sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 21, 2025 ,கார்த்திகை 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

அந்துமணி பா.கே.ப.,

/

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,

அந்துமணி பா.கே.ப.,


PUBLISHED ON : மே 08, 2016

Google News

PUBLISHED ON : மே 08, 2016


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரியில், பத்திரிகை தொழில் தொடர்புடைய இரண்டு நாள் கான்பிரன்ஸ்; நானும், லென்ஸ் மாமாவும் சென்றிருந்தோம்.

'ஹாய் மணி...' என்ற குரல் கேட்டு, திரும்பினேன்.

புதுச்சேரியில் இயங்கி வரும் அமெரிக்க நிறுவனம் ஒன்றில் பணிபுரியும் நண்பர் ஒருவர் நின்றிருந்தார். இவர், இங்குள்ள தற்கொலை தடுப்பு மையம் ஒன்றில் கவுன்சிலராகவும் உள்ளார்.

தற்கொலை எண்ணத்தால் தவிப்போருக்கு இந்த மையத்தில், தகுந்த ஆலோசனை கூறி, அவ்வெண்ணத்தை மாற்றி நல்வழிப்படுத்துவர். அப்படி ஆலோசனை வழங்கும் தன்னார்வப் பணியில் ஈடுபட்டு வருபவர் இந்த நண்பர். அவருடன் ஒரு வெள்ளைக்காரரும் நின்றிருந்தார்.

அவரை அறிமுகம் செய்தார் நண்பர். அவர் கனடா நாட்டைச் சேர்ந்த டாக்டராம். இந்தியாவின் பல பகுதிகளிலும் செயல்படும் தற்கொலை தடுப்பு தன்னார்வ மையங்களை பார்வையிடவும், உதவிகள் செய்யவும், அந்நாட்டின் பிரதிநிதியாக வந்திருப்பதாகக் கூறினார்.

சம்பிரதாயப் பேச்சுகளுக்குப் பின், 'சிறுநீரகம் பழுதடைந்த கனடா நாட்டவர் பலர், இங்கு வந்து மாற்று சிறுநீரகம் பொருத்தி செல்வது உங்களுக்கு தெரியுமா? சிறுநீரகத்தை விலை கொடுத்து வாங்குவது உங்கள் நாட்டில் சட்டப்படி குற்றம் என்பதால், எங்கள் நாட்டில் பலரும் ஒரு சிறுநீரகத்துடன் வலம் வரும் அவலம் ஏற்பட்டுள்ளதை அறிவீர்களா?' என்றேன்.

விரிவாக பேச ஆரம்பித்தார்:

உங்கள் நாட்டிலும் சிறுநீரகத்தை விற்பது குற்றம்தானே... எங்கள் நாட்டில், இதை கிரிமினல் குற்றமாக சட்டம் கருதுவதில்லை என்றாலும், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் மற்றும் ஆறு மாதம் சிறை தண்டனை உண்டு.

எங்கள் மக்கள் இந்தியாவுக்கு மட்டுமல்ல, சீனா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளுக்கும் சென்று, சிறுநீரகம் பெற்று ஆபரேஷன் செய்து கொள்கின்றனர்.

இதற்காக, ஒரு சிறுநீரகத்திற்கு, இடைத்தரகர்கள் மூலம், அவர்கள் கொடுக்கும் விலை என்ன தெரியுமா? 20 லட்சம் முதல், 70 லட்சம் ரூபாய்!

எங்க நாட்டுல சிறுநீரக தானம் பெற முடியாததால, ஒரே வருஷத்துல நூற்றுக்கணக்கானோர் செத்துப் போயிட்டாங்க. இதனாலேயே, எவ்வளவு செலவு செய்யவும் தயாரா இருக்காங்க.

உங்க நாட்டுல இன்னும் பெரிய கொடுமை என்னான்னா... மாற்று சிறுநீரகம் பொருத்தாமலேயே, வயிற்றை கிழித்து, ஆறு இஞ்சுக்கு வெறும் தையல் மட்டுமே போட்டு, பணத்தையும் பிடுங்கிக் கொண்டு அனுப்பி விடுகின்றனர். இங்கே, (கனடா) வந்தபின் அல்ட்ரா சவுண்ட் சோதனை செய்து பார்த்தால், மாற்று சிறுநீரகம் பொருத்தப் படாதது தெரிய வரும்.

சென்னையில், 17 வயது சித்தாள் பையன் ஒருவனின் சிறுநீரகத்தை பொருத்திக் கொண்ட, 55 வயது கனடாக்காரர், விமானத்தில் நாடு திரும்பும் போது, பாரிச வாயுவால் தாக்கப்பட்டு, கை, கால் செயலிழந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவுல ரிச்மாண்ட் எனும் இடத்துல வால்டர் கிளாக்ன்னு ஒரு நிறுவனம் இருக்கு. இந்நிறுவனம் சீனாவில் ஷாங்காயில் உள்ள ஒரு ஆசாமியுடன் கூட்டுச் சேர்ந்து, சீன சிறுநீரக வியாபாரம் செய்கிறது. சிறுநீரகம் வேண்டி இந்த நிறுவனத்தில் பதிவு செய்யவே, 2 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தணும்.

சிறுநீரகம் கிடைத்ததும், சீனாவிலிருந்து தகவல் வரும். நோயாளிகள் சீனா சென்று, அங்குள்ள மருத்துவமனையில் சிறுநீரக மாற்று ஆபரேஷன் செய்து கொள்ளலாம். சிறுநீரக சந்தையாகவே செயல்படுகிறது சீன நாடு!

இந்தியாவில் ஏழ்மை அதிகம்; பணத்திற்கு ஆசைப்பட்டு, சிறுநீரகத்தை விற்று விடுகின்றனர். எங்கள் நாடும், உலக சுகாதார நிறுவனமும் செய்வதறியாது கையைப் பிசைந்து கொண்டுள்ளது, என முடித்தார்.

— பெருமூச்சு விட்டபடி கை கழுவச் சென்றேன்!

பீச் மீட்டிங்; வழக்கம் போல கூட்டம்.

'என்னாச்சு, உங்க ஒயிட் அம்பாசிடர்?' என பெரியசாமி அண்ணாச்சியிடம் கேட்டார் லென்ஸ் மாமா.

'நல்ல ராசியான வண்டிவே அது... அதுல போனா, போன காரியம் நடக்கும். என்ன... வண்டி கொஞ்சம் பளசா போச்சு. 18 ஆயிரம் ரூபாய்க்கு வித்துப்புட்டேன்...' என்றார் அண்ணாச்சி.

'இதைப் போன்ற மூட நம்பிக்கையோ, மூடாத நம்பிக்கையோ தமிழர்களின் வாழ்வில் ஒன்று கலந்து விட்டது...' என ஆரம்பித்த மாமா, நீண்ட லெக்சர் ஒன்றை ஆரம்பித்தார்:

எண்ணெய் தேச்சு குளிச்சிட்டு கல்யாண வீட்டுக்குப் போகக் கூடாது.

சூரிய அஸ்தமனத்திற்கு பின், தலைமுடியையோ, நகத்தையோ வெட்டக் கூடாது; செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் சலவைக்கு அழுக்குத் துணிகளை போடக் கூடாது, ஊசி, உப்பு, மோர், தீப்பெட்டி ஆகியவற்றை இரவல் கொடுக்கக் கூடாது.

விடிந்ததும், முகம் பார்க்கும் கண்ணாடி, நிறை குடம், கொடி, விளக்கு, மஞ்சள், தாமரை, தங்கம், சூரியன், கடல், கோபுரம், மழை, மலை, கன்றுடன் கூடிய பசு, மனைவியின் முகம், பைத்தியக்காரன், கருங்குரங்கு, யானை மற்றும் மிருதங்கம் ஆகியவற்றை காண்பது நல்லது.

வீட்டுத் தரையை பெருக்கி சுத்தம் செய்யும் போது, குப்பைக் கூளத்தை சேகரித்து, வீட்டுக்கு வெளியே கொட்டி விட வேண்டுமென்று, தாய், தன் மகளுக்கு அறிவுறுத்துகிறாள். குப்பையை மூலையிலே குவித்து வைத்தால், அவள் ஒரு நல்ல நாளில் (திருவிழா, திருமணம் முதலிய நாட்களில்) வீட்டுக்கு விலக்காக இருக்க நேர்ந்து, மங்கல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் பேற்றை இழப்பாள் என்பதும் ஒரு நம்பிக்கை. வீட்டு மூலைகளில் தூசி சேர்வது கடனுக்கும், கவலைக்கும் அறிகுறி.

உடைந்த கண்ணாடியில் முகம் பார்க்கக் கூடாது. அமாவாசைக்கு நான்காம் நாளில் சந்திரனைப் பார்த்தால், நினைவாற்றல் பாதிக்கப்படும்.

நகத்தை கடிப்பது, தண்ணீரை வீணாக்குவது, கால் ஆட்டுவது, வீட்டுக்குள் ஆமை புகுவது ஆகியவை, வரப் போகும் வறுமைக்கு அறிகுறி. கால்களை ஒன்றுக்கொன்று குறுக்காக வைத்துக் கொள்வதும், கைகளை முழங்கால் அருகே கட்டிக் கொள்வதும் பிணத்தின் அடையாளங்கள்.

கோடித் துணிகளின் மூலையில், மஞ்சள் தடவிய பிறகே உடுத்த வேண்டும்.

இடது கையால் எதையும் கொடுப்பதும், வாங்குவதும், மற்றொரு சாராரை அவமதிப்பதாகும். வடக்கே தலையும், தெற்கே காலும் வைத்துப் படுக்கக் கூடாது. இதுவே மரணத்திற்குரிய கடவுளின் திக்குகள்.

வடகிழக்கு, தென்மேற்கு மூலையில் தான் கிணறு வெட்ட வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் பயணம் மேற்கொள்வதோ, வீட்டுச் செல்வத்தை பிறருக்குக் கொடுப்பதோ கூடாது. தானம் மட்டும் இந்தக் கிழமையில் கொடுக்கலாம்.

- இப்படி எவ்வளவோ நம்பிக்கைகளை கடைப்பிடித்து, வாழ்வை அர்த்தமுள்ளதாக்கிக் கொண்டனர் நம் மக்கள், என்று முடித்தார் மாமா.

'அந்தக் காலத்துலயே இருக்கீங்களே மாமா... அவனவன், 'சாட்டிலைட்' மூலமா உலகில், எங்கோ, எவன் வீட்டு பெட்ரூமையோ படம் எடுத்து விடறான்... நீங்க என்னன்னா, நம்மூர் தொல்பொருள் துறைக்காரங்க மகாபலிபுரத்துல கடல் கோவில் பக்கத்துல, 'இங்கே போட்டோ எடுக்கக் கூடாது'ன்னு பத்தாம் பசலித்தனமா போர்டு வச்சுருக்க மாதிரியில்ல இருக்கு உங்க பேச்சு...' என்றேன்.

'சும்மா நிறுத்து கண்ணு... அந்த, 'சாட்டிலைட்'டை அனுப்புறத்துக்கு முன், சூடம் காட்டி, தேங்காய் உடைச்சுத்தான் அனுப்பறான்...' என்றார் லென்ஸ் மாமா.

அத்தோடு விட்டாரா மாமா...

'இதப்பாரு... மூன்றாம் எண் குருவுக்கு உரியது. 3ம்தேதியில் பிறந்தவர்கள் குரு ஆதிக்கம் கொண்டவர்கள். கருணாநிதி 3ம் தேதி பிறந்தவர்; குருவிற்கு, உகந்த நிறம் மஞ்சள். கருணாநிதி மஞ்சள் துண்டு அணிகிறார். கோவிலுக்கு போனால், நவக்கிரகங்களை சுற்றி வரும்போது பாரு... குருவுக்கு மட்டும் மஞ்சள் துண்டை இடுப்பில் சுற்றி இருப்பர். சீர்திருத்தம், கீர்திருத்தம் பேசியவங்க எல்லாமே, முன்பு மூடநம்பிக்கைன்னு பேசி வந்ததை கைவிட்டுட்டாங்க...' என்றார் லென்ஸ் மாமா.

அதன் பிறகு நான் எதுவும் பேசவில்லை.






      Dinamalar
      Follow us