
ஒருவர் வாழ்ந்த வாழ்க்கை வரலாறாகவோ, காவியமாகவோ ஆவதில்லை. ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட ஆயிரத்தில் ஒருவருக்கு தான், வாழ்க்கை, வரலாறு சொல்லக்கூடிய காவியமாக இருக்கிறது. அந்த ஆயிரத்தில் ஒருவர் தான் நடிகையர் திலகம் சாவித்திரி. அவரது வாழ்க்கை வரலாற்றை இங்கு தொடராக தொகுத்து வழங்குகிறார் கட்டுரையாசிரியர்.
தன்னம்பிக்கை, சுயமரியாதை, பிறரை மதிக்கும் பண்பு, நம்பியவர்களுக்காக எதையும் செய்யும் துணிவு, நட்பிற்காக தன்னையே அழிக்கும் தைரியம் என, சாவித்திரியின் பிம்பம், மனித நேயத்தின் கூட்டுக் கலவையாக இருந்தது.
ஜெமினியை மணக்க முடிவு எடுத்த போது, அதனால் ஏற்படும் இழப்பு அவருக்கு தெரியும். ஆனாலும், தான் எடுத்த முடிவை, எச்சூழலிலும் அவர் மாற்றியதே இல்லை.
வீட்டை விட்டு வெளியேறிய சாவித்திரி, மழையில் நனைந்தபடி, நேராக ஜெமினியின் வீட்டிற்கு வந்தார்.
நடு இரவில், திடீர் என்று வீட்டின் அழைப்பு மணி ஒலிக்கக் கேட்டு, தூங்கிக் கொண்டிருந்த பாப்ஜி, அவசரமாக எழுந்து, கதவைத் திறந்து பார்த்தார்.
அங்கே, நீர் சொட்ட சொட்ட நின்றிருந்தார், சாவித்திரி. அவரைப் பார்த்தவுடனேயே, ஏதோ பிரச்னை என்று புரிந்து, உள்ளே அழைத்து, தலையை துவட்டக் கூறினார்.
பேச்சுக்குரல் கேட்டு எழுந்து வந்த ஜெமினி, சாவித்திரியின் நிலையையும், பாப்ஜியின் கருணையும் கண்டு உருகிப் போனார்.
பாப்ஜிக்கு சாவித்திரியின் காதல் விவகாரம் தெரியும் என்றாலும், தெரியாதது போலவே காட்டிக் கொண்டார். அழுகையோடு வந்து நிற்கும் பெண்ணுக்கு, ஆறுதல் தருவது தான் முதல் கடமை என எண்ணினார் பாப்ஜி.
சாவித்திரி நடித்த, மிஸ்ஸியம்மா படம் வெளியாகி, 11 மாதங்களுக்குப் பின்தான், ஜெமினியுடன் அவருக்கு திருமணம் நடந்ததாக நம்பத்தகுந்த செய்திகள் கூறுகின்றன. திருமணத்தின் போது, சாவித்திரியின் வயது, 20; ஜெமினியின் வயது, 37!
கடந்த, 1955ம் ஆண்டு, டிசம்பர் மாதக் குளிரில் மைசூர் தன்னைக் குளிர்வித்த நேரம் அது! சாலை ஓரங்களில், ஓங்கி வளர்ந்திருந்த மரங்களில், வானத்து விண்மீன்களைப் போல கண் சிமிட்டிய பூக்கள், அக்காரின் வருகைக்காக காத்திருந்தன.
பூக்களின் வாழ்த்தைப் பெற்று, சாமுண்டீசுவரி கோவிலுக்குள் நுழைந்தனர், ஜெமினியும், சாவித்திரியும்!
தெய்வீகக் காதல் உறவை உரிமையாக்க, கோவிலில் மாலை மாற்றி மணம் முடிக்க, இருவரும் வந்திருந்தனர்.
சாமுண்டீசுவரி ஆலயத்தின் சன்னிதிக்கு வந்த இருவரும், தாங்கள் திருமணம் செய்ய வந்திருப்பதாக, அர்ச்சகரிடம் தெரிவித்தனர். விசேஷ அர்ச்சனையும், தீப ஆராதனையும் செய்தார் அர்ச்சகர்.
தங்கள் கரத்தில் இருந்த மாலைகளை, இருவரும் அர்ச்சகரிடம் கொடுத்தனர். அவர் அதை, அம்பாளின் பாதத்தில் வைத்து, சாவித்திரியிடம், ஒரு மாலையை கொடுத்து, ஜெமினியின் கழுத்திலும், ஜெமினியிடம் ஒரு மாலையைக் கொடுத்து, சாவித்திரியின் கழுத்திலும் போடக் கூறினார்.
அவர் கூறியபடி இருவரும் மாலை மாற்ற, தமிழ்நாட்டு முறைப்படி எளிமையாக திருமணம் நடந்தேறியது.
ஒரு ஆணும், பெண்ணும் மாலை மாற்றிக் கொள்வது, சுக துக்கங்களை ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதன் அடையாளமே!
ஜெமினியின் கைத்தலம் பற்றி, ஏழு அடிகள் எடுத்து வைத்தார் சாவித்திரி. முதல் அடி, அன்னம் பெருகவும்; இரண்டாவது அடி, உண்ட அன்னம் செரிக்கவும்; மூன்றாவது அடி, கணவனுக்காக விரதம் இருக்கவும்; நான்காவது அடி, குடும்பம் மகிழ்வோடு வாழவும்; ஐந்தாவது அடி, வீட்டில் மாடுகள் பெருகவும்; ஆறாவது அடி, குடும்பத்தில் செல்வம் பெருகவும்; ஏழாவது அடி, சகல பாக்கியங்களும் கிடைக்க வேண்டும் என, மனதிற்குள் வேண்டியபடி, சாமுண்டீசுவரி கோவிலில் ஏழு அடிகளையும் எடுத்து வைத்தார்.
சாவித்திரியை அணைத்தவாறு, கோவிலை விட்டு வெளியே வந்தார் ஜெமினி.
சாவித்திரியை திருமணம் செய்த விஷயம் ஜெமினியின் மனைவி பாப்ஜிக்கு முதலில் தெரியவில்லை; ஆனால், கசிந்து வந்த செய்திகள் மூலம் தெரிந்து கொண்டார். திருமணத்திற்குப் பின், ஜெமினி, தன் மனைவி சாவித்திரியுடன் கலந்து கொண்ட முதல் படப்பிடிப்பு, பி.புல்லையா இயக்கத்தில் உருவாகிக் கொண்டிருந்த, பெண்ணின் பெருமை திரைப்படம் தான்.
சாவித்திரியின் ரகசிய திருமணத்தை தெரிந்து சிவாஜியும், பி.புல்லையாவும், படப்பிடிப்பு தளத்தில் இருவரையும் வாழ்த்தியதாக செய்தி உண்டு.
கடந்த, 1956ல், 1,500 ரூபாய் முன் பணம் கொடுத்து, 400 ரூபாய் வாடகையில், ஒரு வீட்டை அபிராமபுரத்தில் பிடித்தார் ஜெமினி.
அந்த வீட்டில், தங்கள் வாழ்க்கையை துவங்கினர். இங்கு குடியேறிய சில நாட்களில், பொங்கல் திருநாள் வந்தது. அதுதான், சாவித்திரிக்கு தலைப்பொங்கல்.
சாவித்திரியோடு தனிக்குடித்தனம் நடத்துகிறார் ஜெமினி என்ற செய்தி, பாப்ஜியின் உறவுக்காரர்களிடம், புகைச்சலை உருவாக்கியது.
பாப்ஜியின் மனதை மாற்றி, சாவித்திரியின் மீது வழக்கு தொடர முயற்சித்தனர்; ஆனால், எந்தச் சூழலிலும் அவசரப்படவில்லை பாப்ஜி.
'இப்பிரச்னையை நான் பார்த்துக் கொள்கிறேன்; நீங்கள் இதுபற்றி பேசுவதை நான் விரும்பவில்லை...' என, உறவுக்காரர்களின் வாயை அடைத்தார்.
கடந்த, 1951ல் துவங்கிய இவர்களுடைய காதல், நான்கு ஆண்டுகள் தெய்வீகப் பயணமாகவே பயணித்தது.
சாவித்திரி எதைக் கேட்டாலும் வாங்கி கொடுத்த ஜெமினியும், அந்த ஜெமினிக்காக, எவரையும் தூக்கி எறிந்த சாவித்திரியும், காதலின் கனிவான பக்கங்களாகவே வாழ்ந்தனர்.
ஜெமினி விரும்பி, தேடி, ரசித்து ஏற்ற ஒரே மனைவி சாவித்திரி தான். அதனால்தான் சாவித்திரியை ரகசியமாக ஜெமினி திருமணம் செய்து கொண்ட பின்னும், தமிழக மக்கள் இவர்களை மனதார வாழ்த்தினர்.
அபிராமபுரம் வீட்டில் கணவன், மனைவியாக காலடி வைத்த இவர்களின் காதல், கவலை இன்றி மகிழ்ச்சி வானில் பறக்கத் துவங்கியது. எந்த கவலையும், எவரைப் பற்றிய எண்ணமும் அவர்களிடம் இருக்கவில்லை; மகிழ்ச்சி கரை புரண்டது.
இச்சூழலில் சாவித்திரி நடித்த, பெண்ணின் பெருமை படம் வெளியாகி, மாபெரும் வெற்றி பெற்றது.
ஒருநாள், படப்பிடிப்பு முடிந்து, தன் ஆசை மனைவிக்கு வைர நெக்லஸ் வாங்கிக் கொண்டு வீட்டிற்கு வந்தார் ஜெமினி.
வேலைக்காரப் பெண் மற்றும் சாவித்திரியின், 'டச்சப்' பெண்ணான சரசுவதம்மாவும், ஜெமினியை பார்த்து, சோகமாக அச்செய்தியை கூறினர்.
'அம்மா காலையிலிருந்து எதுவும் சாப்பிடலை; ஒரே வாந்தி, தலைச்சுற்று என, படுத்தே கிடக்கிறார்....' என கூறினர்.
சாவித்திரி படுத்திருந்த அறைக்குப் போனார் ஜெமினி. அங்கே சாவித்திரி நாண முகத்தோடு வரவேற்றார். அப்போது தான், அவருக்கும் புரிந்தது. இது, 'அந்த' மயக்கம் என்று! சாவித்திரியின் கையைப் பிடித்து பாசத்துடன் முத்தமிட்டு, வாங்கி வந்த நெக்லசை அவர் கழுத்தில் மாட்டி விட்டார்.
காதல் மனைவி சாவித்திரியுடன் வாழ்ந்த ஜெமினியின் வாழ்வில், திடீர் என, அந்த திருப்பம் நிகழ்ந்தது.
— தொடரும்.
ஞா.செ.இன்பா

