
பெண் மீது பழி போடாதீர்கள்!
தனிக்குடித்தனம் சென்ற என் நண்பனை, சமீபத்தில் சந்தித்த போது, 'என்ன மாப்ள... பெத்தவங்க, கூடப்பிறந்தவங்க தான் முக்கியம்; மற்றதெல்லாம் இரண்டாம் பட்சம்ன்னு பேசுவ... இப்ப என்னடான்னா திடீர்ன்னு தனிக்குடித்தனம் போயிட்டே...' என்று நக்கலாகக் கேட்டேன்.
அதற்கு அவன், 'இல்லடா மச்சான்... என் மனைவி எதைச் செய்தாலும் எங்கம்மா குற்றம் கண்டுபிடிச்சு, குறை சொல்லிட்டு இருந்தாங்க. அதைக் கூட நான் கண்டுக்கல; எங்கப்பா, பிக்பாக்கெட்காரன்கிட்ட பணத்தை பறி கொடுத்ததுக்கும், என் தம்பி பைக்கில் இருந்து கீழே விழுந்ததுக்கும் என் மனைவி முகத்துல விழிச்சிட்டு போனது தான் காரணம்ன்னு சொல்லி, 'முகராசி இல்லாதவ'ன்னு கண்டபடி திட்டுனாங்க.
'இதுக்கும் மேலேயும் ஒன்னா இருந்தா, பெரிய பிரச்னை வந்துடும்ங்கிறதால தனியா வந்துட்டோம்...' என்றான்.
நண்பன், தன் மனைவி மீது கொண்ட அன்பும், பிரச்னைகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக சாதுர்யமாக எடுத்த, தனிக்குடித்தன முடிவும் சரியானது என்றே தோன்றினாலும், இப்படியுமா ஒரு பெண் மீது பழிபோட்டு பேசுவர் என்று ஆச்சரியமாக இருந்தது.
— பி.சதீஷ்குமார், மதுரை.
விடுதி காப்பாளரின் சாட்டையடி வார்த்தை!
இரு மாதங்களுக்கு முன், முதியோர் இல்லத்தில் இருக்கும் தன் அம்மாவை பார்க்க, என்னையும் உடன் அழைத்துச் சென்றார், என் நண்பர். இல்லத்தில் நுழைந்ததும், எங்களை வரவேற்ற இல்லக் காப்பாளர், 'யாரை பாக்கணும்?' என்று கேட்க, 'அம்மாவை பாக்கணும்...' என்றார், நண்பர். அதற்கு காப்பாளர், 'இங்கே எனக்கு, 147 அம்மாக்கள் இருக்காங்க; நீங்க எந்த அம்மாவ பாக்கணும்...' என்றார்.
நண்பர், தன் அம்மாவின் பெயரை கூற, உடனே அவர், 'கொஞ்சம் காத்திருங்க... அழைச்சிட்டு வர்றேன்...' என்று கூறிச் சென்றவர், சிறிது நேரத்தில், நண்பரின் அம்மாவை பாசத்தோடு கையைப் பிடித்து அழைத்து வந்து, எங்கள் முன் உட்கார வைத்து, நகர்ந்து விட்டார்.
பின், தன் அம்மாவிடம் பெயரளவில் பேசி, நலம் விசாரித்து, பழம் மற்றும் பிஸ்கெட்டுகளை கொடுத்து, இறுக்கமான மனதுடன் வெளியே வந்தார் நண்பர்.
வீடு திரும்பும் போது, நண்பரின் முக வாட்டத்தை அறிந்து, 'என்னாச்சு?' என்றேன். 'எங்கேயோ பிறந்த காப்பாளர், இங்குள்ள அனைவரையும் தன்னுடைய அம்மாங்கிறார். ஆனால், என் சொந்த அம்மாவ, முதியோர் இல்லம் அனுப்பிய பாவியாகி விட்டேனே...' என்றார், வேதனையுடன்!
பின், நண்பரை சமாதானப்படுத்தி, 'இதற்கு உடனடி பரிகாரமாக, சீக்கிரம் உன் அம்மாவ வீட்டிற்கு அழைச்சுட்டுப் போ...' என்றேன்.
ஒரே வாரத்தில், மனைவியை சமாதானப்படுத்தி, தன் அம்மாவை தன்னுடன் அழைத்துச் சென்று விட்டார் நண்பர். தற்போது உலகை ஜெயித்த மனநிறைவுடன் இருக்கிறார். விடுதி காப்பாளர் சொன்ன அந்த ஒரு வாக்கியம், ஒரு மூதாட்டிக்கு வாழ்வளித்துள்ளது.
— வே.செந்தில்குமார், கொங்கணாபுரம்.
காலமறிந்து உதவலாமே!
சமீபத்தில், என் நண்பரைக் காண அவர் வீட்டிற்கு சென்றிருந்த போது, தெருமுனையில் சிறு பந்தல் அமைத்து, மோர், சர்பத் மற்றும் பானகம் வினியோகித்தபடி இருந்தனர். தேர்தல் கமிஷனின் தடையை மீறி, எந்த கட்சி இப்படிச் செய்கிறது என, அருகில் சென்று பார்த்தேன்.
பந்தலில் கட்சிக் கொடியோ, தலைவர்கள் படமோ இல்லை; மாறாக, ஒரு கணவன் - மனைவியின் படம் இருந்த, 'ப்ளக்ஸ்' போர்டு இருந்தது. அன்று, அத்தம்பதிக்கு திருமண நாள் என்பதால், இவ்வாறு பொது மக்களுக்கு இலவசமாக வழங்குவதாக கூறினர். அவர்கள் எக்கட்சி அபிமானிகளும் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது!
வெயிலின் கொடுமையால் தவித்த மக்கள், அதை வாங்கி அருந்தி, அத்தம்பதியை மனமார வாழ்த்திச் சென்றனர். பார்ட்டி, அது இது என்று கொண்டாடாமல், பருவ நிலைக்கு ஏற்ப, பொது மக்களுக்கு அவர்கள் செய்த சேவையை பாராட்டி விட்டு வந்தேன்.
பிறந்த நாள் மற்றும் மணநாள் கொண்டாடுவோர், இதுபோல், பிறர் தேவையறிந்து உதவி செய்து, புண்ணியம் தேடலாமே!
யோசிப்பரா?
— உ.குணசீலன், திருப்பூர்.

