
மிதிலாபுரிக்கு அருகில் சந்திராபுரம் என்ற ஊரில், வாசுதேவானந்தர் என்ற ஸ்ரீ வித்யா உபாசகர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் வேத விதிப்படி, நித்ய அனுஷ்டானங்களை கடைப்பிடித்து வந்தார். இவரது அனுஷ்டானங்களையும், ஞானக்கல்வியையும் கண்டு, அவ்வூர் மன்னன் உமா காந்தன், இவரை தன் ராஜ குருவாக நியமித்தார்.
வாசுதேவானந்தரின் பிள்ளையான சம்புநாதன், தந்தையைப் போலவே, சகல கலைகளிலும், திறமைசாலியாக விளங்கினார். வாசுதேவானந்தரின் காலத்திற்கு பின், சம்புநாதன் ராஜகுருவாக விளங்கினார்.
இவருக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது; அவனுக்கு சர்வானந்தன் என பெயரிட்டார். அவன் ஆஜானுபாகுவாக, லட்சணமாக இருந்தானே தவிர, கடுகளவு கூட கல்வி ஏறவில்லை.
இதனால், மன வருத்தம் அடைந்த சம்புநாதன், 'தாயே... உன்னை பூஜிக்கும் ஞான பரம்பரையில் வந்த எனக்கு, இப்படிப்பட்ட பிள்ளையைக் கொடுத்தாயே... இதுதான் உன் திருவுள்ளமா...' என, அம்பிகையிடம் முறையிட்டு அழுதார்.
இந்நிலையில், ஒருநாள், அரண்மனையில் பண்டிதர்களும், ஜோதிடர்களும் கூடி, 'சதுர்த்தசி எத்தனை நாழிகைக்கு மேல் வந்தால், மறுநாள் அமாவாசையாகும்...' என்ற விவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த நேரம், சபை அரங்கில் நுழைந்த, சர்வானந்தன், விவாதத்தின் பொருளை அறியாமல், 'இன்று சதுர்த்தசியா, அமாவாசையா என்று ஏன் வாதம் செய்கிறீர்கள்... இன்று பவுர்ணமி அல்லவா...' என்றான்.
அதைக் கேட்டு அனைவரும் சிரித்தனர். சம்புநாதரோ, பிள்ளையின் அறிவின்மையை எண்ணி தலைகுனிந்தார்.
அரசர், 'பாலகா... எழுத்தறிவே இல்லாத நீ, இங்கு வந்ததே தவறு; சந்தர்ப்பம் தெரியாமல் பேசியது, அதைவிட பெரிய தவறு. இனி, கற்றோர் குழுமியுள்ள இடத்தில் பேசத் துணியாதே...' என்று அறிவுரை கூறினார்.
இதனால், 'கல்வி அறிவு பெற்ற பின்னரே நாடு திரும்புவேன்...' எனக் கூறி, வெளியே ஓடினான் சர்வானந்தன்.
பின்னாலேயே, அவன் தந்தையுடன் கல்வி கற்ற, தேவி உபாசகரான பூர்ணானந்தரும் ஓடினார். சிறிது தொலைவில், மதங்காசிரமத்தை நெருங்கிய சர்வானந்தன், அங்கிருந்த பனை மரத்தைப் பார்த்தவுடன், 'கல்வி கற்க, முதலில் ஏடுகளை தயாரிக்கப் போகிறேன்...' என்றபடியே, பனை மரத்தில் ஏறினான். அங்கு, பாம்பு ஒன்று படமெடுத்தபடி இருந்தது. அதைப் பார்த்த சர்வானந்தன், பாம்பைப் பிடித்து பூமியில் வீசினான்.
விழுந்த பாம்பு, ஒரு துறவியாக மாறி, 'அடேய்... குழந்தாய் இறங்கி வா...' என்றார்.
முரட்டுத் தனமும், அசட்டு குணமும் கொண்ட சர்வானந்தன், 'யார் நீங்கள்... நான் கல்வி கற்பதற்காக ஓலை எடுக்கிறேன்; ஏன் தடுக்கிறீர்கள்...' என கத்தினான்.
'உனக்கு வித்யை உபதேசிப்பதற்காகவே வந்திருக்கிறேன்...' என்றார் துறவி. சர்வானந்தன் குதிக்க, அவனை அங்கிருந்த தடாகத்தில் முழுக செய்து, அவன் வலது காதில், மந்திரோபதேசம் செய்த பின், மறைந்தார் துறவி. அப்போது அங்கு வந்த பூர்ணானந்தர், விவரம் அறிந்து, 'குழந்தாய்... சர்ப்பமாக வந்தது குண்டலினி சக்தி தேவியே... அவள் கூறிய மந்திரத்தை, சர்வாசனத்தில் இருந்து ஜபம் செய்தால், ஒரு முகூர்த்த காலத்திற்குள் மந்திர சித்தி ஏற்படும். நான் குண்டலினி சக்தியை மேலேற்றி, பிரேதம் போல் இருக்கிறேன்; என் மேல் அமர்ந்து ஜபம் செய்...' என்றார்.
சர்வானந்தன் அப்படியே செய்ய, அம்பிகை அவருக்கு காட்சி தந்து, கல்விக் கேள்விகளில் வல்லவனாகவும், எல்லாம் அறிந்தவனாகவும் மாற்றினாள்.
ராஜ சபைக்கு வந்த சர்வானந்தன், தன் வலது கையைத் தூக்கி, அமாவாசையன்று முழுநிலவை வரவழைத்து காட்டினான்.
தன்னை துதிக்கும் பக்தர்களுக்கு, அம்பாள் தன் கருணையை பொழிய, மறப்பதே இல்லை!
பி.என்.பரசுராமன்
திருவாசகம்!
மருவினிய மலர்ப் பாதம் மனத்தில் வளர்ந்து உள் உருகத்
தெருவு தோறும் மிக அலறிச் சிவ பெருமான் என்று ஏத்திப்
பருகிய நின் பரங் கருணைத் தடங் கடலில் படிவாமாறு
அருள் எனக்கு இங்கு இடை மருதே இடங் கொண்ட அம்மானே!
விளக்கம்: திருவிடைமருதூரை இடமாகக் கொண்டு, அருள்புரியும் என் அப்பனே... இனியவனான உன் திருவடி மலர்கள் என் உள்ளத்தில் வளர்ந்ததால், என் உள்ளம் உருகி, வீதி தோறும் ஓலமிட்டவனாக சுற்றி, 'சிவபெருமானே...' என்று உன்னைப் போற்றினேன். உன் உயர்ந்த அருளை அருந்தி, அருட்பெருங்கடல் முழுதுமாகப் படியும் வண்ணமாக, எனக்கும் அருள் புரிவாயாக!

