PUBLISHED ON : டிச 29, 2013

ஜன.,1 - அனுமன் ஜெயந்தி
ஆன்மிகத்தில், இரு வகை ஆராதனை உண்டு. ஒன்று பகவத் வழிபாடு; இன்னொன்று பாகவத வழிபாடு. 'பகவத்' என்றால், கடவுள். 'பாகவத' என்றால், அவனுக்கு தொண்டு செய்பவன். பகவானையும் வழிபட வேண்டும்; அவனுக்கு தொண்டு செய்வோரையும் வழிபட வேண்டும். இதில், எது உயர்ந்ததென்றால், பாகவத வழிபாடு. ராமன், கடவுளின் அவதாரம். அவருக்கு தொண்டு செய்ய முக்கண்ணன் முதல் தேவர்கள் அனைவருமே பூமிக்கு வருகின்றனர். பெருமாளுக்கு படுக்கையாக இருக்கும் ஆதிசேஷன் என்ற பாம்பு, லட்சுமணனாக ஆயில்ய நட்சத்திரத்தில் பிறக்கிறது. இதனால் தான், ஆயில்ய நட்சத்திரத்தன்று, நாக தேவதை கோவில்களில் பாலபிஷேகம் செய்வர். சக்கரம், பரதனாகவும், சங்கு சத்ருக்கனனாகவும் பிறக்கிறது. சிவன், குரங்கு வடிவத்தில் அனுமனாகப் பிறக்கிறார். ராமனின் மற்ற தொண்டர்களை விட, இவரே அதிக பக்தர்களால் கொண்டாடப்பட்டு, 'திருவடி' என்று புகழப்படுகிறார்.
ஆம்... அனுமன், ராமனின் திருவடியே கதி, என இருந்தவர். இப்போதும் கூட, திருப்பதி பிரம்மோற்ஸவத் தில், அவர் தன் கைகளில், பெருமாளின் திருவடியைத் தாங்கி, (அனுமந்த வாகனம்)பவனி வருவதைக் காணலாம். பகவானை விட, பாகவதனே உயர்ந்தவன் என்கிறார் வைணவ ஆச்சாரிய ரான சுவாமி தேசிகன். ராமாயணத்தில் ஒரு காட்சி... ராமனுடன் லட்சுமணன் காட்டுக்கு கிளம்புகிறான். அப்போது, அவனது தாய் சுமித்ரா, 'மகனே லட்சுமணா... அண்ணனையே ஏற இறங்க பார்த்துக் கொண்டிராதே...' என, உத்தரவு போட்டாள். சுமித்ரா அவ்வாறு கூறியதற்கு காரணம், பகவானையே உற்று நோக்கி, அவனது அழகையே ரசித்துக் கொண்டிருந்தால், அவனுக்கு யார் சேவை செய்வது என்பதால் தான்.
ஒரு கோவில் இருக்கிறது. அர்ச்சகர் சுவாமிக்கு அலங்காரம் செய்கிறார். அவர், கண்ணே பட்டு விடும் போல், அவ்வளவு அழகாக இருக்கிறது. அவர், அந்த அழகையே பார்த்துக் கொண்டிருந்தால், கடவுளை தரிசிக்க, தேங்காய் பழம் தட்டுகளுடன் காத்துக் கிடக்கும் பக்தர்களின் கதி என்னவாகும்! எனவே, அர்ச்சகரின் வேலை, கோவிலுக்கு வந்த பக்தர்களைக் கவனிப்பது தான். அதன் பிறகு தான், அவரது சொந்த வழிபாடு. அனுமனும் இதே அடிப்படையில் தான் ராமனுக்கு சேவை செய்தார். உலகமே ராமனின் அழகை ரசித்துக் கொண்டிருக்கையில், அனுமன், ராமனின் குணங்களை ரசித்தான். பட்டாபிஷேக நேரத்தில், வீட்டுக்கு வந்த ராமனைப் பார்த்து, அன்னை கவுசல்யா, 'ராமா... பட்டாபிஷேகம் அதற்குள் முடிந்து விட்டதா?” என்று கேட்டாள்.
'இல்லையம்மா நற்குணங்கள் மட்டுமே கொண்ட பரதனுக்கு பட்டாபிஷேகம்...' என்றார் ராமர். உடனே, கவுசல்யா ஆர்ப்பாட்டம் செய்திருக்க வேண்டும் அல்லது அழுதிருக்க வேண்டும். ஆனால், அப்படி செய்யவில்லை. அதற்கு பதிலாக, 'சரியான முடிவு தான்; பரதன் உன்னை விட மூன்று மடங்கு, நற்குணங்கள் நிரம்பியவன்...'என்றாள்.
எவ்வளவு உயர்ந்த குடும்பம் பாருங்கள்! சிற்றன்னையின் மகனுக்காக, விட்டுக் கொடுக்கும் அண்ணன். சக்களத்தி மகன் என்று பாராத தாய். இவ்வளவு உயர்ந்த குடும்பத்தில் உள்ளவர் களுக்கு சேவை செய்ய வேண்டாமோ என்று நினைத்த அனுமன், ராமனுக்காக, எவ்வித பிரதிபலனும் எதிர்பாராமல், சேவை செய்ய, களத்தில் இறங்கி விட்டார்.
அவரது பிறந்தநாள், மார்கழி மாதம், மூல நட்சத்திரத்தில் நிகழும். ராமனை வணங்குவதைப் போல, அவருக்கு உதவி செய்த அனுமனையும் வணங்குவோம். 'அஞ்சனை மைந்தனே போற்றி' என்று சொல்லி, வணங்குவதை விட, 'ஸ்ரீராம ஜெயம்' என்று சொல்லி வணங்கினால், அவருக்கு ரொம்பப் பிடிக்கும். தன்னை விட, தன் எஜமானனே உயர்ந்தவர் என்று வாழ்ந்து காட்டியவர் அனுமன். அவரது திருவடிகளை வணங்குவோம்; நல்லவர்களுக்கு சேவையும் செய்வோம்.
தி.செல்லப்பா

