/
இணைப்பு மலர்
/
வாரமலர்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி (17) - ஒய்.ஜி. மகேந்திரன்
/
நான் சுவாசிக்கும் சிவாஜி (17) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி (17) - ஒய்.ஜி. மகேந்திரன்
நான் சுவாசிக்கும் சிவாஜி (17) - ஒய்.ஜி. மகேந்திரன்
PUBLISHED ON : ஜன 26, 2014

சாந்தி படத்தில் இடம்பெற்ற, 'யார் அந்த நிலவு...' என்ற பாடல், இன்றும் அனைவராலும் ரசிக்கப்படுகிறது. இப்பாடல் உருவான பின்னணியை, எம்.எஸ்.விஸ்வநாதன், என்னிடம் பகிர்ந்து கொண்டதை, இங்கே கூற விரும்புகிறேன்.
இப்படத்தின், பாடல்களுக்கு ட்யூன் அமைத்துக் கொண்டிருந்த போது, எம்.எஸ்.வி., யிடம், சிவாஜி, 'பிரபல ஆங்கில பாப் பாடகர் கிளிப் ரிச்சார்டு பாடுவது மாதிரி, உன்னால் ட்யூன் போட முடியாதா?' என்று கிண்டலாக சவால் விட்டிருக்கிறார். எம்.எஸ்.வி.,யும், 'என்னால் ட்யூன் போட முடியும். அதற்கு ஏற்ப நீங்க நடிக்கணுமே...' என்று கூறியதுடன், இதை ஒரு சவாலாக எடுத்து, டி.எம்.சவுந்தரராஜனை, முதன் முதலாக, 'பேஸ்' குரலில் பாடவைத்து, ரிகார்டு செய்தார் எம். எஸ். விஸ்வநாதன்.
படப்பிடிப்பு நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன், இந்த பாட்டை சிவாஜிக்கு போட்டு காண்பித்தனர். மவுனமாக பாடலை கேட்டவர், இரண்டு நாட்களுக்கு பின், ஷூட்டிங் வைத்துக் கொள்ளலாம் என்று சொல்லி விட்டார். இரண்டு நாட்களுக்கு பின் கேட்டபோது, மீண்டும் தள்ளிபோட்டார். இதைக் கண்டு, சற்று கவலை அடைந்த இயக்குனர் பீம்சிங், 'என்னண்ணே, பாட்டு பிடிக்கலையா... வேறே ட்யூன் போடச் சொல்லட்டுமா?' என்று கேட்டார். அதற்கு சிவாஜி, சிரித்துக்கொண்டே, 'விசுவை நான் சீண்டிவிட்டதில், கண்ணதாசனின் அற்புதமான வார்த்தைகளுக்கு, பிரமாதமாக ட்யூன் போட்டிருக்கார். டி.எம்.எஸ்., அதைவிட பிரமாதமாக பாடியிருக்கார். இந்த மூன்றையும் தூக்கி அடிக்கிறமாதிரி நான் நடிக்கணும். அதுக்கு யோசிக்க எனக்கு கொஞ்சம் அவகாசம் வேணும்...' என்று கூறினார். அதன்படியே, அப்பாடல் காட்சி படமாக்கப்பட்டது.
சிவாஜி தமிழில் நடித்த, படிக்காத மேதை, பாகப்பிரிவினை மற்றும் சாந்தி, ஆகிய மூன்று படங்களை, இந்தியில் ரீ-மேக் செய்தனர். மூன்றிலும் சிவாஜி நடித்த பாத்திரத்தை, ஏற்று நடித்தவர், இந்தி நடிகர் சுனில் தத்.
சிவாஜி பிலிம்சே சொந்தமாக தயாரித்த ரீ-மேக் படம் கவுரி. (சாந்தி படத்தின் இந்தி ரீ-மேக்) ஸ்டுடியோவில் நடந்த படப்பிடிப்பின் போது, நீண்ட வசனத்தை பேசி, நடித்துக் கொண்டிருந்தார் சுனில் தத்.
அதே ஸ்டுடியோவில், அடுத்த செட்டில், வேறு படத்திற்காக நடித்துக் கொண்டிருந்த சிவாஜி, சுனில் தத் இருப்பதை அறிந்து, அங்கு சென்றார். சுனில் தத் நடிக்கும் போது நடிப்பு, ஆக் ஷன் இரண்டும் சரிவர ஒத்துப்போகாமல் இருப்பதை உணர்ந்த சிவாஜி, தனக்கு, இந்தி அவ்வளவாக தெரியாவிட்டாலும், எந்த டயலாக்கிற்கு, எந்த மாதிரி ஆக் ஷன் செய்ய வேண்டும் என்பதை, நடித்துக் காட்டினார். சுனில் தத் உட்பட, செட்டில் இருந்த அனைவரும் வியந்து போயினர். சிவாஜியை கட்டி அணைத்துக் கொண்டார் சுனில் தத்.
சிவாஜி மறைவுக்குப் பின், 'சிவாஜி சாரிட்டி ட்ரஸ்ட்' என்ற அமைப்பு சென்னை மியூசிக் அகாடமியில் நடத்திய நிகழ்ச்சியை, நான் தொகுத்து வழங்கிக் கொண்டிருந்தேன். அந்நிகழ்ச்சியில், அப்போதைய மத்திய விளையாட்டு துறை அமைச்சராக இருந்த சுனில் தத் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். அந்நிகழ்ச்சியில், சுனில் தத், சிவாஜியுடன் தனக்கு இருந்த நட்பு, நெருக்கம் மற்றும் சிவாஜியின் நடிப்புத் திறமை பற்றி பெருமையாக பேசி, 'திரை உலகில், சிவாஜி செய்த சாதனைக்கு, அவருக்கு பாரத ரத்னா விருது தர வேண்டும்...' என்றார்.
'நடிகர் திலகம் பிலிம் அப்ரிசியேஷன் சொசைட்டி' என்ற அமைப்பு, கடந்த மூன்று ஆண்டுகளாக இயங்கி வருகிறது. 'நடிகர் திலகம் டாட் காம்' என்ற இலவச இணையதளத்தை நடத்தி வரும் வி.ராகவேந்திரா, முரளி மற்றும் நானும் சேர்ந்து ஆரம்பித்த அமைப்பு இது. அதில், நான் கவுரவ ஆலோசகராக உள்ளேன். தற்போது, நூற்றுக்கும் அதிக மான அங்கத்தினர்கள், இதில் இருக்கின்றனர்.
ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட தேதியில், சிவாஜியின் படம் ஒன்றை, சென்னை மயிலாப்பூரில் உள்ள, பி.எஸ்.உயர்நிலைப்பள்ளி ஆடிட்டோரியத்தில் இவர்களுக்காக, திரையிடுகிறோம். படம் முடிந்த பின், படத்தைப் பற்றியும், சிவாஜியின் நடிப்புத் திறமை பற்றியும் விவாதிப்போம்.
ரசிகர்களில், சிவாஜி நடித்த மொத்தம், 288 படங்களையும் பார்த்தவர்கள், ஒவ்வொரு படத்தை, பல முறை பார்த்தவர்கள், சிவாஜியின் படங்கள் ரிலீசான தேதி, வெற்றிகரமாக திரை அரங்குகளில் ஓடிய நாட்கள், அவற்றில் சிவாஜியுடன் பணிபுரிந்த கலைஞர்கள், போன்ற தகவல்களை, தங்கள் விரல் நுனியில் வைத்திருப்போர் என பல வகையினர் உண்டு.
அவர்களில், ஒரு இளைஞரைப் பற்றி இங்கே குறிப்பிட வேண்டும். சென்னை எருக்கஞ்சேரியில் வசிக்கும், 21 வயது இளைஞர் ரா. கார்த்திக், சிவாஜியின் எல்லா படங்களையும் தியேட்டர்களிலும், 'டிவி'க்களிலும் பார்த்து ரசித்திருக்கிறார். அவரது தந்தை, தீவிர சிவாஜி ரசிகர். சிவாஜியின் மீது உள்ள ஈடுபாட்டால், தன் பெயரான ரவி என்ற பெயருக்கு முன்பாக சிவாஜி சேர்த்து, சிவாஜி ரவி என்று வைத்துக் கொண்டவர்.
சிவாஜியின் ஆடை அணியும் நேர்த்தி பற்றிய சுவையான நிகழ்ச்சி இது...
மேலே குறிப்பிட்ட சிவாஜி விசிறிகள் சங்கத்தில், இருவர் உள்ளம்' படம் திரையிடப்பட்டது. அன்று அமெரிக்காவில் டெக்சாஸ் மாநிலத்தில் வசிக்கும் என் நண்பர் சுவாமி, இருவர் உள்ளம் படம் பார்க்க என்னுடன் வந்திருந்தார். அந்த படத்தில் வரும், 'பறவைகள் பல விதம்...' என்ற பாடல் காட்சியில், சிவாஜி மிக ஸ்டைலிஷாக வருவார். அதைப் பார்த்த அவர், 'அமெரிக்காவில், இப்போது இளைஞர்கள் அணிகிற சட்டைகளை விட, சிவாஜி இந்த பாடல் காட்சியில் (1963ல் வெளி வந்த படம்) அணிந்து வந்த ஷர்ட் ரொம்ப ஸ்டைலாக இருக்கிறது...' என்றார்.
இப்பாடலில் டெக்சாஸ் கேலன் ஹாட் என்று அழைக்கப்படும் உயர்ந்த தொப்பியும் அணிந்திருப்பார். மேலும், அதே படத்தில், 'இதய வீணை தூங்கும் போது...' என்ற பாடல் காட்சியில், முழு சூட்டில் வருவார் சிவாஜி. இதைப் பார்த்து வியந்து விட்டார் சுவாமி.
கடந்த 1980களில், ஹீரோவுக்கு டிரஸ் தைக்க, மும்பையில் உள்ள கச்சின்ஸ் என்ற டெய்லரிங் நிறுவனத்தை தேடி செல்வர். பாரிஸ், லண்டன் நகரங்களிலிருந்து விசேஷமாக ஆடைகளை வாங்கி வருவதும் உண்டு. ஆனால், சிவாஜியோ இதெல்லாம் ஏதும் செய்ததில்லை. ராமகிருஷ்ணன் என்ற காஸ்ட்யூமர் தான், அவரது படங்களுக்கு தேவைப்படும் ஆடைகளை தைத்து கொடுப்பார். படித்தால் மட்டும் போதுமா படத்தை தயாரித்த ராமகிருஷ்ணன் தான் இவர்.
— தொடரும்.
தொகுப்பு: எஸ்.ரஜத்

