நன்கு படித்தவர் ஒருவர், வாயைத் திறந்தால், அறிவுரைகளும், அறவுரைகளும் அருவியாக கொட்டும். ஊரார் அனைவரும் அவரைப் பண்டிதர் என்றே அழைத்தனர்.
ஒருசமயம், அந்த பண்டிதர், தன் வீட்டு வாசலில், நெல் காயப் போட்டு இருந்தார்.அச்சமயம், அவ்வழியே வந்த பசு மாடு ஒன்று, நெல்லைத் தின்றது. இதை பார்த்ததும் பண்டிதருக்கு, கோபம் தாங்கவில்லை. குச்சியை எடுத்து தன் முழுப்பலத்தையும் பிரயோகித்து, பசு மாட்டை அடித்தார். அடிபட்ட மாடு, துடிதுடித்து இறந்தது.
இதை பார்த்து வருந்தினர், ஊர் மக்கள்.
'என்ன பண்டிதரே... இப்படிச் செய்து விட்டீர்களே... பசுவைக் கொல்வது, பெரும்பாவம் என்பது, உங்களுக்குத் தெரியாதா... இந்தப் பாவம் தீர, ஏதாவது பரிகாரம் செய்யுங்கள்... இல்லாவிட்டால், கடுமையான நரகம் தான் கிடைக்கும்...' என்றனர்.
பண்டிதருக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது; சமாளிக்கத் துவங்கினார்...
'நான் எதையும் செய்யவில்லை. எல்லாம் சிவன் செயல். அவன் செயல் இல்லாமல், ஒரு துரும்பைக் கூட நம்மால் அசைக்க முடியாதே... பசுவிற்கு ஆயுசு அவ்வளவு தான்; இதற்கு யார் தான், என்னதான் செய்ய முடியும்?' என்றார்.
ஊரார் திகைத்தனர். 'ப்ச்... இவரைப் போய், மெத்த படித்த பண்டிதர் என்று, எல்லாரும் சொல்கின்றனரே... இவர் அறிவு இவ்வளவுதானா...' என்று தங்களுக்குள் பேசியபடியே கலைந்து சென்றனர்.
சில நாட்கள் ஆகின. ஆதியும், அந்தமும் இல்லாத அரும்பெரும் ஜோதியான, சிவபெருமான், கிழவர் வடிவத்தில், பண்டிதர் வீட்டிற்கு வந்தார். 'பண்டிதரே... பக்கத்து ஊருக்கு போகிறேன். வழியில் சிறிது இளைப் பாறலாம் என்று, உன் வீட்டிற்கு வந்தேன்...' என்றார்.
பண்டிதரும் ஒப்புக் கொண்டார். அவரும், கிழவருமாகப் பேசிக் கொண்டிருந்தனர். சற்றுநேரம் ஆனதும், கிழவருக்கு, வீட்டைச் சுற்றிக் காட்டினார், பண்டிதர். பார்த்த ஒவ்வொன்றையும் பாராட்டினார், கிழவர்.
பண்டிதருக்குப் பெருமை பிடிபடவில்லை, 'எல்லாம் நானே பார்த்துப் பார்த்துக் கட்டினேன். திட்டம் போட்டு கட்டி முடித்தேன். என் தந்தை காலத்தில், இது, சின்னஞ்சிறிய குடிசையாக இருந்தது. நான் தான் இப்படிப் பெரிதாக கட்டி முடித்தேன்...' என்று, தற்பெருமையைப் பரக்க வி(வ)ரித்தார்.
பண்டிதர் கூறியதை பொறுமையாகக் கேட்ட, கிழ வடிவில் வந்த சிவபெருமான், 'அப்படியா... பெருமை பாராட்டிக் கொள்ளும் இதையெல்லாம் செய்தது நீ... ஆனால், பசு மாட்டைக் கொன்றது மட்டும், சிவன் செயலாக்கும்...' என்று கேட்டு, மறைந்தார்.
பண்டிதருக்கு, சுருக்கென்றது. வந்தவர், சிவபெருமான் என்பதை உணர்ந்தார். அவருக்குத் தன் தவறு புரிந்தது.
'கொள்ளு என்றால், வாயைத் திறக்கும் குதிரை, கடிவாளம் என்றதும், வாயை மூடிக் கொள்வதைப் போல, நாம் நடந்து கொண்டோமே!
'பசுவைக் கொன்ற பாவத்தை ஏற்க மறுத்த நாம், அலங்காரமான வீடு கட்டியது நான் என்று பெருமை பாராட்டிக் கொண்டது, எவ்வளவு, பெரிய தவறு... செய்த தவறை சுட்டிக்காட்டி விட்டது, தெய்வம். இதற்குமேல் நாம் திருந்தாவிட்டால், தெய்வத்தால் கூட நம்மை கட்டிக் காப்பாற்ற முடியாது...' என்று, பசுமாட்டைக் கொன்ற பாவத்திற்குப் பரிகாரம் செய்யப் போனார்.
கூடவே, 'நாம், இந்த பாவம் செய்யக் காரணம், கோபம் தானே... இனி, கோபத்தையும் தவிர்க்க வேண்டும்...' என்று முடிவெடுத்தார்.
அனைத்தும் தெய்வச் செயல் என்று ஆத்மார்த்தமாக உணர்ந்து கொண்டோர், அணு அளவு கூட அகங்காரத்திற்கு இடம் கொடுக்க மாட்டார்கள்.
பி.என். பரசுராமன்

