
'மலரும் நினைவுகள்' நூலில், மு.கருணாநிதி எழுதியது: கடந்த, 1967ல் அண்ணாதுரை முதல்வராக இருந்தபோது, நான் பொதுப்பணித் துறை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தேன். அப்போது, சட்டசபையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த டி.மார்ட்டின், 'தற்சமயம் பேருந்துகள் சாலைகளில் ஓடாமல், பிளாட்பாரங்களில் ஓடி, விபத்துகளை ஏற்படுத்துகின்றன. எனவே, ஸ்கூட்டர்களில் போகிறவர்களுக்கு, 'ஹெல்மெட்' போட்டுக் கொள்ளச் சொல்வது போல, பஸ்களில் பயணம் செய்வோருக்கும் இலவச, 'ஹெல்மெட்' வழங்கப்படுமா?' என்று கேட்டார்.
உடனே நான் எழுந்து, 'இந்தக் கிண்டலான கேள்விக்கும் பதில் கூறக் கடமைப்பட்டுள்ளேன். பிரபல நரம்பு மருத்துவ நிபுணர், முன்பிருந்த அரசுக்கு, 'ஹெல்மெட்' யோசனையை தெரிவித்து, அதை முன்னாள் முதல்வர் பக்தவத்சலம் ஏற்றுக் கொண்டு, 'நிறைவேற்றலாம்...' என்று கோப்பில் குறிப்பு எழுதியுள்ளார். அதன்படி, 'ஹெல்மெட்' போடுவது ஸ்கூட்டர்களில் செல்வோருக்கு அவசியமா என்பதைப் பரிசீலிக்க, நாங்கள் முயற்சி எடுத்துள்ளோமே தவிர, எல்லாருமே, 'ஹெல்மெட்' போட வேண்டும் என்பதல்ல!
'பஸ்களில் பயணம் செய்வோருக்கும் 'ஹெல்மெட்' வேண்டும் என்றால், ரயிலில் போகிறவர்களும், 'ஹெல்மெட்' போட வேண்டியிருக்கும். ஏனென்றால், மத்திய காங்கிரஸ் அரசின் ரயில்கள் கூட, பல இடங்களில் கவிழ்கின்றன...' என்றேன்.
நாட்டு மக்கள் நல்வாழ்வுக்குரிய நல்ல நிர்மாணத் திட்டங்கள் என காந்திஜி கூறியது: வகுப்பு ஒற்றுமை, தீண்டாமை விலக்கு, மதுவிலக்கு, கதர், கிராமத் கைத்தொழில்கள், கிராமச் சுகாதாரம், ஆதாரக்கல்வி, முதியோர் கல்வி, பெண்கள் முன்னேற்றம், உடல்நலம் மற்றும் ஆரோக்கியக்கல்வி, மாநில மொழிகள், தேசிய மொழி, பொருளாதார சமத்துவம், விவசாயிகள், தொழிலாளர்கள், ஆதிவாசிகள், குஷ்டரோகிகள் மற்றும் மாணவர்கள் நலன்!
தமிழறிஞர், அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பேராசிரியர், அ.அறிவொளி எழுதிய, 'ஜவஹர்லால் நேரு' நூலிலிருந்து: கடந்த, டிச., 1962ல் நேருவின் உடல் நலம் குன்றியது. லண்டன் சென்று, முழு உடல் பரிசோதனை செய்து, மருத்துவம் பெற்று, குணமடைந்தார். இது, வெளியில் தெரியாமல் பாதுகாக்கப்பட்டது. பிற்பகலில் ஓய்வு கொள்ளும் பழக்கமற்ற அவர், இப்போது அதைக் கைக்கொண்டார். கட்டுப்பாடான உணவு மேற்கொண்டார். தினமும், 17 மணி நேரம் வேலை செய்யும் பழக்கம் கொண்டவர், அதை, 12 மணி நேரமாக குறைத்தார். ஒருமுறை, அவரின் தங்கை விஜயலட்சுமி, அவரை ஓய்வு எடுக்குமாறு சொல்ல, 'ஓய்வு எடுத்து, இழந்த சக்தியை எதற்காக மீட்டுக் கொள்ள வேண்டுமென்கிறாய்...' என்று சலிப்போடு கேட்டார் நேரு.
மாடிகளில் ஏற, 'லிப்ட'டைப் பயன்படுத்தாமல், ஓடியபடி படிகளில் ஏறுவது, அவரது வழக்கம். ஆனால், இந்த, 18 மாதங்களில், அவர் நடக்கவே தயங்கினார். மனிதர்களின் கூட்டுறவே, சிறையாகத் தோன்றியது. பிறரிடம் பேசுவதைக் கூட விரும்பவில்லை. தனிமையில், வேதனையில் புழுங்குவதையே, அமைதி என எண்ணினார்.
சிறு குழந்தையைப் போலத் திரிந்த இந்த முதிய இளைஞருக்கு, இந்த முடக்கம் ஒரு புதிய, கொடிய வரவு. புன்னகையின் மன்னன், புழுங்கிக் குமைந்த பொழுதுகள் அவை!
தேர்தலில், சுயேச்சை வேட்பாளர் ஒருவர் போட்டியிட்டார். அவருக்கு மூன்று ஓட்டுகள் விழுந்திருந்தன. ஒன்று, அவரது ஓட்டு; மற்றொன்று, அவரது மனைவியின் ஓட்டு. மூன்றாவது ஓட்டு யார் போட்டது என்று தெரியவில்லை. இதை அறிந்த அவர் மனைவி, 'மூன்றாவது ஓட்டைப் போட்டிருந்த அந்த சக்களத்தி யாரு?' என்று கேட்டு, கணவருடன் சண்டையிட்டு கோபித்து, தாய் வீட்டுக்குப் போய் விட்டாள்.
நடுத்தெரு நாராயணன்

