங்கு படத்துக்கு பின், விஜயா புரொடக் ஷன்ஸ் தயாரித்த, பாதாள பைரவி என்ற படத்தில், ஒரு நடனக் காட்சியில், தெலுங்கு மற்றும் தமிழ் என, இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருந்தார், சாவித்திரி.
ஒருநாள், படப்பிடிப்பில், கடைநிலை ஊழியர் ஒருவர் மயங்கி விழுந்து விட்டார். சாவித்திரி கையில், காசு எதுவும் இல்லாத ஆரம்ப கால நேரம் அது. மயங்கி விழுந்த ஊழியரை, அருகில் இருந்த மருத்துவரிடம் அழைத்து சென்றனர்.
அந்த ஊழியரைப் பரிசோதித்த மருத்துவர், அவருக்கு மூளையில் கட்டி இருப்பதாக கூறினார்.
அந்த ஊழியரின் மருத்துவ செலவுக்காக, சிறுவயதில் தன் தாய், தன் விரலில் அணிவித்த மோதிரத்தைக் கழற்றிக் கொடுத்தார், சாவித்திரி. நல்ல பெயர் எடுப்பதற்காக, அவ்வாறு செய்வதாக குதர்க்கமாக பேசினர் சிலர். ஆனால், அதை சாவித்திரி கண்டுகொள்ளவில்லை.
காங்கிரஸ் தலைவரான காமராஜர் வீட்டின் அருகில் தான் சாவித்திரியின் வீடு இருந்தது. பல நேரங்களில் மரியாதை நிமித்தமாக, அவர் காமராஜரை சந்திப்பது வழக்கம். அவருக்கு பிடித்த தலைவர்களில் ஒருவர் காமராஜர்.
நிதியின்றி காமராஜர் கட்சி நடத்த கஷ்டப்படுகிறார் என்பதை கேள்விப்பட்ட சாவித்திரி, தன் நகைகளை எல்லாம் அவரிடம் கொடுத்தார்.
அவரின் பாசத்தை கண்டு காமராஜருக்கு, என்ன சொல்வது என்றே தெரியவில்லை.
அந்த நகைகளை அவரிடமே திருப்பி கொடுத்து, 'நிதி விஷயத்தை கட்சிக்காரர்கள் பார்த்து கொள்வர்; நீயும், உன் கணவரும் எங்களுக்காக பரப்புரை செய்கிறீர்களே அது போதும்...' என்றார்.
சாவித்திரியின் மனதை படித்தவர்களுக்கு தான் தெரியும், அவருடைய கருணை உள்ளம்!
தான் சம்பாதித்த பணத்தில், எத்தனையோ குடும்பங்களை வாழ வைத்து இருக்கிறார் என்பதை, மனசாட்சி உள்ளவர்கள் புரிந்து கொள்வர்.
காதலில் விழுந்த சாவித்திரியின் காதல் பயணம், தங்கு தடையின்றி போன போது, வந்த செய்தி ஒன்று, அவரை அதிரச் செய்தது!
— தொடரும்.
ஞா. செ. இன்பா

