/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்!
/
நமக்கெதிராக திரும்பும் நம் மேற்கோள்கள்!
PUBLISHED ON : ஏப் 17, 2016

நாம் பேசும் வசனங்களுக்கு சில நேரங்களில் எதிர்பாராமல் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு விடுகிறது. நாமே கூட இதை எதிர்பார்த்திருக்க மாட்டோம். 'அட... பரவாயில்லையே...' என்று பெருமிதம் தோன்றுமளவு, சுற்றியிருப்பவர்கள் அதற்கு முக்கியத்துவம் தந்து விடுகின்றனர்.
ஆனால், நாம் எதிர்மறையாகப் பேசும் போது தான், கதை கந்தலாகிறது.
'உங்க நேர்மையை நீங்க தான் மெச்சிக்கணும்; முதலாளிக்கே உங்களைப் பத்தி நல்ல அபிப்ராயம் இல்லை...' என்று ஊழியர் ஒருவர், ஒரு நிறுவனத்தில் உள்ள காசாளரிடம் வத்தி (பற்ற) வைத்த போது, நொந்து போனார் காசாளர். 'நேர்மையாக நடந்தும் முதலாளி மனதில் நமக்கு நல்லிடம் இல்லையே...' என்று வெறுத்து விட்டது அவருக்கு! இத்தனைக்கும் முதலாளி சொன்னது, 'தேனைத் தொட்டவன் புறங்கையை நக்காமல் இருப்பானா...' என்று பொதுவாகத் தான்.
உயரங்களிலும், பொறுப்புகளிலும், மதிக்கப் படுகிற நிலைகளில் இருப்பவர்கள், மிகக் கவனமாகப் பேச வேண்டும். தோன்றியதை எல்லாம் பேசிவிட்டால், பிறகு பெரிய விவகாரமாகி விடும். அதுவும் சரி செய்யவே முடியாத, புண்ணாகி விடும்.
யானையைப் பற்றி இப்படி சொல்வர்... உண்மையா என தெரியவில்லை. எப்போதோ தனக்கு கெடுதல் செய்தவனையோ, தன்னைத் தண்டித்த பாகனையோ, காலங்காலமாக நினைவில் வைத்திருந்து பழி தீர்க்கும் என்பர்.
மனிதர்கள் இவ்வளவு மோசம் என்று சொல்ல மாட்டேன். ஆனால், இல்லங்களில் சில பெண்கள் இப்படித்தான் தொலைக்காட்சித் தொடர்களில் வரும் பெண்களைப் போல நடந்து கொள்கின்றனர். ஆண்கள் எப்போதோ பேச்சுவாக்கில் சொன்னதை, மனதிலேயே நினைவாக வைத்திருந்து சரியான சந்தர்ப்பங்களில், வசனம் மாறாமல் அப்படியே ஒப்பிக்கின்றனர்.
'இந்தப் புளுகெல்லாம் எங்கிட்டே வேண்டாம். அன்னைக்கு அப்படிப் பேசின ஆளு தானே நீங்க...' என்று பொருத்தமான நேரத்தில் மேற்கோள் காட்டும் போது, பதில் பேச முடியாத மவுனியாக ஆகி போவர் சில கணவன்மார்கள்.
ஏனோ தெரியவில்லை. இந்த உலகில், நாம் பேசும் பாராட்டு மொழிகள், உரியவர்களின் காதுகளுக்கு உடனே போய் சேருவதில்லை. தவறாக ஏதும் சொல்லிவிட்டால், அவை மட்டும் குறுஞ்செய்திகளைப் போல் அடுத்த நொடியே, பலருக்கு பகிரப்பட்டு விடுகின்றன. தவறான மேற்கோள்களை மட்டும் உடனுக்குடன் பரிமாறிவிடும் இந்தச் சமூகத்தின் தன்மையைக் குறை சொல்வதை விட்டு விட்டு, இத்தகைய தவறான விமர்சனங்களை இனி நாம் பேசுவதில்லை என்கிற முடிவிற்கு வந்து விட்டால், நல்லது என்று தோன்றுகிறது.
பிறரைப் பற்றித் தவறாகப் பேசுவது, நம்முடைய சுபாவமாக இல்லாவிட்டாலும், போட்டு வாங்கும் மனிதர்கள் வீசும் தூண்டிலில் சிக்கிய பரிதாப மீன்களாய், நாம் மாறிப் போவது தான் பெரிய சாபக்கேடு.
நாம் குறிப்பிடும் எந்த ஒரு தவறான மேற்கோளும், மிகைப்படுத்தப்பட்டும், சின்னாபின்னமாக்கப் பட்டும் பரப்பப்படும் போது, நாம் ஏன் இத்தவறை திரும்பத் திரும்பச் செய்ய வேண்டும்?
'நம்ம ஆளு... இப்ப ரொம்ப டல்லுன்னு பேசிக்கிறாங்களே...'
இந்த நிமிடம் நாம் சொல்லும், 'ஆமாமா...' என்கிற ஒரு சொல்கூட மிகவும் பெரிதாக்கப்பட்டு, நமக்கெதிராகத் திரும்பி விடும். உறவும், நட்பும் கெட்டு விடுவதோடு, எதிராளி சக்தி வாய்ந்தவராக இருப்பின், நமக்கு பல கெடுதல்களும் வந்து சேரும்.
மாறாக, 'அப்படீங்களா?' நீங்க சொல்றது தான் முதல் செய்தி. இது பற்றி அவரிடமே நாடி பிடித்துப் பார்க்கட்டுமா?' என்று சொல்லி, கபடி ஆட்டம் போல் ஒரு படி முன்னேறுங்கள். அவ்வளவு தான்! ஆசாமி பின்வாங்கி, அலறி அடித்து ஓடுவார்.
இது கூட வேண்டாம் என நினைப்பவர்கள், வாய் திறவாமல் புன்னகை மட்டும் சிந்துங்கள். இப்புன்னகைக்கு பல அர்த்தங்கள் உண்டு. இவற்றுள் இரண்டை மட்டும் சொல்கிறேன். முதலாவது, 'வேறு ஏதாச்சும் பேசுவோமே!'
'என்னை மாட்டி விடவா பார்க்குற... நடக்காதுடா குடாக்கு!'
'என் மச்சினனை பார்த்துப் பேசினியா... என்னைப் பத்தி ஏதாச்சும் ஏடாகூடமா பேசியிருப்பானே...' என்று கிளறும் அக்கா கணவரிடம், அவரது நண்பர், 'சே... உனக்கு ஏன் புத்தி இப்படி வேலை செய்யுது... என் மாமா மாதிரி வருமா என்று புகழ்ந்து தள்ளறாம்பா உன்னை...' என்கிற பதில் வருகிற போது, உறவு நிலை அங்கு கான்கிரீட் போட்ட தளம் போல வலுவடைகிறது. ஒன்றுக்கு பத்தாக நல்லபடி ஊதி விடுகிற மாமாவின் நண்பரை, சரிவரப் பயன்படுத்திக் கொண்ட அந்த மச்சினனின் திறமை, வியக்கத்தக்கது.
மனிதர்கள் மற்றவர்களைப் பற்றி தவறாகப் பேசுவதில், தனி சுகம் காண்கின்றனர். இதை, தற்காலிக இனிமை எனலாம். இதை விட நல்ல, நிரந்தர இனிமை எதில் இருக்கிறது தெரியுமா?
பிறரைப் பற்றி நல்லவிதமாகவே பேசி, உறவு நிலையை உயர்த்திக் கொள்வது தான்.
இதை, ஆரம்பித்து வைப்போமே!
லேனா தமிழ்வாணன்

