தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/இணைப்பு மலர்/வாரமலர்/அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!

அன்புடன் அந்தரங்கம்!


PUBLISHED ON : ஜூலை 21, 2019

Follow on GoogleFavourite on Google

PUBLISHED ON : ஜூலை 21, 2019


Follow on Google
அ நிறம் | அளவு

அன்புள்ள அம்மாவுக்கு —

நான், 30 வயது பெண். தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிகிறார், கணவர். குழந்தை இல்லை. மாமனார் - மாமியார் இருக்கின்றனர். சொந்தமாக புடவை வியாபாரம் செய்கிறேன்.

ஒருமுறை, ஒருவருக்கு கொடுப்பதற்காக, ஒரு லட்சம் ரூபாயை, இரு சக்கர வாகனத்தில் எடுத்து சென்றபோது, எங்கேயோ தவற விட்டேன். கணவரிடமும், மாமியாரிடமும் சொன்னால், திட்டுவதோடு, தொழில் செய்தது போதுமென முடக்கி விடுவரோ என்று பயந்து, மறைத்து விட்டேன்.

கடன் கொடுத்த நபர், பணத்துக்காக நெருக்க, மாமியாரின் நகை மற்றும் என் நகைகளை யாருக்கும் தெரியாமல், ஒருவரிடம் அடமானம் வைத்து, கடனை அடைத்தேன்.

மீண்டும், தொழிலில் சம்பாதித்து, நகைகளை மீட்டு விடலாம் என்றிருந்தபோது, விபத்து ஒன்றில் சிக்கி, ஆபத்தான நிலைக்கு போனார், கணவர்.

உடனடியாக மருத்துவ செலவுக்கு பணம் புரட்ட, மாமியார், தன் நகைகளை தேட, காணாமல், என்னை கேட்டார். நானும் தெரியவில்லை என்று கூறி விட்டேன். எங்கெங்கோ புரட்டி சமாளித்து, கணவரின் உயிரை மீட்டோம்.

இந்நிலையில், கடன் கொடுத்த நபர், வீட்டுக்கு வந்து உண்மையை போட்டு உடைத்தார். இதனால், மிகுந்த கோபத்துக்கு ஆளாகினர், புகுந்த வீட்டினர்.

ஏற்கனவே, குழந்தை பெற்று தர இயலாதவள் என்று குறை கூறும் அவர்களுக்கு, இந்த விஷயம் இன்னும் சாதகமாக போய் விட்டது.

தற்போது, பிறந்த வீட்டில் இருக்கிறேன். அவர்களின் கோபத்தை எப்படி தணிப்பது. நான் செய்தது தவறு தான் என, பெற்றோர் திட்டுகின்றனர். இப்போது, என்ன செய்ய வேண்டும் அம்மா.

— இப்படிக்கு,

அன்பு மகள்.

பொதுவாக, பண பரிவர்த்தனையை, ரொக்கமாக செய்வது ஆபத்தானது. பணத்தை தொலைத்தவுடன், நீ என்ன செய்திருக்க வேண்டும்... உடனே, உன் கணவருக்கு கைபேசி மூலம் தகவல் தெரிவித்திருக்க வேண்டும். கணவருடனோ அல்லது தனியாகவோ, காவல் நிலையம் சென்று, புகார் கொடுத்திருக்க வேண்டும்.

பணம் தொலைந்து போனதற்கு, கணவரும், மாமியாரும், உன்னை திட்டி தீர்த்திருப்பர். புடவை வியாபாரம் செய்ய வேண்டாம் என கூறி, உன்னை முடக்கியிருப்பர்.

திருட்டு போன சில நாட்களில், காவல் துறையினர் தீர விசாரித்து, திருட்டு போன பணத்தை மீட்டுத்தர வாய்ப்பிருக்கிறது. அப்படி பணம் கிடைக்காவிட்டாலும், கணவரும், மாமியாரும், ஆறு மாதத்தில் நீ பணம் திருட்டு கொடுத்ததை மறந்திருப்பர். ஆனால், ஒரு தவறை மறைக்க, மேலும் மேலும் பல தவறுகளை செய்து விட்டாய்.

சரி... உன்னுடைய மற்றும் மாமியார் நகைகளை அடகு வைத்தாயே... அதை, ஏன் தனி நபரிடம் அடகு வைத்தாய்... கூட்டுறவு வங்கியில், விவசாய நகை கடன், 1,000 ரூபாய்க்கு, நான்கு ரூபாய் வட்டியில் தருகின்றனர். அங்கு, நகைகளை மட்டும் அடமானம் வைத்து, புடவை வியாபாரத்தில் பணம் வர வர, சிறிது சிறிதாய் அடைத்திருக்கலாமே...

தனி நபரிடம், ஒரு பெண் கடன் வாங்கினால் அல்லது தன் பொருளை ரகசியமாய் அடகு வைத்தால், என்ன நடக்கும் தெரியுமா? அந்த தனி நபர், கடன் வாங்கிய பெண்ணிடம், பாலியல் ரீதியான அத்துமீறல்களை செய்வார். பல இடங்களில், திருமண பந்தம் மீறிய தொடர்புகள் ஏற்பட்டு விடுகின்றன; பல குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாகி விடுகின்றன.

திருமணமான பெண், திருமண பந்தத்துக்குள் எந்த பிரச்னையையும் சமயோசிதமாக, அறிவுப்பூர்வமாக சிந்தித்து தீர்வு காண வேண்டும். கணவனும், மனைவியும் பரஸ்பரம் நம்பகத்தன்மையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

இனி, நீ என்ன செய்ய வேண்டும் தெரியுமா...

பெற்றோரால் பணம் புரட்ட முடிந்தால் புரட்டி, அடகு வைத்த நபரிடமிருந்து, நகைகளை மீட்க வேண்டும். மாமியாரின் நகைகள், குடும்பத்து பெரியவர்கள் முன்னிலையில், திருப்பி தரப்பட வேண்டும்.

பெரியவர்களை வைத்து, கணவரிடமும், மாமியாரிடமும், நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும். 'இனி, எக்காரணத்தை முன்னிட்டும் பொய் சொல்ல மாட்டேன்... நீங்கள் இருவரும் அனுமதிக்கும் வரை, புடவை வியாபாரம் செய்ய மாட்டேன்...' என, அவர்களிடம் வாக்குறுதி தரவேண்டும்.

மீண்டும் புடவை வியாபாரம் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், கணக்கு வழக்குகளை எழுத்துப்பூர்வமாக பதிவு செய். உனக்கென, 'பான் கார்டு' விண்ணப்பித்து பெறு.

புடவை வியாபார வருமானம், ஆண்டுக்கு, ஐந்து லட்ச ரூபாயை தாண்டிவிடும் என்றால், 'ஆடிட்டருக்கு' பணம் கொடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை, கணக்கு வழக்குகளை ஒழுங்கு செய். எல்லாவற்றுக்கும் மேலாக பாதுகாப்பாக, வங்கிகள் மூலம் பண பரிவர்த்தனைகளை செய்ய கற்றுக்கொள். ரொக்க பணம், 1,000 ரூபாய்க்கு மேல், கையில் வைத்துக் கொள்ளாதே.

உனக்கு, 30 வயது தான் ஆகிறது. குழந்தை பெற்றுக்கொள்ள, அதிகபட்சம், 15 ஆண்டு அவகாசம் இருக்கிறது. தகுந்த பெண் மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்று, குழந்தை பெற்றுக்கொள்.

புடவை வியாபாரத்தை பெண்களுக்குள் செய்; ஆண்களுக்கு தாவாதே; கடனுக்கு செய்யாதே. நியாயமான லாபம் கிடைக்காவிட்டால், புடவை வியாபாரத்தை விட்டுவிடு.

- என்றென்றும் தாய்மையுடன்,

சகுந்தலா கோபிநாத்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us