
வழிக்கு கொண்டு வர வேண்டுமா?
வெளியூரில் வசிக்கும் என் மகளை பார்க்க சென்றிருந்த போது, ஐந்து வயதான என் பேத்தியைப் பற்றி, 'தாமதமாக எழுகிறாள்; சரியாக சாப்பிடுவதில்லை, சொன்ன பேச்சு கேட்பதில்லை...' என்று புகார் கூறினாள், என் மகள்.
பள்ளியில் கோடை விடுமுறை விட்டிருந்ததால், ஒரு வாரம் என்னிடம் இருக்கட்டும் என்று பேத்தியை அழைத்து வந்தேன். அவளிடம், 'சொன்ன பேச்சு கேட்டால், உனக்கு நட்சத்திர குறியீடு தருவேன். சரியான நேரத்தில் எழுந்தால் ஒன்று; குளித்தால் ஒன்று; உணவு உண்டால் ஒன்று; தூங்கினால் ஒன்று என்று, தினம், 10, 'ஸ்டார்' வாங்கினால், உனக்கு ஒரு பரிசு தருவேன்...' என்றேன்.
உற்சாகத்துடன் ஒத்துக் கொண்டவள். நல்ல முறையில், ஒத்துழைத்து, நிறைய, 'ஸ்டார்' வாங்கினாள்.
சில நாட்களில், இதுவே அவளுக்கு பழகிவிட்டது. ஊர் திரும்பியதும், அவளுடைய அம்மாவுக்கு ஒரே ஆச்சரியம், 'எப்படி இவளை மாற்ற முடிந்தது?' என்று வியந்தாள். 'ரொம்ப சிம்பிள்... சிறுவரானாலும், பெரியவர்களானாலும் எல்லாருக்குமே மற்றவரிடம் நல்ல பெயரும், பாராட்டும் வாங்க வேண்டும் எனும் ஆசை மனதில் இருக்கும். அதை, நாம் சரியான முறையில் பயன்படுத்தினால், மாற்றம் நிச்சயம். இதை நீயும், தொடர்ந்து கடைப்பிடித்து வா...' என்று அறிவுரை கூறினேன்.
இப்போது பேத்தி குறித்து ஒரு புகாரும் இல்லை.
'ஆடற மாட்டை ஆடிக் கறக்கணும், பாடற மாட்டை பாடி கறக்கணும்...' என்று சும்மாவா சொன்னார்கள்!
— ஆர்.மாலதி, ஸ்ரீபெரும்புதூர்.
ஓட்டை விற்க, கூட்டம் நடத்தலாமா?
சமீபத்தில், நண்பர் ஒருவரைப் பார்க்க, அவரின் கிராமத்திற்கு சென்றிருந்தேன்.
வீட்டில் நண்பர் இல்லை. சாவடியில் நடைபெறும் ஊர் கூட்டத்திற்கு சென்றுள்ளதாக தகவல் கிடைக்கவே, அங்கு சென்றேன்.
நண்பரை தனியாக அழைத்து, சில சொந்த விஷயங்களை பேசியபின், 'ஊர் கூட்டம் நடக்கிறதே... எதுவும் பிரச்னையா?' என்று கேட்டேன்.
அதற்கு நண்பர், 'அதெல்லாம் எதுவும் இல்ல; இம்மாதம், 16ம் தேதி தேர்தல் வருதுல்ல... தேர்தல்ல ஊர் சார்பில் யாரை ஆதரிக்கிறது, யாருக்கு ஓட்டுப் போடுறதுன்னும், ஊருக்கு எத்தனை லட்சம் ரூபாய் வாங்கலாம்ன்னும் பேசி, முடிவெடுக்கும் முதற்கட்ட கூட்டம் நடக்குது...' என்றார்.
அதிர்ந்து போன நான், 'இது என்ன கொடுமை...' என்றேன்.
அதற்கு, 'ரொம்ப வருஷமாவே இது தான் நடக்குது. யார் அதிக தொகை கொடுக்கிறாங்களோ, அவங்களுக்கு எல்லாரும் ஓட்டுப் போடணும்ங்கிறது கிராமத்தோட கட்டுப்பாடு. அந்த பணத்தை, கோவில் கட்டவும், திருவிழா நடத்தவும் செலவிடுவாங்க...' என்றார்.
இதற்கு முன்னர் நடந்த பல தேர்தலுக்கும் இதுபோன்றே கூட்டம் போட்டு முடிவெடுத்தனராம். இதை யாரும் தட்டிக் கேட்கவும் முடியாதாம்.
தனியாக ஓட்டை விற்காமல், ஊர் கூடி ஓட்டை விற்கும் வினோதமும், நம் ஜனநாயக நாட்டில் நடக்கத் தான் செய்கிறது.
இதுபோன்ற குறுக்குவழிகளுக்கு தேர்தல் கமிஷன் முடிவு கட்டுமா?
- சோ.ராமு, திண்டுக்கல்.
தானம் செய்யுங்கள்!
என் கல்லூரி பேராசிரியர் ஒருவர், தனக்கு சொந்தமான பத்து லட்சம் ரூபாய் மதிப்புள்ள காரை, புதைக்க விரும்புவதாக விளம்பரப்படுத்தினார். அதற்கு அவர் கூறிய காரணம், தன் இறப்புக்கு பின், அந்தக் கார் தனக்கு பயன்படும் என்று!
இதைக்கேட்ட எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை. மாணவர்களும், பேராசிரியர்களும், அவரை, 'பைத்தியக்காரன்... பத்து லட்ச ரூபாயை வீணடிக்கிறானே...' என்று விமர்சனம் செய்தனர். பொதுமக்களும் திட்டி தீர்த்தனர். புதைப்பதாக சொன்ன தேதியும் வந்தது.
பொதுமக்களும், மாணவர்களும், என்ன தான் நடக்கிறது என்பதை பார்ப்பதற்காக, ஆவலாக கூடினர். கல்லூரி வளாகத்திலேயே, காரை புதைக்கும் அளவுக்கு, பெரிய பள்ளம் வெட்டப்பட்டு, புத்தம் புதிய அக்காரும் நிறுத்தப்பட்டிருந்தது.
பேராசிரியர் வந்தார். காரை புதைக்கும் ஏற்பாடுகள் துவங்கியது. உடனே சிலர், 'விலை உயர்ந்த பொருளை இப்படி வீணடிக்கிறீர்களே... இது எப்படி உங்கள் மரணத்திற்கு பின் பயன்படும்... அதற்கு பதில், யாருக்காவது தானமாக கொடுத்தால், அவர்களுக்காவது பயன்படுமே...' என்று கோபத்துடன் கேட்டனர்.
அதற்கு பேராசிரியர், 'இந்த காரின் விலை, வெறும் பத்து லட்ச ரூபாய் தான்; இதைப் புதைக்கப் போறேன்னு சொன்னவுடனே, கோபப்பட்டு கேள்வி கேட்குறீங்களே... இதைவிட விலை மதிப்பில்லாதது, மனித உடல் உறுப்புகள். இதயம், கண், நுரையீரல், கிட்னி மற்றும் தோல் என, மனிதக் குலத்துக்கு பயன்படும் மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைக்கிறீங்களே... அதனால, யாருக்கு என்ன லாபம்? லட்சக்கணக்கானவங்க உடல் உறுப்பு தானத்தை நம்பி காத்துக்கிட்டு இருக்கிறாங்க. அவங்களுக்கு உங்கள் உடல் உறுப்புகள் பயன்படட்டும்ன்னு எத்தனை பேர் இறப்புக்கு பின், உடலுறுப்பு தானம் செய்றீங்க... உடல் உறுப்பு தானத்தோட அவசியத்தை உங்களுக்கெல்லாம் உணர்த்த தான் இந்த நாடகம்...' என்றார்.
அவர் கூறியது பழைய விஷயம் தான்; ஆனால், அதை மாற்றி யோசித்து, ஆழமாக மனதில் பதிய வைத்து விட்டார்.
— ஜி.கார்த்திகேயன், சென்னை.
என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா?
இந்த சம்பவம், முந்தைய தேர்தலின் போது நடந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன்.
சென்னையிலிருந்த என் உறவினர் வீட்டுக்கு சென்றிருந்தேன். தேர்தலுக்கு இரு நாட்களுக்கு முன், கரை வேட்டி அணிந்த சிலர், உறவினரின் ப்ளாட்டுக்கு வந்து, ஓட்டுக் கேட்டு புறப்படும் போது, ஒரு கவர் கொடுத்தனர்; அதில், 2,000 ரூபாய் இருந்தது. உறவினரிடம், 'ஓட்டுக்காக பணம் வாங்குறது தவறில்லயா... அதுவும், நீங்க இவ்வளவு வசதியாக இருக்கும் போது...' என்றேன், அதற்கு உறவினரோ, 'இந்த பணத்த அப்படியே ஏதாவது கோவில் உண்டியல்ல போட்டுடுவோம்; இந்த பாவ பணத்தை தொட மாட்டோம்...' என்றார்.
'அதற்கு நீங்க வாங்காமலே இருக்கலாமே?' என்றேன். அதற்கு அவர், 'இந்த பணம், நம்ம கிட்ட கொடுத்தவரோட பணம் இல்ல; அவருடைய வேட்பாளருடையது. நாம வேணாம்ன்னு சொன்னா அந்தப் பணம் வேட்பாளருக்கு திரும்ப போய் சேராது. இடையில் இருப்பவங்க அமுக்கிடுவாங்க. அதற்கு, நாம வாங்கி, கோவில் உண்டியல்ல போடலாமே...' என்றார்.
இப்படி பேசுபவர்கள் ஒன்றை நினைத்து பார்க்க வேண்டும். பணம் கொடுப்பவர்கள் எதற்காக கொடுக்கின்றனர், அதுபோல பல மடங்கு சம்பாதிப்பதற்கு தானே! அதற்கு நாம் துணை போகலாமா?
— சம்பத்குமாரி, திருச்சி.

