
மாப்பிள்ளை தேடும் பெற்றோரே!
சமீபத்தில், மின்சார ரயிலில் பயணம் செய்த போது, ஒரு இளைஞன், தன்னோடு பயணம் செய்த தன் நண்பர்களிடம், நான்கு பெண்களின் புகைப்படங்களை காட்டி, பெண்களின் நிறம், உருவம் குறித்து கேலியாக, பேசிக் கொணடிருந்தான். அந்தப் பெண்களின் புகைப்படங்கள் யாவும், திருமணத்திற்காக பெண் தேடும் அந்த இளைஞனுக்கு, அவனது பெற்றோரால் தருவிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்ட பெண்களின் புகைப்படங்கள் என்பதை, அவர்கள் பேச்சிலிருந்து ஊகிக்க முடிந்தது.
தங்கள் பையனுக்கு பெண் தேடும் பெற்றோர், பெண் அமையாத பட்சத்தில், தாங்கள் வாங்கிய பெண்ணின் புகைப்படத்தை, உரியவருக்கு திருப்பி அனுப்பி இருக்க வேண்டும் அல்லது பெண்ணை பெற்றவர்களாவது, தாங்கள் அனுப்பிய பெண்ணின் புகைப்படத்தை, திரும்ப கேட்டு, வாங்கியிருக்க வேண்டும். தங்கள் வீட்டு பெண், தேவையற்ற கிண்டல், கேலிக்கு உள்ளாவதை தவிர்க்கலாமே!
— ரா.சாந்தகுமார், மாடம்பாக்கம்.
ஏமாறாதீர்கள் பெண்களே!
கடந்த வாரம், என் மொபைலுக்கு, ஒரு அழைப்பு வந்தது. அழைத்தவன், 'மேடம், உங்கள் கணவர், 'கிரெடிட் கார்டு' உபயோகிக்கிறார் தானே?' என்றான். 'ஆமாம்' என்றதும், 'அவர், இதுவரை எல்லா பில்லுக்கும், சரியாக பணம் செலுத்தியுள்ளார். அதனால், அவரை, 'பெஸ்ட் கஸ்டமர்' என்று செலக்ட் செய்து, 25 சதவீதம், 'டிஸ்கவுண்ட் கார்டு' ஒன்று, கொடுக்கப் போகிறோம். அந்தக் கார்டை, பெட்ரோல், நகை கடைகளைத் தவிர, மற்ற எல்லா கடைகளிலும் உபயோகித்து, வாங்கும் பொருட்களில், 25 சதவீதம் தள்ளுபடி பெறலாம். அவர் கிரெடிட் கார்டு, இப்போது வீட்டில் இருக்கிறதா அல்லது கார்டு நம்பர் உங்களுக்கு தெரியுமா?' என்று கேட்டான். நான், 'எதற்கு?' என்றதும். 'நீங்கள் கார்டு நம்பரையும், உங்கள் முகவரியையும் கூறினால், சரி தானா என்று, 'செக்' செய்து, உங்களுக்கு 25 சதவீதம் தள்ளுபடி கார்டு அனுப்புவோம். அதற்கு தான்...' என்றான். 'கார்டு வீட்டில் இல்லை; எனக்கு நம்பரும் தெரியாது; நீங்கள் எந்த வங்கியிலிருந்து பேசறீங்க, என் கணவர் பெயர் கூட கேட்கலையே...' என்று நான் கேட்டதும், உடனே போனை, 'கட்' செய்து விட்டான்.
பொதுவாக, கார்டு விஷயமாகப் பேசுவது என்றால், தாங்கள், எந்த வங்கியிலிருந்து பேசுகிறோம் என்பதையும், கார்டு ஹோல்டரின் பெயரைச் சொல்லி, அவர் இருக்கிறாரா என்று தான் ஆரம்பிப்பர். இவன் அழைத்த விதத்திலேயே, 'டுபாக்கூர்' என்று தெரிந்து விட்டது. நான் மட்டும், கார்டு எண், முகவரி எல்லாம் கொடுத்திருந்தால், அவன் செய்யும் தவறுக்கு, நானே, 'ரூட்' போட்டுக் கொடுத்தது போல் ஆகியிருக்கும். ஆகவே, பெண்மணிகளே... ஜாக்கிரதை. எந்த விவரமும், போனில், யாரிடமும் சொல்லி விடாதீர்கள்.
— எஸ்.ஹேமலதா,போரூர்.
எங்கே போயின மனித நேயம்...
டில்லி ஜந்தர் மந்தர் பகுதியில், மலையாளி ஒருவர், நடைபாதை ஓட்டல் நடத்தி வருகிறார். டில்லியில் சரவணபவன் ஓட்டலை அடுத்து, இந்த, நடைபாதை ஓட்டலில் தான், அதிக கூட்டம் இருக்கும். காரணம், நம்ம ஊர் இட்லி, தோசை, சாம்பார் வடைக்காகத் தான். அன்று, இரவு, ஒன்பது மணியளவில், நானும் என் தோழிகளும் அந்தக் கடையில், இட்லி சாப்பிட்டு முடித்து, சிறிது தூரத்திலிருந்த, ஐஸ்கிரீம் வண்டிக்காரரிடம், ஐஸ்கிரீம் வாங்கி, சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது தான், அந்தக் காட்சியை பார்த்தேன். இரண்டு கால்களும் இல்லாத, ஒரு வயதான மனிதர், கையில் சில்லரைகளை வைத்துக் கொண்டு, கடைக்கு வருவோர், போவோரிடம், இட்லி வாங்கி தரும்படி கேட்டு, காசை நீட்டிக் கொண்டிருந்தார். ஆண்கள், பெண்கள், இளையோர், முதியோர் என யாருமே, அவரை சட்டை செய்யவில்லை.
இத்தனைக்கும், அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த அனைவருமே, படித்தவர்கள், நாகரிகமானவர்கள், வசதியானவர்கள். எல்லாரும் தங்கள் தட்டுகளில் இருந்த உணவை, கோழி, தவுட்டை முழுங்குவது போல் முழுங்கிக் கொண்டிருந்தனரே தவிர, யாருக்கும் சக மனிதன் ஒருவன், பசித்த வயிற்றுடன், நம் உணவையே பார்க்கிறானே என்ற, எண்ணம் சிறிதும் இல்லை.
எங்கே போனது மனித நேயம்... புளிச்ச ஏப்பக்காரனை வலிந்து உபசரிப்பதும், பசித்த வயிற்றுக்காரனை பரிகசிக்கும் மனித சமூகத்தின் இழிந்த மனநிலை என்று தான் மாறுமோ தெரியவில்லை! பின், நாங்கள் வேகமாகச் சென்று, எங்கள் பணத்தில், அவருக்கு உணவு வாங்கிக் கொடுத்தோம்.
— ப.லட்சுமி, கோட்டூர்.

