sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 18, 2025 ,ஐப்பசி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

வடு!

/

வடு!

வடு!

வடு!


PUBLISHED ON : நவ 11, 2018

Google News

PUBLISHED ON : நவ 11, 2018


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நகரின் மிகப்பெரிய மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை...

மருத்துவமனைக்கே உரிய பரபரப்பில் இருந்தது.

மருத்துவமனை வாசலில் ஓசையின்றி வந்து நின்ற கறுப்பு நிற, 'ரோல்ஸ் ராய்' காரை கண்டவுடன், டாக்டர் குழு, மரியாதையாக ஒதுங்கி நின்று பணிவு காட்டியது. செக்யூரிட்டி, திடீர், 'அட்டென்ஷ'னில், 'குட்மார்னிங் சார்...' என, கூறியவாறு காரின் கதவை திறக்க, இறங்கினார் அவர்.

அங்கங்கே, 'ச்சரக் ச்சரக்' என்று இழுபட்ட நாற்காலிகளும், தொடர்ந்த, 'மானிங் டாக்டர்!' குரல்களும், வந்தவரின் ஆளுமையை பறைசாற்றின. புறநோயாளிகள் பிரிவை தன் கண்களால், 'ஸ்கேன்' செய்தவாறு புன்னகையோடு நடந்தார், அந்த மருத்துவமனையின் தலைவர், டாக்டர் தியாகராஜன், எம்.எஸ்., - எம்.டி.,

அமெரிக்காவின், ஹூஸ்டன் நகரத்தில் படித்தார். மனித மூளை பற்றிய ஆராய்ச்சிகளில், எம்.டி., பட்டம் பெற்று, அங்கேயே, 30 ஆண்டு தங்கி, சவாலான அறுவை சிகிச்சைகளில் நிபுணர் என, உலகளாவிய புகழ்பெற்ற மேதை. தாயகத்தில் தங்கி, மருத்துவ சேவை செய்வதற்காக, இந்தியா வந்து, இந்த மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை நிறுவியவர்.

பல, வி.ஐ.பி.,களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும், 'பர்சனல்' டாக்டர். இன்று கூட, பாக்., வெளியுறவுத்துறை அமைச்சர், ஆபிக்கின், 2 வயது குழந்தை, காஸிமின் மூளை நரம்பு நசுங்கி இருக்கும் பிரச்னைக்கு, ஆபரேஷன் மூலம் தீர்வு காண இருக்கிறார். அந்த ஆபரேஷன் செய்யுமாறு அவரை பணித்ததே, இந்திய வெளியுறவு அமைச்சகம் தான்.

முகத்தில் புன்னகையுடன், ஓ.பி.,யை கடந்து சென்றவரை, எங்கோ பார்த்தவாறு காத்திருப்போரின் முதல் வரிசையில் மூன்றாவது நாற்காலியில் அமர்ந்திருந்த ஒரு நோயாளியின் முகம், கவனத்தை ஈர்த்தது. சட்டென பின்வாங்கிய டாக்டர், அந்த நோயாளி இருந்த திசையை நோக்கினார்.

வயோதிகமும், வியாதியும் அரித்திருந்தாலும், முகத்தில் மறையாது நின்ற வடு, சுற்றியிருந்த சுருக்கங்களை தாண்டி அவர் இன்னார் என உணர்த்தியது. 'ஜெயராமன்...' என, டாக்டரின் உதடு உச்சரித்தது.

தன் அறைக்கு வந்தவர், உதவியாளர் கல்பனாவிடம், ''ஓ.பி.,யில் முதல் வரிசையில் மூன்றாவது நாற்காலி, ப்ளூ கலர் ஷர்ட், நெற்றியில் சிலுவை போல வடு உள்ள ஒருவர் அமர்ந்திருக்கிறார். பேரு கேளு, ஜெயராமன்னா, அவரோட வந்திருக்கிறவரை அழைச்சு வா,'' என்றார்.

சில நிமிடங்களில், தயங்கியவாறு ஒரு இளைஞன் வந்தான். அவன் முகத்தில் ஜெயராமனின் சாயல் தெரிந்தது.

''இவர், பன்னீர் சார்... ஜெயராமனின் பேரன்,'' என்றாள், கல்பனா.

''வணக்கமுங்க.''

''உக்காரு.''

''அந்த அம்மா வெசாரிச்ச ஜெயராமன், என் தாத்தாதாங்க,'' என்றான் அவன்.

''என்னாச்சு அவருக்கு?''

''கொஞ்ச நாளா அவருக்கு, தான் யாருன்றது மறந்து போச்சுங்க... எங்க இருக்கோம், என்னா, ஏது ஒண்ணும் புரியலீங்க... எங்கியோ வானத்தை பார்த்துட்டு, ஒரு வேலையும் செய்யாம, அது பாட்டுக்கு உட்கார்ந்துட்டு இருக்குங்க.''

''என்ன வேலை?''

''தாத்தா, குதிரை வண்டி இழுத்துச்சு... தெனமும் குடிக்குங்க... குடிச்சு குடிச்சு, கடைசியில இப்புடி ஆயிடுச்சுங்க... தன் வேலையை தானே பார்த்துகிட்ட வரைக்கும் பரவாயில்லீங்க... இப்பல்லாம் அப்படியில்லீங்க... அப்படியே உட்கார்ந்துட்டே இருந்தா எப்புடி... அதான், டாக்டராண்ட காட்டலாம்ன்னு கூட்டியாந்தேன், சரியா பூடுங்களா?''

''ட்ரீட்மென்ட் கொடுத்தா தான் தெரியும்; 'அட்மிட்' செஞ்சுடு.''

''ரொம்ப செலவாகுங்களா?''

''அட்மிட் பண்ணு, பார்க்கலாம்.''

''கல்பனா... அந்த, 'பேஷன்ட்'டுக்கு, ஐந்தாவது மாடியில, 'சூட் அட்மிஷன்' போட்டுடுங்க'' என்றவர், அவள் முகத்திலிருந்த கேள்விக்குறியை பார்த்து, ''அவர், எனக்கு வேண்டப்பட்டவர்,'' என்றார்.

அவர்கள் சென்றதும், தனிமையிலிருந்த டாக்டருக்கு, பள்ளி நாட்களின் பசுமையான நினைவு உசுப்பியது. அந்த ஆனந்த எண்ணங்களில் ஆழ்ந்தது அவர் மனம்.

'அம்மா... அம்மா... ப்ளீஸ்ம்மா... ஜெயராமனோடு மத்தியான ஆட்டம், சித்தேஸ்வரா தியேட்டருக்கு போயிட்டு வரேம்மா...' அம்மாவின் புடவை தலைப்பை பிடித்தவாறு, அனுமதிக்காக மன்றாடிக் கொண்டிருந்தான், தியாகு.

'போன வாரம் என்ன படம் போனே...'

'மிஸ்ஸியம்மா...'

'அதுக்கு முன்னால...'

'குலேபகாவலி...'

'அப்புறம், துாக்கு துாக்கி போனே!'

'அது வந்தும்மா, மலைக்கள்ளன் மற்றும் மனோகரா எல்லாம் பழைய படம்மா...'

'அதனால் என்ன... இத்துனுாண்டு இருந்துண்டு, வாரம் தவறாம அவனோட சினிமாவுக்கு போயிடறே... அவனோட மாமா, 'ப்ரீ பாஸ்' குடுத்து, 'பஸ்ட் க்ளாஸ் டிக்கெட்'ல உட்கார்த்தி வெச்சார்னா, நீயும் போகணுமா... எப்படிப்பா?'

அம்மா கேள்வியை முடிக்கும் முன், தியாகுவுக்காக காத்திருந்த ஜெயராமன், குறுக்கிட்டான்.

'மாமி... எங்க மாமா ஒண்ணும் சொல்ல மாட்டாருங்க... எங்களை பார்த்த உடனேயே டிக்கெட்டை கொடுத்து, போயி உக்காருங்கடான்னுவாரு...'

'அதுக்கில்லப்பா... ஏதோ ஒரு தடவைன்னா பரவாயில்லை, இவனுக்கு இதுவே பழக்கமாயிடுத்து...'

'அம்மா... அம்மா... ப்ளீஸ் மா...' வழக்கம் போல், இறுதியில் வென்றது, தியாகுவின் பிடிவாதம் தான்.

சேலத்தில், இரண்டாவது அக்ரஹாரம் கடைசியில், பிஷர் காம்பவுண்ட் எதிரே இருந்த அக்ரஹாரத்தில் தான் தியாகுவின் வீடு இருந்தது. அக்காலனியின் பின்புறத்தில் இருந்த முனிசிபல் பள்ளியில் தான் அவனும், ஜெயராமனும் படித்தனர். ஜெயராமனின் அப்பா, குதிரை வண்டி ஓட்டுபவர். சித்தேஸ்வரா சினிமா கொட்டகையில், ஜெயராமனின் மாமா, செல்வம் வேலை பார்த்தார்.

பள்ளி விட்டவுடன், ஜெயராமனுடன் பிஷர் காம்பவுண்டில் விளையாடுவது, தில்லை நகர் பிள்ளையார் கோவிலுக்கு போவது, பள்ளி வாசலிலிருந்த காய்கறி மார்க்கெட்டில் கொய்யா பழம் வாங்கி, பகிர்ந்து சாப்பிடுவது மற்றும் சித்தேஸ்வராவில் சினிமா பார்க்க போவது என, துாங்கும் நேரம் தவிர, ஏனைய பொழுது, இருவருக்கும் ஒன்றாய் தான் கழிந்தது.

மொபைல் சிணுங்கி, அவரது எண்ண ஓட்டத்தை கலைத்தது.

''எஸ்...''

''சார்... மிஸ்டர் ஜெயராமன், 'சூட்டில் அட்மிட்'டாகி விட்டார்,'' என்றாள், கல்பனா.

''ரைட் மா... குட்...''

''சார்... 10:30க்கு, பேபி காஸிமுக்கு, சர்ஜரி இருக்கு,'' என, அன்றைய ஷெட்யூலை நினைவுபடுத்தினாள்.

காஸிம் என்ற பெயர், அலிபாபாவும் 40 திருடர்களும் படத்தை பற்றிய எண்ணங்களை துாண்ட, அவர் மனம், அந்த நினைவுகளில் நீந்தலாயிற்று.

அலிபாபாவும் 40 திருடர்களும் கதை, தியாகுவின் அப்பா, அவனது பிறந்த நாள் பரிசாக தந்த, 'அரேபியன் நைட்ஸ்' புத்தகத்தில் இருந்தது. தியாகு அந்த புத்தகத்தை பலமுறை படித்திருக்கிறான். அலிபாபாவின் தைரியம், கெட்டிக்காரத்தனம், கொள்ளைக்கூட்ட தலைவன் காஸிமின் தந்திரம், மந்திரம் சொன்னால் கதவு திறக்கும் குகை என, அந்த கதை தியாகுவை ரொம்பவே கவர்ந்தது.

ஒருநாள், தியாகுவின் வீட்டு வாசலில், சத்தமாக சினிமா பாட்டு ஒலிக்க, குதிரை வண்டியொன்று கடந்து சென்றது. சத்தம் கேட்டு, வந்து பார்த்த போது, வண்டியை மூடியபடி சினிமா போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

வண்டியின் உள்ளே கிராமபோனிலிருந்து சினிமா பாடல்கள் ஒலிக்க, சிலர், நடனம் ஆடியபடியே செல்ல, வண்டியை பிடித்தபடி ஓடி வந்த ஜெயராமன், சினிமா நோட்டீசை அனைவருக்கும் வினியோகித்தான். அப்போது தான் அலிபாபா கதை, சினிமாவாக வந்திருக்கிறது என தியாகுவுக்கு தெரிந்தது...

'ஹையா... அலிபாபா சினிமாவுக்கு போகலாம்...'

சேலம், 'ஓரியண்டல்' தியேட்டரில், அலிபாபா படம் ரிலீசாயிற்று... அடுத்தடுத்த நாளில், அலிபாபா படத்தை, பார்த்து விட்டான் ஜெயராமன். தியாகுவுக்கும் ஆசை தான். 'படம் சித்தேஸ்வராவுக்கு வரட்டும்...' என, மறுத்தாள், அம்மா.

படத்தை பார்த்து வந்த ஜெயராமன், அதை விலாவரியாக விளக்கினான். தியாகுவுக்கு, அப்படத்தை உடனே பார்க்க வேண்டும் என்ற ஆசை எழுந்தது. அதுவரை, கறுப்பு - வெள்ளை படங்களாக பார்த்தவனுக்கு, கலர் படம் என்றதும், இன்னும் ஆவல் கூடியது.

'கூட்டத்துல நின்னு, அஞ்சணா குடுத்து, டிக்கெட் வாங்கி, சினிமா பார்த்தேயாகணுமா... அங்கெல்லாம் கூட்டமாயிருக்கும்... உன்னை யாராவது தள்ளிட்டா, என்னடா பண்ணுவே... அதெல்லாம் வேண்டாம்...' என்றாள், அம்மா.

'மாமி... நான் அவனை பத்திரமா கூட்டி போயிட்டு வந்து வுட்டுடறேன்...' உதவிக்கு வந்தான், ஜெயராமன்.

கொஞ்ச நேர கெஞ்சலுக்கு பின், மசிந்தாள், அம்மா.

'அவனுக்கு ரொம்ப துாரமெல்லாம் போயி பழக்கமில்லைடா ஜெயராமா... பார்த்து ஜாக்கிரதையா கூட்டிண்டு போ... என்ன?'

வீட்டிலிருந்து, 4 கி.மீ., தொலைவில் இருந்தது, தியேட்டர். அந்த வயதில், தியாகுவை அவ்வளவு துாரம் போக, அம்மா சம்மதித்து அனுப்பியது பெரிய விஷயம்.

அலிபாபா படம் பார்ப்பதற்காக, அவ்வளவு துாரம் வந்துவிட்ட சிறுவர்களுக்கு, சினிமா வரிசை பற்றிய பல விபரங்கள் தெரியாமல் போய் விட்டது.

அலிபாபா படம் பார்க்க, வரிசையில் நின்று, அங்கு நடந்த களேபரத்தில் மாட்டி, ஜெயராமன் அடி வாங்கி, தியாகுவை காப்பாற்றிய அழியாத நினைவு, படமாக அவர் மனதில் ஓடியது.

சர்ஜரி முடிந்து வந்த டாக்டர், 'லிப்டில்' ஏறி, 'சூட்'கள் இருக்குமிடத்திற்கு வந்தார். குளித்து, சுத்தம் செய்விக்கப்பட்ட அசதியிலும், மருந்துகளின் உபயத்திலும் கண்மூடி நிச்சலனமாக உறங்கிக் கொண்டிருந்தார், ஜெயராமன்.

புதிய ஆடம்பரத்தால் மிரண்டு, டாக்டரின் அன்புக்கு காரணம் தெரியாததால், தவிப்புடன் அறையின் மூலையிலிருந்த சோபாவில் அமர்ந்திருந்தான், ஜெயராமனின் பேரன் பன்னீர்.

''எப்படி இருக்கார்?''

''நர்சம்மா குளிப்பாட்டி விட்டு, சாப்பிட சோறு கொடுத்தாங்க... என்னென்னமோ குறிச்சுட்டு போனாங்க... மருந்து குடுத்தாங்க... அப்பால, தாத்தா நல்லா துாங்கிருச்சுங்க.''

டாக்டரின் கை, அவரையும் அறியாமல், ஜெயராமனின் நெற்றி வடுவை தடவியது. அதைக் கண்ட பன்னீர், ''தாத்தா கூட, எப்பவும் அதை தடவிட்டே தான் உக்கார்ந்திருக்கும்,'' என்றான்.

''எப்படி அடிபட்டது... சொல்லி இருக்காரா?''

''சினிமா போனப்ப, போலீசு அடிச்சிடுச்சுன்னு ஒரு தபா சொல்லிருக்கு.''

''என்ன சினிமா... யார் கூட போனாராம்... தெரியுமா?''

''தெரியலீங்க.''

ஜெயராமனுக்கு அடிபட்ட அந்த நினைவு, தியாகுவின் கண் முன் விரிந்தது.

வாரக் கடைசி, சனியன்று காலை முதலே ஓரியண்டல் தியேட்டரை, மக்கள் கூட்டம் ஆக்கிரமிக்க துவங்கியது. கூட்டமும், வரிசையின் நீளமும், போலீஸ் கையில் தடியுடன், 'டக் டக்' என, நடப்பதும், ஜெயராமனுடன் நின்ற தியாகுவுக்கு, புது அனுபவம்.

சித்தேஸ்வரா தியேட்டரில், போலீசை அவன் பார்த்ததில்லை. கொஞ்சம் பயத்துடனும், ஆர்வத்துடனும், அங்கு நடப்பவற்றை பார்த்தபடி அமர்ந்திருந்தான்.

ஜெயராமனுக்கு முன் எத்தனை பேர் இருக்கின்றனர் என, எண்ணினான் தியாகு.

'இன்னும், 10 பேர் தாண்டா... நமக்கு டிக்கெட் கிடைச்சிடும்...' ஜெயராமன் சொல்லிக் கொண்டிருக்கும்போதே, 'ஹவுஸ்புல் ஆகபோறது... 'கவுன்டர்ல, ஷட்டர்' போடப் போறாங்க...' என, யாரோ கத்த, 'ஓ...' என்ற அலறல்...

நான்கு மணி நேரம் வெயிலில் நின்றிருந்த சிலர், அவசர முயற்சியாக, வரிசையின் முன் பகுதியில் நின்றிருந்தவர்களை முண்டியடித்து, 'கவுன்டரை' நோக்கி ஓடினர்...

அவர்களுடன் ஜெயராமனும், அவனை தொடர்ந்து தியாகுவும் பயணிக்க, அங்கு ஏற்பட்ட களேபரத்தில், போலீஸ் லத்தியால் அடிக்க, ஜெயராமன், சட்டென தியாகுவின் மீது விழவிருந்த அடியை தான் வாங்கினான். லத்தியின் முன் பாகத்தில் நீட்டியிருந்த ஆணி, அவன் நெற்றியை கிழிக்க, 'ஐயோ... அம்மா...' என விழுந்தான், ஜெயராமன்.

முகமெங்கும் ரத்தம் வழிந்த ஜெயராமனை கண்டதும், மிரண்டு போனான், தியாகு. தன் சட்டையை கிழித்து, காயத்துக்கு கட்டு போட முயன்று, அதற்கு அடங்காமல் பீறிடும் ரத்தத்தை கண்டு கலங்கினான்.

'ஐயோ... என்னை காப்பாற்ற போய்தானே இவன் இப்படி அகப்பட்டுக் கொண்டான்...' என்ற குற்ற உணர்வில் மேலும் அழுதான், தியாகு.

'அடி, பலமாயிருக்கு... சீக்கிரம் ஆஸ்பத்திரிக்கு கூட்டிட்டு போடா...' என, சிலர் கூறினர். வலியில் அழும் ஜெயராமனுடன், தானும் அழுதவாறு, 'எப்படிடா ஆஸ்பத்திரிக்கு போகறது...' என தியாகு விசும்ப, 'வாசல்ல நிக்கற குதிரை வண்டி அண்ணாச்சிகிட்ட சொல்லுடா...' என, வழிகாட்டினான், ஜெயராமன்.

ஜெயராமனின் அப்பாவுக்கு தெரிந்த அந்த குதிரை வண்டியில் அவனை படுக்க வைத்து, ரத்தம் படிந்த, கிழிந்த சட்டையுடன் அழுதவாறே உடன் சென்றான், தியாகு.

சேலம் பெரிய ஆஸ்பத்திரியில் நுழைந்தது வண்டி. திக்கித் திணறியவாறு, ஜெயராமனுக்கு அடிபட்ட விவரத்தை டாக்டரிடம் தியாகு சொல்ல, காயத்தின் ஆழத்தை பரிசோதித்து, தையல் போட்டு, காயம் ஆற, மாத்திரை தந்தார். மயக்கமாய் படுத்திருந்த ஜெயராமனை, குதிரை வண்டியில் ஏற்றி அனுப்பி, பசியோடும், அழுகையோடும் வீட்டுக்கு வந்த தியாகு, புது அனுபவங்கள் தந்த அதிர்ச்சியில், காய்ச்சலில் படுத்தது தனி கதை.

அதன்பின், ஜெயராமன் நெற்றியின் நடுவே, 3 செ.மீ., நீளத்தில் ஒரு கோடு. அதை நடுவில், 'கட்' செய்து, சிலுவை போல அந்த வடு அமைந்திருந்தது. அதை பார்க்கும்போதெல்லாம், தன் கையையும், கண்ணையும் காப்பாற்றியவன் என, நன்றி சொல்லி, தியாகு குற்ற உணர்வில் மருகுவதும், 'விடுடா...' என, ஜெயராமன் ஆறுதல் சொல்வதும், வழக்கமானது.

ஒருமுறை தியாகு, 'ஜெயராமா... நீ என்னை காப்பாத்தாம விட்டிருந்தின்னா, உனக்கு அடிபட்டிருக்காது இல்ல... ஏண்டா நீ அப்படி செய்யலே?' என, குழந்தையாக கேட்க, சிரித்து விட்டான், ஜெயராமன்.

'எப்பவானும், உங்கம்மா, உன்னை அடிச்சிருக்கா?'

யோசித்து பதில் சொன்னான், தியாகு.

'அதாண்டா... யோசிச்சு சொல்ற பாரு... உனக்கெல்லாம் அடின்னா என்னான்னே தெரியாது... அதுவும் போலீசு அடியெல்லாம் உன்னால தாங்க முடியுமாடா... உம் மூஞ்சி மேலே லத்தி பட்டிருந்திச்சின்னு வையி, உன் கண்ணும் போயிருக்கும், கை வெரலும் உடஞ்சு போயிருக்கும்... அப்பால, நீ டாக்டருக்கு படிக்க போறேன்னு சொல்லிட்டுக்கீறியே, அது எப்படிடா முடியும்... அதான், உன் மேல விழுந்து தடுத்துட்டேன்...

'அப்பால, உங்கம்மாகிட்ட, உன்ன பத்திரமா கூட்டிட்டு வரேன்னு சொல்லியிருந்தேன் இல்ல... அதாண்டா...' என்றான், ஜெயராமன்.

டாக்டர் தியாகராஜனுக்கு அந்த நினைவு மேலோங்கியபோது, 'அத்தனை சின்ன வயதிலும், அவசரத்திலும் கூட, சுயநலமில்லாது, எத்தனை தெளிவாய் சிந்தித்திருக்கிறான் ஜெயராமன் என ஆச்சரியமாக இருந்தது. 'ப்ராமிஸ்' பற்றியெல்லாம் கேட்டேயிராத அந்த வயதில் கூட, தான் சொன்ன சொல்லை காப்பாற்ற, அவன் செய்த செயல் நெகிழ வைத்தது.

'எத்தனை உற்ற நண்பன் இவன்... இந்த நட்பு ஏன் தொடராமல் போய் விட்டது... ஜெயராமனை எங்கே தொலைத்தேன்...' கையில் காபி கோப்பையுடன் கண்ணை மூடி, யோசிக்க துவங்கினார்.

சேலத்தில், மதிப்பு மிக்க பெரிய பள்ளியான பாரதி வித்யாலயாவில், தியாகுவை, 6ம் வகுப்பில் சேர்த்து விட்டாள், அம்மா.

ஜெயராமன் படித்தது போதுமென, அவனை பள்ளியிலிருந்து நிறுத்தி, குதிரை வண்டி ஓட்ட, பயிற்சி அளிக்க ஆரம்பித்து விட்டார், அவன் அப்பா. இருந்தபோதிலும், சாலை ரோடு முனையில், தேர் முட்டியில், பிள்ளையார் கோவில் வாசலில் என, பள்ளிக்கூடம் போய் வரும் நேரத்தில், ஜெயராமனை பலமுறை சந்தித்து, சந்தோஷமாக பேசிக் கொண்டிருப்பான், தியாகு.

பள்ளி படிப்பு முடிந்து, சேலம் அரசு கலை கல்லுாரியில் தியாகு சேர்ந்தபோது, ஜெயராமனுக்கும், அவனுக்குமான நெருக்கம் குறைந்து போயிருந்தாலும், மனதளவில் நட்பு உயிர்த்திருந்தது. பின், சென்னையிலும், அமெரிக்காவில் உள்ள ஹூஸ்டனிலும் மருத்துவம் பயின்று, டாக்டரான காலத்தில், ஜெயராமனின் தொடர்பு முற்றிலும் அறுந்து போனது.

ஹூஸ்டனிலிருந்து சென்னைக்கு வந்த பின், ஓரிருமுறை ஏற்காட்டில், டாக்டர்கள் கான்பரன்சுக்கு சென்றபோதெல்லாம், சேலம் சென்று, ஜெயராமனை தேட முயன்றார், தியாகு. ஆனால், ஜெயராமன் மட்டுமா, அவருக்கு பழக்கமான சேலம் நகரமே காணாமல் போயிருந்தது.

அப்போ, தேடியும் கிடைக்காத ஜெயராமன், அவனாகவே இன்று கிடைத்து விட்டான். நட்பை கொண்டாட முடியாமல், அந்த கால கதை பேசி, சிரிக்க முடியாமல், 'உன் தியாகம்தானடா என் பெருமைக்கு காரணம்...' என சொல்ல முடியாமல், 'ஜெயராமா விழித்துக் கொள்வாயா... என்னை புரிந்து கொள்வாயா...' என, மனதுக்குள் உருகினார்.

இந்த, 15 நாட்களில், தியாகுவின் தொடர் முயற்சியால், ஜெயராமனிடம் ஒரு தெளிவும், சக்தியும் வந்திருந்தாலும், ஞாபகம் மீளவில்லை. எப்போதாவது கண் திறக்கும் வேளையில், தன் பேரன் பன்னீரை மட்டும், அவர் அடையாளம் கண்டு கொண்டார்.

டாக்டர் தியாகராஜன், தினமும் ஜெயராமன் இருந்த, 'சூட்'டிற்கு விஜயம் செய்கிறார் என்பதால், பிற டாக்டர்களும், அவரை, அவ்வப்போது கவனித்துக் கொண்டிருந்தனர். குடியும், வறுமையும் அவரது நரம்பு மண்டலத்தை மிகவும் பாதித்திருக்க, வயதின் பலகீனமும் சேர, ஜெயராமனின் நாட்கள் எண்ணப்படுவதை, அவர்கள் அறிந்திருந்தனர்.

மொபைல் சிணுங்க, பழைய நினைவுகளிலிருந்து மீண்டார்.

''எஸ்!''

''சார்... அந்த, 'பேஷன்ட்' ஜெயராமன்... இறுதி கட்டத்தை நெருங்கிக் கொண்டுள்ளார்,'' என்று கூற, பாய்ந்து ஓடினார், தியாகு.

அவரை கண்டதும், ''தாத்தா, எப்பனாச்சியும் விழிச்சு பார்க்கும்... ரெண்டு வார்த்தை பேசும்... இப்ப ரெண்டு நாளாய் அசைவே இல்லை,'' என்றான், பன்னீர்.

நண்பனின் குறைந்து கொண்டிருக்கும் நாடித்துடிப்பும், உடல் உஷ்ணமும், அவனது முடிவு நெருங்குவதை உணர்ந்த தியாகுவின் உள்ளம் வெதும்பியது.

'ஜெயராமா... ஒரேயொரு முறை கண்ணை திறந்து என்னை பாருடா... நான், உன் நண்பன் தியாகுடா... இந்த, 15 நாளும், நீ என்னை பார்ப்பாய், புரிந்து கொள்வாய் என, உன் அருகிலேயே நிக்கறேன்டா... என்னை பார்க்காமலே இருக்கியே ஜெயராமா... உனக்காக நான் எப்படி தவிக்கிறேன் தெரியுமாடா...'

உணர்ச்சிகளின் உச்சத்தில், கசியும் கண்ணீரை யாரும் பார்த்துவிட கூடாது என, தலையை கவிழ்த்திருந்தார், டாக்டர் தியாகராஜன். தன் கரங்களை யாரோ தொடுவது போன்ற உணர்வில் நிமிர்ந்தவர், ஜெயராமனின் முகத்தை பார்த்து, அதிர்ந்தார். 'மை காட்... இவனுக்கு நினைவு வந்து விட்டதா... என்னையே உற்றுப் பார்க்கிறானே...'

ஓசையின்றி அசைந்து, ஏதோ சொல்ல முயலும் ஜெயராமன் வாய் அருகே, தன் காதை வைக்க, ''ரொம்ப தேங்க்ஸ்டா, தியாகு!''

ஜெயராமன் உயிர் பிரிய, கதறி அழுதார் தியாகு. பன்னீரும், மற்றவர்களும் ஏதும் புரியாமல் மிரள மிரள விழித்தனர்.

மல்லிகா குரு

படிப்பு: எம்.ஏ., ஆங்கில இலக்கியம். சிறு வயது முதலே படிக்கும் ஆர்வம் உள்ளவர். இவரது சிறுகதைகள், கட்டுரைகள் பல்வேறு தமிழ் வார - மாத இதழ்களில் வெளியாகி உள்ளன.

டி.வி.ஆர்., நினைவு சிறுகதை போட்டியில், ஆறுதல் பரிசு பெற்றிருப்பது, மகிழ்ச்சியையும், நிறைய எழுத வேண்டும் என்ற ஊக்கத்தையும் அளித்திருப்பதாக கூறுகிறார்.






      Dinamalar
      Follow us