
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
கண்ணாடி முன், மணிக்கணக்காக நின்று தன்னை அழகுபடுத்தி கொண்டார், சாவித்திரி. தீபாவளி பரிசாக, ஜெமினி தனக்கு கொடுத்திருந்த, சந்தன நிற பட்டுப் புடவையை அணிந்து, தலைநிறைய மல்லிகைப் பூச்சரத்தை சூடினார்.
மிதிலையில் வில்லை ஒடிக்க வரும் ராமனை, ஜனகன் மகள் சீதை தாழ்வாரத்தில் நின்று தேடியது போல, இரண்டாவது மாடியின் பால்கனியில் நின்று, ஜெமினிக்காக வழிமேல் விழி வைத்து காத்திருந்தார்.
தொலைவில் ஜெமினியின் கார் வருவதை கண்ட அவர், சிறுபிள்ளை போல, தன் உதவி பெண்ணை கட்டிப்பிடித்து துள்ளிக் குதித்தார்.
ஜெமினி தங்கள் வீட்டிற்கு வருவது, சாவித்திரியின் பெரியப்பாவிற்கு சுத்தமாக பிடிக்கவில்லை. நந்தி போல, கீழ்தளத்தில் உட்கார்ந்திருந்தார்.
வீட்டிற்குள் நுழைந்த ஜெமினி, கீழ்தளத்தில் இருந்த சவுத்ரியிடம், வலியச் சென்று, மனம் போல் மாங்கல்யம் பட வெளியீட்டைப் பற்றியும், அதன் வெற்றி குறித்தும் பேசினார்; ஆனால், எதையும் காதில் வாங்கவில்லை சவுத்ரி. ஜெமினி கிளம்பினால் போதும் என்ற மனநிலை அவருக்கு!
ஏற்கனவே, சாவித்திரியை கீழே வரக்கூடாது என, தடை விதித்து இருந்தார் சவுத்ரி. அதனால், பெரியப்பாவின் தடையை மீறி, சாவித்திரியால் கீழே வர முடியவில்லை.
ஜெமினியின் விழிகள், அங்கும், இங்கும் ஓடியது. 'எப்படியாவது சாவித்திரியை நேரில் சந்தித்து விட மாட்டோமா...' என்ற ஏக்கம் அவருக்கு! ஆனால், விடாக் கண்டனாக சவுத்ரி இருப்பதால், அவரது ஆசை, வெறும் ஆசையாக மட்டுமே இருக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டது.
காத்திருந்த கண்களோடு வெளியே வந்த ஜெமினி, விழியுயர்த்தி மாடியை பார்த்தார். அங்கே ஜெமினியின் காதல் இளவரசி, சந்தன நிற பட்டுப் புடவையில், கலைமகள் போல காட்சி தந்தார்.
'தன் வீட்டிற்கு வந்து, வேதனையோடு திரும்பி போகிறாரே...' என நினைத்த சாவித்திரிக்கு, அழுகையை அடக்க முடியவில்லை.
வெளியே நின்று அழுதால், ஜெமினிக்கு தெரிந்து விடும் என, அறைக்குள் ஓடினார். நிலைமை புரிந்து, வெளியே சென்று, தொலைபேசியில் தொடர்பு கொண்டார், ஜெமினி.
அழுதபடியே தெலைபேசியை எடுத்தார் சாவித்திரி. எதிர்முனையில், அவரது கண்ணன் ஜெமினி!
'கண்ணா...' அழுகையோடு அழைத்தார் சாவித்திரி. குரல் கேட்டு, சுக்கு நூறாக உடைந்து போனார் ஜெமினி. 'அம்மாடி அழாதே... நீ அழுதால் என்னால் தாங்க முடியாது. கண்டிப்பா, நாம் அடுத்த தீபாவளியை சேர்ந்து கொண்டாடுவோம், கவலைப்படாதே...' என்று கூறக் கூற, அவர் கண்களிலும் கண்ணீர்.
சவுத்ரி நல்லவர் தான்; ஆனாலும், திருமணமான ஒருவரை சாவித்திரி மணம் முடிக்க முடிவு எடுத்து விடுவாரோ என்ற அச்சமே, அவரை, வில்லனாக ஆக்கியது.
திருமணம் செய்ய தீவிரம் காட்ட துவங்கி விட்டார் சாவித்திரி என்பதை, அவரது அணுகுமுறையில் தெரிந்த மாற்றங்கள், சவுத்ரியை எளிதில் யூகிக்க வைத்தது.
இதனால், சாவித்திரிக்கு கட்டுப்பாடுகள் அதிகமாக விதிக்கப்பட்டது. ஜெமினியை நினைக்காத ஒரு சாவித்திரியை உருவாக்க, அவர் முனைந்தார். அங்கு தான் சவுத்ரியின் தோல்வி, அவரையும் அறியாது பதிவானது.
சாவித்திரி அழுதாலும், சிரித்தாலும் ஜெமினி முன்னே வந்து நின்றார்; இதற்காகவே, அழவும், சிரிக்கவும் ஆசைப்பட்டார் சாவித்திரி.
இப்படி ஜெமினிக்காகவே வாழ்ந்திருந்த சாவித்திரியிடம், ஜெமினியை மறக்கக் கூறினால், எப்படி வெற்றி கிடைக்கும்?
அன்று சென்னையில் பயங்கர மழை; காற்றின் சுழற்சி அதிகம் இருந்ததால், ஒட்டு மொத்தமாக, மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருந்தது.
இடியின் ஓசைக்குப் போட்டியாக, சாவித்திரியின் வீட்டில் பயங்கரச் சத்தம். சாவித்திரியை மிரட்டிக் கொண்டிருந்தது. ஜெமினியை திருமணம் செய்ய சாவித்திரி போட்டிருந்த திட்டம், அவர் குடும்பத்தினருக்கு தெரிந்துவிட்டது என்பதை, அச்சத்தம் உணர்த்தியது!
சாவித்திரியின் பணம் மற்றும் நகைகளை வாங்கி, அலமாரியில் வைத்து பூட்டி, சாவித்திரியை, ஒரு அறையில் தள்ளி கதவைச் சாத்தினார் சவுத்ரி.
யாருடைய கருத்து சரி, தவறு என்று உணர முடியாத காரணத்தால், சாவித்திரியின் அம்மா, அமைதியாக நின்று, அழுது கொண்டிருந்தார்.
சவுத்ரியும், சாவித்திரியின் அம்மாவும் மேல் மாடிக்குப் போக, இது தான் தருணம் என, அந்த நள்ளிரவில் வீட்டை விட்டு வெளியேறினார் சாவித்திரி.
வீட்டை தாண்டி, சாலையை அடைந்த சாவித்திரி, சுற்றுமுற்றும் பார்த்தார்; எவரையும் காணவில்லை. ஆள் இல்லா காடு போல அந்த வீதி காட்சியளித்தது.
மழைநீர் விழுகிற ஓசையில் ஒருவித அச்சம். ஆயினும், தனி ஆளாக, அந்த இரவில் நடக்க ஆரம்பித்தார் சாவித்திரி.
சென்னை வீதியில், அந்த நள்ளிரவில் அடாத மழையில், வீட்டைவிட்டு சாவித்திரி வெளியேறி வந்தார் என்றால், அதற்கு மனத்துணிச்சல் மட்டுமே காரணம். தமிழ் திரையுலகில், காதலுக்காக நடு இரவில், வீட்டை விட்டு வெளியே வந்து, காதலனைத் தேடிப்போன, முதல் புரட்சிப் பெண் சாவித்திரியாகத் தான் இருக்கும்.
— தொடரும்.
ஞா.செ.இன்பா

