
படிப்பிற்கு ஏற்ற வேலை தான் பார்ப்பேன் என்று இல்லாமல், கல்வியினால் பெற்ற அறிவைக் கொண்டு எந்த வேலையும் செய்து சாதிக்கலாம் என்று சாதித்து காட்டியுள்ளவர், லாவண்யா ஹரிஹரன்.
சென்னையில் இளங்கலை பட்டப்படிப்பை படித்த லாவண்யா, லண்டனில் முதுகலை படிப்பை முடித்தார். பின், கல்யாணம், குழந்தைகள் என்று காலம் கிடுகிடுவென ஓடி விட்டது.
இந்நிலையில், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் ஏதாவது புதுமையாக செய்ய வேண்டும்; அதே நேரம் நாலு பேருக்கு உதவும்படியாகவும் இருக்க வேண்டும் என்று எண்ணினார், லாவண்யா.
பிறந்த வீட்டினரும், புகுந்த வீட்டினரும் தங்கள் வியாபாரத்தை பார்த்துக் கொள்ள கூறிய போது, 'அது உங்களது அடையாளம்...' என்று நிராகரித்து, தனக்கான அடையாளமாக ஆரம்பிக்கப்பட்டது தான், 'பாம்பரஸி' எனப்படும், வீடு தேடிவரும் சலூன்!
முழுக்க முழுக்க பெண்களால், பெண்களுக்காக இயக்கப்படுவது தான், சென்னையில் உள்ள இவரது, 'பாம்பரஸி விசிட்டிங் சலூன்!'
இவரிடம், பத்துக்கும் மேற்பட்ட பயிற்சிபெற்ற பியூட்டிஷியன்கள் உள்ளனர். சென்னையில் இருப்பவர்கள் ஒரு போன் செய்தால் போதும், தங்கள் உபகரணங்களுடன், வீடு தேடி வந்து விடுவர்.
தலை முடி, முகம், நகம், உடம்பு என்று தனித் தனியாகவும், ஒரு பேக்கேஜாகவும் பியூட்டி பார்லரில் வழங்கப்படும் சேவையை வழங்குகின்றனர். அழைப்பவர்கள் நாற்காலியில் வசதியாக உட்கார்ந்து கொண்டால் போதும், இவர்கள் தாங்கள் வந்த வேலையை முடித்து, வீட்டில் ஒரு ரோமம் கூட சிந்தி விடாமல் சுத்தம் செய்துவிட்டு செல்வர்.
இதுகுறித்து, லாவண்யா கூறும் போது, 'சமீபத்தில் தான் இந்த வீடு தேடிவரும் சலூன் திட்டத்தை ஆரம்பித்தோம்; நல்ல வரவேற்பு இருக்கிறது. ஒரு முறை அழைத்தவர்கள் திரும்பத் திரும்ப அழைக்கின்றனர். அதிலும், வயதான பெண்களுக்கு எங்களது விசிட்டிங் சலூன் வரப்பிரசாதம்.
'எங்கள் சலூனில், சுகாதாரம் முக்கியம் என்பதால், உபயோகிக்கப்படும் பொருட்கள் அனைத்தும் முதல் தரமானவை.
'ஏதாவது விசேஷத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால், பெண்கள் முதலில் போவது பியூட்டி பார்லருக்கு தான். ஆனால், பெண்கள் பியூட்டி பார்லருக்கு போவதில் சில பிரச்னைகளும் உள்ளன. பியூட்டி பார்லர் ரொம்ப தூரத்தில் இருப்பது, வீட்டைவிட்டு போக முடியாத சூழ்நிலை, காத்துக் கிடப்பது என பல பிரச்னைகள். இதையெல்லாம், எங்கள் வீடு தேடிவரும் சலூன் நிவர்த்தி செய்கிறது.
'முன்பெல்லாம் திருமண வீட்டில், மணமக்கள் மட்டும் தான் தங்களை அழகுபடுத்திக் கொள்வர். ஆனால், இப்போது மணமக்களை வாழ்த்த வருபவர்களே பியூட்டி பார்லருக்கு போய் தங்களை அழகுபடுத்திக் கொள்கின்றனர்.
'எந்த தொழில் செய்தாலும், அதில் நேர்த்தியும், ஈடுபாடும் இருந்தால் நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்பதற்கு என் விசிட்டிங் சலூனே ஒரு உதாரணம்.
'அடுத்து, பல்வேறு ஊர்களிலும் விசிட்டிங் சலூனை திறக்க எண்ணியுள்ளதால், நிறைய பேர் வேலைக்கு தேவைப்படுகின்றனர்...' என்றார்.
இவர்களது சேவை தேவைப்படுவோரும், அவர்களது சேவைக்கு தேவைப்படுவோரும் தொடர்பு கொள்ளவேண்டிய எண்: 76010 99000
முழுவிவரம் அறிந்து கொள்ள www.pamperazi.com இணையதளத்திற்கு செல்லலாம்.
எல்.எம். ராஜ்

