sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 09, 2025 ,கார்த்திகை 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

இணைப்பு மலர்

/

வாரமலர்

/

தாயாய் அவள்!

/

தாயாய் அவள்!

தாயாய் அவள்!

தாயாய் அவள்!


PUBLISHED ON : ஜூலை 21, 2019

Google News

PUBLISHED ON : ஜூலை 21, 2019


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அதிகாலையில் அலாரம் ஒலித்ததும், நடை பயிற்சிக்கு தயாரானார், ராகவன்.

வீட்டில் அனைவரும், உறங்கிக் கொண்டிருந்தனர். தெருவின் மற்ற வீடுகளில், வாசல் தெளித்து, கோலம் போடப்பட்டிருந்தது.

'மனைவி மட்டும் உயிரோட இருந்திருந்தா, வெள்ளிக்கிழமையும் அதுவுமா, இப்படியா இருக்கும் வீடு... அவளுக்கு இணையா, பொறுப்பான ஒரு பெண்ணை பார்த்து, இளையவன், சரவணனுக்கு முடிச்சிடணும்...' மனசுக்குள் எண்ண அலைகளை சுமந்தபடி, நடை பயிற்சி முடித்து, வீட்டுக்குள் நுழைந்து, காபியை எதிர்பார்த்து காத்திருந்தார், ராகவன்.

அப்போது, மூத்த மகன் கண்ணன், ''சரவணா... ரம்யாவுக்கு உடம்பு முடியாததால, இன்னக்கி சமைக்க முடியல; ஓட்டல்ல சாப்பிட்டுக்கோ... அப்படியே, குழந்தையை பள்ளியில விட்டுட்டுப் போயிடு,'' என, மகளை தயார் செய்தான்.

''பரவாயில்லண்ணே... நீங்க, அண்ணிய, மருத்துவமனை அழைச்சிட்டுப் போங்க... நான் பார்த்துக்கறேன்,'' அவசரமாய் கிளம்பி வந்தான், சரவணன்.

செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தார், ராகவன்.

''அப்பா... காபி சாப்பிட்டீங்களா... போட்டு எடுத்து வரவா?'' என்றான், சரவணன்.

''வேண்டாம்பா... நீ புறப்படு,'' என்று சொல்லி, மீண்டும் செய்தித்தாளில் மூழ்கினார்.

சிறிது நேரத்தில், கண்ணனும், ரம்யாவும், மருத்துவமனைக்கு கிளம்பினர்.

வாசலில் அழைப்பு மணி சத்தம், இருமுறை தொடர்ந்து கேட்டது. வெளியே எட்டிப் பார்த்தார், ராகவன்.

அவரது நெருங்கிய நண்பர் நின்றிருந்தார்.

''டேய்... உள்ள வாடா,'' வரவேற்பறையில் உட்கார வைத்து, செய்தித்தாளை கையில் கொடுத்தார்.

பின், சமையறைக்கு சென்று, இரு கோப்பைகளில் காபியோடு வந்தார்.

''டேய்... எனக்கு, ரொம்பப் பசிக்குதுடா... எங்காவது, ஓட்டலுக்கு அழைச்சு போயேன்,'' என்று, ராகவன் கூறியதும், அதிர்ச்சியில் கடிகாரத்தை பார்த்தார், நண்பர்.

மணி, 10:00.

''டேய்... இன்னும் நீ சாப்பிடலையா?''

''நேரத்துக்கு சாப்பிட்ட காலமெல்லாம், மனைவியோட போச்சுடா... கொடுக்கற நேரத்துக்கு, எதையாவது சாப்பிட்டு பழகிட்டேன்... ஆசைப்பட்ட எதையும் சாப்பிட முடியல,'' விரக்தியில் பேசிய, ராகவனை கவனித்தார், நண்பர்.

கண்களில் லேசாக கண்ணீர் துளிர்த்திருந்தது. முகத்தில் அப்பியிருந்த சோகமும், வேதனையும், நண்பரின் மனதை ரணமாக்கியது. எதுவும் கேட்காமல் ராகவனை அழைத்து, ஸ்கூட்டரை ஓட்டலுக்கு செலுத்தினார்.

''டேய், ராகவா... என்ன சாப்பிடறே?''

''எதை பார்த்தாலும், சாப்பிட ஆசையா இருக்குடா... நீ, எதையாவது சொல்லு... எல்லாமே எனக்கு பிடிச்சதாத்தான் இருக்கும்,'' ராகவன் வீட்டின் தற்போதைய நிலையை, அவரது வார்த்தைகளில் உணர முடிந்தது.

சற்று நேரத்தில், 'ஆர்டர்' கொடுத்த, மசால் தோசை வந்தது. சாப்பிட்டபடியே, ''நாம நினைக்கறதெல்லாம் நடந்துட்டா, அது வாழ்க்கையில்லடா... பல நேரங்கள்ல வாழ்க்கையில், நாம தோற்கடிக்கப் படுகிறோம். என் நிலை, இப்போ அப்படித்தான்!''

''ராகவா... நீ ஒரு விளையாட்டு வீரன். இப்படி பேசலாமா... என்ன செய்யலாம்ன்னு யோசி... எல்லாத்துக்கும் ஒரு தீர்வு இருக்கும்.''

''உடனே, சரவணனுக்கு, ஒரு நல்ல பொண்ணா பார்த்து முடிச்சிடணும்டா... அது முடிஞ்சிட்டா, நிம்மதியா போய் சேர்ந்துடுவேன்.''

''ஏண்டா விரக்தியா பேசற; அஞ்சு விரலும் ஒரே மாதிரியாவா இருக்கு... உனக்கு, துணையா நான் இருக்கேன்டா... எதுக்கும் கவலைப்படாத... சரவணனுக்கு, பொண்ணு பாக்கற வேலைய எங்கிட்ட விட்டுடு,'' என, நண்பர் சொன்னதும், ராகவன் முகத்தில் ஒரு தெளிவு பிறந்தது.

ராகவனை, வீட்டில் விட்டு விடைபெற்றார், நண்பர்.

அமைதியாய் நாற்காலியில் சாய்ந்திருந்தார், ராகவன். ஒரு மாதத்திற்கு முன், வீட்டில் நடந்ததை, சற்று, பின்னோக்கி அசை போட்டார்...

அன்று ஞாயிற்றுக்கிழமை-

வழக்கம் போல், நடை பயிற்சி முடித்து, காபிக்காக காத்திருந்தார், ராகவன்.

அந்நேரம், மூத்த மகன், கண்ணன் அறையிலிருந்து, மருமகள், ரம்யா அழும் சத்தம் கேட்டது. திருமணமாகி வீட்டுக்கு வந்ததிலிருந்து, அவ்வப்போது கேட்கும் விசும்பல் சத்தத்தை விட, அன்று, சத்தம் சற்று பலமாகவே இருந்தது. என்ன நடந்தது என கேட்டறிய, பதற்றமாய் எழுந்து அறையை நோக்கி நடந்தார்.

'இந்த வீட்டுக்கு வந்ததிலிருந்து, தனிக்குடித்தனம் போயிடலாம்ன்னு சொல்லிக்கிட்டிருக்கேன்... கொஞ்சம் கூட, நீங்க காதுல வாங்கினபாடில்ல... வேலைக்கும் போயிக்கிட்டு, வீட்டு வேலைகளையும் என்னால பார்க்க முடியலைங்க...

'காலத்துக்கும், என்னால கஷ்டப்பட முடியாதுங்க... மொதல்ல, உங்கப்பாகிட்ட சொத்த பிரிச்சு கேளுங்க... நாம நிம்மதியா இருக்கலாம்...' என்ற, மருமகளின் வார்த்தைகள், காதில் விழ, நிலை குலைந்தார், ராகவன்.

நீண்ட நேரம் யோசித்த பின், கண்ணனையும், ரம்யாவையும் அழைத்து, 'ரம்யா... சரவணன் கல்யாணம் வரை கொஞ்சம் பொறுத்துக்கோம்மா... முடிஞ்சதும், நீங்க நினைக்கற மாதிரி, நானே எல்லாத்தையும் செய்து தரேன்...' என்று உறுதியாக சொன்னதும்... முந்தானையால் கண்களை துடைத்தபடி, கணவனை நோக்கினாள், ரம்யா.

ராகவனின் முகத்தைப் பார்க்க தைரியமின்றி, கூனிக்குறுகி நின்றிருந்தான், கண்ணன்.

கைப்பேசி அலறும் சத்தம் கேட்டதும், நிகழ் காலத்துக்கு வந்தார். ராகவனின் நண்பர் தான், போன் செய்திருந்தார்.

''சொல்லுடா... இந்த வாரமேவா... சரிடா, நீ சொன்னா, அது நல்ல இடமாத்தான் இருக்கும். முடிஞ்சா, பெண்ணோட புகைப்படத்தை கேட்டு வாங்கி வாயேன்,'' பேசி நிம்மதியடைந்த ராகவன், கண்ணனை அழைத்தார்.

''ஞாயிற்றுக்கிழமை, சரவணனுக்கு பெண் பார்க்கப் போகணும். இப்போ தான், என் நண்பர் தகவல் சொன்னார். ரம்யாகிட்ட சொல்லிடு,'' என்றார்.

'எப்படியாவது, எதையாவது முடித்து, வீட்டை விட்டு தனிக்குடித்தனம் போக வேண்டும்...' என்ற எண்ணத்திலிருந்த, ரம்யாவுக்கு, இச்செய்தி தேனாய் இனித்தது.

அன்று மாலையே, பெண் புகைப்படத்துடன் வந்தார், நண்பர்.

''பொண்ணு, நல்லா இருக்காடா... நம், சரவணனுக்கு பொருத்தமாத்தான் இருப்பா,'' மூவரையும் அழைத்தார். முதலில், சரவணனிடம் புகைப்படத்தை காட்டினார்.

''நீங்க எல்லாரும் சேர்ந்து, எந்த முடிவு எடுத்தாலும், எனக்கு சரி,'' என்றான், யதார்த்தமாய்.

கண்ணனிடம் புகைப்படத்தை வாங்கிய, ரம்யா, அதை சரியாக கூட பார்க்காமல், 'அப்பாடா... ஏதாவது ஒண்ணு முடிஞ்சா சரி...' என, நிம்மதியடைந்தாள்.

ஞாயிற்றுக் கிழமை குறிப்பிட்ட நேரத்தில் அனைவரும், பெண் வீட்டுக்கு சென்றனர். வாசலில் காத்திருந்தார், ராகவனின் நண்பர். உள்ளே அழைத்துச் சென்று, பெண் வீட்டாருக்கு அனைவரையும் அறிமுகம் செய்து வைத்தார்.

சற்று நேரத்தில், காபியுடன் வெளியே வந்த, கயல், அனைவருக்கும் கொடுத்ததும், ஓரமாக நின்றாள். வெளிப்பூச்சில்லா ஒப்பனையில் இருந்த அவளிடம், கூச்சமும், அடக்கமும் அதிகம் இருந்தது.

''கயல்... பெரியவங்க காலில் விழுந்து, ஆசீர்வாதம் வாங்கிக்கோ,'' என்றார், அவளது தந்தை.

''அதெல்லாம் வேணாங்க... திருமணத்தின்போது, நிறைய பேர்கிட்ட ஆசீர்வாதம் வாங்க வேண்டியிருக்கும்... இப்பவே, கயலை கஷ்டப்படுத்தாதீங்க,'' என்றார், ராகவன்.

அவரது பேச்சிலிருந்து, பெண்ணை அனைவருக்கும் பிடித்து விட்டது என்பதை அறிந்த, கயல் முகத்தில், மகிழ்ச்சி ரேகைகள் தெரிந்தன.

ஏதோ சொல்ல முற்பட்டாள், கயல்.

இதையறிந்த, ராகவன், ''எதுவா இருந்தாலும் தயங்காம சொல்லும்மா!''

''யாரும் தப்பா நினைக்க வேணாம்... கல்யாணத்துக்கு பிறகு, நான் பார்க்கற வேலைய விட்டுடப் போறேன்,'' என்று, தயக்கமின்றி தெளிவாய் சொன்னாள்.

''இதுல என்னம்மா தயக்கம்... உன் விருப்பப்படியே செய்,'' என்றார், ராகவன்.

'அப்பாடா... வீட்டு வேலைக்கு, இலவசமா ஒரு ஆள் கிடைச்சாச்சு... இனி, நாம தைரியமா தனி குடித்தனம் போயிடலாம்...' என, ரம்யாவின் மனம், மகிழ்ச்சியில் திளைத்தது.

சற்று நேரத்தில், தாம்பூலம் மாற்றப்பட்டு, திருமண நாளும் குறிக்கப்பட்டது.

காலம் விரைவாய் கடந்தது. எதிர்பார்த்ததை விட, திருமணம், மிகச்சிறப்பாக நடந்தேறியது.

ராகவன் வீட்டின் மருமகளாய், கயல் காலடி எடுத்து வைத்த மறுநாள் காலை, படுக்கையிலிருந்து அனைவரும் எழும் முன், அடுக்களையில் சமையல் பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. எழுந்து வந்து பார்த்தார், ராகவன். குளித்து முடித்து, பரபரப்பாய் சமையல் வேலையில் இருந்தாள், கயல்.

''என்னம்மா, கயல்... இவ்வளவு காலையிலயே,'' என்றார்.

''எங்க வீட்டு பழக்கம், மாமா... அப்படியே பழகிப் போச்சு... ஆமா, உங்களுக்கு, காபியா, டீயா... சர்க்கரை அளவு எப்படி இருக்கணும்... இன்னக்கி, என்ன டிபன் வேணும்,'' அடுக்கடுக்காய் கேள்விகள் வந்தாலும், பதில் ஏதும் சொல்லாமல், மலைத்து நின்றார், ராகவன்.

மனைவி மறைந்து நீண்ட நாட்களுக்கு பிறகு, அடுப்பங்கரை மீண்டும் புத்துயிர் பெற்றிருந்ததை நினைத்து, பூரித்துப் போனார்.

காபியை அருந்தியபடியே தினசரியில் மூழ்கினார், ராகவன்.

காலை, 8:00 மணியளவில், வேலைக்கு புறப்பட தயாரான, ரம்யா, ''என்னங்க... நாம நினைச்ச மாதிரி, உங்க தம்பிக்கு கல்யாணமும் முடிஞ்சிடுச்சு... ஆனா, உங்க அப்பாகிட்ட சொத்தை பிரிப்பது பற்றியும், தனி குடித்தனம் போவது பற்றியும், இனி தைரியமா பேசலாமே,'' என்றபடியே, அறையை விட்டு வெளியே வந்ததும், மலைத்து நின்றாள்.

வழக்கத்திற்கு மாறாக வீடு, சுத்தமாய் இருந்தது. காலையிலேயே, 'வாஷிங்   மிஷின்' இயங்கும் சத்தம் கேட்டது. காலை, சிற்றுண்டியும், மதிய உணவு கூடைகளும், மேசையில் தயாராய் இருந்தன.

எல்லாரையும் ஒன்றாக அமர வைத்து, சிற்றுண்டி பரிமாறினாள், கயல். இடையே, குழந்தைக்கும் நிதானமாய் ஊட்டி விட்டாள்.

''கயல்... நீயும் உட்கார்ந்து சாப்பிடும்மா,'' என்றார், ராகவன்.

''வேண்டாம், மாமா... வீட்டுலதானே இருக்கேன்... பிறகு சாப்பிட்டுக்கறேன்,'' என்றதும், ஏதோ, ஆழ்ந்த சிந்தனையில் இருந்த, ரம்யா, அலுவலகம் புறப்பட்டாள்.

வெளியே ஆட்டோ சத்தம் கேட்டதும், குழந்தையை பள்ளிக்கு வழியனுப்பி வைத்தாள், கயல். தனியாக இருந்த மனைவியிடம், ''கயல்... சாயங்காலம் வரும்போது, உனக்கு ஏதாவது வாங்கி வரவா... என்ன பிடிக்கும்ன்னு சொல்லு,'' என்றான், சரவணன்.

''வீட்டுல காய்கறி ஏதும் இல்ல... குழந்தைக்கு, சாப்பிட நல்லதா... அப்புறம், மறக்காம, மாமாவுக்கு பழங்கள் வாங்கி வாங்க,'' அவளுக்கென்று ஏதாவது கேட்பாள் என்று எண்ணியவனுக்கு, ஏமாற்றமே மிஞ்சியது.

''சரி!'' என, தலையை ஆட்டியபடி, அலுவலகம் புறப்பட்டான், சரவணன். அதன் பிறகு, வீடே வெறிச்சோடிப் போனது.

மாலை, 5:00 மணி -

அலுவலக வேலை முடிந்து, கண்ணனும், ரம்யாவும் வீடு திரும்பினர். துவைத்த துணிகள் மடித்து வைக்கப்படிருந்தன. சமையலறையில், பாத்திரங்கள் சுத்தமாய் கழுவி, அடுத்த வேளை சமையலுக்கு தயாராய் இருந்தன.

ஈஸி சேரில் அமர்ந்தபடி, அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்தார், ராகவன்.

சற்று நேரத்தில், மனைவி சொன்ன அனைத்தையும் வாங்கி, வீட்டுக்குள் நுழைந்த சரவணன், கயலை தேடினான். குழந்தையோடு இருந்தாள், அவள்.

வழக்கமாக, மொபைல்போனில் விளையாடும் குழந்தை, சீருடை மாற்றி, தலை சீவி, அலங்காரமாய், பள்ளிப் பாடங்களை எழுதிக் கொண்டிருந்தாள். அருகே, சிற்றுண்டியை கொடுத்தபடி, அவளுக்கு உதவிக் கொண்டிருந்தாள், கயல். வீட்டில், ஒரே நாளில் ஏற்பட்ட பல மாற்றங்களை அனைவராலும் உணர முடிந்தது.

இரவு, சமையலறையில் பரபரப்பாய் இயங்கி கொண்டிருந்தாள், கயல். உதவிக்கு போனாள், ரம்யா.

''அக்கா... களைப்பா வந்திருப்பீங்க... போய் ஓய்வெடுங்க,'' என்றாள், யதார்த்தமாய்.

அரைமணி நேரத்தில் மேஜையில், இரவு உணவு தயாராய் இருந்தது. நீண்ட காலத்துக்கு பின், ருசியான உணவருந்திய திருப்தியில், மருமகளை மனதார வாழ்த்தினார், ராகவன்.

அன்று ஞாயிற்றுக் கிழமை-

ஏற்கனவே, ரம்யாவுக்கு கொடுத்த வாக்குப்படி, பிள்ளைகள் இருவருக்கும்

பிரித்த சொத்து உயிலை, அவர்களிடம் கொடுக்க,

தயாராய் இருந்தார், ராகவன்.

அப்போது, வாசலில் அழைப்பு மணி ஓசை கேட்டது. கயலின் தோழி நின்றிருந்தாள். ''உள்ளே, வா!'' என, வரவேற்றாள்.

காபி அருந்தியபடியே, ''ஏய், கயல்... என்னாச்சு உனக்கு... கல்யாணத்துக்கு பிறகு, ரெண்டு வாரமா, நீ வேலைக்கு வரவேயில்லை,'' என்றாள், தோழி.

''இனி, வேலைக்கு வரமாட்டேன்... வேலையை விட்டுட்டேன்!''

''என்னடி சொல்ற?''

''ஆமாண்டி... பிறக்கும்போது, நாம ஒவ்வொருத்தரும் எடுத்து வந்ததெல்லாம், வாழும் காலமாகிய, நேரம் மட்டும் தான். அதை, உறவுகளோடு கழிப்பதை விட, வேறெதுவும் இல்லை. சுயநலமில்லாம உறவுகளை நேசித்து, வாழ்க்கையை அதன் இயல்போடு வாழ ஆசைப்படறேன்!''

''அதுக்காக... நல்லா சம்பாதிக்கற வேலையை வேண்டாம்ன்னு விட்டுடுவியா?''

''எனக்கு, இங்க என்னடி குறை... கணவர், நல்லா சம்பாதிக்கிறார். பண்பான, மாமனார். வழிகாட்ட, நல்ல ஓரகத்தி. 'சித்தி'ன்னு செல்லமா கூப்பிட, ஒரு குழந்தை... இப்படி ஒரு குடும்பம் எனக்கு கிடைச்சிருக்கு. ஒண்ணு சொல்லவா... நம் வருமானம் என்பது, நமக்கான செருப்பை போன்றது. சின்னதா இருந்தா, இறுக்கிப் பிடிக்கும். அதுவே, பெருசா இருந்தா, தடுமாறச் செய்யும்.

''இந்த வாழ்க்கை, எனக்கு பொருத்தமா இருக்குடி... கொஞ்ச நாளுக்கு பின், படித்த படிப்பு வீணாகாமல், வீட்டிலிருந்தபடியே, சுயதொழில் ஏதாவது செய்வேன். என்னையும் உயர்த்தி, என்னை சார்ந்தோருக்கும் எந்தவித குறையும் ஏற்படாமல் வாழப் போறேன்டி,'' தீர்க்கமாய் பேசிய கயலை, கை குலுக்கி, வாழ்த்தி விடைபெற்றாள், தோழி.

அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்த, ரம்யா, குற்ற உணர்வில், கூனிக் குறுகினாள்.

இவ்வளவு நாளாய், தனிக் குடித்தனம் போயே ஆக வேண்டும் என்றும், வேலைக்குச் சென்று சம்பாதிக்கிறேன் என்றும், அகந்தையாய் சொல்லித் திரிந்த, ரம்யாவின் நெற்றிப் பொட்டில், யாரோ அறைந்தது போல இருந்தது.

சில காலமாய், மனதில் இருந்த வலி குறைந்ததை உணர்ந்த, ராகவன், ''இப்போது, இதுக்கு வேலையில்லை!'' என்று சொல்லியபடியே, சொத்து உயிலை, அலமாரியின், 'லாக்கரில்' வைத்து பூட்டினார்.

பூபதி பெரியசாமி






      Dinamalar
      Follow us