
இந்தோனேஷியாவில் ரஜினியின், கபாலி!
ரஜினியின் படங்கள் சமீபகாலமாக லண்டன், இங்கிலாந்து மற்றும் கனடா போன்ற நாடுகளில் அதிகப்படியான தியேட்டர்களில் வெளியாகி வருகிறது. இந்நிலையில், தற்போது அவர் நடித்துள்ள, கபாலி படம் இந்தோனேஷியாவில், 300 தியேட்டர்களில் வெளியாகிறது. இதற்கு முன், இந்தி படங்களே அதிகமாக வெளியாகி வந்த நிலையில், முதன் முறையாக, ஒரு தமிழ் படம், 'என்ட்ரி' கொடுத்திருப்பதோடு, அதிக தியேட்டர்களிலும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.
— சி.பொ.,
தெலுங்கு சூப்பர் ஸ்டாரை இயக்கும் அட்லி!
விஜய்யின், தெறி படத்தை இயக்கிய அட்லி, அடுத்து, தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபுவை வைத்து, ஒரு படம் இயக்குகிறார். தற்போது, மகேஷ்பாபுவை வைத்து ஏ.ஆர்.முருகதாஸ் படம் இயக்கி வரும் நிலையில், அப்படம் முடிந்ததும், தன் படத்தை துவங்கயிருக்கும் அட்லி, அப்படத்தில் விஜய்யை, கெஸ்ட் ரோலில் நடிக்க வைப்பதற்கான பேச்சு வார்த்தையில் ஈடுபட்டுள்ளார்.
— சி.பொ.,
ஜனனி அய்யரை கவர்ந்த, மலர் டீச்சர்!
பிரேமம் மலையாள படத்தில், மலர் டீச்சராக நடித்தவர் சாய் பல்லவி. அதில், அவரது யதார்த்தமான நடிப்பு, பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்ததால், அம்மாதிரி தனக்கும், ஒரு வேடம் கிடைக்காதா என்ற ஏக்கத்தில் இருந்து வந்தார் ஜனனி அய்யர். அந்த ஏக்கத்தை, இப்போது, உல்டா என்ற படம் தீர்த்து வைத்துள்ளது. இப்படத்தில், இவர் பாரம்பரியம் மிக்க தமிழ் பெண்ணாக, மலர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதனால், மலர் டீச்சர் ரோலில், சாய் பல்லவி நடித்தது போன்று, யதார்த்தம் மீறாத வகையில், நடித்து வருவதாக கூறுகிறார் ஜனனி அய்யர். தன்னைத் தானே மெச்சிக் கொள்ளுமாம் தவிட்டுக் கொழுக்கட்டை!
— எலீசா
மீண்டும் கதாநாயகியான அமலாபால்!
இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்து கொண்ட பின்பும், நடிப்பைத் தொடர்ந்து வரும் அமலாபால், தமிழில் பசங்க - 2 படத்தை அடுத்து, அம்மா கணக்கு படத்தில், ரேவதியின் மகளாக நடித்துள்ளார். இதையடுத்து, மலையாளத்தில் மம்மூட்டிக்கு ஜோடியாக தோப்பில் ஜோப்பன் என்ற படத்திலும், கன்னடத்தில் சுதீப்புடன், ஹேப்புலி என்ற படத்திலும் நடிக்கிறார். அதிர்ஷ்டம் ஆறாய் பெருகுகிறது!
— எலீசா
அஜித் படத்தில் சந்தானம்!
கதாநாயகனான பின், எந்த படத்திலும், காமெடியனாக நடிக்கவில்லை சந்தானம். ஆனால், அஜித் நடிக்கும், 57வது படத்தில் காமெடியனாக நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்கு முன், அஜித்தின் கிரீடம், பில்லா மற்றும் வீரம் போன்ற படங்களில், காமெடியனாக கலக்கிய சந்தானம் சமீபத்தில், அஜித்தை சந்தித்தபோது, இதற்கான பேச்சுவார்த்தை நடந்தது. இனிமேல் காமெடியனாக நடிப்பதில்லை என்ற கொள்கையை பின்பற்றி வந்தபோதும், அஜித் படம் என்பதால், தன் கொள்கையை சற்று தளர்த்தியுள்ளார்.
— சி.பொ.,
இம்சை அரசனாக மீண்டும் வடிவேலு!
விஷாலின், கத்திச்சண்டை படத்தில், மீண்டும் காமெடியனாக நடிக்கும் வடிவேலு, ஏற்கனவே தான் நடித்த இம்சை அரசன் 23ம் புலிகேசி படத்தின், இரண்டாம் பாகத்திலும் நடிக்கிறார். முதல் பாகத்தை இயக்கிய சிம்புதேவனே இரண்டாம் பாகத்தையும் இயக்குகிறார். இப்படத்தையும், இயக்குனர் ஷங்கரே தயாரிக்கிறார். மேலும், இப்படத்தில் நடிக்க, வடிவேலுவுக்கு, ஐந்து கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது.
— சி.பொ.,
கறுப்பு பூனை!
அகர்வால் நடிகையை, பாலிவுட் சினிமா கைவிட்டு விட்டது. அதனால், கோலிவுட்டை மலை போல் நம்பி, சில அபிமானிகள் படங்களில், ஒப்பந்தமாவது சம்பந்தமான பேச்சுவார்த்தையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார். அத்துடன், முன்பெல்லாம், வில்லங்கமான நடிகர்களின் படங்களில் இருந்து விலகி நின்ற நடிகை, இப்போது, 'யாராக இருந்தாலும், சமாளித்துக் கொள்வேன்...' என்று விவகாரமான படங்களில் ஒப்பந்தமாகி வருகிறார்.
லண்டன் நடிகை, படப்பிடிப்பு தளங்களுக்கும், 'டூ-பீஸ்' சகிதம் தான், 'என்ட்ரி' கொடுக்கிறார். அத்துடன், தன் லண்டன் ஆண் தோழர்களையும், கூட்டி வரும் அம்மணி, கேரவனுக்குள்ளேயே குடி, கும்மாளம் என்று ஆரம்பித்து விடுகிறார். இதனால், அம்மணியை வைத்து தற்போது, படப்பிடிப்பு நடத்தி வரும் பிரமாண்டம், அவரது இச்செயலால், அடிக்கடி டென்ஷன் ஆகிறார்.
சினி துளிகள்
* 2.0 படத்தில், ரோபோ வேடத்தில் நடிப்பதாக கூறப்படுவதை மறுக்கிறார் எமிஜாக்சன்.
* விக்ரமின், இருமுகன் படத்திலிருந்து நீக்கப்பட்ட போதும், அவர் நடிக்கும், கருடா படத்தை, கைப்பற்றி விட்டார் காஜல் அகர்வால்.
* தனி ஒருவன் படத்தில், வில்லனாக நடித்த அரவிந்த்சாமி, மீண்டும் ஜெயம் ரவியுடன் நடிக்கும், போகன் படத்தில் முனிவர் வேடத்தில் நடிக்கிறார்.
அவ்ளோதான்!

