தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/13 வயது, பார்சல் கம்பெனி ஓனர்!

13 வயது, பார்சல் கம்பெனி ஓனர்!

13 வயது, பார்சல் கம்பெனி ஓனர்!


PUBLISHED ON : ஜூலை 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

ஒரு சிறிய பிரச்னைக்கு காணும் தீர்வு, நம்மை பெரிய நிலைக்கு அழைத்து செல்லும் என்பதற்கு, திலக் என்ற மாணவனே உதாரணம்.

மஹாராஷ்டிர மாநில தலைநகர், மும்பையில் உள்ள, 'இண்டர்நேஷனல்' பள்ளி ஒன்றில், 8ம் வகுப்பு படிக்கிறான், மாணவன், திலக். இவன் மனதில் உதித்த மாற்று சிந்தனை தான், இன்று, மும்பையில் அனைவரையும் ஆச்சரியப்படுத்துகிறது.

'மாமா வீட்டில், மறந்து வைத்த புத்தகம், உடனே கிடைக்க என்ன செய்வது...' என, திலக் யோசித்த போது தான், புது யோசனை பிறந்தது.

ஒரு பொருளை, ஒரே நாளில், வினியோகம் செய்ய, கூரியர் கம்பெனிகள், அதிக கட்டணம் வசூலிக்கின்றன. இது, திலக்குக்கு, வேதனையை தந்தது. அப்படி எனில், ஒரு பொருளை, பதிவு செய்யும் அதே நாளில், மும்பையின் எந்த பகுதியிலும், குறைந்த கட்டணத்தில், விரைவாக எப்படி வினியோகிப்பது என, யோசித்தான்.

எவ்வித பிரச்னையும் இன்றி, குறித்த நேரத்தில், மதிய உணவை, அலுவலகங்களில் கொண்டு சேர்க்கும், மும்பை, 'டப்பா வாலா'க்களின் புகழ், உலகப் பிரசித்தம். மும்பையில், 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, 'டப்பா வாலா'க்கள் உள்ளனர். இவர்கள், லட்சக்கணக்கானோருக்கு, குறித்த நேரத்தில், மதிய உணவை கொண்டு சேர்க்கின்றனர்.

'டப்பா வாலா'க்களை போலவே, குறித்த நேரத்தில், பார்சல்களை உரியவரிடம் சேர்க்க யோசித்தான், திலக். 'டப்பா வாலா'க்களின் செயல்பாடுகளை அறிந்து கொள்ள, தந்தை உதவியுடன், 15 நாட்கள் தொடர்ச்சியாக, அவர்களுடன் சுற்றித் திரிந்தான். 13 வயது சிறுவனின், ஆர்வமும், வேகத் துடிப்பும், அவர்களையே ஆச்சரியப்படுத்தியது.

கூரியர் கம்பெனி எப்படி செயல்படுகிறது என்பதை அறிந்து, அதற்கென ஒரு, 'ஆப்' தயாரித்தான். அது தான், 'பேப்பர்ஸ் என் பார்சல்!' மும்பையில், பதிவு செய்யப்படும், ஒரு சிறிய பார்சல், அதே நாளில், இன்னொரு பகுதியில், 4 முதல் 8 மணி நேரத்தில், வெறும், 40 ரூபாயில், வினியோகம் செய்யப்பட்டு விடும். இதற்காக, திலக்குடன், 300 'டப்பா வாலா'க்கள் கைகோர்த்து, ஒப்பந்தம் போட்டுள்ளனர்.

வங்கி வேலையை விட்டு, திலக் கம்பெனியின், சி.இ.ஓ., பொறுப்பை ஏற்றார், அவரது மாமா, கன்சிராம். இப்போது, கம்பெனியில், 180 தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர்.

மாலை, பள்ளி முடிந்ததும், கம்பெனிக்கு வரும், திலக், நிர்வாகம், 'மீட்டிங்' என, 'பிசி' ஆகி விடுவான். ஆலோசனைக் கூட்டத்தில், முக்கிய முடிவுகள் எடுப்பதும், அவனே. இந்த ஆண்டு இறுதிக்குள், 100 கோடி ரூபாய் வருமான இலக்கை அடைய வேண்டும் என்பது தான், அவனது லட்சியம். இதற்காக, இரவு - பகலாக உழைத்துக் கொண்டிருக்கிறான்.

கனவை யாரும் காணலாம். ஆனால், அதை உடனே நினைவாக்க, வயதைப் பற்றி நினைக்காமல், நம்பிக்கையோடு உழைத்தால், 13 வயதிலேயே உயரம் தொடலாம் என்பதற்கு, சிறந்த முன் உதாரணம், திலக்.

எல். மீனாம்பிகா

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us