தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/எதிரிகளை வீழ்த்த ஏழு வழிகள்!

எதிரிகளை வீழ்த்த ஏழு வழிகள்!

எதிரிகளை வீழ்த்த ஏழு வழிகள்!


PUBLISHED ON : அக் 16, 2016

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : அக் 16, 2016


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

எதிரிகளை கையாளத் தெரியாமல் சொதப்பி, மிக மோசமான பாதிப்புகளை அடைகிறவர்களையும், அவமானப்படுவோரையும் பார்க்கும் போது, பாவமாக இருக்கிறது.

'இப்படி அணுகியிருக்கலாமோ, அப்படி பேசியிருக்கலாமோ, ஒதுங்கி வழி விட்டிருக்கலாமோ...' என்றெல்லாம் மோசமான விளைவுகளை சந்தித்த பின், மனதிற்குள் மாநாடு போடுவர் பலர்.

எதிரியை, எதிரியாகவே அங்கீகரிக்காமல் இருப்பது, எதிரியை வீழ்த்த முதல் வழி, 'என்னையா வீழ்த்த பார்க்கிறாய்; உன்னை என்ன செய்கிறேன் பார்...' என்று முகத்திற்கு நேரே சவால் விடாமல் இருப்பதே புத்திசாலித்தனம். எதிரியை, சத்தமின்றி சாய்க்க வேண்டும்.

'துஷ்டனைக் கண்டால் தூர விலகு' என்பது, இரண்டாவது வழி; இது, வழிவழிப் பழமொழி. சிறிய, அகலமற்ற சாலையில் அடைத்தபடி வருகிறது ஒரு லாரி; ஒதுங்கி, வழி விடுவதே சிறந்தது. 'நானும், சாலை வரி கட்டுகிறேன்... நீ ஓட்டுனன்; நானோ, என் வண்டிக்கு உரிமையாளன்; நான் ஏன், உனக்கு ஒதுங்க வேண்டும். நீ ஒதுங்கு...' என்கிற மன கணக்கில், நாமும், சாலையின் நடுப்பகுதியில் தொடர்வது தவறு.

மூன்றாவது வழி... வம்பிற்கும், சண்டைக்கும், நம்மை சீண்டுபவர் பலர். இவர்கள், நம்மினும் பலவீனர்களாகவோ அல்லது சமமானவர்களாகவோ இருப்பர். உதாரணமாக, அலுவலகத்தில், சம பதவியில் இருப்பவராகவோ, உறவால் சகலையாகவோ, தொழிற்போட்டியாளர் என்றோ, வாகன ஓட்டுனரோ, எவராக இருந்தாலும், 'உன்னோடு மல்லுகட்டுவது என் வேலையல்ல; வீண் நேர விரயம்...' என்று மனதளவில் முடிவு செய்து, இத்தகையவர்களை அலட்சியம் செய்து விடுவது நல்லது.

இவர்களை அலட்சியப்படுத்திய அந்த கணமே, 'இவர்களை நாம் வெற்றி கொண்டு விட்டோம்...' என, நீங்கள் தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

அன்பால் அரவணைத்து சென்று விடுவது அடுத்த வழி!

'என்ன பிரதர் நீங்க... உங்க கிட்ட போய், நான் வம்பு செய்வேனா... வாங்க காபி சாப்பிடுவோம்...' என்கிற பாணியில், தோழமையுடன் அணுகினால், 'என்னய்யா இவன்... அரிவாளை காட்டினால், வெள்ளை, 'கர்ச்சீப்'பை காட்டுறான்...' என்கிற பாணியில், நம் பாதையிலிருந்து விலகி விடுவர், எதிரி.

பெருந்தன்மையோடு விட்டுக் கொடுப்பது, ஐந்தாவது பாணி; பங்காளிகளை, பகையாளிகளாக ஆக்கி கொள்ளாமலிருக்க, இவ்வழி நன்கு உதவும். 'ஒரே கருப்பையில் தோன்றினோம்; இன்று கருத்து மாறுபாடு கொண்டு நிற்கிறோம். போயிட்டுப் போறான் சின்னப் பய... நமக்கு எல்லாம் நல்லா இருக்கு; பாவம் அவன் கஷ்டப்படுறான்...' என்று, பெரியவர்கள் எண்ண வேண்டும்.

'வயசுல பெரியவரு விட்டுடுவோம்; அவரோட மோதுறது நமக்கு அழகில்ல; பெரிசா ஒண்ணும் கெட்டுப் போயிடாது...' என்று, வயதில் சிறியவர்கள் பார்வைகளை மாற்றிக் கொண்டால், எதிரிகளுள், பெரிய எதிரி காணாமல் போய் விடுவார்.

'இங்க பாருங்க... உங்களுக்கும் வேணாம், எனக்கும் வேணாம்; நடுக்கோடு பிடிப்போம் வாங்க...' என்று, எதிரியை உடன்படிக்கைக்கு அழைப்பது, அடுத்த வழி.

'நான் முதலில் விட்டுக் கொடுக்கிறேன் வா...' என்ற அணுகுமுறை, உறவு சீர்கேடுகளையும், கொடுக்கல், வாங்கல்களையும் மற்றும் வியாபாரத் தொடர்புகளையும் ஏகமாய் சரி செய்ய வல்லது. எப்போதாவது, நேருக்கு நேர் பார்த்துக் கொள்ள நேர்ந்தாலும், இருவரும், முகத்தை திருப்பிக் கொண்டு போகாமல், பார்த்து, சிரித்து நகர்ந்து விடுகிற நல்ல சூழலை உருவாக்குகிற நல்ல முறை இது!

ஏழாவது வழி, சரணடைவது... 'ஐயா... உங்க மதிப்பும், பலமும், மரியாதையும் தெரியாம, உங்களோட மோதி, கல்லுல மோதின, கண்ணாடிச் சில்லா ஆயிட்டேன்; என்னை விட்டுடுங்க சாமி; நான் தாங்கமாட்டேன்...' என்று காலில் விழா குறையாக, இறங்கி போய் விடவேண்டும்.

இறங்கிப் போவதை, சரணடைவதை, தாழ்ந்து போவதை மற்றும் விட்டு கொடுப்பதை, நாம் கேவலம் என்றோ, கவுரவ குறைச்சல் என்றோ கருத வேண்டாம்.

எதிரியை கீழே வீழ்த்த, அவன் உடலை மிதித்து நிற்பதையே, எதிரியை வெற்றி கொண்டதாக எண்ணும் பேதமை, நம்மிடமிருந்து நீங்க வேண்டும்.

சேதாரமில்லாத வெளியேறல், சமூக நன்மதிப்பு, இறுதி வெற்றி மற்றும் நமக்கே என்கிற புன்சிரிப்பு போன்றவற்றையும், எதிரியை வெற்றி கொண்டதற்கான ரகங்களில், தாராளமாக சேர்த்து விடலாம்!

- லேனா தமிழ்வாணன்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us