
பத்திரிகை பொறுப்பை ஏற்றுக் கொண்ட காலத்தில், எனக்கென்று நிருபர்கள் கிடையாது; நானே பேட்டி எடுப்பேன். இந்த அனுபவம் தான், பிற்காலத்தில், 'அலசல்' என்கிற தொலைக்காட்சி தொடரில், தூர்தர்ஷனுக்காக, தமிழக அரசியல் தலைவர்களை, பேட்டி காண பெரிதும் உதவிற்று.
அண்மையில், தொலைக்காட்சி பேட்டிகளின் போது, இரு பெரிய அரசியல் தலைவர்கள் வெளிநடப்பு செய்ததை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
'அலசல்' பகுதியில், நான் கேட்ட சில கேள்விகளும், கிட்டத்தட்ட வெளிநடப்பு செய்கிற அளவிற்கு, அனலானவை தாம். ஆனால், கேள்வி கேட்குமுன் ஒத்தடம் கொடுப்பது போல், 'மசாஜ்' செய்வது போல், வார்த்தைகளால், அவர்கள் மனதை தயார் செய்வேன்.
'ஆகா... வைக்கப் போறாருடா ஆப்பு...' என்பது, அவர்களுக்கு மெல்ல புரிந்து விடும். இதன்பின், 'இது நான் கேட்கும் கேள்வி அல்ல; மக்கள் மனதில் தேங்கி நிற்கும் கேள்வி. இதை அகற்ற, உங்களால் தான் முடியும்...' என்று அணுகுவது, என் பாணி. இது நன்கு வேலை செய்தது; எவரும் வெளிநடப்பு செய்தது இல்லை.
என்ன தான் இப்படி மந்திர தந்திரம் செய்தாலும், இத்தகைய கேள்விகளை ஆரம்பத்திலேயே கேட்டு வைப்பது சரிப்பட்டு வராது. இவர்களை உற்சாகப்படுத்தும், குஷிப்படுத்தும் கேள்விகளை, முதல் வரிசைக்கு தள்ளுவேன். 'மூட் அவுட்' கேள்விகளை ஆரம்பத்தில் கேட்டு வைத்தால், பேட்டி சோபிக்காமல் போய் விடும்.
இத்தொழில் ரகசியத்தை, நம் அன்றாட வாழ்விலும் பின்பற்றப்பட வேண்டி உள்ளது.
பல அடுக்கு சந்தைப்படுத்துதல் முறையிலும் சரி, சில பொருட்காட்சி அரங்குகளிலும் சரி, ஒரு பொருளின் விலையை கேட்பீர்களேயானால், அதை உடனே சொல்ல மாட்டார்கள். வீண் வம்பளப்பெல்லாம் செய்து, பின்தான் விஷயத்திற்கு வருவர்.
அப்பொருளை பற்றி, ஆகா ஓகோ என்றதும், நமக்குள், ஒரு ஆர்வம் உண்டாகும். 'இதை எப்படியும் வாங்கி விட வேண்டும்; விலையாவது, வெங்காயமாவது...' என்று தோன்றுமளவிற்கு, நம்மை எங்கோ கொண்டு போய் நிறுத்தி விடும் உத்தியை, இவர்கள் கையாளுகின்றனர் அல்லவா... நாமும், இதை நடைமுறை வாழ்வில் பின்பற்ற வேண்டும்.
ஒருவரை, ஒரு தொழில் ஒப்பந்தத்தில், திருமண பேச்சில், ஒரு உடன்பாட்டில் சம்மதிக்க வைக்க எண்ணும் போது, அதில் உள்ள சிறப்பான அம்சங்களையே, முதலில் எடுத்துச் சொல்லி, உச்சபட்ச உணர்விற்கும், மகிழ்ச்சிக்கும், அவர்களை, உயரே கொண்டு செல்ல வேண்டும்.
முடிக்கிற தறுவாயில் தான், அதில் உள்ள இடைஞ்சல்களை, குறைபாடுகளை, எதிர்மறை விஷயங்களை, மெல்ல எடுத்து வெளியே விட வேண்டும்.
'பொண்ணு சூப்பர்; உன் நண்பர்களின் மனைவிகளை எல்லாம் எனக்கு தெரியும். அவங்க மத்தியில, இவ தனியா தெரிவா. அவ்வளவு அழகு; அப்படி ஒரு நிறம். பிரமாதமான படிப்பு, நல்ல சம்பளம். ரொம்ப சாந்தமான குணம். உங்க குடும்பத்துக்கு ஏத்த பொண்ணு. மார்டனாவும் இருப்பா. ஒரே ஒரு சின்ன குறை... கால் மட்டும் கொஞ்சம்...' என்று, எடுப்பாக பேசி விடுகிற திருமண ஏற்பாட்டாளரின் பாணி, பல நேரங்களில் நன்கு எடுபட்டு விடுகிறது.
எடுத்த எடுப்பிலேயே, எதிர்மறையாகப் பேசி, அதன்பின், எடுபடும்படியான விஷயங்களை, எவ்வளவு அடுக்கினாலும், அது வேலைக்கு ஆகாது. மற்றவர்களை அசத்துவதில், நம் அணுகுமுறையில் மாற்றம் தேவை!
வார்த்தை சாதுர்யம், நமக்கு வாய்க்கக்கூடிய மிகப் பெரும் பலம். இதை சாதாரணமாக எண்ணி விட வேண்டாம். 'பேசியே மயக்கிட்டாம்பா...' என்கிற பாராட்டை, பிறரிடமிருந்து பெற, இதில் சாதுர்யசாலிகளை பின்பற்ற வேண்டியது தான்!
லேனா தமிழ்வாணன்

