sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

சாவித்திரி! (5)

/

சாவித்திரி! (5)

சாவித்திரி! (5)

சாவித்திரி! (5)


PUBLISHED ON : மே 01, 2016

Google News

PUBLISHED ON : மே 01, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.

அக்னிப் பரிட்சா என்ற படத்தில், நடிக்க வாய்ப்பு இருப்பதாக கேள்விப்பட்டு, சாவித்திரியின் பெரியப்பா சவுதிரி, 1949ல், சாவித்திரியை சென்னைக்கு அழைத்து வந்திருந்தார்.

சாவித்திரி மனதிற்குள், நடிகை என்ற நளினம், மெதுவாக எட்டிப் பார்க்க ஆரம்பித்தது. சாவித்திரியின் மனதில், ஓராயிரம் கனவுகள்! 'மேக்கப் டெஸ்ட்' எடுத்தவர்கள், உதட்டை சுழித்து கொண்டனர். சாவித்திரியின் கனவுகள், தானே தற்கொலை செய்து கொண்டன. ஆவலுடன் வந்த தனக்கு, இப்படியோர் நிலை வரும் என, நினைக்கவில்லை சாவித்திரி.

சினிமாவில் எப்படியும் வாய்ப்பு கிடைத்து விடும் என, ஆசையோடு சென்னை வந்த சாவித்திரிக்கு, ஏமாற்றமும், அவமானமும் தான் மிஞ்சியது.

சினிமா வாய்ப்பு தேடி, 1950ல், மீண்டும் சென்னை வந்தார். சென்னையில், பிரபல புகைப்படக் கலைஞராக இருந்தவர் ஆர்.என்.நாகராஜ ராவ். சினிமா வாய்ப்பு தேடி வருகிறவர்கள், இவரிடம் தான் நிழற்படம் எடுத்து கொள்வர். ராசியான கைக்கு சொந்தக்காரராக கருதப்பட்ட இவரிடம், நிழற்படங்கள் எடுக்க சாவித்திரியை அழைத்து போனார் சவுத்ரி.

சாவித்திரியின் மெலிந்த உடல், ராவ்க்கு திருப்தி தரவில்லை. ஆயினும், சாவித்திரியின் முக வடிவமைப்பு, ஒரு தேவதையை போலத் தெரிந்ததால், ராவின் மனதில் ஒரு சின்ன நம்பிக்கை.

கேமரா வழியாக சாவித்திரியைப் பார்த்த போது, அந்த உருண்டை விழிகளில் ஓடிய ஜாலமும், செவ்விதழில் தெரிந்த ஒரு ஈர்ப்பும், இந்த பெண் வெற்றி பெறுவாள் என, அவர் மனம் கூறியது.

நாகராஜராவின் கணிப்பு தப்பவில்லை. சாவித்திரி, சம்சாரம் என்ற, தெலுங்கு படத்தின் மூலம் திரைக்கு வந்து, ஒரு சாதனை கதாநாயகி என்ற உயர்ந்த நிலையை அடைந்தார்.

கடந்த, 1954ல், விஜயா புரொடக் ஷன்ஸ் சார்பில், நாகிரெட்டி - சக்ரபாணி இருவரும் இணைந்து, காதலும், நகைச்சுவையும் சேர்ந்து போட்டி போடும் ஒரு கதையை தயாரிக்க திட்டமிட்டனர். கதை வசனகர்த்தா சக்ரபாணி எழுதியிருந்த ஒரு கதை, அவர்களுக்கு பிடித்து இருந்தது.

அப்போது, உண்மை காதலர்களாக திகழ்ந்த ஜெமினியையும், சாவித்திரியையும், தங்கள் படத்தில் இணையராக ஒப்பந்தம் செய்து கொண்டனர். விஜயா புரொடக் ஷன்ஸ் படம் என்றால், சாவித்திரி கண்டிப்பாக இருப்பார் என்பது, அந்நிறுவனத்தின் எழுதாத சட்டம் அப்போது.

கிறித்தவ மதப் பின்னணியில் தயாரிக்கப்பட்ட, மிஸ்ஸியம்மா என்ற படத்தில், தஞ்சை ராமையாதாஸ் எழுதி, ராஜேஸ்வரராவ் இசையமைத்த அத்தனை பாடல்களும், மாபெரும் வெற்றி பாடல்களாக அமைந்து இருந்தன.

எல்.வி.பிரசாத் இயக்கிய இப் படத்தில், ஜெமினியும், சாவித்திரியும் தாங்கள் நிஜ வாழ்க்கை காதல் குறும்புகளை, படத்திலும் பதிவு செய்து இருந்தனர். இப்படவேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது தான், சாவித்திரியின் நிஜ வாழ்க்கையில் ஒரு பெரிய மனப் போராட்டம். அப்போராட்டத்தில் நின்று கொண்டிருந்த சாவித்திரியை, கோவிலுக்கு அழைத்து செல்வதாக கூறியிருந்தார் ஜெமினி. அவருடன் வெளியே செல்லும் போது, 'எப்படியாவது தன் மனப் போராட்டத்தை பகிர்ந்து விட வேண்டும்...' என, மனதுக்குள் முடிவு கட்டினார் சாவித்திரி.

ஜெமினியின் கார், சாவித்திரி வீட்டுச் சுற்றுச்சுவருக்குள் வந்து நின்றது. சாவித்திரியின் அம்மா, பெரியப்பா மற்றும் அக்கா வெளியே சென்றிருந்தனர்.

வீட்டில் இருந்த வேலைக்காரப் பெண், தோட்டத்து செடிகளுக்கு நீர் பாய்ச்சி கொண்டிருந்தாள்.

ஜெமினி, 'அம்மாடி...' என்று செல்லமாய் அழைத்தபடி, காரில் இருந்து இறங்கினார். ஜெமினியை கண்டாலே, சாவித்திரிக்கு கையும் ஓடாது, காலும் ஓடாது. காதலின் மயக்கம் அது!

கண்ணனின் குழல் ஓசை கேட்டு, ஓடோடி வரும் ராதையை போல, ஜெமினி என்ற தன் கண்ணனின் அழைப்பு கேட்டு, ஓடோடி அருகில் வந்தார்.

தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி கொண்டிருந்த பெண், நாகரிகம் கருதி, அங்கிருந்து விலகி கொண்டாள்.

ஜெமினியின் பக்கத்தில் இருந்த, ஒரு செடியின் இலையை கையில் பறித்தபடி பேச ஆரம்பித்தார் சாவித்திரி.

'கண்ணா... நாம கல்யாணம் செய்துக்காமலேயே குடும்பமா வாழ்ந்துகிட்டுருக்கோம். ஆயிரம் தான் காதல்னாலும், எனக்கும் ஒரு அங்கீகாரம் வேணும்பா... உங்க கையால தாலி கட்டினா. நான் இன்னும் பாக்கியசாலியாய் இருப்பேன்...' என்றார்.

ஜெமினி சற்றும் யோசிக்காது, 'கவலைப்படாதே அம்மாடி... டிசம்பர் மாசம் முதல் வாரத்திலே, நம்ம திருமணத்தை மைசூர் சாமுண்டீசுவரி கோவிலியே வைத்து கொள்ளலாம்...' என்றார்.

மைசூர் சாமுண்டீசுவரி ஆலயம், ஜெமினிக்கு மிகவும் பிடித்தமான ஆலயம். எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் அக்கோவிலுக்குச் சென்று வருவது அவரது வழக்கம்.

தன் மகளுக்கு, மைசூர் சாமுண்டீசுவரி தெய்வத்தை நினைத்தே, சாமுண்டீசுவரி என்று பெயர் வைத்தார் என்றால், அக்கோவில் மீது எவ்வளவு பக்தி வைத்திருந்தார் ஜெமினி என்பது தெரியும்.

ஜெமினி, 'திருமணம் செய்யலாம்...' என்று கூறினவுடன், சாவித்திரியின் கண்களில் தாரைதாரையாய் கண்ணீர்.

ஜெமினியை ஆசையோடு கட்டிப்பிடித்து, சிறு குழந்தைபோல, தன் தலையை, ஜெமினி தோளில் சாய்த்து, சில நிமிடங்கள் அழுதார் சாவித்திரி. ஜெமினியும், சாவித்திரியின் தலையை தடவி, அழட்டும் என விட்டு விட்டார். காதலியின் அழுகையில் உள்ள அர்த்தம், காதலனுக்கு மட்டும் தான் தெரியும் என்ற உண்மையின் வெளிப்பாடு அது!

தன்னை மணம் முடிக்க ஜெமினி, முடிவு செய்து விட்டார் என்ற செய்தி, சாவித்திரிக்கு எல்லையில்லா மகிழ்ச்சியை தந்தது. மணநாள் அன்று தேவதை போல தெரிய வேண்டும், உடம்பு எல்லாம் தங்க நகையால் அலங்கரித்து, அப்படியே தேவலோகப் பெண்ணாகவே ஆக வேண்டும் என, வித்தியாசமான மாடல்களைக் கொண்ட நகைகளை, வாங்கி குவிக்க ஆரம்பித்தார்.

சாவித்திரியிடம் திடீர் என தென்பட்ட மாற்றங்கள், அவரின் பெரியப்பாவுக்கு சந்தேகத்தையும், கலக்கத்தையும் உருவாக்கியது.

பொன் முட்டையிடும் வாத்து, எங்கே தன்னை மீறி, அது வெளியேறி விடுமோ என்ற அச்சம் அவருக்கு!

சாவித்திரியின், வரவு, செலவு கணக்குகளையும், 'கால்ஷீட்' விவரங்களையும் சவுத்ரி தான் பார்த்து கொண்டிருந்தார்.

சாவித்திரி படப்பிடிப்புக்கு செல்லும்போது, அவருக்கு துணையாக செல்லும் சவுத்ரி, கையில் 555 சிகரெட், வாயில் புகையிலை, பல நேரங்களில் மது என, பகட்டான வாழ்க்கையில் மிதந்து கொண்டிருந்தார். எங்கே, ஜெமினியால் அந்த வாழ்க்கை பறிபோய் விடுமோ என்ற பயம் அவருக்கு!

கடந்த, 1953ல் தீபாவளி அன்று, ஜெமினியுடன் முதன் முதலில், சாவித்திரி இணையராக நடித்த, மனம் போல் மாங்கல்யம் திரைப்படம், திரைக்கு வந்தது.

இப்படத்தின் முதல் காட்சியை ரசிகர்களோடு இணைந்து, ஜெமினி, சென்னை, 'மிட்லண்ட்' திரையரங்கில் பார்த்தார்.

ரசிகர்கள் காட்டிய ஆரவாரம், படத்தை வெற்றியென பறைசாற்றியது. ஜெமினியோடு படம் பார்க்கச் சென்றிருந்த, நாராயண அய்யங்கார், இயக்குனர், பி.புல்லையா ஆகியோர் முகத்தில் தெரிந்த புன்னகை, அதை உறுதி செய்தது.

மகிழ்ச்சி இறக்கை கட்டிப் பறந்தது ஜெமினிக்கு. தங்கள் காதலை, ஊரே அங்கீகரித்தது போன்ற மகிழ்ச்சி.

இந்த தீபாவளி, சாவித்திரி வீட்டில் தான் என, ஜெமினியின் மனம் கூறியது.

தன் காதலிக்கு, ஆசை ஆசையாக பரிசுகளை வாங்கி கொண்டு, சாவித்திரி வீட்டிற்கு போனார்.

ஜெமினி எப்படியும் தன்னை பார்க்க வருவார் என, சாவித்திரியின் உள் மனது கூறிக்கொண்டே இருந்தது.

தொடரும்.

- ஞா.செ.இன்பா






      Dinamalar
      Follow us