
அன்றென்னவோ அகிலாவின் நினைவு அதிகமாக இருந்தது.
அகிலா -
என் கல்லூரித் தோழி என்பதைத் தாண்டி, நானும், அவளும் அப்படியொரு மன இணைப்பில் இருந்தோம். சொல்லப் போனால், சுமி என்ற இந்த களிமண்ணை, ஒரு சிற்பமாக செதுக்கியவள் என் அகிலா. வீடு, சமையல், பேருந்துப் பயணம், கல்லூரி, லேப், வகுப்பு, படிப்பு என்ற, ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து வந்த என்னை, உரிமையும், உணர்வும் கொண்ட கம்பீரமான மனிதப் பிறவியாக வளர்த்தெடுத்தவள்.
முரளியின் உரத்த குரல், என்னை பூமிக்கு இழுத்து வந்தது.
''என்ன யோசனை சுமி? தட்டுல உனக்குப் பிடித்த சப்பாத்தி இருக்கு; தொடவே இல்லையே?''
''ஆமாம் முரளி. இந்த சாயங்கால மழை, என் தோழி அகிலாவின் நினைவை அதிகப்படுத்தி விட்டது.''
''யாரு... அந்த புரட்சிக்காரி அகிலாவா?'' என்ற முரளியை, ஏறிட்டுப் பார்த்தேன்.
''எது நடந்தாலும், அது சரியா, நேர்மையாக நடக்கணும்ன்னு புரிய வெச்ச அகிலாவுக்கு, புரட்சிக்காரின்னு பேரா உங்க ஊர்ல?''
''நீ தானே சொன்னே... லேப்ல ஆண்-, பெண் ஒண்ணா ஒர்க் செய்யணும்; பெண்களுக்கு கேம்ஸ் பீரியட் வேணும்; மெஸ்ல, ஒரே மெனு தான் இருக்கணும்ன்னு போர்க்கொடி துாக்கினாள், உன் தோழின்னு,'' என்று கூறி, சிரித்தான் முரளி.
''இதுல சிரிக்க என்ன இருக்கு?''
''சரி சரி... சிரித்தது தப்புத்தான். நீ சொல்ல வந்ததை சொல்லு.''
''பி.எஸ்சி., கெமிஸ்ட்ரின்னா லெபாரட்டரி இல்லாம எப்படி? இதுல என்ன ஆண், பெண் என்று, தனித் தனி கிளாஸ்... பசங்க மட்டும் கிரிக்கெட், கபடின்னு விளையாட கேம்ஸ் பீரியடு இருக்கு. ஆனா, எங்களுக்கு இல்ல. அதே போல, கேன்டீன் மெஸ்லயும் பாரபட்சம். பசங்களுக்கு மட்டும், 'நான் வெஜ்!' பெண்களுக்கு கீரை, புடலங்காய் கூட்டு. காலம் காலமா இருந்து வந்த இந்த கொடுமையை எதிர்த்து, அகிலா தான், முதன் முதலாக குரல் கொடுத்து, குழு சேர்த்து, போராடி மாத்தினாள்.''
''அதெல்லாம் சரி... மழையும் நினைவும்ன்னு என்னவோ சொன்னியே அதென்ன?”
சொன்னால் முரளிக்குப் புரியுமா என்று தான் இருந்தது. அவரைப் பொறுத்தவரை, மழை ஒரு காமெடி அல்லது அவர் வாழ்க்கையை மேம்படுத்துகிற, அதற்காகவே உற்பத்தி ஆகி வருகிற ஒரு அம்சம்; அவ்வளவு தான். ராத்திரி பெய்கிற மழையை திட்டாமல் இருப்பது, பகலில் பெய்கிற மழையை, 'ஷிட்... ஒரு வேலய உருப்படியா பாக்க விடுதா இந்த மழை...' என்று, கன்னா பின்னாவென்று திட்டுவது, அவ்வளவுதான், அவருக்கும், மழைக்குமான உறவு.
நானும் அப்படித்தான் இருந்தேன், ஐந்தாறு வருஷங்களுக்கு முன் வரை. அதாவது, அகிலாவின் நட்பு கிடைக்கும் வரை.
'தூறலா ஆரம்பிக்கிற மழையில் போய் நின்னுடணும் சுமி. அது, மெல்ல மெல்ல பெரிசாகும் பாரு, அப்பிடியே குற்றாலம் மாதிரி இருக்கும். நீ எப்பவாவது நனைஞ்சிருக்கியா...' என்று, மழையின் அழகிய மறுபக்கத்தை, அவள் தான், அறிமுகப்படுத்தி வைத்தாள்.
காய்ந்த துணிகள், வடாம் வத்தல்களை எடுத்து வைப்பது, தலை நனையாமல் பார்த்துக் கொள்வது என்று தான் இருந்தேன், அதுவரை. அவள் சொன்ன பின், அடுத்து வந்த மழை, எனக்காக சொர்க்கத்தையும் அழைத்து வந்தது. நனைவதில் உள்ள சுகம், மழையின் சாரல், இதயத்தை நனைக்கும் விதம், பால்ய நினைவுகளைக் கொண்டு வரும் இதம் என்று, புதிய சிறகுகளைத் திறந்து வைத்தது, அந்த மழைக் காலம்.
மழை என்பது, ஒரு சாம்பிள்தான்.
அகிலா, எனக்குள் திறந்து வைத்த சாளரங்கள் ஏராளம்.
'துன்பத்தை அனுபவிக்காதவன், வாழ்வின் சுவையை அறியாதவன்னு ஒரு பொன்மொழி உண்டு. சுமி... பெண்குலத்தைத் தான், இதுக்கு சரியான உதாரணமா சொல்ல முடியும். காலம் காலமாக துன்பத்தை, அடக்குமுறையை, வன்முறையை, வேதனையை அனுபவித்தவர்கள் நாம். இனிமேல், நாம், வாழ்வின் இன்பத்தை உணரணும்; வசந்த காலத்தை ரசிக்கணும்; நியாயமான அத்தனை சுவையையும் அறியணும். அதுக்கு நாம, நமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளுக்காக போராடணும்...' என்று, அவள் தான், முதலில், என் பார்வை செல்ல வேண்டிய திசையை செப்பனிட்டாள்.
'உலக மக்கள் தொகையில், பாதிப் பேர் பெண்கள் தான். ஆண்களை விட, இரண்டு மடங்கு உழைக்கக் கூடியவர்களாகிய நாம், தினம் சராசரியாக பதினைந்து மணி நேரம், உழைக்கிறோம். உலகின், மூன்றில் இரண்டு பங்கு வேலையை செய்யக் கூடியவர்கள் பெண்கள். அவர்களால் மட்டுமே பொருள் உற்பத்தியிலும், மனித இன மறு உற்பத்தியிலும் ஈடுபட முடியும். மாதவிலக்கு, கர்ப்பம் ஆகிய துன்பச் சுமைகளுடன் சமையல், வீடு, குழந்தை வளர்த்தல், இத்துடன் வேலைக்குப் போய் சம்பாதிக்கிற, புதிய சுமையும், நம் தலையில் ஏற்றப்பட்டு விட்டது...
'இப்படி வலுவும், திறமையுமாக ஓய்வு இல்லாமல், நாள்தோறும் உழைக்கிற பெண்களை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும் ஆண்கள். அப்படி புரியாத ஆண்களுக்கு, நாம் தான் புரிய வைக்க வேண்டும். ஏன் தெரியுமா...இந்த உலகம் ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமானது...' என்று, அவள் சொன்ன கருத்துகள், என் சிந்தனையை நேர்மையான பாதையில் செலுத்தின.
என்ன பேச்சையே காணோம்? உன் தோழி, உன் மனசை முழுசா கொள்ளையடிச்சுட்டாளா?''
முரளி, தோளில் பலமாகத் தட்டி, என்னை நனவுக்குக் கொண்டு வந்தார்.
''பார்க்கணும்... உடனே அகிலாவைப் பார்க்கணும்...'' என் உதடுகள், தாமாகவே முணுமுணுத்தன.
முரளி கிண்டலாக, ''அந்த மகராணி, எந்த தேசத்து சிம்மாசனத்துல ராஜாவை காலடியில் போட்டுக்கிட்டு வீற்றிருக்கிறாளோ?” என்று, சிரித்த சிரிப்பு எரிச்சலை ஏற்படுத்தியது.
பார்வதி, என்னைப் பார்த்ததும் ஓடி வந்தாள்.
''மேடம்... ஆன் லொகேஷன் ப்ரொக் ராம் வந்திருக்கு. திருநெல்வேலியில, உங்களுக்கும், எனக்கும் ஒரு வார டிரைனிங். போகலாமா மேடம்?” என்றாள் ஆர்வமாக.
''என்ன... திருநெல் வேலியிலா...ஒரு வாரமா...''
''போகலாம் மேடம், ப்ளீஸ்... செம போர் அடிக்குது இந்த ஆபீஸ்.''
''கண்டிப்பா போகலாம் பார்வதி... வீ வில் நெவர் மிஸ் இட்,'' என்று, அவள் கையைப் பற்றி அழுத்தினேன்.
''என்ன புதுசா இருக்கு ஆன் லொகேஷன், ஆன்-லைன்னு... அதுவும் வேற ஊர்ல. பெண்களுக்கு இது பிரச்னையா இருக்காதா...'' என்று, முகத்தை சுளித்த முரளியை, சட்டென்று நிமிர்ந்து பார்த்தேன்.
''என் வேலைக்கு, ரொம்ப உபயோகமா இருக்கப் போற பயிற்சி இது. தவிர, என் நினைவுகள்ல நீங்காம கலந்திருக்கிற, அகிலாவை சந்திக்கிற வாய்ப்பு கூட கிடைக்கலாம். அதனால், கட்டாயம் போகணும்.''
''ஓ... நீயா கேட்டு வாங்கிகிட்டயா... சொல்லவே இல்லையே?''
''இல்ல முரளி. தானா வந்தது தான் இது. மழை மாதிரி.''
''சரி... ஒரு வாரத்துக்கு எனக்கு சாப்பாடு?''
''வள்ளி இருக்கா, ஓட்டல் இருக்கு; உங்க கம்பெனி கேன்டீன் இருக்கு; யூ கேன் மேனேஜ்.''
''அப்ப, வெறும் தகவல் தான் எனக்கு. முடிவு உன்னது அப்படித்தானே?''
''ஓ... முரளி, என்னது இது. நியாயமான விஷயங்களுக்கு கூட, பர்மிஷன் எதிர்பார்க்கணுமா? உங்க கம்பெனி டூர்களுக்கு, என்கிட்ட உத்தரவு கேட்பீங்களா என்ன?''
''எல்லாம் அந்த ஆபரேஷன் அகிலா கொடுக்குற தெம்பு. சரி கிளம்பு,'' என்று, அரைகுறை மனதுடன், தலையாட்டிய முரளியைப் பார்த்து புன்னகைத்தேன்.
உண்மையிலேயே இந்த ஒரு வார பயிற்சி, அற்புதமான மன உற்சாகத்தைக் கொடுத்தது. நல்ல உணவு, தரமான கோச்சிங், சாப்ட் ஸ்கில் முயற்சிகள் என்று, மாணவப் பருவத்திற்கே போய் விட்ட மாதிரி இருந்தது.
எல்லாவற்றையும் தூக்கி சாப்பிடுகிற மாதிரியான விஷயம், கடைசி தினத்தன்று நடந்தது.
ரிசப்ஷனில் இருந்து ஒரு அழைப்பு.
''சுமி மேடம்... உங்களைத் தேடி, ஒரு கெஸ்ட் வந்தார். பத்து நிமிடத்தில் திரும்ப வருவதாகச் சொல்லி சென்றிருக்கிறார், கீழே வர முடியுமா? அவர் பெயர் அகிலா என்று, சொல்லச் சொன்னார்.''
மின்னலடித்தது. இதுவரை அனுபவித்தறியாத, அந்த சந்தோஷ கணத்தை, என்னால், உணர முடிந்ததே தவிர, சொல்லத் தெரியவில்ல.
“இதோ வருகிறேன்...” என்று சொல்லி, படிகளில் பாய்ந்தேன்.
அகிலா... அகிலா... என்னை நீ தேடி வந்திருக்கிறாயா... உன் ஊருக்கு நான் வந்துள்ளதை, உனக்கு அறிவித்த, அந்த தேவதை யார்!
அகிலா... என் உயிரே... என் தோழமையே, என் ரசனைக் கண்ணை திறந்து வைத்த அழகே! சமத்துவமும், சுயமரியாதையும், கல்வியும், நேர்மையும், உழைப்பும் தான், பெண்களுக்கு உண்மையான பாதுகாப்பு என்று, சொல்லிக் கொடுத்த பெண் தெய்வமே!
''சுமி சுமி...'' கதவு திறந்து ஓடி வந்தாள் அகிலா.
''அகி... அகி எப்படி... எப்படியடி இருக்கே? என்னை எப்பிடி கண்டுபிடிச்சே?'' என்று, குரல் வழுக்கி, அவள் கை பற்றினேன்.
அதே வசீகர புன்கையுடன் அவள், ''அதை விடு சுமி. இதைப் பிடி, உனக்கு ரொம்ப பிடிக்குமில்ல ஆரஞ்ச் கலர் சம்பங்கி. வெச்சிக்கோ,'' என்று, அதியற்புத நறுமணம் கமழும், அந்த அழகிய மலர்களை, என் தலையில் சூட்டினாள்.
அகிலா... முழுவதுமாக கனிந்து, ரம்மியமாகி, கோவிலின் ரட்சக அம்மனைப் போல பளீரென்று இருந்தாள்.
''எப்படி இருக்கே அகி? கல்யாணம் ஆயிட்டுதா? எனக்கு போன நவம்பர்ல தான் கல்யாணம் ஆச்சு. நீ வராம என் கல்யாணம் நிறைவடையல தெரியுமா... நம்ம தொடர்பு விட்டுப் போனது தான், நாம செய்த மிகப் பெரிய குற்றம் அகி.''
''உண்மை தான் சுமி. வெறும் நினைவுகளை வெச்சுகிட்டு, நானும் உள்ளுக்குள்ள ரொம்ப அழுதேன். சரி, போனது போகட்டும். உன் கணவர் எப்படி?''
''இன்னும் முழுமையான அண்டர்ஸ்டாண்டிங் வரலே அகிலா. ஆனா, ஒரு விஷயத்துல மட்டும் தெளிவா இருக்கேன். எதுக்காகவும், என் நியாயமான சந்தோஷத்தையோ, பொறுப்பையோ, கடமையையோ விட்டுக் கொடுக்கறதில்லே. தேவையான சுதந்திரத்தை, பொறுப்புணர்ச்சியோட அனுபவிக்கிறேன். எல்லாம் நீ சொன்னது தான் அகிலா... உரிமையோட, மன நிறைவோட வாழுறேன். சரி நீ சொல்லு. உன் வாழ்க்கை எப்படியிருக்கு? சமத்துவமும், தர்மமும் நிலவுகிற அழகான வாழ்க்கை தானே?''
''ஆமாம் சுமி. சமத்துவம், சரி நிகர் சமானம் தான். ஆனால், குடும்பத்துல இல்ல, சமூகத்துல.ஆமாம் சுமி, நான் திருமணம் செய்துக்கல.''
''ஏன் அகிலா ஏன்?''
''ஆண்களைப் போல வேலை, படிப்பு, சம்பாத்தியம் இதெல்லாம் வேணும்ன்னு கேட்கிறோம். அதே போல, அவர்களை மாதிரி சமூக கடமைகளையும், பொறுப்புகளையும் கையில் எடுக்கணும் தானே...''
''புரியலே அகிலா.''
''நான் பிறந்த கிராமம், கண் எதிர்ல அழிஞ்சுகிட்டு வந்தது சுமி. நாங்க பிறந்த மண், நெல் விளைந்த வயல், தாகம் தீர்த்த குளம், ஊஞ்சல் கட்டி விளையாடின ஆலமரம், மீன் பிடிச்ச கண்மாய், வாழைத் தோப்பு, கத்திரிக்காய் தோட்டம், கீரைப் பாத்தின்னு எல்லாம் மெல்ல மெல்ல அழியறதைப் பார்த்தேன்; தாங்க முடியல. எனக்கு ஒரு சகோதரன் இருந்திருந்தால், என்ன செய்திருப்பான்னு நினைச்சுப் பார்த்தேன்.
“என்னை வளர்த்த மாதிரியே தானே, அவனையும் பொறுப்புணர்ச்சியோட வளர்த்திருப்பார் எங்கள் அப்பா. அவனும் துடிச்சிருப்பான்... நிபுணர்களை அழைச்சுக்கிட்டு வந்து காட்டி ஆலோசனை கேட்டிருப்பான்... வத்திப் போயிருந்த பாசனக் கிணறுகளை, மழைநீர் சேகரிப்புத் தொட்டியா மாத்தி, மழை நீரை சேகரிச்சு, அதன் மூலமா நிலத்தடி நீரை வளமையாக்கி, பூமியைக் குளிர வெச்சிருப்பான். தன் நிலத்துல இயற்கையான முறையில் வேளாண்மை செய்து, அற்புதமான விவசாயியா தன்னை நிரூபிச்சிருப்பான். அதன் மூலமாக, மற்றவர்களையும் தன் பக்கம் மெல்ல இழுத்து, ஊரையே பசுமைப் பிரதேசமா மாற்றியிருப்பான். தானா தேடி வந்த கவுன்சிலர், பஞ்சாயத்து பதவிகளை ஏத்துகிட்டு, மேலும், தன் லட்சிய வாழ்க்கையை அழகா வாழ்ந்துட்டு போயிருப்பான். அதைத்தான் சுமி, நானும் செய்து வருகிறேன். எங்க மாங்குயில் கிராமத்துக்கு, இப்ப, நான்தான் தலைவி.''
பிரமித்துப் போனாலும், உடனே சுதாரித்து, அவள் கை பற்றிச் சொன்னேன்....
''எனக்கு தெரியும் அகிலா. என்றாவது, ஒரு நாள் நானும், இங்கே வருவேன். மனதுக்கும், வாழ்க்கைக்கும், சக மனிதர்களுக்கும், மிக நெருக்கமான, இந்த உலகத்தில் நானும் என்னை இணைத்துக் கொள்வேன் அகிலா.''
அவள் புன்னகையுடன், என்னை அணைத்துக் கொண்டாள்.
-வி.உஷா

