sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அன்புடன் அந்தரங்கம்!

/

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஏப் 17, 2016

Google News

PUBLISHED ON : ஏப் 17, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்புள்ள அம்மாவிற்கு,

நான், பட்டதாரி பெண்; எனக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது. ஆனால், நான் ஒருவனை உயிருக்கு உயிராக காதலித்தேன். அவனோ படிப்பு மற்றும் ஜாதியில் என்னை விட குறைவானவன். ஆரம்பத்தில், என் மீது மிகுந்த அக்கறையுடன் தான் இருந்தான். ஆனால், நாட்கள் செல்ல செல்ல அவனின் கொடூர குணம் தெரிய வந்தது.

நான், என் பெற்றோரின் பாசத்திற்கு ஏங்கிய நேரம் அது. காதல் என்று நம்பி, நானும், அவனை நேசித்தேன். என் பெற்றோர் வேலைக்கு சென்று விடுவதால், தனிமையை உணர்ந்தேன். அதனால், அவனின் அன்பு கிடைத்ததை எண்ணி, அவன் மீது உயிரையே வைத்தேன்.

அவனுக்கு பிடிக்காத எல்லாவற்றையும் விட்டேன். எனக்கு நண்பர்கள் இருக்கக் கூடாது என்றான்; அறவே ஒதுக்கினேன்.

ஆனால், பள்ளி பருவத்தில், காதல் என்று அறியாத வயதில், நானும், ஒருவனும் விரும்பினோம். ஆனால் அது, ஆறு மாதம் கூட இல்லை; பிரிந்து விட்டோம். அதை இவனிடம் கூறினேன்; அன்று என்னை அடித்தான். அதுதான் ஆரம்பம். அதன்பின், அவன் கேட்கும் போதெல்லாம் பணம் தர வேண்டும்; இல்லை என்றால், அடிப்பான். இப்படி தொட்டதுக்கெல்லாம் அடித்த போது தான், அவன், 'சைக்கோ' என்பது புரிந்தது.

அவனுக்கு சிகரெட், தண்ணி, கஞ்சா, பெண் என்று எல்லா கெட்ட பழக்கமும் உள்ளது. திருத்தி விடலாம் என்று மேலும் அன்பு காட்டினேன். அதற்கு கிடைத்த பலன், அடி மட்டுமே!

அவனை விட்டு விலகலாம் என்றால், என் பெற்றோரிடம், காதல் விஷயத்தை சொல்வதாகக் கூறி, என்னை மிரட்டுகிறான். சில சமயம், அடித்து விட்டு, மன்னிப்பு கேட்பான். அவன் தான் எல்லாவற்றிலும் சிறந்தவன் என்று நினைப்பு. நான் சந்தோஷமாக இருந்தால், அவனுக்கு சுத்தமாக பிடிக்காது. இதையெல்லாம் யாரிடமும் கூற முடியவில்லை; அனாதை போல் உணருகிறேன். இதிலிருந்து எப்படி மீள்வது? என்னை நெஞ்சில் மிதித்தான். இதனால், பின்னாளில் எனக்கு பிரச்னை வருமா, டெஸ்ட் எடுக்க வேண்டுமா அல்லது மனநல ஆலோசகரை பார்க்கலாமா?

என்னால், என் பெற்றோர் அவமான படக் கூடாது. எவ்வளவு நாள் தான், இந்த அடிமை வாழ்க்கை வாழ... எங்கே தேடி வந்து பிரச்னை செய்வானோ என்று பயமாக இருக்கிறது. தூங்கி பல நாட்கள் ஆகின்றன. எனக்கு நல்வழி காட்டுங்கள். என்னால் வேறு திருமணம் செய்ய முடியாது. எனக்கு உதவுங்கள் அம்மா. நான் வாழ்வதும், சாவதும் உங்கள் கையில் தான் உள்ளது.

இப்படிக்கு,

உங்கள் மகள்.



அன்புள்ள மகளுக்கு,

ஒரு ஆணை காதலிப்பதாக நம்பி, சாத்தானை, சைக்கோவை, ரத்தக்காட்டேரியை காதலித்து விட்டாய். சமீப கால தமிழ் சினிமாக்களில் ரவுடியை, பொறுக்கியை, படித்த பெண் துரத்தி துரத்தி காதலிப்பது போல காட்டுகின்றனர். நீயும் அப்படித்தான். சில ஆண்கள், நண்பர்கள் மற்றும் பணி இடத்தில் கிடைக்காத ஆளுமையை, பெண்கள் மீது வன்முறையாக திணிப்பர். இங்கே உன் காதலன் உன் மீது வன்முறையை காட்டுகிறான். தனிமை உன்னை தவறான முடிவு எடுக்க வைத்து விட்டது.

அவன் தவறானவன் என்பதை, உன் தோழன், தோழி கூறி விடுவர் என பயந்தே, அவர்களை ஒதுக்க சொல்லியிருக்கிறான்; நீயும் ஒதுக்கி இருக்கிறாய். உன்னை ஒரு பணம் காய்ச்சி மரமாக பாவித்து, நினைத்த நேரமெல்லாம் பணம் கறந்திருக்கிறான். பொதுவாக, ஆண்கள் காதலிக்கும் போது புத்தன் போல் நடித்து, திருமணத்திற்கு பின் தான், வன்முறையில் ஈடுபடுவர். உன் காதலன் தலைகீழாய் இருக்கிறான். சமாதானத்திலும், அமைதியிலும் உடன்பாடு இல்லாத, நியாயமான பேச்சில் வெற்றி பெற முடியாத ஆண்களே அடிதடியில் ஈடுபடுகின்றனர்.

அவனுடனான உறவை உடனே கத்தரித்து விடு. தொடர்ந்து தொந்தரவு தருகிறான் என்றால், உன் பெற்றோரிடம் நடந்த அனைத்தையும் நீயே கூறி விடு. அவன், உன்னை விட்டு விலக மறுத்தால், பெற்றோர் துணையுடன், மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய். ஒரு பெண் மருத்துவரை அணுகி, உடல் காயங்களை குணப்படுத்து. பெண் மனநல மருத்துவரிடம் சென்று, ஆலோசனை பெறு.

தனிமையில் இருப்பதை தவிர். எவ்வகையான ஆண் மகன், ஆயுளுக்கும் நல்ல கணவனாய் இருப்பான் என்பதில் தெளிவு பெறு. நீ பயந்தால், உன் முரட்டு காதலன், உன்னை துரத்தவே செய்வான். ஓடுவதை நிறுத்தி, திரும்பி நின்று முறைத்துப் பார். அவன் பயந்து ஓடி விடுவான். பெற்றோரின் மீது அன்பை பொழி.

உடனே திருமணம் செய்து கொள்ளாதே. சில ஆண்டுகள் போகட்டும். ரணகளமான மனமும், உடலும் பூரண குணமாகட்டும். படித்த படிப்புக்கேற்ற வேலைக்கு போ. சொந்தக்காலில் நின்று சம்பாதித்தால், தன்னம்பிக்கை கூடும். காதலனுடனான அனுபவங்களை கெட்ட கனவாக மற. அவநம்பிக்கையுடன் வாழ்க்கையை எதிர்கொள்ளாதே. இன்னும், 60 ஆண்டுகள் ஆனந்தமாய் வாழ, ஆற அமர திட்டமிடு.

உன்னை பிடித்த ஏழரை நாட்டு சனி விலகி விட்டது.

இனி உனக்கு நல்ல நேரம்தான்.

உனக்கு பொருத்தமான வேலையும், வரனும் கிடைக்க வாழ்த்துகிறேன்.

என்றென்றும் தாழ்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்






      Dinamalar
      Follow us