தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அவளும் இல்லை.... அவரும் இல்லை.. தேவதையாய் காப்பாற்றிய தேனீக்கள்...

அவளும் இல்லை.... அவரும் இல்லை.. தேவதையாய் காப்பாற்றிய தேனீக்கள்...

அவளும் இல்லை.... அவரும் இல்லை.. தேவதையாய் காப்பாற்றிய தேனீக்கள்...


PUBLISHED ON : செப் 01, 2013

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : செப் 01, 2013


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

'ஒரு படி ஏற... இரு படி சறுக்கும்' என்பர். துணிந்து நின்றால், எத்தனை படிகள் சறுக்கினாலும், வெற்றி பெறலாம் என்பதை மெய்ப்பித்து, சாதித்து வருகிறார், மதுரை வி.பி.எஸ். இயற்கைத் தேன் பண்ணை உரிமையாளர் ஜோஸ்பின். வாழ்வில், பல்வேறு சோதனைகளையும், சோகங்களையும் கடந்து, தேனீ வளர்ப்பில், தேசிய விருது உட்பட, 14 விருதுகளை குவித்திருக்கிறார்.

சிவகங்கை மாவட்டம் முத்துப்பட்டியில் தைனிஸ், செல்வராணி தம்பதியருக்கு மகளாக பிறந்த இவர், பிளஸ் 2 முடித்த கையோடு, செல்வராஜ் என்பவரை மணம் புரிந்தார். இரு குழந்தைகளுக்கு தாயான நிலையில், எம்.ஏ., வரலாறு எடுத்துப் படித்து, தன் கல்வித் தகுதியை, வளர்த்துக் கொண்டார்.

அனைத்தும் நன்றாக போய்க் கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டிருக்கையில், கணவரின் கடை வியாபாரம் கைவிரித்தது. இந்நிலையில், குடும்பச் சூழலைச் சமாளிக்க, 2005ல், சிறுதொழில் தொடங்க விரும்பியவருக்கு, மதுரை வேளாண் கல்லூரி யின், தேனீ வளர்ப்பு படிப்பு மீது பார்வை விழுந்தது. சிவகங்கையில், பத்து பெட்டிகளை கொண்டு, தேனீ வளர்ப்பை துவங்கினார்.

அதில் கிடைத்த லாபத்தையும், மேலும் ஒரு லட்சம் ரூபாய் கடனாக பெற்று, நூறு பெட்டிகளை வாங்கினார். அவரின் திறமையறிந்த தோட்டக்கலைத் துறை, விவசாயிகளுக்கு தேனீக்கள் உற்பத்தி செய்து வழங்குவதற்கு, ஒப்பந்தம் செய்தது. கிடைத்த வாய்ப்பை, வாழ்வில், உயர்வதற்கான படிக்கட்டாக நினைத்து, இரவு பகல் பாராமல் கடுமையாக உழைத்தார் ஜோஸ்பின்.

உழைப்பு கொடுத்த உத்வேகத்தில், 'இனி வாழ்வில், இனிமை மட்டுமே...' என, மகிழ்ந்த அவருக்கு, முதல் அடி விழுந்தது. தடகளத்தில் தடம் பதித்த, அவரது 13 வயது மகள் ஜெயபிரபா, கால் முறிந்து விழுந்தாள். மருத்துவமனை பரிசோதனையில், அக்குழந்தைக்கு, எலும்பு புற்றுநோய் இருப்பது தெரிய வந்தது.

குழந்தையின் உயிரை காப்பாற்ற, வீட்டை விற்று, சிகிச்சையளித்தார். சிகிச்சைக்காக குழந்தையுடன் நேரத்தை செலவிட, கடன் அதிகரித்தது. இரண்டு மாதம் கழித்து, மீண்டும் தேனீக்களை தேடிச் சென்றவருக்கு அங்கே அதிர்ச்சி காத்திருந்தது. பராமரிப்பின்றி, வளர்ப்பு பெட்டிகளுடன், தேனீக்களும், கரையானுக்கு இரையாகியிருந்தது.

சுற்றிலும் சோகம். மனம் தளராத ஜோஸ்பின், பெற்றோர் உதவியுடன், மீண்டும் புதிய பெட்டிகளுடன், தோட்டக்கலைத் துறையின் ஒப்பந்தத்தை, வெற்றிகரமாக நிறைவேற்றினார். ஒரு புறம் மகளுக்கு மருத்துவம், மறுபுறம் தொழிலில் கவனம் என, தமிழகத்தின் 21 மாவட்ட விவசாயிகளை சந்தித்து, இலவச பயிற்சி வழங்கி, தேனீ வளர்ப்பு மற்றும் விற்பனையை விரிவாக்கம் செய்தார்.

கடந்த, 2008ல், மதுரை கொண்டையாம் பட்டியில் 2.5 ஏக்கர் நிலம் வாங்கி, பண்ணை அமைத்தார். தொழில் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க, மாதத்தின் இரண்டாவது ஞாயிறில், தேனீ வளர்ப்பு குறித்த இலவச பயிற்சியும் அளித்தார். 2009ல், கடன் தொல்லையிலிருந்து படிப்படியாக மீண்ட போது, அடுத்த அடி விழுந்தது. சிகிச்சையிலிருந்த மகள், இறந்தாள்.

மகள் நினைவில், வீட்டில் முடங்கிய அவரை, கணவர் செல்வராஜ் தேற்றி, ஊக்கப்படுத்தினார். இம்முறை, வேலையில் தீவிரமானதுடன், தமிழகம் மட்டுமின்றி, கேரளாவிலும் கிளைகளை பரப்பி, பலருக்கு வேலையளித்தார். இந்நிலையில், உடல் நலம் பாதித்த கணவர் செல்வராஜ், உயிரிழந்தார்.

கண்ணுக்கு கண்ணாய் இருந்த மகளும், ஆறுதலாய் இருந்த கணவனும் மறைந்து போக, மகன் விஜய்யுடன் கண்ணீர் கடலில் தத்தளித்தார். ஆனாலும், மன உறுதியை கைவிடாத ஜோஸ்பின், தேனீ வளர்ப்பில் தனக்கிருந்த ஆர்வத்தை கைவிடவில்லை. அவருடைய இந்த நம்பிக்கை யும், உழைப்பும் அவருக்கு, 'சிறந்த பெண் தொழில் முனைவோர், பெண் சாதனையாளர், வேளாண் செம்மல், மனிதருள் மாணிக்கம், வேளாண் வித்தகர், சிறந்த பெண் விவசாயி' என, பல விருதுகளை பெற்று தந்தது. இவர் எழுதிய, 'தேனீ வளர்ப்பும், தொழில் முறையும், மற்றும் தேவதை(தேனீ) வளர்ப்பு' ஆகிய புத்தகங்கள், 'ஜானகி தேவி பஜாஜ் புரஸ்கார்' என்ற தேசிய விருதை இவருக்குப் பெற்றுத் தந்தன.

மகன் விஜய்க்கு, தேனீக்களுடன் ஏற்பட்ட நெருக்கத்தால், முகத்தில் தேனீக்களை மொய்க்க விட்டு, 12 வயதில், கின்னஸ் சாதனை புரிந்தான். சோகக் கடலை நீந்தி, தடைகளை தாண்டி, ஒவ்வொரு படியும் கசப்பாய் இருந்தாலும், தேனீக்களுடன் பயணிக்க வேண்டும் என்பதில் உறுதியாய் இருந்ததே, அவர் வாழ்க்கை தித்திக்க காரணமானது. 'என் வாழ்க்கைக்கு வரம் தந்த அந்த தேன் தேவதைகளுக்கு(தேனீ), என்றும் கடமைப் பட்டுள்ளேன்...' என்கிறார், ஜோஸ்பின்.

ஜோஸ்பினுடன் தொடர்பு கொள்ள: 98655 55047.

***

ஆர். ஆனந்த்

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us