
மு.முருகன், வடபழனி: லஞ்சம் வாங்கி கொழிப்பவர்கள் கடைசியில் யாரிடம் கொண்டு போய் கொட்டுவர்?
எம்.பி.பி.எஸ்., எம்.எஸ்., எம்.டி., முடித்தவர்களிடம்!
எஸ்.பாண்டியன், திருவொற்றியூர்: குற்றம் செய்யும் அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மக்களே தண்டிக்க ஆரம்பித்து விட்டால்...
நாடு உருப்படுவதில் நம் மக்களுக்கு அவ்வளவு சீக்கிரம் ஆர்வம் உண்டாகுமென்று பகல் கனவு காண, நான் தயார் இல்லை.
ஆர்.சிவசங்கரி, ஸ்ரீவில்லிபுத்தூர்: பெண்களின் நடை, உடை, பாவனைகளைப் பார்த்துத் தான் ஆண்கள் காதலிக்கின்றனர். அழகைப் பார்த்து அல்ல என்கிறாள் என் தோழி... உண்மையா?
'அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்...' என, முதல் பார்வையிலேயே வரும் காதல் வேண்டுமானால் அழகினால் வரலாம். பழகப் பழக, பார்க்கப் பார்க்க வரும் காதலில், 'அழகு' அடிபட்டு போய்விடும் என்கிறார் லென்ஸ் மாமா!
ஜி.ராமானுஜன், கொடுங்கையூர்: அரசியல்வாதிகளின் மரியாதை நிமித்தமான சந்திப்பு என்றால் என்ன?
ஓட்டுப் போடும் மிஷின்களான இளிச்சவாயர் காதில் பூ சுற்றுகின்றனர், என்பது பொருள்!
எம்.முகம்மது அப்துல் நாசீர், விழுப்புரம்: பசியால் ஒருவன் மாண்டு போவது, அவன் குற்றமா, ஆளும் அரசின் குற்றமா?
பிச்சைக்காரன் வாழவில்லையா? திடகாத்திரமாக உருண்டு, திரண்டு தானே இருக்கின்றனர். தனி மனித முயற்சிகளை மேற்கொள்ளாமல், தொட்டதற்கெல்லாம், 'அரசு... அரசு...' என ஓலமிடுவது பைத்தியக்காரத்தனம்!
ஏ.ராமதாஸ், கோவளம்: பிச்சைக்காரர்களில் ஆண்களே அதிகம் இருக்கின்றனர். பெண்களுக்கு இந்த நிலை பெரும்பாலும் வருவதில்லையா?
வராமல் என்ன... ஆனால், பெண்கள் மானஸ்தர்கள், உழைக்கும் வர்க்கம் அவர்கள். அனாதரவாகும் போது, தம் தகுதிக்கேற்ற வேலையைத் தேடிக் கொள்கின்றனர். ஆண்கள் சோம்பேறிகள்; கை, கால், கண் பார்வை ஒழுங்காக இருக்கும் போது கூட, வேலை செய்து பிழைக்க வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு வருவதில்லை!
பொ. எடிசன், திருக்கோவிலூர்: உறவினர்களுக்கோ, நண்பர்களுக்கோ சில வயதானவர்கள் கடிதம் எழுதும் போது, மழையைப் பற்றி விசாரிக்கின்றனரே... ஏன்?
சுபீட்சத்தின், மகிழ்ச்சியின், வளமையின் அடையாளம் மழை. மழை பெய்தால் தான் பஞ்சம், பசி, பட்டினி இருக்காது. ஊர் மக்களின் வளந் தெரிந்து கொள்ள சம்பிரதாயமாக கேட்கப்படும், எழுதப்படும் கேள்வி... 'ஊருல மழை எப்படி?'
என்.நந்தகுமார், மேட்டுப்பாளையம்: அரசியலில் ஊழல் பெருக காரணம் என்ன?
கவுரவமானவர்கள் விலகி, கையெழுத்து மட்டுமே போடத் தெரிந்தவர்கள் அரசியலில் நுழைந்து விட்டது தான் காரணம்!

