ஷாரூக்கான் - விஜய் கலக்கல் ஆட்டம்!
நடிகர் விஜய் நடனத்திற்கு, தென் மாநில நடிகர்கள் மட்டுமின்றி, 'பாலிவுட்' நடிகர், ஷாரூக்கானும் ரசிகர். இந்நிலையில், விஜய் நடிக்கும், பிகில் படத்தை இயக்கி வரும் அட்லி, இப்படத்தில், விஜய்யுடன் ஒரு பாடலில், ஷாரூக்கானை நடனமாடுமாறு கேட்க, அவரும், சம்மதம் சொல்லி இருக்கிறார். ஆக, ஒரே பாடலில், 'பாலிவுட்' ஸ்டாரும், 'கோலிவுட்' ஸ்டாரும் ஆட்டம், பாட்டம் என்று கலக்கப் போகின்றனர்.
— சினிமா பொன்னையா
குட்டை பாவாடையில், ரகுல் பிரீத் சிங்!
குட்டை பாவாடை நடிகையாக உருவெடுக்க, தயாராக இருப்பதாக, சில இயக்குனர்களிடம் கூறி வந்தார், ரகுல்பிரீத் சிங். ஆனால், 'உன் உடலமைப்பு, அதற்கு ஒத்து வராது...' என்று இயக்குனர்கள், வாய்ப்பு தர மறுத்து விட்டனர். இதனால், ஆத்திரமடைந்தவர், தற்போது, குட்டை பாவாடை அணிந்து, 'போட்டோசெஷன்' நடத்தி, கிறங்க வைக்கும், 'ஆல்பம்' ஒன்றை, மேற்படி இயக்குனர்களுக்கு அனுப்பியுள்ளார். மேலும், 'குட்டை பாவாடைக்கென்றே பிறந்த நடிகை நான் என்பதை, இப்போதாவது புரிந்து கொள்ளுங்கள்...' என்றும், சொடக்கு போட்டுள்ளார்.
- எலீசா
கவர்ச்சி அம்மனாக, காஜல் அகர்வால்!
ஹன்சிகா, மஹா படத்தில், அகோரியாக நடித்தபோது, இந்து அமைப்புகளின் எதிர்ப்பால், சர்ச்சையானது. இதனால், அடங்கிக் கிடந்த, ஹன்சிகாவின் மார்க்கெட் எகிறியது. அதைப்பார்த்து, இப்போது, காஜல் அகர்வாலும், பெயரளவிலாவது பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, கோமாளி படத்தில், கவர்ச்சி உடையில், அம்மன், 'கெட் - அப்'பில் நடித்துள்ளார். ஆனால், இந்த போஸ்டரை, யாருமே கண்டுகொள்ளவில்லை. இதனால், 'ஒரே போஸ்டர், என்னை பரபரப்பின் உச்சத்துக்கு அழைத்து சென்று விடும் என்று பார்த்தால், இப்படி புஸ்வாணமாகி விட்டதே...' என்ற கவலையில் இருக்கிறார், காஜல் அகர்வால்.
- எலீசா
அதிரடியில் , ரித்திகா சிங்!
குத்துச்சண்டை வீராங்கனையான, ரித்திகா சிங், இறுதிச்சுற்று படத்தில், அதே வேடத்தில் நடித்தார். இப்போது, பாக்சர் என்ற படத்திலும், குத்துச்சண்டை வீராங்கனையாகவே நடிக்கிறார். அதோடு, இந்த படத்தில், குத்துச்சண்டை வீராங்கனை போலவே களமிறங்கி, எதிரியை துவம்சம் செய்யும் காட்சிகளும் இடம் பெறுகின்றன. அதனால், முதல் படத்தை விட, இந்த படத்தில் அதிரடியான குத்துச்சண்டை காட்சிகளில் வரிந்துகட்டப் போவதாக சொல்கிறார். கிடந்த கிடைக்கு, நடந்த நடை மேல்!
- எலீசா
ரஜினி படத்தில், திருநங்கை ஜீவா!
திருநங்கையர் மீது நன்மதிப்பை கொண்டிருப்பவர், விஜயசேதுபதி. அதனால் தான், சூப்பர் டீலக்ஸ் படத்தில், அவர்களின் பிரச்னைகளை சொல்லும் விதமாக, ஷில்பா என்ற திருநங்கையாக நடித்தார். அதோடு, தன் படங்களில், ஜீவா உள்ளிட்ட, சில திருநங்கையரையும் நடிக்க வைத்துள்ளார். அப்படி, விஜயசேதுபதியின், தர்மதுரை படத்தில் அறிமுகமான திருநங்கை, ஜீவா, தற்போது, ரஜினி நடித்து வரும், தர்பார் படத்தில் நடிக்கும் அளவுக்கு உயர்ந்துள்ளார். அதையடுத்து, ஜீவாவை மென்மேலும் வளர, வாழ்த்து தெரிவித்துள்ளார், விஜயசேதுபதி.
—சினிமா பொன்னையா
சப்பாணியாக ஆசைப்படும் விக்ரம்!
ஒவ்வொரு கதாபாத்திரங்களுக்காகவும், தன் உடலை வருத்தி நடிக்கக் கூடியவரான, விக்ரம், கமலின் தீவிரமான ரசிகர். 'படிக்கிற காலத்திலேயே, கமல் நடிப்பைப் பார்த்து தான், என்னை வளர்த்துக் கொண்டேன். 16 வயதினிலே படத்தில், கமல் நடித்தது போன்று, சப்பாணியாக நடிக்க வேண்டும் என்பது, நீண்ட கால ஆசை. அந்த கேரக்டர், என்னை அந்த அளவுக்கு பாதித்துள்ளது...' என்கிறார், விக்ரம்.
—சினிமா பொன்னையா
கறுப்புப்பூனை!
* மெரினா நடிகருக்கு, 'சூப்பர் ஹிட்'டாக அமைந்த படங்களில் நடித்த, அந்த வாரிசு நடிகையை, சமீப காலமாக அவர், கழட்டி விட்டு வந்தார். மெகா நடிகையர் பக்கம் சாய்ந்து, தன்னை கண்டு கொள்ளாமல் இருந்ததால், அவர், மீது கடுப்பில் இருந்தார், வாரிசு நடிகை. தற்போது, நடிகரின் சில படங்கள், காலை வாரி விட்டதால், மறுபடியும் வாரிசு நடிகை பக்கம் சாய்ந்துள்ளார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்ள நினைத்த நடிகையோ, 'உங்களுடன் நடித்த, மெகா நடிகைகளுக்கு இணையாக, எனக்கும் சம்பளம் பெற்றுத் தந்தால் மட்டுமே மீண்டும் நடிப்பேன்...' என்று, நடிகருக்கு, 'செக்' வைத்து, தொடர்ந்து, 'டீலில்' விட்டு வருகிறார்.
'சிவகார்த்திகேயன் - கீர்த்தி சுரேஷ் நடித்த, ரெமோ படத்துக்கு போகலாமாடி. படம் வெளியான போது, நமக்கு தேர்வு இருந்ததாலே, போக முடியல... இப்ப திரும்பவும், நம்மூர் தியேட்டரில் போட்டிருக்காங்க; வாடி, போகலாம்...' என்றாள், தோழி.
சினி துளிகள்!
* மலையாளத்தில் மோகன்லால் நடிக்கும், மரக்கார் அரபிக்கட லின்னே சிம்ஹம் என்ற படத்தில் நடிக்கிறார், கீர்த்தி சுரேஷ்.
அவ்ளோதான்!

